நிலம் பூத்து மலர்ந்த நாள்

நிலம் பூத்து மலர்ந்த நாள்

இனிய ஜெயம்,

எப்போதும் வெண்முரசு வரிசையில் ஒரு நாவல் முடிந்து மற்றொரு நாவல் துவங்கும் இடைவெளியில் முந்தைய நாவல் அளித்த உணர்வு நிலையின் அழுத்தம் குறையா வண்ணம் நீடிக்க செய்யும் புனைவுகளை மனம் நாடும். பெரும்பாலும் வெண் முரசின் முந்தைய நாவல்களிலேயே அந்தத் தேடல் சென்று நிற்கும். மாற்றாக வாசிக்க நேரிடும் வேறு புனைவோ அ புனைவோ அதன் உள்ளுறையால் பலவீனமாக அல்லது வெறும் நேரம் கொல்லியாக இருந்தால், அதை எழுதியவர்கள் மீது வரும் எரிச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. பன்னிரு படைக்களம் நிறைந்த இரவே அஜிதன் அழைத்திருந்தான். வழமை போல என்னை புறத்தால் அழகான, அகத்தால் ஆழமான, பயணம் ஒன்று அழைத்துச் சென்றான். மீண்டதும் மீண்டும் வாசிப்பைத் தொடர, முதல் நூலாக வீ எஸ் ராமச்சந்திரன் அவர்களின் ஆயிஷா நடராஜன் மொழிபெயர்ப்பில் வெளியான உருவாகிவரும் உள்ளம் என்ற மூளைநரம்பியல் குறித்த கட்டுரைத் தொகுதியை துவங்கினேன். நல்ல மொழி பெயர்ப்பில் அமைந்த சுவாரஸ்யமான நூல். வீஎஸார் நியுரோ ஈஸ்தடிக் என்ற புதிய வகைமாதிரியில் சிற்பம் ஓவியம் போன்ற கலைகளை மனித மூளை படைப்பதன் பின்னுள்ள சாரத்தை அடிப்படையான பத்து அலகுகளை கொண்டு வகுத்து சொல்லும் மூன்றாவது அத்யாயம் சுவாரஸ்யமான ஒன்று. இரண்டாவதாக, ‘’சிந்தனைப் பல்லி’’யின் வாத்தி பாராட்டிய, காலத்தை தன் முன் மூத்து, நரைத்து, மண்டியிட வைக்கும் வல்லமை கொண்ட நாவல் ஒன்றை வாசித்து தலைச்சோறு வெந்தேன்.

வெந்ததை தணிக்க நெய்வேலி புத்தக சந்தையில் ‘’அலைவுற்றுக்’’ கொண்டிருக்கையில் வம்சி அரங்கிலிருந்து மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீ அவர்களின் மைந்தன், நண்பன் ஹரி கூவி அழைத்து நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலை உயர்த்திக் காண்பித்தான். அந்த நாவலை மொழிபெயர்க்கத் துவங்கியபோது அந்த நூலின் சாரத்தை ஒரு நாள் நல்ல தேநீர் ஒன்றுடன் ஜெயஸ்ரீ என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அன்று துவங்கிய ஆவல் நூலைக் கண்டதும் பன்மடங்கு பெருகியது. இதோ இந்த இரவில் ஒரே அமர்வில் வாசித்து முடித்து என்ன எதை பகிர்ந்து கொள்வது என்றே புரியாமல் உத்வேகம் மீதூர உங்களுக்கு தட்டச்சு செய்துகொண்டு இருக்கிறேன்.

இந்த நாவலை வாசித்து முடித்ததும், ‘’அடடா இந்த நாவலை ஜெயமோகன் எழுதாம விட்டுட்டாரே’’ மிஸ் பண்ணிட்டாரே என்று முதன் முறையாக தோன்றியது. பெரிதும் ஜெயமோகனின் அகம் எழுப்பிக் கொள்ளும் வினாவை அதன் தேடலை,தத்தளிப்பை ஒத்ததே மனோஜ் அவர்கள் இந்த நாவலில் எய்திய நிலை. சங்க கால தமிழ் நிலத்தின் பின்னணியில் வைத்து சொல்லப்பட்ட, சொல்லப்படாத மனிதர்களின் உலராக்குருதியும் ஆறாக் கண்ணீரும்கொண்டு அறம் வேண்டி நிற்கும் அணையாஅழல் குறித்த கதை.

குட்ட நாட்டிலிருந்து அந்த அரசனைத் தொடர்ந்து தமிழ் நிலம் வந்த முன்னோர்களைக் கொண்ட பாணர் குடி ஒன்றின் முதன்மைக் குடும்பம் கொலும்பன் குடும்பம். வறுமை தாளாமல் சிறு வயதிலேயே செல்வம் தேடி குடி நீங்கிய மூத்த மகன் மயிலன், இளமை துவங்கும் மூத்த மகள் சித்திரை, இளைய மகன் உலகன், மகள் சீரை, மனைவி நெல்லக்கிளி. குடும்பம் மீது பாசம் கொண்ட சராசரித் தகப்பன் கொலும்பன். சித்திரை மேல் காதல் போலும் பிரியம் கொண்ட கூத்தன் சந்தன். சந்தனின் சொல் கேட்டு, ஏழிமலை நன்னன் நாட்டில் கண்டதாக சொல்லப்பட்ட மயிலனைத் தேடியும், மக்கள் மத்தியில் மட்டுமே பாடி ஆடும் குடி, முதன் முறையாக ஒரு அரசனைக் ‘’நேரில்’’ கண்டு பாடி ஆடி, பரிசில் பெற்று தனது வறுமையை நீக்கிக் கொள்ளவும் ஏழி மலை நோக்கி பெரும்பாணன் தலைமையில் ஊர்நீங்குகிறது.

வேல்கெழுகுட்டுவன் பரிசாக அளித்த ஆழியாற்றின் கரையில் அமைந்த உம்பர்க்காட்டில் வசிக்கும் புகழ் வாய்ந்த பெரும் புலவர் பரணரை பாணர் குடி வழியில் சந்திக்க, பரணர் அவர்களுக்கு ஏழி மலை நன்னன் சேரர்களால் வீழத்தப்பட்தை சொல்லி, ஏழ்மை நீங்க பறம்புமலை பாரியை அணுகச் சொல்லி அதற்க்கு பாரியின் அணுக்கத் தோழர் பெரும்புலவர் கபிலரின் துணையை நல்கி, ஆற்றுப் படுத்துகிறார். பாணர் குடி பறம்புமலை நோக்கி நகர, சந்தன் தனது பால்ய நண்பனை தேடி தனியே ஏழி மலை செல்கிறான்.பாரியின் அவையில் ஆடல் பாடல் முடிந்ததும், பாரியைக் கொல்ல அரண்மைனைக்குள்ளேயே அவ்வமையம் நிகழ்ந்த சதியில், பாணர் குடி சிக்கிக் கொள்ள, சதிகாரர்களால் அரசன் பாரியும், கொலும்பனும் கொல்லப் படுகிறார்கள்.

கபிலர் துணையுடன் பறம்புமலை விட்டு தப்பிக்கும் பாணர் குழு, போக்கிடம் அறியாமல் பயணித்து, ஒரு ஆயர் புறச் சேரியில் அடைக்கலம் பெறுகின்றனர். சீரையின் நடத்தையில் விசித்திரம் கூடுகிறது. ஆயர் குடியில் சித்திரைக்கு கிளியோலம் தோழியாகக் கிடைக்கிறாள். குதிரைமலை அதியமானின், படைத் தளபதி தகடூரை சேர்ந்த மகீரன் காதலனாகக் கிடைக்கிறான். கபிலர் முசிறியில் சேர மன்னனுடன் இருப்பதை அறிந்து, பாணர் குடி முசிறி நோக்கி நகர, சித்திரை குடும்பத்திடம் விடை பெற்று மகீரனுடன் தகடூர் செல்கிறாள். அங்கே சித்திரைக்கு அதியமானுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவ்வையின் துணை கிடைக்கிறது. சித்திரைக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருக்கும் மகீரன், சித்திரையுடன் ஊடல் கொண்டு பிரிகிறான். தொலைந்த அண்ணன் மயிலன் மகீரனின் நெருங்கிய நண்பன், தான் மயிலனின் தங்கை என மகீரன் அறிந்தே இருக்கிறான், என அவ்வை வழியே அறிகிறாள். தான் அறியாத விளையாட்டு ஒன்றினில் யாராலோ தனது குடும்பமும் காதலும், வாழ்வும் வெறும் பொம்மைகளாக வைத்து ஆடப்படுவதை சித்திரை அறிய வருகிறாள். முசிறியில் அரசனையோ, கபிலரையோ காண இயலாத பாணர் குடியும், ஏழி மலையில் மயிலனை காண இயலாத சந்தனும் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து, சித்திரையின் தனிமை அறிந்து அவளையும் உடன் அழைக்கிறார்கள். சித்திரை வர மறுத்து அவ்வை வசம் அடைக்கலம் அடைகிறாள்.

சிறு வயதில் குடும்பம் விட்டு வெளியேறிய மயிலன், கள்வர் கூட்டத்துடன் இணைகிறான், நன்னன் படையால் கைது செய்யப் படுகிறான். பரணர் பார்வையில் பட்டு, அவன் பாணர் குடி ஒன்றினை சேர்ந்தவன் என அறியப்பட்டு, பரணரால் மீட்கப்படுகிறான். பரணர் வசம் கல்வியும் அரசியலும் கற்கிறான். நன்னனின் மெய்க் காப்பாளன் எனும் நிலை வரை உயர்கிறான். பெண் கொலை செய்த நன்னன் என புலவர் பழிக்கும் நன்னனின் செயலுக்கு மறைமுக ஊக்கியாக, முதன்மைக் காரணமாக ஆகிறான். நன்னன் ஆட்சியை விட்டு புலவர்கள் நீங்க, சேரர்கள் வசம் சமாதான தூதுவர்களாக செல்ல பரணரோ, பிறரோ இன்றி சேரனுடனான போரில் நன்னன் வீழ்கிறான். நாடிழந்து நாடோடியாக ஓடும் மயிலன், மகீரனை சந்திக்கிறான். சேரனுக்கு உளவாக செயல்படும் மகீரன் மயிலனை துணைக்கு சேர்த்துக் கொள்கிறான், சேரனுக்கு ஆதரவாக உளவு செய்ய மயிலன் சாமி என்ற பெயரில் பறம்புமலை நுழைகிறான். தனது கல்வியையும் பரணரின் நட்பையும் குறிப்பிட்டு கபிலரின் நட்பை பெறுகிறான். தருணம் வருகையில் ஒரு இக்கட்டு ஒன்றினில் நிறுத்தி கபிலரை தனது ஒற்று வேலைக்கு துணை சேர்க்கிறான். நாள் வருகிறது. சதி அரங்கேறுகிறது. மயிலன் பாரியைக் கொன்று தப்பிக்கிறான். சதியில் சிக்கி கொலும்பன் குடும்பம் சிதறுகிறது. சதியில் சிக்கியது தனது குடும்பம் என்பதை அறிந்து தவிக்கும் மயிலன், மகீரனின் துணையை நாடுகிறான், மகீரன் அவர்களை பாதுகாப்பதாக சொல்லி விட்டு அப் பணியில், சித்திரையின் மனம் மயக்கி அவளை ஏமாற்றுகிறான். மகீரனின் அனைத்து செயல்களும் சந்தன் வழியே மயிலனுக்கு தெரிய வருகிறது. நெடிய காலம்.எங்கோ துவங்கிய மயிலன் வாழ்வு எங்கோ, சென்று எங்கோ திரும்பி , பாலைப் பாறையில் விழுந்த துளி நீர் போல ஆகிறது. மயிலன் மீண்டும் குடும்பம் சேர்கிறான். பாணர் குடி சொந்த ஊர் திரும்பும் வழியில் உம்பர்க்காட்டில் பரணரை சந்திக்கிறார்கள். பரணர் தனக்கு பரிசாகக் கிடைத்த உம்பர்க் காட்டையும் பெரும் செல்வத்தையும் அந்த பாணர் குடிக்கு பரிசளித்து விட்டு சென்று மறைகிறார். ஆழியாற்றின் கரையில் சிறு குன்று. அதன் உச்சியில் சிறு கோவில். மயிலன் அங்கு செல்கிறான். அதிர்கிறான். நன்னன் கொலை செய்த பெண் அங்கே தெய்வமாக அமர்ந்திருக்கிறாள்.

இனிய ஜெயம்,

ஜன்னல் இதழில் திங்கள் எழுதி வரும் தொடரின் ஒவ்வொரு அத்யாயமும் பேசும் ஆழத்தை, தமிழ்ப் பண்பாட்டை அதன் வேரின் சாரத்துக்கு உயிர் நீராக விழுந்த பெண்களின் கண்ணீரை தொட்டுப் பேசும் படைப்பு இந்தப் புனைவு. நீலபத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் வரும் ஆச்சி தங்களது குலக் கதையை, குலதெய்வமாக வணங்கப் பெரும் சகோதரிகளில் இருந்து துவங்குவார். பேதை பருவத்தை தாண்டாத அந்த சகோதரிகள் அறிவுக் கூர்மை கொண்டவர்கள். அவர்களின் தந்தை முத்து வணிகம் செய்பவர். கிடைத்ததில் சிறப்பான முத்தை, அந்த நாட்டு அரசனுக்கு பரிசளிக்கிறார். அரசன் அந்த முத்துக்களை மாலையாக கோர்த்து அணியப் பிரியப் படுகிறார். அரண்மனை நகை ஆசாரிகள், முத்தில் துளை இடுவது சாத்தியமே இல்லை என தெரிவிக்கிறார்கள். அரசன் அந்த முத்து வணிகரையே காலைக்குள் அந்த முத்துக்களை மாலையாக கோர்த்து வரவும், தவறினால் சிரச் சேதம் எனவும் ஆணை பிறப்பிக்கிறார். தந்தையின் கவலை அறிந்த இரு மகள்களும். தமது மதி நுட்பத்தால் முத்துக்களை மாலையாக கோர்த்து தருகிறார்கள். மன்னன் உயர்ந்ததெல்லாம் தன் வசம் மட்டுமே இருக்க வேண்டும் என விழைபவன். ஆகவே இத்தகைய மதி நுட்பம் கொண்ட பெண்களை மனம் புரிந்து கொள்ள விரும்புகிறான். தந்தைக்கு இதில் விருப்பம் இல்லை. அரசனை மீறவும் முடியாது. ஆகவே தனது மகள்களை ஒரு கிணற்றில் உயிருடன் பொட்டு புதைக்கிறார். கௌரவக் கொலை. அந்த சகோதரிகளை அக் குலம் குலதெய்வமாக வணங்குகிறது. எந்த உணர்வும் அற்று சொல்லி செல்லும் நாவல். ஆனால் நினைக்க நினைக்க உள்ளம் குமுறும். ஒரு பெண்ணின் நுண் அறிவே அவளின் உயிர் பறிக்கும் எமனாக அமைவதை என்ன சொல்ல? ரிபு. ரிபு என வந்த விதி. விதியாகி வந்த அநீதி.

இந்த நாவலில் பேதைப் பருவப் பெண், ஆற்றில் மிதந்து வரும் மாங்கனியை ஆசையாக எடுத்து உண்கிறாள். அக் கனி நன்னன் தோட்டத்தை சேர்ந்தது. அங்கிருந்து ஒரு கிளை முறிந்தாலும் காவலர்களுக்கு மரண தண்டனை. காவலர்கள் பெண்ணை நன்னன் வசம் நிறுத்த பெண்ணுக்கு மரண தண்டனை கிடைக்கிறது.

அன்னைத்தெய்வங்கள் முளைக்கும் அந்த அநீதியில் முட்டி திகைத்து நிற்கிறது இந்த நாவல். சீரிய இலக்கியத்துக்குள் வருபவர்கள்,சங்கச்சித்திரங்கள், காடு நாவலுக்குப் பிறகு, அடுத்ததாக வாசிக்க வேண்டிய நாவல் இந்த நிலம் பூத்து மலர்ந்த நாள். எனக்கு சங்க இலக்கிய அறிமுகம் மட்டுமே உண்டு, விற்பன்னன் அல்ல, சாரதாம்பாள் அவர்கள் எழுதிய சங்கச் செவ்வியல் போன்ற ஆய்வு நூல்கள், சில தமிழ் ஆசிரியர்கள் துணையுடன் கடந்த ஆறு மாதகாலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உலகுக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறேன். இந்த நாவல் நிகழும் காலம், களம், அதன் விரிவு, அரசியல் உட் சிக்ககல்கள், பண்பாட்டு கலாச்சார நுட்பங்கள் அனைத்தையும் இந்த நாவலின் முன்னுரையில் நீங்கள் சொல்லி [வாக்களித்து] இருப்பதைப்போல உடனடியாக எழுதி இந்த நாவலின் மறு வாசிப்புக்குள் என்னை தள்ளுமாறு கோரிக்கை வைக்கிறேன். நிற்க. இந்த நாவல் உருவாக்கும் பின் புலத்தின் அணைத்து அசைவுகளுக்கும் காரணமாக இருபத்து பாணர்களுக்கும் அரசர்களுக்குமான உறவு. அது குறித்து மனோஜ் அவர்களே முன்னுரையில் எழுதி இருக்கிறார். மிழக்குற்றம் ஆளும் எவ்வி இறந்தபோது பாணர்கள் தங்கள் இசைக் கருவிகளை உடைத்து எறித்து அழுதார்கள் என நாவலுக்குள் ஒரு குறிப்பு வருகிறது. கொலும்பன் தனது பேரியாழுக்கு மல்லிகை என பெயரிட்டு உயிர்ப் பொருளாய் பாவிக்கிறார், உயர்திணையாய்க் கொஞ்சுகிறார். போர் செய்து நிலம் வெல்லும் அரசர்கள், பாணர்களின் பாட்டுக்கு அந்நிலத்தையே பரிசாக அளிக்கிறார்கள். நிலம் சுருங்க சுருங்க கைக்கு அகப்பட்டதைப் பரிசாக அளிக்கிறார்கள். நாவலுக்குள் பாணர் குடி ஒன்று தங்களுக்கு பரிசாகக் கிடைத்த யானையை வைத்து மேய்க்கவும் இயலாமல், அதைக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் திகைக்கும் சித்திரம் ஒன்று வருகிறது. மன்னருக்கும் பாணருக்கும் உள்ள உறவு போல, பாணர்களுக்கும் ஏனைய எளிய குடிகளுக்குமான உறவு மற்றொரு அழகு. நாவல் நெடுக எயினர், குறவர், உழவர், ஆயர் என எக் குடி ஆகிலும் ‘’செல்விருந்தோம்பி வரு விருந்துக்காக ஏங்கி’’ நிற்கிறார்கள்.தமிழ்ப் பண்பாட்டின் சாரமான விருந்தோம்பல் இந்த நாவல் நெடுக, நெக்குருக்கும் வண்ணம் வந்த படியே இருக்கிறது. [இன்றைய நிகர் வாழ்வில் மொத்த இந்தியாவிலும் விருந்தோம்பலை கைவிட்டு குறுகித் திரியும் ஒரே நிலம் தமிழ் நிலம் என்று தயக்கமின்றி சொல்வேன்]. வித விதமான உணவு முறைகள், அத்தனை வேற்றுமையும் விருந்தோம்பல் என்ற பண்பாட்டில் ஒற்றுமை கொள்கின்றன.

சங்க இலக்கியம் கொள்ளும் அதே அகம் புறம் அழகியலில் இயங்கும் இந்த நாவல், புறத்தில் உருவாக்கிக் காட்டும் நிலக் காட்சிகள் கனவுகளை எழுப்பக் கூடியது. குறிப்பாக உம்பர்க்கட்டை பாணர் குடி அடையும்வரை வரும் மழைச்சித்திரம். எழுத்துத்தொழில் நுட்பமாகவும் சங்க இலக்கியக் கல்வி சில இடங்களில் முன் வைக்கும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு வகைமையை இந்த நாவல் கைக் கொள்கிறது. கொலும்பனின் தன்னுரையில் எடுத்து, சித்திரையின் தன்னுரையில் தொடுத்து, மயிலனின் தன்னுரையில் முடிகிறது நாவல். குறிப்பாக உடல் வெட்டுப்பட்டு கொலும்பனின் குரல் அடங்கும் புள்ளியில், முதல்பகுதி முடிந்து தந்தைமையின் இழப்பில் சித்திரையின் தன்னுரயாக இரண்டாம் பகுதி தொடுங்குவது நாவலின் அழகுகளில் முக்கியமான ஒன்று.

மூன்று பகுதிகளிலும் நாவல் கைக் கொள்ளும் பாவம் வாழ்வனுபவத்துக்கு நிகரானதாக இருக்கிறது. ஊர் நீங்கிய நாள் தொட்டு கொலும்பன் நிம்மதியான தூக்கத்தை இழக்கிறான். சித்திரைக்கும் சந்தனுக்கும் இடையே எப்போதும் பதட்டம் கொண்டே நிற்கிறான். சீரை மேல் சொல்லவொண்ணா பாசம். அவளது பேதை வயதுக்கே உரிய முறையில் கண் பட்ட அனைத்திலிருந்தும் கேள்வி கேட்கிறாள். இழந்த மகனைத் தேடி புறப்படுவதில் இருந்து, தனது மனைவிக்கு ஒத்தாசை செய்யும் சந்தன் மேல் எழும் கனிவு வரை எல்லா நிலையிலும் அவன் சராசரி தகப்பன்தான். அவனது தவிப்புகளை சொல்லியபடியே செல்லும் நாவல், அம்மன் கோவிலில் நீதிக் கல்லில் மிளகாய் அரைத்து தேய்த்தபடி சாகும் வரை தனது மகளுக்காக காத்திருக்கும் அப்பனின் சித்திரத்தை அடைகையில் தந்தைமை எனும் பேராற்றலின் பெரும் தவிப்பின் உச்சத்தை எட்டுகிறது.

இந்த நாவலின் தனித்துவமான பகுதி, சித்திரையின் தன்னுரையாக வரும் இரண்டாம் பகுதி. வாசிக்கும் எந்த ஆணையும் தன்னை சித்திரை என்றே உணர்ந்து, தானே சித்திரை ஆகி உரைப்பதாக மயங்கச் செய்யும் பகுதி. ஒரு பெண்ணாக புதிய புதிய நிலங்கள் அளிக்கும் பரவசமும் பதட்டமும் வாசகனையும் தொடருகிறது. குறிப்பாக மகீரனுடன் சித்திரை ஊர் நீங்குகையில் வரும் புற சித்தரிப்பு. அங்கு வரும் அகச் சித்தரிப்பு நாவலின் உச்ச கவித்துவ தருணங்களில் ஒன்று. பறக்கும் கூண்டில் சிறை பட்டிருக்கும் பறவையாக தன்னை உணருகிறாள் சித்திரை. பதட்டம் பொங்கும் கள்வர் குடியில் அவளுக்கு வாய்க்கும் முதலிரவு. தனது ஆளுகைக்கு மீறிய மகீரனின் புரியாத நடத்தைகள் அளிக்கும் பதட்டம், தனது வாழ்வே யாரென்றே அறியாத ஒருவனால் பந்தாடப் பட்டது கண்ட துக்கம் அனைத்தும் அவ்வையின் மடியில் தணிகிறது. ஔவையை அவரது கனிவை இத்தனை அனுக்கமாக்கியது சித்திரையின் நோக்கு வழியே அவ்வையை காண்பதால்தான்.

மனிதனோ மந்தையோ மீறும் குட்டியே ஆபத்தை எதிர்கொள்கிறது. மீறும் குட்டியே புதிதாக ஏதேனும் படிக்கவும் செய்கிறது. புடவி சமைத்த படைப்பாற்றலின் விதியே மனிதனுக்குள் மீறலாக உறைகிறது. மயிலனின் மீறல் அவனது விதி அல்ல. அவனது உள்உரையே அதுதான். அதிகாரம் நோக்கிய விருப்புறுதி. பேதை பெண்ணுக்கு மரணதண்டனை வழங்க நன்னனை தூண்டுகிறான். இந்த குணக் கேடு அவனுக்குள் எங்கு விதைக்கப் பட்டது? அவன் கள்வனாக இருந்த போது, தங்கள் குழுக்களுக்குள் இருப்பவரை தவிர்த்து பிற யாருக்கும் கருணை காட்டக் கூடாது என கற்கிறான். கற்றபடி கருணையே இன்றி ஒரு சன்யாசியை தண்டிக்கிறான். தலைவன் வந்து மட்டுறுத்தும் வரை. அங்கு விழுந்தது அந்த விதை இன்னார் இனியார் என பார்க்காது தண்டிக்கும் அக் குணம். பெரும்புலவர் கபிலரையே சொல்லால் சுடுகிறான். கபிலர் வடக்கிருந்து உயிர் துறக்கிறார். கபிலர் உண்மையில் நாடும் மன்னனும் பிழைக்கத்தான் மயிலனுடன் உளவு தோழனாக சேர்ந்தாரா, அல்லது உண்மையில் கபிலருக்கு சேர மன்னன் அவையில் கிடைக்கும் மதிப்பின் மேல் ஆவல் இருந்ததா, அந்த குற்ற உணர்வின் பகுதிதான் அவரது வடக்கிருத்தலா எனும் சாம்பல் பகுதி இந்த நாவலில் இலங்கும் உளவியல் மர்மங்களில் ஒன்று.

நாவல் நெடுக அடையாளமற்ற பெண்களின் கண்ணீர்க் கோடு. கொலும்பனின் மனைவி நாவலுக்குள் ஒரே ஒரு இடத்தில்தான் பேசுகிறாள். பேச்சு கூட இல்லை விதவையின் எஞ்சிய வாழ்நாளின் துயர் சொல்லும் ஒரு சங்கக் கவிதை. அவளது முதல் மற்றும் ஒரே குரல் நாவலுக்குள் அது மட்டுமே. அதன் காரணமாகவே அத் துயர் வருவிக்கும் கண்ணீர்த் துளிக்கு கடலின் திணிவு. பாணர் குடி தஞ்சம் புகும் ஆயர் குடியில் ஒரு வழக்கு நடக்கிறது. களவொழுக்கம். தனது மகளுக்கு வாழ்வஅளிக்க அவனை தாய் கெஞ்சுகிறாள். தாயும் மகளையும் விடுத்து அவன் வேறு எங்கோ நோக்கி நிற்கிறான். ஆயர் குடியின் இன்னொரு எல்லையில் மஞ்சு விரட்டு. தனக்கு வேண்டிய பெண்ணை வெல்ல இளைஞ்சர்கள் மரணத்துடன் மல்லிடுகிரார்கள். அணைத்து ஆராவாரமும் ஓய்ந்த பிறகு மெல்லிதாக கேட்கிறது சில காதல் பெண்களின் மெல்லிய விசும்பல். கொலும்பனை இழந்து திக்கற்று அலையும் சித்திரையும், பாரியை இழந்து கபிலருடன் நாடு நாடாக அலையும் பாரியின் மகள்களும் இரக்கமற்ற ஒரே வாழ்வின் இரு முகங்கள்.

சீரை நன்னனால் கொல்லப்பட்டு அம்மனாக வணங்கப்படும் அவளது கோவிலில் இருந்து மீண்ட பிறகு சிரித்தபடியே சொல்கிறாள் ‘’அந்த சுடுகாட்டு அம்மனின் மறு பிறவிதான் நான்’’. அங்கு துவங்கி படிப்படியாக வளர்ந்து சீரையின் அகம் மிக்க அமானுஷ்யமாக முன்வைக்கப் படுகிறது. நாவலின் இறுதியில் சீரை எப்படி தான் இதுவரை ஒரு முறை கூட பார்க்காத மயிலனை கண்டடைகிறாள்? நாவலின் மிக அழுத்தமான சித்தரிப்பு சீரையில்தான் நிகழ்கிறது. அவள் தனது உள்ளுணர்வின் ஆழத்தால், அல்லது தன்னுள் ஆவாகனம் கொண்ட அம்மனின் இருப்பால்,அவள் நெருக்கமாக மயிலனை பின்தொடர்ந்தே வருகிறாள்.சீரை குரலில் அப்பாவுக்கு அவள் கண்ட உருவெளிக் காட்சியும், சித்திரைக்கு அவள் கண்ட கனவும் சொல்லப் படுகிறது. அப்பாவிடம் நண்டுகள் வரைந்து அதிலிருந்து எழும் உருவங்கள் பற்றி சொல்கிறாள், சித்திரைக்கு பற்றி எரியும் உடலுடன் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஓடும் மான்கள் குறித்து சொல்கிறாள். முதல் காட்சியை முதன் முதலாக கடலைக் கண்ட மயிலன் அதன் கரையில் கண்டு உவகை எய்துகிறான், இரண்டாம் காட்சியை மயிலன் கள்வர் வசம் சேரும் முன் நேரில் காண்கிறான். இந்த இரண்டும் இணையும் புள்ளியில் மயிலனை பின்தொடரும் அழியாத அழலின் ஒளி துலங்குகிறது.

கண்ணகிக்கு கோவில் எடுத்த அதே நிலத்தில், யாரும் அறியா வனத்துக்குள் நன்னனால் கொலை செயப்பட்ட பேதைக்கும் கோவில். யாரறிவார் பரணர் எடுப்பித்த கோவிலாகவும் அது இருக்கலாம். அக் கோவிலின் கருவறைக்குள் மயிலன் காண்பது என்ன?

முதன் முதலாக கடலைக் காணும் மயிலன் அதன் தொடுவானுக்கு அப்பால் என்ன இருக்கும் என ஆவலுடன் சிந்திக்கிறான். இப்போது அனைத்திலிருந்தும் தப்பி ஓட, ஏதேனும் யவனக் கப்பலில் ஏறி தமிழ் நிலத்தை விட்டே விலக கடற்க் கரையில் நிற்கிறான். அனைத்துக்கும் அப்பால் தொடுவானுக்கும் அப்பால் கையில் கொலை வாள ஏந்தி விஸ்வரூபம் கொண்டு நிற்கிறாள் அன்னை.

மனோஜ் அவர்களை சந்திக்க நேர்ந்தால், சற்றே பொறாமையோடு கைகுலுக்க ஆசை. வம்சி வடிவமைத்த அட்டைப்படம் என அறிகிறேன். நாவலின் சாரத்துக்கு வளம் கூட்டுகிறது. மொழிபெயர்ப்பு குறித்து சொல்லியே ஆக வேண்டும். தமிழ் தவிர[அதுவும் சுமாராக] பிற மொழி எதுவும் அறியாத என் போன்ற தற்குறிகளுக்கு மொழிபெயர்ப்புகள் பல சமயம் வரம்.சில சமயம் சாபம். விஜய பத்மா என்பவர் மொழி பெயர்த்த மனற்குன்றுப் பெண் என்ற முக்கியமான உலக நாவல். ஆங்கிலம் அறியாத நானே அவரைக் காட்டிலும் சிறப்பாக மொழி பெயர்ப்பேன் என்ற தன்னம்பிக்கையை அளித்தது. அ புனைவுகளிலோ சொல்லவே வேண்டாம், போப்பு என்பவர் மொழி பெயர்த்த குகாவின் நுகர்வேனும் பெரும் பசி என்றொரு நூல், சில நாள் முன்பு மீண்டும் வாசித்துப் பார்த்தேன், என்னால் பாலி மொழியை சரளமாக வாசிக்க முடியும் என அதன் பிறகே அறிந்து கொண்டேன், இன்னும் சிலர் இருக்கிறார்கள். அண்ணன் அரங்காவின் சொத்தை விற்றாவது அவர்களுக்கு பள்ளிப்படை எழுப்ப உத்தேசம். சுகுமாரன், எம்.எஸ், யூமா வாசுகி, சி மோகன் என எனக்கு அணுக்கமான மொழிபெயர்ப்பாளர்கள் வரிசையில் கே வீ ஜெயஸ்ரீயும் இணைகிறார். ஆண்டவர் என்ற ஒரே ஒரு சொல்லைத் தவிர எந்த எல்லையிலும் வாசிப்பின்பத்தை சிதைக்காத கலாபூர்வம் குன்றாத மொழிபெயர்ப்பு. நிற்க. இந்த நாவல் குறித்து உங்களின் விரிவான கட்டுரையை எதிர்பார்த்து நிற்கும்….

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp