தன்னை எழுதிய பெண் எழுத்து

தன்னை எழுதிய பெண் எழுத்து

தமிழின் முதல் நாவல் 1876-ல் வேதநாயகம் பிள்ளையால் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதி வெளியிடப்பட்டது. அவருக்குப் பின் எழுதப்பட்ட நாவல்கள் எவை என்பதை இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். குறைந்தது 10 நாவல் அல்லது ஆசிரியர்களைக் குறிப்பிடுவார்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களாக இருப்பார்கள்.

1876-க்குப் பின் பெண் எழுத்தாளர்கள் எழுதவில்லையா? எழுதியிருந்தால், எழுதியவர் யார் யார்? அவர்கள் படைப்பின் உள்ளடக்கம் யாது? அவர்களது காலத்து சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு நிகழ்வுகளை அவர்கள் எவ்வாறு உள்வாங்கி, எவ்வாறு வினையாற்றினார்கள் என்பது பதில் அறியவேண்டிய முக்கிய கேள்வி.

அவ்வாறு எழுதியவர்களின் பின் இருந்த அரசியல், இயங்கத் தூண்டிய அரசியல், இயங்காமல் முடக்கிய அரசியல் ஆகியவை பற்றிய புரிதல், இலக்கியப் புரிதலுக்கு மிக அவசியம். சமூகப் புரிதலுக்கும்கூட.

‘புலம் பதிப்பகம்’ வெளியீடு

1876 – 1950 காலகட்டத்தில் எத்தனை பெண் எழுத்தாளர்கள் புதினம் படைத்தார்கள்? என்ன எழுதினார்கள் என்பதைப் பற்றிய தேர்ச்சியும், கூர்மையும் கொண்ட ஆய்வு நூல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. எழுதியவர் ப. பத்மினி. ‘மறக்கப்பட்ட பதிவுகள் – பெண் எழுத்து வரலாறு (1876-1950)’ என்ற, 312 பக்கங்கள் கொண்ட அந்நூலை ‘புலம் பதிப்பகம்’ அழகுற வெளியிட்டுள்ளது.

ஆங்கில அரசின் நடவடிக்கைகள், ஆங்கிலக் கல்விமுறை, சீர்திருத்தத் தலைவர்களின் ஊக்கத்தால் கல்வி பயில வாய்ப்பு கிடைத்த பெண்கள், கல்வி தம் வாழ்க்கைமுறைக்கு மாறானதாகவும், அறிவு வெளிச்சம் தருவதையும் உணர்ந்தார்கள். புத்தகம் வாசிப்பு என்கிற புதிய வாழ்க்கைமுறை அவர்களுக்குக் கிட்டவே, அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு, விதிமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். இந்திய ஆண்கள், பெண்களுக்கு கல்வி மறுத்ததன் காரணம் விளங்குகிறது. ஊசிவழி நூலாகப் பெண்கள் பின்தொடர்வதையே ஆட்சேபிக்கிறவர்கள் ஆண்கள்.

பெண்கள் புதினம் தோன்றியது

வாசிப்பு, சிந்தனையைத் திறந்தது. தேசிய இயக்கச் செயல்பாடு, சீர்திருத்த இயக்கப் பணிகள் என்கிற ‘வெளி’ மறுக்கப்பட்ட பெண்கள், தங்கள் சிந்தனைகளை எழுத்தாக மடைமாற்றம் செய்தார்கள். பெண்கள் புதினம் என்கிற புதிய இலக்கிய வகை தோன்றியது. பெண்கள் செய்யக்கூடிய வேலைகளில், எழுதுவது மிகவும் சிறந்ததான ஒரு தொழில் என்று குகப்பிரியை, பாலம்மாள் முதலான எழுத்தாளர்கள் திடமாக நம்பிப் பயணப்பட்டார்கள்.

1893-ல் கிருபை சத்தியநாதன் அம்மாவின் ‘கமலம் ஒரு இந்துப் பெண்ணின் ஜீவிய சரித்திரம்’ எனும் புதினம் வெளியாயிற்று, இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1896-ல் தமிழாயிற்று. எனினும் தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையைப் பேசுவதாலும், 1896-ல் தமிழானதாலும், பெண் எழுத்தாளர் படைப்பில் இவரது நூலே முதன்மை என்கிறார் பத்மினி.

ராஜாம்பாளின் முயற்சி

கிருபை சத்தியநாதனின் நாவல், தமிழ் (ஆண்) எழுத்தாளரால் 1876-ல் எழுதப்பட்ட 20 ஆண்டுக்குள் வெளிவந்தது சாதாரண விஷயம் இல்லை. வேதநாயகம் பிள்ளை கற்ற அறிஞர். கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், எந்த பின்னமும் இல்லாமல் அவரைத் தொடர்ந்தது பெரிய விஷயம். அடுத்த ஆண்டே 1897-ல் ராஜாத்தி அம்மாளின் நாவல் வெளிவந்தது.

திண்ணைப் பள்ளியில் தமிழ் கற்ற, வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட எஸ். ராஜாம்பாள், (சுந்தரவேணி-1931) புதினம் படைத்ததை வியக்கத்தக்க முயற்சி என்று பாராட்டுகிறார் ஆய்வாளர். ராஜாம்பாள், தன்னை ஒரு வான்கோழியாகப் பேரடக்கமாகக் குறிப்பிட்டுக்கொண்டு, மயிலைப் பார்த்து தான் ஆடியதாகச் சொல்கிறார். (கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி என்ற வெண்பா, தமிழின் அபத்தங்களில் ஒன்று. எந்த வான் கோழிக்கும் மயில் குரு அல்ல.) ராஜாம்பாளின் முயற்சி பாராட்டத் தக்கது.

பெண் எழுத்தாளர்கள் எழுதிய புதினங்களின் முன்னுரையில் வெளிப்பட்ட அகத்தையும், படைப்பு எழுச்சிக் காரணத்தையும் ஆய்வாளர் தொகுத்துத் தந்திருப்பது முக்கியமானது. 1912-ல் ஜெயசீலன் எனும் புதினத்தை வெளியிட்ட மீனாட்சி சுந்தராம்பாள், தன் முன்னுரையில், ‘நடைமுறை வாழ்க்கையைச் சித்தரிக்க’ தான் படைப்பாளராக மாறியதாகச் சொல்கிறார். இது மிகவும் அரிய விஷயம். எதார்த்தம், எதார்த்த இலக்கியம் என்று பின்னாட்களில் எழுத்தாளர்களும், விமர்சகர்களும் பேசிய இலக்கிய வகைமையை மீனாட்சி சுந்தராம்பாள் அன்றே இனம் கண்டிருக்கிறார்.

குடும்பம் குறித்த விமர்சனங்கள்

புனிதம் என்று நம்பப்படும் குடும்ப அமைப்பு குறித்த விமர்சனங்களையும் பெண் எழுத்தளார்கள் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். காதலர்களை இணைய விடாமல் பணம் குறுக்கிடுகிறது. காசு உள்ள இடத்தில் தன் பெண் வாழ்க்கைப்பட்டால், மகிழ்ச்சியாக வாழ்வாள் என்று சில மூடத் தந்தைமார்கள் நினைப்பதையும், பணக்கார அயோக்கியர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் சிந்திய கண்ணீர் பேராறாக ஓடிய அவலத்தையும் அந்தக் கால நாவல்கள் நிறையவே சொல்லின.

திருமணம், திருமண பந்தம், திருமணம் என்கிற நிறுவனம் எல்லாம் தெய்வீகமானவை என்கிற கட்டமைப்புக் குளத்தில் பெண்களின் நாவல்கள் கல்லெறிந்தன. அந்த வகையில் அவை முற்போக்கு. செய்யூர் சாரநாயகி அம்மாளின் ‘நித்ய கல்யாணி’ நாவல் மறுமணம் பற்றி பேசியது. நித்ய கல்யாணியும், கந்தசாமியும் காதலித்தார்கள். கந்தசாமி ஏழை. ஆகவே பணக்கார முருகேசனுக்கு அவள் மனைவியானாள். அவர்களது வாழ்க்கை நரகமாகிறது. மனைவி மேல் சந்தேகம். அடி, உதை. ஒரு நாள் அவன் அடித்த அடியில் அவள் மூர்ச்சையடைகிறாள். பயந்துபோன முருகேசன் தற்கொலை செய்துகொள்கிறான். (நல்ல முடிவு). கணவர்களில் பலர், தற்கொலைக்கு ஆளாக வேண்டியவர்கள். காதலன் கந்தசாமி அந்தக் காலத்து காங்கிரஸில் இணைந்து உழைக்கிறான். நித்ய கல்யாணியை மறுமணம் செய்துகொள்கிறான். சுபம்.

சமூகத்தின் விளைபொருட்கள்

பெண் எழுத்தாளர்கள் இவ்விதமாக சமூகத்தை முன் நகர்த்துகிறார்கள். அவர்களது உள்ளடக்கம், இன்றைய பார்வைக்கு பெரிய விஷயம் இல்லை என்பதாகப் படலாம். ஆனால் கல்வி, சுதந்திரம், காதல், சுய தேடல் மறுக்கப்பட்ட அந்தக் காலச் சமூகத்தின் விளைபொருட்களே பெண் எழுத்தாளர்கள். அவர்கள் எதிர்கால சுபிட்சத்தைக் கனவு கண்டு புதிய சமுதாயம் படைத்தார்கள். ‘காதல் திருமணத்தில் சாதி இறுக்கம் தளரும்.. தம் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நிலைநாட்டப்படும்.’ உண்மையில் இது ஒரு பெரிய பாய்ச்சல். பெரியாரும், அம்பேத்கரும் காண விரும்பிய சமூகத்தை, தம் வார்த்தைகளால் முன்கூட்டியே கட்டி எழுப்பியவர்கள் பெண் எழுத்தாளர்கள்.

புகழ்பெற்ற நடிகை டி. பி. ராஜலட்சுமியின் ‘கமலவல்லி’ புதினம் அக்காலத்தில் ஒரு புரட்சி. கமலவல்லி கண்ணப்பனைக் காதலிக்கிறாள். அவளது வளர்ப்புப் பெற்றோர் அவளை ஐயாயிரம் ரூபாய்க்கு சந்திரசேகரனுக்கு விற்கிறார்கள். மணமும் முடிகிறது. உண்மை தெரிந்த சந்திரசேகரன், காதலன் கண்ணப்பனுக்கு தன் மனைவியைத் திருமணம் செய்து வைக்கிறான்.

1896-1950 இந்த இடைப்பட்ட காலத்தில், குடும்பம், மண உறவு குறித்து மரபான சிந்தனைகளை வெளிப்படுத்திய நாவல்கள் எழுதப்பட்டன என்றாலும், 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட திருமண முறிவுச் சட்டம், படைப்பாளர்களைச் சிந்திக்கச் செய்தது. பெண்களை திருமணச் சிக்கல்களில் இருந்து மீட்டெடுக்கும் ஒரே வழி திருமண முறிவு என்பதால், படைப்பாளர்கள் அதுபற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள்.

அந்தக் காலப் பெண் எழுத்தாளர்கள் முன்வைக்கும் மாற்றுச் சிந்தனைகள் முக்கியமானவை. வீட்டு வேலையைக் கணவனும், மனைவியும் பகிர்ந்துகொள்வதாக ஒரு குடும்பத்தை முன்வைக்கிறார் சகுந்தலா ராஜன் (வனிதாலயம்). பாலம்மாள் தன் ‘மனோகரி’ நாவலில், தம் காலத்தை மீறிச் சிந்திக்கிறார். ஒரு கணவன் இப்படிச் சொல்கிறான்: ‘வீட்டு வேலை செய்பவள் நமக்கு அடிமை என்ற எண்ணத்துடன், குடும்ப நிர்வாகத்தில் அவளுக்கு அளிக்கவேண்டிய அதிகாரம், சுதந்திரம், சமத்துவம் இவற்றை நான் அளிக்கத் தவறுவேனாயின் என் குடும்பம் நன்கு நடைபெறுமா?’

அறிவும், ஆரோக்கியமுமே அழகு

பெண்ணின் உடம்பை வர்ணித்து அழகைச் சித்தரிக்கும் போக்கு இன்னும்கூட இருக்கிறது. ஆனால், அக்காலத்தில் வைதீக எதிர்ப்புச் சிந்தனையாளராகப் பெரும் புகழ் கொண்டவரும், எழுத்தாளருமான மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், பெண்ணை வர்ணிக்காமலேயே நாவல் எழுதி இருக்கிறார்.

ஒரு முக்கியமான செய்தி. அந்தக் காலப் பெண் எழுத்தாளர்கள் ஓரிருவர் தவிர, மற்றவர் பிராமண இனத்தவரே. ‘பெண்களைச் சித்தரிக்கும்போது, தாங்கள் சார்ந்த இனமான பார்ப்பன இனத்துப் பெண்களை மட்டும் சித்தரிக்கிறார்கள். சாதியக் கொடுமைகளை எழுதுவதை அறவே தவிர்த்துள்ளனர். சாதியக் கொடுமை பற்றிய சிந்தனையும் இல்லை எனலாம்’ என்கிறார் ஆய்வாளர்.

தமிழ் இலக்கியம் தொடர்பாக, மிக முக்கியமானதும் சிறந்ததுமான ஆய்வைத் தந்திருக்கிறார் ப.பத்மினி. 1876-1950 காலக்கட்டத்தில் நாவல் எழுதிய பெண் எழுத்தாளர்களில் சிறப்பாக 12 பேரை எடுத்து ஆராய்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கல்விப் பரவலும், நாவல் எழுதியலும் ஒன்றாகவே நிகழ்ந்தன. இந்த 12 ஆசிரியைகளின் 23 நாவல்கள், காலத்தைக் குறுக்குவெட்டாக நமக்கு காட்டுகின்றன. எழுத்துகள் என்பது மக்கள் மனதோடு பேசுபவை. மனதைச் செப்பம் செய்து மனிதத்தை வளர்த்தெடுப்பவை. அந்த வகையில் அந்த ஆசிரியைகள், வரலாற்றில் அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். மிகச் சுலபமான, வழக்கத்தில் இருக்கும் ஆய்வுகள் போல, ‘சங்க இலக்கியத்தில் எள்’ வகையறா ஆய்வாக இல்லாமல், சவால் உள்ள ‘பெண் எழுத்து வரலாறு (1896-1950)’ போன்ற ஆய்வைத் தேர்ந்து, மிகுந்த சிரமப்பட்டு சிறப்பாக ஒரு நல்ல ஆய்வைச் செய்து முடித்த ஆய்வாளர் பாராட்டுக்குரியவர். எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரி ஆய்வாக இது பேசப்படும்.

(நன்றி: தி இந்து)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp