ஒரு மணியின் பல ஒலிகள்

ஒரு மணியின் பல ஒலிகள்

ஒரு வார கெடுவுக்குள் திருப்பித்தர வேண்டியிருந்த்தால் நானூறு பக்கத்திற்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை முழுதாக படிக்கும் எண்ணமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டுரைகளை படித்தபோது நிச்சயமாக எதையோ தவற விடுகிறோம் என்று தோன்ற வைத்து, பிறகு முழுதும் படிக்கச் செய்தது..

அனுபவம் கனிந்த மனிதனே புத்தகம் ஆகிறான் என்பதை ருசுப்பிக்கும் புத்தகம் இது. அனுபவ அறிவு கட்டுரைகளாக மாறும்போது டைரிக் குறிப்பாகவோ தகவல் களஞ்சியமாகவோ மாறிவிடும் அபாயம் அதிகம். பாரதி மணி இதை மிக லாகவமாக கையாண்டிருக்கிறார். அவரது நாடக மனம் இதற்கு அஸ்திவாரம் எனலாம். பிரத்யேக மொழி நடை எதுவும் இல்லை. ஆங்கில வார்த்தைகள் பல கலந்த சகஜமான உரையாடல் பாணி. சுவாரசியங்கள் மிகுந்த தொகுப்பு.

தன்னை முன்நிறுத்திக் கொண்டு பேசாத கட்டுரைகள். ஆனால் எல்லாவற்றிலும் நேரடியாக அவர் இருக்கிறார் - ராஜீவ் காந்தி கட்டுரை தவிர.

பூடகமாக எதையும் சொல்வதில்லை. பல விஷயங்களை தேங்காய் உடைப்பது போல 'பட்' என உடைக்கிறார். சொல்ல முடியாதவற்றை சொல்ல முடியாது என்றே சொல்லிப் போகிறார். நிறைய நெத்தியடிகள், அங்கதங்கள், இயல்பான நகைச்சுவைகள் உண்டு.

நிம்போத் சுடுகாடு, சுப்புடு, சிங் இஸ் கிங், நீரா ராடியா கட்டுரைகள் மிகச் சிறந்தவை. நீரா ராடியா கட்டுரையெல்லாம் இவர்தான் எழுதவேண்டும். எத்தனை பெரிய ஆளுமைகளை எல்லாம் சந்தித்து இருக்கிறார், அந்த நிகழ்வுகளின் அங்கமாக இருந்திருக்கிறார் எனும்போது பிரமிப்பு மட்டுமல்ல, நாம் சந்திக்க வேண்டிய முக்கியமான நபர் இவர் என்பதை உணர வைக்கிறது. இத்தகு கட்டுரைகள் மூலம் அறியப்படவேண்டிய இவருக்கு திரைப்படத்தில் வரும் புகைப்படத்துக்காக பேஸ்புக்கில் லைக் போடுவது என்பது அக்கிரமம்.

இனி கட்டுரைகளில் இருந்து சில சுவாரசியங்கள்

கட்டுரை முழுக்க ரயில் நிறைய இடங்களில் வருகிறது. நீண்ட பிரயாணங்களுக்கு அப்போதெல்லாம் கட்டுச் சாதம்தான். தயிர்சாதம் இரண்டாம் நாள் புளிக்க ஆரம்பிப்பதால் அதில் சீனி கலக்காத பால் சேர்த்துக் கொள்ளும் வயணம் இவரை 'நள' அடையாளம் காட்டுகிறது.

நாதசுரம் (நாகசுரம் என்பது இவருக்கு பிடிக்கவில்லை ) பற்றி நல்ல ரசிகராக எழுதுகிறார். மற்ற வாத்தியம் போல் அன்றி நாதசுரம் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் அது கர்ணகடூரம் ஆகும் என்பது முழு நிஜம். மூச்சு மூலம் வாசிப்பதால் இது வாய்ப்பாட்டுக்கு அருகில் உள்ள கலை. (திருமாலின் திருமார்பில் என்ற திரிசூலம் படத்தில் வரும் பாட்டுக்கு ட்ரம்பெட் சுருதி பிசகி மானத்தை வாங்குவதை கேட்டிருப்பீர்கள். )

கநாசு பூணூல் அணியாதவர். இவரது திருமணத்துக்கு மாமனாராக பூணூல் அணிகிறார். எதற்காக உங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்கிறீர்கள் என்று இவர் கேட்கும்போது 'உங்கள் குடும்பத்தினருக்கு இதில் மரியாதை இருக்கிறது. அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை' என்றார் என்று க.நா.சு பற்றி எழுதுகிறார். நிறைகுடங்கள் சப்தமிடுவதில்லை. இங்கே இரண்டு குடங்களை நாம் பார்க்க முடிகிறது.

புத்தாண்டு நாள் தவிர பிற நாட்களில் கநாசு மதுவை பொருட்படுத்துவதில்லை. கீழே மது பார்ட்டி நடக்க இவர் ஒரு கோப்பையில் ராயல் சல்யூட் கொண்டு போய் மாடியில் இருக்கும் காநாசுவிடம் வைக்கிறார். அவரும் சரி என்கிறார். காலை வரை அது அப்படியே இருக்கிறது. இதில் நாம் புரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது. மது என்பதை குடி என்கின்ற பொதுப்புத்தியில் இவர் கருதுவதில்லை. அப்படி வாழ்ந்ததும் இல்லை. தில்லி வாழ்வுக்கு நெருக்கமான ஒரு அங்கம் அது. இந்த புத்தகத்தில் உள்ள பாராட்டுக் கட்டுரையில் கூட சிலர் அவர் மதுபற்றி வெளிப்படையாக சொல்லுவதை விதந்து சொல்கிறார்கள். அவரது கட்டுரையை படித்தபின்னும் அவர்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆச்சரியம் என்று தெரியவில்லை.

பிரசித்தமான தில்லி குளிர் பற்றி சொல்லும்போது ஏதோ ஒரு ஸ்வெட்டரை அணிவதால் அதன் உள்ள லைனிங் கிழிந்து உண்டாகும் அவஸ்தையை சொல்லும்போது ஒற்றன் நாவலில் அசோகமித்திரன் விளக்கும் ஸ்வெட்டர் நினைவுக்கு வருகிறது. தில்லியாக இருந்தாலும் தீபாவளி தவிர பிற எல்லா நாட்களிலும் பச்சைத் தண்ணீர்தான் குளிப்பதை இவர் சொல்லும்போது நம் உடல் விறைக்கிறது. ஸ்வெட்டர் பின்னி முடித்தபின் உண்டாகும் பெருமகிழ்ச்சி பற்றி சொல்லும்போது இந்த தலைமுறை இப்படியான அனுபவத்தை நழுவ விடும் வருத்தம் நம்மை தொற்றிக் கொள்கிறது. இதை எல்லாம் சொல்லி ரிக்ஷாக்காரர்கள் உறையவைக்கும் குளிரில் நடைபாதைகளில் படுத்திருப்பதையும் சொல்கிறார். அது தரும் குற்ற உணர்ச்சியையும் சொல்கிறார். இவர்களுக்காக கட்டி வைத்திருக்கும் ஓய்வு அறைகளில் இவர்களது உடைகள் திருடு போகின்றன என்பதையும் சொல்கிறார். அப்போது குளிர் சுடுகிறது. (கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா சொல்லும் தில்லிக் குளிர் நினைவில் வரும்.)

சில சமயங்களில் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை என்று உணரும் சமயங்கள் உண்டு. எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் ஒரு வார்த்தை அல்லது செயல். பாரதி மணியை பிர்லா அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்திக்கொள்ள அழைகிறார். இவர் போனவுடன் அந்த இடமே அதிகாரத்தின் உயர் இடம் என்று சொல்கிறது. சம்பளம் உனக்கு சற்று உயர்த்தி தருகிறேன் என்று அவர் சொல்லும்போது அதை இப்படி எழுதுகிறார். 'அவரிடம் கேட்டேன் If you can double my salary. என் குரல் எனக்கே கேட்டது ! "

பிராமணாள் ஹோட்டல் என்ற போர்டுகள் பற்றி சொல்லும்போது மிக தெளிவான ஒரு நியாயத்தை சொல்கிறார். அது சாதி சார்ந்த அடையாளம் அல்ல . ருசி சார்ந்த அடையாளம். சோம்பு இல்லாத மசால் வடை வேறெங்கும் கிடைக்காது என்பது அது.

ராவுஜி மெஸ்ஸில் வழக்கமாக சாப்பிடும் ஒருவர் வேலை இல்லாமல் தவித்தபோது மூன்று மாதம் அவருக்கு இலவசமாக சாப்பாடு போட்டு வந்தார் என்ற விஷயம் படிக்கும்போது ஜெயமோகன் சோற்றுக் கணக்கு கதையில் வரும் கெத்தெல் சாகிபுவை நினைவூட்டுகிறது.

ஒரு கடையில் சட்டினி பற்றி சொல்லும்போது கடலை மாவு வைத்து எண்ணெய் குளியல்போது தலையில் வழியும் மாவை உதாரணமாக சொல்வது நல்ல நக்கலடிப்பு.

தற்போது கார்பரேட் உலகில் நடப்பதை டிவி சானல்கள் கூப்பாடு போட்டு ஊதுவதால் அது தெரிகிறது. இத்தகைய நீக்குப் போக்குகள் எப்போதும் நடப்பதுதான். என்பதை நீரா ராதியா கட்டுரையில் அறிய முடியும். கொலை விஷயமாக மட்டும் இருந்திராவிட்டால் தற்போது டெங்கு ஜுரத்தில் இருக்கும் பெண்மணி பெரும் அதிகாரப் பாவையாக இருந்திருப்பார் அல்லவா!. ஒரு டெல்லிக்காரந்தான் இதை எழுத திராணி உள்ளவன் எனலாம்.

நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டு வரும் ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அலுவலகம் வரும்போது அதை சற்றும விரும்பாத கிருஷ்ண மேனன் நாளை முதல் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாது என்கிறார் கறாராக. அதற்கு ராமச்சந்திரன் பணிவாக நாளை இப்படி என்னைப் பார்க்க மாட்டீர்கள் என்று சொல்லி அன்று மதியமே வேறு ஒரு துறைக்கு மாற்றல் வாங்கிப் போய் சாகும் வரை மேனனைப் பார்க்கவில்லை என்ற செய்தி ஆச்சரியமூட்டுகிறது.

நுணுக்கமான சில விஷயங்களை சொல்கிறார். அதில் சில துளிகள்.

'சாயங்காலத்து குழந்தை ரெடியா" என விழா மேடையில் உள்ள சிவாஜி இவரை அழைத்துக் கேட்பது மதுப்புட்டியை பற்றித்தான். LKA -50 L என ஒரு டைரியில் மந்திரி எழுதி இருப்பது லஞ்ச ஊழல் வழக்கில் சிக்குகிறது. அவர் LK அத்வானி என்கிற மாடு 50 லிட்டர் பால் கறந்தது என்று சொல்கிறார். கோர்ட் ஒத்துக் கொள்கிறது. மேலும் மனதை கொஞ்சம் கசிய வைக்கும் செய்தி கநாசு வின் மனைவி ராஜி அவருக்கு ஹார்லிக்ஸ் போட்டுத் தந்தார். பிறகு கநாசு இறந்து போகவே அதன் பிறகு அவர் யாருக்கும் ஹார்லிக்ஸ் போட்டுத் தந்ததே இல்லை.

சீக்கிய படுகொலை சமயத்தில் நடந்தவற்றை சொல்லும்போது சாரு நிவேதா எழுதிய சிறுகதை நிழலாடியது.

எம்பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் சம்பளம் உயர்த்தும் விஷயத்தில் அது தங்களுக்கும் சாதகம் என்றாலும் பெயரளவில் அதை எதிர்த்து இடதுசாரிகள் குரல் கொடுப்பதை feeble protest என்கிறார். மிருதங்கத்தில் ஒற்றை விரல் சுண்டும்போது உண்டாகும் ஒலி போல கச்சிதமான பதப்பிரயோகம் அது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்னவெல்லாம் இலவசம் வசதி என்று வீடு மின்சாரம் என்று பட்டியல் போட்டுக்கொண்டே வந்து இரண்டு கோடி தொகுதி மேம்பாட்டு நிதி என்று அதில் சேர்க்கிறார். இப்படி சில ஊசிப் பட்டாசுகளை நிறைய கொளுத்திப் போடுகிறார்.
காணாமல் போனவை:

இந்த கட்டுரை படிக்கும்போது முன்பு இருந்து தற்போது எத்தனை விஷயங்கள் காணாமல் போயின என்று தெரிகிறது. உதாரணமாக OYT தொலைபேசி (அந்த கஷ்டம் பட்டவர்களுக்குதான் தெரியும் ) - வாளி அடுப்பு - நூதன் ஸ்டவ் - தம்பூர் மீட்டும் ரஜாய் தைப்பவர்கள் - ரயில்வே பிளாட்பாரத்தில் பந்தி சாப்பாடு - எனப் பல

அது தவிர இதில் தகவல்களுக்குப் பஞ்சமில்லை.

உதாரணமாக - India Foils நிறுவனத்தின் ஏற்றுமதி அலுமினிய தகடுகள் நிராகரிக்கப்பட்டதால் அவருடைய அமைச்சர் நண்பரிடம் இதைப் பற்றி பேச ரயிலில் இனிமேல் அலுமினிய தகடுகளில் உணவு என்று அமைச்சர் உத்தரவிட்டது. அருந்ததி ராய் திரைப்படத்தில் நடித்தது - அவர் NDTV பிரணாய் ராயின் ஒன்றுவிட்ட சகோதரி என்பது - ஹசீனாவின் கணவர் (ஆமாம் வங்கம்தான் ) ரகசியமாக இந்திரா காந்தியின் தயவால் இங்கே அஞ்ஞ்சாத வாசம் இருந்தது அவர் கணவருக்கு அணுசக்தி துறையில் இந்திய பிரஜை என்ற சொல்லி வேலை கொடுத்தது - வங்கத்தின் பத்மா நதியில் கிடைக்கும் ஹில்சா மீன் விசேஷம் - சரண்சிங் நடத்தி வந்த Rural India பத்திரிகையில் கநாசு சொற்ப நாட்கள் ஆசிரியராக வேலை செய்தது - மெட்டி ஒலி டெல்லி குமார் அரவிந்த் சாமியின் அப்பா - டெல்லி ந்யூஸ்ஸ்ரீடர் ராமநாதன் சரத்குமாரின் அப்பா - முத்துசாமி தீட்சிதர் பூர்விகல்யாணி பாடியபிறகு உயிர் நீத்தார், போன்ற பாப்கார்ன் கொசுறுகளுடன் செய்திகள் - பலப்பலப்பல

சிங் இஸ் கிங் அருமையான கட்டுரை. பாகிஸ்தானில் இருந்து வந்த சிங் சமூகம் பாஸ்மதியை நமக்கு கொடுத்த வெகுமதி என்பதும் - 'இப்படிச் செய்தது தப்பில்லையா,' என்று ஒரு முதிய சர்தாரைக் கேட்க, 'நேராக எடுக்க முடியாத நெய்யை விரல் வளைத்து எடுப்பதில் தப்பில்லை,' என்ற அவர் பஞ்சாபிக் கூற்றை வைத்த இடம் சொல்லப்பட்ட விதத்துக்காகவே இந்த புத்தகம் உயர்ந்து நிற்கிறது. போன மாதம் கூட பாகிஸ்தான் பாஸ்மதிக்கு புவிசார் குறியீடு தங்களுக்குத் தரவேண்டும் என்று நீதிமன்றம் சென்று அது மறுக்கப்பட்டதன் பின்னணியில் இதைப் படிக்கவேண்டும்.

சோஷல் ட்ரிங்கிங் என்பதைப் பற்றி தமிழர்களுக்கு இன்னும் தெளிவில்லை என்றும், தமிழர்களுக்கு தேசியம் என்பது டெல்லி போகும்போது போட்டுக்கொள்ளும் போர்வை என்றும் சொடக்குகிறார். நிஜம்.

யாரிந்த மணி?

சரி.. இந்த புத்தகம் மூலம் நாம் காண முடிகின்ற SKS மணி யார்? 50களில் தென்னிந்தியாவிலிருந்து கிளம்பிப் போன, படித்த சூட்சுமமான மணி மணியான புத்திசாலி இளைஞர்களில் ஒருவர். வேலை பார்த்துக்கொண்டே MBAவரை படித்து புத்தியால் முன்னேறிய பலருள் ஒருவர். இதை புத்தகத்தின் பல இடங்களில் பார்க்க முடியும். இவர் பழகிய மனிதர்கள் எல்லாருமே பெரிய ஆளுமைகள் என்பதால் இவர் அதி மேல்தட்டு பேர்வழி என்று ஒரு பிம்பம் உண்டாகக் கூடும். ஆனால் அது முழு உண்மை அல்ல.

Mutton Tallow என்ற விஷயத்தில் அரசு வெளியிடும் பட்ஜெட் அறிக்கைகளில் உள்ள அறிவிப்புகளை புத்தி கூர்மையுடன் பார்த்து அலசியறிந்து அதில் உள்ளவற்றை ஒரு வக்கீலின் நுண்மையுடன் கையாளும் மத்திய வர்க்க புத்திசாலியின் அறிவு எப்படி வேலை செய்கிறது. பிர்லா கம்பெனிக்கு காற்றுவாக்கில் சொன்ன ஒரு வார்த்தை எப்படி 250 கோடியை லாபமாக்கியது என்பதில் ஒரு மணியைக் காணலாம்.

துரைராஜன் என்ற என் சித்தப்பா ஒருவர் சென்ட்ரல் எக்சைஸ் அதிகாரியாக இருந்தார். பட்ஜெட் சமயங்களில் வீட்டில் பள்ளிக்கூட பிள்ளை போல நிறைய புத்தகமும் காகிதமும் வைத்து நள்ளிரவெல்லாம் குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார். விடுமுறை நாட்களில் வரிவிதிப்பு சம்பந்த புத்தகங்களைப் படிப்பார். அவர் சொல்லுவார் "எல்லா விதிகளின் புது மாற்றங்கள் குறித்து தெளிவாக கச்சிதமாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சின்ன கவனப் பிழையில் லட்சக்கணக்கில் வரிவசூல் நழுவிவிடும். அரசாங்கத்துக்கு நஷ்டம் என்பார் அவர். SKS மணிகள் பற்றிய எச்சரிக்கை அவருக்கு இருந்திருக்கிறது என்று இப்போது தெரிகிறது. ஆனால் இந்த டாம் அன் ஜெர்ரி ஆட்டம்தான் அரசாங்கம்.

வினோத் என்பவர் ஒரு டெலிபோன் உடனடி இணைப்பு கேட்டு அதற்கு இவர் முயல, ஏளனமாக இவரிடம் அவர் 5000 ரூபாயை பையில் வைக்க மறுநாளே ஒரு பைசா செலவு இல்லாமல் அதைச் செய்து முடித்து, 'செக் பண்ணிக்கோங்க,' என்று சொன்னதில் ஒரு மணியைக் காணலாம்.

குன்னக்குடி வைத்யனாதனுக்காக விருதுக்காக இரண்டு வருடம் முயன்று மூன்றாவது வருடம் இயல்பாகவே வந்து விட அதற்கு இவரை பாராட்டும் குன்னக்குடியிடம் இவர் காட்டிய மௌனத்தில் ஒரு மணியைக் காணலாம்.

Beating retreat என்பது பற்றி தெரியாத இளைஞர்கள் பற்றி சினக்கும் இடத்தில் நெஞ்சு விம்மும் ஒரு மணியைக் காணலாம்

இந்த புத்தகத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றான நிகம்போத் சுடுகாடு பற்றி பேசாத வாய் இருக்க முடியாது. பாடை கட்டுவதில் எனக்கு இணையில்லை என்று சொல்லிக் கொள்ளும் பரம எளிய மணியை இங்கு காணலாம். இறப்புச் செய்தி கேட்டால் யார் என்று தெரியாவிட்டாலும் 500 ரூபாயை பையில் செருகிக்கொண்டு நிகம்போத் சுடுகாடு கிளம்பும் ஒரு மணியைக் காணலாம்.

இப்படி அடிக்கடி போய்ப் போய் அங்கிருக்கும் வெட்டியான்களே பழக்கமாகிவிட ஒரு முறை போகாவிட்டால் எங்கே காணோம் என்று கேட்கும் அளவுக்கு சகஜமான ஒரு மணியைக் காணலாம்.

இந்த கட்டுரை படிக்கையில் என்னுடைய தந்தை நினைவு வருகிறது. அவர் எந்த இடத்தில் எந்த பாடையில் யார் பிணம் போனாலும் ஒதுங்கி நின்று கைகூப்பி அல்லது கண்மூடி மரியாதை செய்வார். ஒரு முறை பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் யாரோ ஒரு பெண் ஏதோ பிரச்னையில் பூச்சி மருந்து குடித்து இறந்துவிட அந்த பிணம் சாலையில் போகும்போது அவசர அவசரமாக அருகில் இருந்த ஓட்டல் ஒன்றுக்குள் நுழைந்து மாடிப்படி வளைவில் அவர் குலுங்கி அழுதது நினைவுக்கு வருகிறது.

தில்லியில் உத்தியோகத்தில் குப்பை கொட்ட தேவையான 7 விஷயங்கள் என்று சொல்வதில் சற்றும் சங்கோஜமோ மறைவோ இல்லாமல் விளம்பும் தைரியம் இவர் எளிமையிலிருந்தும் வரும் பாசாங்கற்ற முகத்தில் ஒரு மணியைக் காணலாம்.

ஒரு பேட்டியில், 'எழுத்தாளன் என்று என்னை சொன்னால் கூசுகிறது' என்கிறார். அது அவர் அடக்கம். ஆனால் இவ்வளவு அனுபவங்களை வைத்து நூறு சிறுகதைகள் அவர் எழுதி விடலாம். அந்த லாகவம் தெரிகிறது. உதாரணமாக - நிம்போத் சுடுகாடு கட்டுரையை ஒரு சைக்கிள் ரிக்ஷா பாபாவைச் சொல்லி தொடங்குகிறார். பிறகு பலவும் சொல்லி விட்டு இப்போது பாபாவை சொன்னதன் காரணத்தை முடிச்சு போடுகிறார்.
பூர்ணம், சுஜாதா, டப்பிங் செய்திகள், தேசியவிருதுகள், செம்மீனுக்கு இவர் செய்த முயற்சிகள், போன்றவை முன்பே பல கட்டுரைகளில் நிறைய பேசப்பட்டுவிட்டன. அப்போது தில்லி வாழ் தமிழர்கள் இலக்கிய உலகம் மற்றும் நாடக உலகில் இருந்த அந்நியோன்னியங்கள் விழாக்கள் வரவேற்புகள் அறிமுகங்கள் அதிகாரங்கள் என அனைத்தையும் மத்தாப்புத் தெறிகளாக நாம் இதில் காணமுடியும்.

அண்ணா முதல் எம்ஜியார் வரை பலருக்கும் நன்றாக தெரிந்தவராக உதவி செய்திருந்தும் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு முறை கூட அவர்களை சென்று சந்தித்தது இல்லை என்பதில் ஒரு மணியைக் காணலாம்.

புள்ளிகள் வைத்து கோலம் போடுவதில் புள்ளிகளை தொட்டு இணைத்தபடியும், தொடாமல் வளைத்தும் கோலம் போடப்படுவதுண்டு. அப்படி இவர் பல 'புள்ளி'களை தொட்டும் தொடாமலும் போட்டிருக்கும் கோலத் தொகுப்பு - "புள்ளிகள் கோடுகள் கோலங்கள்". பாரதி மணி அவர்களை - ஒவ்வொரு மணியை ஒவ்வொன்றில் நாம் காண முடிந்தாலும் எல்லாமே ஒரே மணியின் பல ஒலிகள்தான் என்பதையும் நாம் அறிய முடியும்.

இந்த சிறப்பு புத்தகத்துக்கா? பாரதி மணிக்கா?

ஒன்றில் உள்ள மற்றொன்றுக்காக.

(நன்றி: ஆம்னி பஸ்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp