மகாத்மா ஜோதிராவ் புலே

மகாத்மா ஜோதிராவ் புலே

வெவ்வேறு காலங்களில் வாழ்ந்து வந்த அனைத்து மனிதர்களுமே பல்வேறு மொழிகளில் பேசி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது அறிவுரை ஒன்றாகவே இருந்திருக்கிறது. சூரியன் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய நாளைக் கொண்டு வருவது போலவே, ஒவ்வொரு மாமனிதனும் சமூகம் முன்னேற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறான்.

- தனஞ்செய் கீர்

ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறக்கும் மாமனிதர்கள் தமது சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுபவர்களே என்று தனஞ்செய் கீர் தனது “மகாத்மா ஜோதிராவு பூலே”வின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நமது மராத்திய மண்ணில் மகாத்மாவாக வாழ்ந்து மறைந்த மகாத்மா ஜோதிராய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடிக்கிறபோது, அவரது சொற்கள் மெய்ப்படுகின்றன. பூலேவை இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று சரியாகவே குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

மராட்டிய மண்ணில் தீண்டத்தகாதவர்களுக்காகவும், பெண்களுக்காகவும் முதலில் செயல்வடிவப் போராட்டத்தைத் தொடங்கியவர் ஜோதிராவ் பூலேதான். சூத்திரர்கள், ஆதிசூத்திரர்கள், பெண்கள் ஆகியோர் மத்தியில் நிலவி வந்த அறியாமையையும், மூடநம்பிக்கையையும் அகற்ற அவர்களின் அடிமை விலங்குகளை உடைத்திறியக் களம் புகுந்தவர் பூலே. முதன்முதலில் சனாதனிகள் கொடி கட்டிப் பறந்த பூனேவில், சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து அதற்கு சவால் விடுவதுபோல் அடித்தள மக்களுக்கும், பெண்களுக்கும் பள்ளியைத் திறந்தவர் பூலே. சமூக சமத்துவம், நீதி, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சமூக ஒழுங்கை மறுநிர்மாணம் செய்வதே அவரது இலட்சியமாக இருந்தது.

ஜோதிராவின் பாட்டனார் சதாரா நகருக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் அடிப்படை கிராம ஊழியராக இருந்தவர். அங்கே இருந்த ஒரு கிராம பார்ப்பன அதிகாரியின் அட்டூழியம் தாங்க முடியாமல் அவனைக் கொன்று விட்டு பூனேவில் குடியேறிவிட்டார் அவர். அங்கிருந்த ஒரு பூ வியாபாரி அவரது மூன்று மகன்களுக்கும் பூ வியாபாரத்தைக் கற்பிக்க, அவரது குடும்பம் ‘பூலே’ என்ற பெயருடன் செழித்தது. பூலே குடும்பம் இந்து சமுதாயத்தில் அடிமட்ட விவசாயப் பிரிவைச் சேர்ந்ததாகும்.

அவரது மகனான கோவிந்தராவுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஜோதிராவ் பூலே. ஆண்டு 1827.

ஜோதிராவ் பூலேவின் காலச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் அவரது பணி எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது தக்காணத்தில் பேஷ்வாக்களின் ஆட்சி வீழ்ச்சியை சந்தித்த காலம். ஆங்கில இராணுவத்தின் மேலாதிக்கத்தால் மராத்தா ஆட்சி வலுவிழந்தது. அவர்களது வெறியுணர்வால் மராட்டியம் சீர்குலைந்தது.

பேஷ்வாக்களின் மன்னன் இரண்டாம் பாஜிராவ் ஒழுக்கக்கேடானவன். எப்போதும் பெண்கள் சூழ இருப்பவன். அவனது ஆட்சி குடிகாரர்களையும், சூதாட்ட விடுதிகளையும், ஊழலையும் உருவாக்கியிருந்தது. ஆட்சி கட்டற்ற ஒழுக்கக்கேட்டை மறைமுகமாக ஆதரித்தது. மக்கள் அனைத்து தார்மீக நெறிகளையும் இழந்து நின்றனர்.

சித்பவன் பார்ப்பனர்களே அனைத்துப் பதவிகளையும் பிடித்துக் கொண்டனர். பிற சாதியினர் அமர்த்தப்பட்டிருந்தாலும், எவ்வளவு திறமையானவராகவும், உறுதியானவராகவும் இருந்தாலும், சூழ்ச்சியால் விரட்டப்பட்டனர். இந்தப் பார்ப்பனர்கள் இரண்டாம் பாஜிராவை விஷ்ணுவாக, சிவனாகப் புகழ்ந்து தமது காரியத்தை சாதித்துக் கொண்டனர்.

அறநெறியில் ஒரு தேக்கம்; கலாச்சாரத்தில் ஒரு சீரழிவு; மதவிசயங்களில் ஒரு இறுக்கம். அறிவு, உழைப்பு ஆகிய செயல்பாடுகளில் ஏற்பட்டிருந்த தளர்ச்சியானது வீழ்ச்சியையும், சீரழிவையும் கொண்டு வந்தது. இதுவே அன்றைய நிலை.

அன்றைய நிலையில் ஜோதிராவை பள்ளிக்கு அனுப்புவது என்று துணிச்சலாக முடிவெடுத்தார் அவரது தந்தை. எனினும், அவரது உதவியாளர் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் படிப்பில் சிறந்து விளங்கிய ஜோதிராவ் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். எனினும் தமது குடும்பத் தொழிலில் சிறப்பாக ஈடுபட்டு நற்பெயரீட்டினார். தமது பதிமூன்றாவது வயதில் எட்டு வயதே நிரம்பிய சாவித்திரிபாயைக் கரம்பற்றினார். அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அவரது நிழலாக, அவரது கொள்கையை, கோட்பாட்டை உறுதியாகப் பற்றி நின்ற ஒரு உருதுணையாக விளங்கினார் சாவித்திரிபாய்.

மீண்டும் 1844இல் பள்ளிக்கு அனுப்பப்பட்டார் ஜோதிராவ். அங்கு அவருக்குக் கிடைத்த பார்ப்பன நண்பரான சதாசிவ கோவாந்தே இறுதிவரை அவருக்கு நண்பராகவும் தோழராகவும் இருந்தார். வீட்டருகிலோ முஸ்லீம் பையன்கள்தான் அவரது தோழர்கள். மேலும் அவரது வாழ்நாள் நண்பர்களாகவும், அவரது கொள்கையைப் பற்றி நின்றவர்களாகவுமிருந்த இரு பார்ப்பன நண்பர்கள் மோரா வித்தல் வல்வீகரும், யஷ்வந்த் பரஞ்சிபேயும் அப்போதுதான் நண்பர்களாயினர். அக்காலத்தில் நடந்து வந்த விடுதலைப் போராட்டங்களும் அவர்கள்மீது செல்வாக்குச் செலுத்தின.

ஆனால் அவரது வாழ்க்கைப்பாதையை மாற்றியது அவர் கலந்து கொண்ட ஒரு பார்ப்பனத் திருமணம். அதில் அவர் அழைக்கப்பட்டே கலந்து கொண்டிருந்தாலும், அவர் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கடுமையாக அவமதிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார். இந்தச் சமூக இழிவுக்கெதிராகக் கலகம் செய்யவும், அடிமைச் சங்கிலியை விரட்டியடிக்கவும், மதத்தின் பெயரால் வளர்க்கப்பட்டு, இந்துச் சமூகத்தின் மீது மோசமான பாதிப்புக்களை செலுத்தி வந்த கீழ்த்தரமான தீய ஒழுக்கங்களுக்கு எதிராகப் போராடவும் ஜோதிராவ் உறுதி பூண்டார். ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்டு அவமானப்படுத்தியது எப்படி மகாத்மா காந்தியை உருவாக்கியதோ, மாட்டு வண்டியிலிருந்து இறக்கி விடப்பட்டது எப்படி அண்ணல் அம்பேத்காரை உருவாக்கியதோ, அதேபோல் மகாத்மா ஜோதிராவ் பூலேவை உருவாக்கியது இந்த அவமதிப்பு.

இருபத்தொரு வயதே ஆன ஜோதிபா மராட்டியத்தில் சமூக சீர்திருத்த மணியை ஒலிக்கத் தொடங்கி விட்டார். அந்தக் காலத்தில் சீர்திருத்தத்துக்கென பார்ப்பன சமூகத்திலிருந்து வந்த சிலரே கைகொடுத்து முன்நின்றது ஒரு பெரும்புரட்சியே. அவர்கள் ஜோதிபாவுக்குத் துணை நின்றனர். பெண்கள் படிக்கவே கூடாது என்ற சனாதன தர்மத்தை உடைத்து முதன்முதலில் பெண்கள் பள்ளியை அமைத்தார் ஜோதிபா. தமது மனைவி சாவித்திரிபாய் பூலேவுக்குக் கல்வி கற்பித்து அவரையே ஆசிரியராகவும் ஆக்கினார். பொது வேலைகளுக்கு வரும் இந்தியப் பெண்களுக்கு சாவித்திரிபாய் முன்னோடி. இதற்கெதிராக சனாதனிகள் தாக்குதல் தொடுத்தனர். சாவித்திரிபாய் தெருவில் நடக்கும்போது கற்களாலும், சேற்றாலும் தாக்கப்பட்டார். அமைதியாகப் பொறுத்துக் கொண்ட அவர் தனது கணவரின் கொள்கையை சிறிதும் கைவிடாது உடன் பணியாற்றினார். ஜோதிபாவை சிறிதும் அசைக்க முடியாத சனாதனிகள் அவரது தந்தையை மிரட்டி அவரையும், அவரது மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்ற வைத்து விட்டனர். ஆறு மாதங்கள் மட்டுமே அவரால் பள்ளியை நடத்த முடிந்தது. எனினும் தளராத அவர் சிறிது நிலைமை மேம்பட்டதும் தம் நண்பர் சதாசிவ கோவந்தே கொடுத்த இடத்தில் மீண்டும் பள்ளியைத் தொடங்கி விட்டார். மிகச்சிறந்த பெயரை இந்தப்பள்ளி பெற்றது.

பூலே செய்த இன்னொரு செயல் வார்த்தைகளால் பாராட்ட இயலாதது. அவர் தாழ்த்தப்பட்டவர்கள்மேல் மட்டும் தனது கருணையைக் காட்டவில்லை. அனைத்து சாதியினரும், பார்ப்பனர்கள் உட்பட சகோதரர்களாகவே கருதி வந்தவர். பிற்போக்கு பார்ப்பனர்களை அவர் கண்டனம் செய்து எதிர்த்த அதே வேளையில், முற்போக்கு சிந்தனையுடன் அனைவர் நலனுக்காகவும் உழைத்த பார்ப்பனர்களை அவர் பாராட்டவும் தவறவில்லை. அந்தக் காலத்தில் பார்ப்பன விதவைப் பெண்கள் கடும் துன்பத்தில் உழன்றனர். அவர்கள் மொட்டையடிக்கப்பட்டு வீட்டுக்குள் அடைக்கப்பட்டனர். சிலரது காம விளையாட்டுக்களில் சிக்கி சின்னாபின்னமாயினர். எனவே அவர்கள் யாருக்கும் தெரியாமல் பிள்ளை பெற்று விட்டுச் செல்வது வழக்கமாகிப் போனது. பார்த்தார் ஜோதிபா. தன் பொறுப்பிலேயே ஒரு அமைப்பைத் தொடங்கி, இது போல் வழியற்று வரும் பார்ப்பனப் பெண்களை தம் வீட்டிலேயே வந்து தங்கிப் பிள்ளை பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்தார். அது மட்டுமல்ல, இப்படி ஒரு பார்ப்பனப் பெண் பெற்றெடுத்த பிள்ளையைத் தன் பிள்ளையாக தத்தெடுத்து வாரிசாக்கிக் கொண்டார்.

விதவைகளாகும் பார்ப்பனப் பெண்களுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்ற உன்னத லட்சியத்தை முன்வைத்து நாவிதர்களின் உதவியுடன் பெரும் போராட்டத்தைத் தூண்டி அதற்கும் பெருமளவில் மராட்டியத்தில் முடிவு கட்டினார் ஜோதிபா.

உண்மை நாடுவோர் சங்கம் என்ற சங்கத்தை அமைத்து அதன் மூலம் ஏராளமான செயல்பாடுகளை மேற்கொண்டு பெரும் சீர்திருத்தத்தைச் செய்தார் ஜோதிபா. அவரைப் பின்பற்றி ஏராளமானோர் அவரது சீடர்களாயினர். அவரது இயக்கம் மராட்டியத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.

ஆனால் அவர் இந்திய விடுதலைப் போரில் கலந்து கொள்ளவில்லை. எனினும் என்றேனும் ஒருநாள் இந்தியா விடுதலை பெறும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். இருந்தாலும் ஆங்கிலேயர்கள் வந்த பின்பே தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால், அந்த ஆட்சி தொடர வேண்டுமென்றே அவர் விருப்பம் கொண்டிருந்தார் என்று தெரிகிறது. அவர்கள் வெளியேறினால் மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கப்பட்டு விடுவார்கள் என்று அஞ்சினார். எனவேதான் அம்மக்கள் பேஷ்வாக்களின் ஆட்சி ஒழிந்ததைக் கொண்டாடினார்கள். இன்று அவர்களது அச்சம் உண்மையாகியுள்ளதாகவே தெரிகிறது. அதற்குச் சான்று பீமாகோரிகானில் பேஷ்வாக்களுக்கெதிராக ஆங்கிலேயர்களின் படையில் பங்கேற்ற மகர் சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செய்யும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொடங்கி வைத்த விழாவை காவிப்படையினர் தாக்கியது.

ஆனால் ஜோதிபா மதமாற்றத்தை விரும்பவில்லை. அவர் இந்துவாகவே தொடர்ந்தார், மதமாற்றம் செய்வதைத் தடுத்தார். இந்த வகையில் பௌத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கர் அவரிடமிருந்து மாறுபடுகிறார்.

பூனே நகராட்சி உறுப்பினராக பூலே சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார். இவ்வாறு அவரது ஏராளமான செயல்பாடுகள் புத்தகத்தில் விரிந்து கொண்டே செல்கின்றன. நம்மை ஆட்கொள்கின்றன.

அதுமட்டுமன்று, இந்தியாவில் மகாத்மா காந்தி உட்பட வெகுசிலர் பெற்ற மகாத்மா என்ற பட்டத்தை முதலில் பெற்றவர் ஜோதிபா. ஆனால் அதை அவரது அறுபதாவது பிறந்தநாளில் ஆயிரக்கணக்கில் கூடி மக்களே அளித்தனர் என்பதில்தான் அவரது மேன்மை அடங்கியுள்ளது. இதனை மகாத்மா காந்தியே பின்னர் கூறியுள்ளார்.

இதைத்தவிர அவரது இயக்கம் சார்பாகப் பத்திரிகை நடத்தியது, அவர் எழுதிய புத்தகங்கள் என்ற வகையிலும் அவர் பங்களித்துள்ளார். அவரது கடைசிப் புத்தகம் அவரது இறப்புக்குப் பிறகு அவரது சிறுவயது பார்ப்பன நண்பர் வல்வீகரால் வெளியிடப்பட்டது என்பது சிறப்பு.

“சத்யமேவ ஜெயதே - வாய்மையே வெல்லும்” என்ற கோஷம் பூலேவால் உபயோகிப்பட்டதேயாகும்.

இப்படிப்பட்ட சிறந்த சமூக சேவகராகவும், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாகவும், தம் வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணித்தவுமான மகாத்மா பூலேவின் வாழ்க்கைச் சித்திரத்தை அண்ணல் அம்பேத்கர் தமது இறுதி நாட்களில் வெளியிட விழைந்தார். ஆனால் அவரது உடல்நிலை இடம் கொடுக்காததால் அப்பொறுப்பை ஏற்ற தனஞ்செய் கீர் அந்தப் பொறுப்பை மிகச்சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். கிடைத்த அனைத்து சிறு தகவல்களையும் உபயோகித்து மாபெரும் வாழ்வைக் கட்டமைத்துள்ளார்.

திரு.வெ.கோவிந்தசாமி சலிக்காத, ஆற்றொழுக்கான நடையில் அவரது புத்தகத்தைத் தமிழாக்கம் செய்துள்ளார். சிந்தன் புக்ஸ் இப்புத்தகத்தை மிகச்சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளது. நான் கடந்த சில ஆண்டுகளில் ஒரே மூச்சில் படித்து முடித்த மிகச்சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பிழைதிருத்தத்தில் வெளியீட்டார் சற்று கவனம் செலுத்துவது நல்லது. அவை மிகச்சிறந்த புத்தகத்தையும் மோசமாக்கி விடும் ஆபத்து உண்டு. எனினும் இப்புத்தகம் இப்படிப்பட்ட சிறு குறைகளைத் தாண்டி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும். வாழ்த்துக்கள்.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp