பொய்கைக்கரைப்பட்டி: நேர்த்தியான கலை வடிவம்

பொய்கைக்கரைப்பட்டி: நேர்த்தியான கலை வடிவம்

நாவல் என்பது ஒரு மிகப்பெரிய கலை உருவம். அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நிகழ்வுகளையும், மக்களின் வாழ்வியல் முறைமைகளையும், சமுதாய மாற்றங்களையும், பிரதிபலிக்கக்கூடியதாக அமைய வேண்டும். ஒரு நாவலைப் படைப்பது என்பதில் உள்ள சவால்கள் அநேகம். இன்றும்கூட வெறுமனே கதை சொல்வது தான் நாவல் என்பதாகக் கருதப்படுகிறது. அதையே சுருக்கிச் சொன்னால் அது விமர்சனமாகி முடிந்துபோகிறது. ஒருகால கட்டத்தின் நிகழ்வுகளின் கண்ணாடியாகப் பிரதிபலிக்க ஆரம்பித்து, வெறுமே கதைசொல்லி நகர்த்திக் கொண்டே சென்று எந்தவித அதிர்வுகளும் இன்றி, பாதிப்புகளுமின்றி, சலனமில்லாமல் வெறும் சம்பவங்களாக நகர்ந்து, ஒரு கட்டத்தில் அதுவாகவே நொண்டி அடித்து நின்றுபோய் நாவல் என்கிற பெயரோடு முடிந்துபோன கதைகள் நிறைய உண்டு.

வாசிப்பு அனுபவத்தினாலும், எழுதும் ஆர்வத்தினாலும், எழும் உந்துதலும் வேகமும், ஒரு மிகப்பெரிய தளத்திற்கான வழிவகை களை ஆராயாமல், வெறும் சம்பிரதாயக் கதை சொல்லலாக நகர்ந்து, படைப்புச் சீர்குலைவை உண்டாக்கி விடுகின்றன என்பதுதான் உண்மை. இந்த விபத்துக்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால் இம்மாதிரிக் குறைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற அத்யந்த முயற்சிகளும் அவ்வப் போது நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இயன்றவரை இவற்றையெல்லாம் தவிர்த்து, ஒரு நல்ல முயற்சியாக, இதுவரை எவராலும் சொல்லப்படாத பொருளாக, இந்தச் சமுதாயத்திற்குச் சொல்லியே தீரவேண்டும் என்கிற முனைப்பாக, தார்மீக நெறியோடு, தீப்பொறி பறப்பதுபோல் சில முயற்சிகளும்; திடீரென்று தோன்றி நம்மைக் கலங்கடித்து விடுகின்றன என்பதை இலக்கிய உலகிலான தொடர்ந்த அவதானிப்புகளும், வாசிப்பனுபவமும் உள்ள முதிர்ந்த வாசகர்களும் அறிய நேர்ந்துவிடுகிறது. அப்படி வந்திருப்பதுதான் எஸ்.அர்ஷியா எழுதிய பொய்கைக்கரைப்பட்டி என்னும் நாவல்.

இந்த நாவல் என் பார்வைக்கு உடனே படிக்கக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடை கிறேன். இப்படிச் சொல்வதிலும் ஒரு இலக் கியவாதியை மனம் திறந்து வெளிப்படை யாக, சத்தமாகப் பாராட்டுவதிலும்தான் மனம் திருப்தியடைகிறது.

இந்த நாவலின் ஆசிரியர் எஸ். அர்ஷியா தனது முதல்நாவலான “ஏழரைப் பங்காளி வகையறா” என்கிற படைப்பிற்கே தமிழக அரசின் முதல்பரிசைத் தட்டிச்சென்றவர். நிறைய சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதிய, பத்திரிகை அனுபவமும் கொண்ட படைப்பாளி. வெகுகாலமாக எழுதிக் கொண்டிருக்கக் கூடிய பலதேர்ந்த படைப்பாளிகள் இன்னும் இங்கே நிறையப் பேசப்படாமல் இருக்கிறார்கள்.

நல்ல ருசியுள்ள உணவு கிடைக்கும்பொழுது நம்மையறியாமல் அதன் சுவையில் மயங்கி சற்று வயிறு முட்டவே உண்டு களிப்பதைப் போல, நல்ல எழுத்துக்கள் அடையாளம் காணப்படும்போது வாய் நிறைய, மனம் நிறையச் சத்தமாகச் சொல்லிப் பாராட்டலாமே!

நாவலின் களம் மதுரைக்கு அருகேயுள்ள புறநகர்பகுதியான அழகர்கோயில். அழகர் மலை அடிவாரத்தின் இயற்கை சார்ந்த இதமான பசுமையான சூழல், நம்முன் விரிக்கப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டியாக, நாவலின் களமாக, எடுத்த எடுப்பிலேயே தீர்மானமாக முன்வைக்கப்படுகிறது.

ஒரு திரைப்படத்தின் முதல்காட்சியாகப் படம் இப்படித்தான் துவங்க வேண்டும் என்கிற முடிவில் கஜேந்திர குமாரின் இரு சக்கர வாகனம் (ஓட்டை ஸ்கூட்டர்தான்) அந்தப் பகுதியின் ஒரு டீக்கடைக்கருகே சென்று நிற்கும்போது, கண்முன்னே விரிந்த அடர்ந்து படர்ந்த அந்த வயதான வேப்பமரத்தோடு சேர்த்து காமிராவின் கோணங்களை மென்மையாக நகர்த்தி ஓடவிட்டால் அது `டுபு டுபு`வென்ற ஓசையோடு வந்து நிற்கும் அந்த வாகனத்தில்தான் போய் முடியும்.

கதையோடு சேர்த்து நம்மையும் கூடவே வழி நெடுக அழைத்துச் செல்ல ஆசிரியர் அங்கேயே முடிவு செய்து விட்டது புலனாகிறது. சொல்லப் போகும் விஷயம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்பதாக மனத்தினில் நமக்கு உதிக்கும்போதே அதன் தப்புத்தாளங்களும், தகிடுதத்தங்களும் புகுந்து புறப்பட்டால்தானே இந்த நாவல் சிறக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பும், தவிப்பும் எழ, ‘அதைப் பற்றியெல்லாம் நீங்க ஏன் கவலைப்படுறீங்க, பேசாம என் கூட வாங்க, உங்கள எல்லா எடத்துக்கும் நானில்ல கூட்டிட்டுப் போறேன்’ என்று தைரியமாக நம்மை அழைத்துச் செல்கிறார் படைப்பாளி.

அவருக்கு இருக்கும் தைரியம் படிக்கும் வாசகனுக்கும் கண்டிப்பாக இருக்குமே யானால் “இந்தச் சமுதாயக் கேடுகளுக்கு, கேள்வி கேட்கப்படாத அவலங்களுக்கு, சரியான சவுக்குய்யா இது” என்று சத்தமிட்டு ஆரவாரம் செய்யத்தான் தோன்றும்.

சமுத்திரக்கனி என்கிற ஒரு கையாள் கஜேந்திர குமாருக்கு புரோக்கராக அமைவதும், அவர் மூலம் அவரின் வீட்டு மனை விற்பனைத் தொழில் வெகு சீக்கிரம் பெருகுவதும், பல இடங்களில் பலரும் இப்படித்தான் பெருகிக் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் முன்பே திடுமென சமுத்திரக்கனியை முதல் அத்தியாயத்திலேயே வெட்டிச் சாய்த்திடுகை யில் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே ஒருவனைக் கொன்று போடுவதற்குத் தீர்மானித்து விட்ட ஆசிரியரை நினைத்து நமக்கே சற்று பயமாகத்தான் இருக்கிறது.

இப்படியான வில்லங்கங்களெல்லாம் உள்ள ஒரு தொழிலுக்கு ஏன் மெனக்கெட வேண்டும் என்பதான ஒரு எண்ணமும் மெலிதாக நமக்குத் தலையெடுக்கிறது. ஆரம்பமே சிக்கலானாலும், ஒருவன் அசராமல் எப்படித் தன்னை மென்மேலும் காலூன்றி வளர்த்துக் கொள்கிறான் என்பதற்கு கஜேந்திரகுமார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு தொழில் நேர்த்தியான முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

அவரின் எல்லைகள் விரிவதும், புதிதாக ஒருவர் அவருக்கு மீடியேட்டராக அமைவதும், லெவின்ஸ்கி கார்டன் என்கிற ஒரு மிகப் பெரிய திட்டம் அவரின் மனதில் உருவாகி வளர்வதும், அதனை முழுமையான ஒன்றாக உருவாக்க அவர் பழக்கம் கொள்ளும் பெரிய மனிதர்களும், முக்கியப் புள்ளிகளும், எல்லோருமாகச் சேர்ந்து அவரின் வாழ்வை வளமாக்கி நிற்பதுமாக நாவல் படிப்படியாக நம் கண்முன்னே விரியும்போது நமக்குத் தெரியாத, நம்மால் அறியப்படாத வெவ்வேறு தளங்கள் எப்படியெல்லாம் தன்னின் ஆக்டோபஸ் கரங்களை விரித்துப் பரந்து கொழித்து விஸ்வரூபமாக நிற்கிறது என்கிற உண்மை நம்மைப் பிரமிக்கத்தான் வைக் கிறது.

எடுத்துக் கொண்ட களம், சமுதாயத்திற்குச் சொல்லியாக வேண்டும் என்று நினைத்த முனைப்பான விஷயம், அதுபற்றி அவர் அறிந்து சேகரித்தவை அவற்றில் தவறு நேர்ந்து விடக்கூடாது என்று கருத்தாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சொல்ல நினைத்த, சொல்ல வேண்டிய நிகழ்வுகளை எந்தவித செயற்கைப் பின்னணியும் இல்லாமல் யதார்த்த தளத்தில் நிறுத்தி மக்களின் வாழ்வியலோடு பொருத்தி மிக லாவகமாக, செயல் இயல்பாக அமைய அந்தக் கதாபாத்திரங்களோடு தானும் கூடவே நகர்ந்து வாழ்ந்து கழித்ததுபோன்ற அனுபவப் பகிர்வைத் தனக்கும் ஏற்படுத்திக் கொண்டு படிக்கின்ற வாசகர்களுக்கும் ஏற்படுத்தி ஒரு புதிய வாழ்வனுபவத்தை நமக்குப் புகட்டுகிறார் நாவலாசிரியர்.

முழு நாவலையும் சொல்வது என்பது ஒரு நீண்ட கதைச் சுருக்கத்தை முன்வைத்தது போலவே ஆகிவிடும் அபாயம் உண்டு. நாவல் என்பது கதை சொல்வது அல்லவே. கதையை லாவகமாகக் கையாண்டு, ஒரு நீண்ட வாழ்வியலின் படிப்படியான மாற்றங்களை, சமுதாய நிகழ்வுகளை அதன் போக்கில் அறிந்துணரச் செய்வதுதானே! அப்பொழுதுதானே காலத்தால் ஒரு படைப்பு நிற்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போய்ச் சேரும் திறன்வேண்டுமே ஒரு படைப்பிற்கு. நாவல் என்பதன் உட்பொருள் அங்கேதானே முழுமை பெறுகிறது.

வேளாண்மையோடு காலம் காலமாய் ஒன்றிப்போய், விவசாயமே கதி என்று முன்னோர்கள் விட்டுப்போன கண்கூடான சொத்தான நிலங்களை அதுவே தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று வைத்துக் கொண்டு பிழைத்துவரும் அப்பாவி மக்களை அவர்களோடு கூடிக்குலவி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுறவான மனிதர்களையே காய்களாகப் பயன்படுத்திப் பறிக்க முயல்வதும், படியவில்லை என்றால் தொடர்ந்து முயன்று கொஞ்சங் கொஞ்ச மாகக் கரைக்க முயல்வதும், எதுவுமே ஆகவில்லையென்றால் தான்தோன்றித் தனமாக வளர்த்துக் கொண்ட அடாவடித் தனத்தைப் பயன்படுத்தி பயமுறுத்துவதும், உயிருக்கே உலைவைத்துவிடும் அளவுக்கான தந்திரோபாயங்களை முன்னிறுத்துவதும், நம் கையைக் கொண்டு நம் கண்ணையே குத்தப்பார்க்கிறார்களே என்று எதற்கு வில்லங்கம் என நினைத்து காலத்தின் கட்டாயத்தில் அமிழ்ந்துபோய் ஒதுங்கி ஓடுவதுமாக ரியல் எஸ்டேட் என்கிற ஏகபோகத்தில் சாதாரண அப்பாவி மக்களின் வாழ்க்கை நசிந்துபோவதையும், தொழில் செய்வோரைத் தாறுமாறாக உச்சத்திற்குக் கொண்டு நிறுத்துவதையும், அந்த எதிர்பாராத உச்சமே அவர்களுக்கு அச்சங்களை விளைவித்து நிம்மதியைக் கெடுப்பதையும், ஒரு அளவுக்கு மேல் பணம் நிலை தடுமாறி வந்து கொட்டிக் கிடக்கும்போது கூடவே அபாயமும் சேர்ந்துதான் வரும் என்கிற உண்மையும் கதையின் சம்பவங்களாய், படிப்படியாய் விரிந்து ஒரு தேர்ந்த எழுத்தனுபவமுள்ள முதிர்ச்சியான நாவலாய் நம் முன்னே படர்கிறது இந்தப் பொய்கைக்கரைப்பட்டி.

இந்த வாழ்க்கையை மிக ஆழமாக அறிந்துணர்ந்து, அதனோடு சகஜமாக நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதுதான் நேசம் என்று கருதப்படுகிறது. இந்த நேசத்தை உருவாக்குவதே இலக்கியம். இந்த வாழ்க்கையை, இந்த மனிதர்களை, அவர்களின் அபிலாஷைகளை, அவர்களின் நெஞ்சின் ஈரத்தை, ஆழப் படிந்திருக்கும் நன்னெறிகளை நேசிப்பதாக இருக்க வேண்டியது இலக்கியத்திற்கான இலக்கணமாகக் கொள்ளலாம்.

மனிதர்கள் ரொம்பவும் யதார்த்தமாக, வெகு சகஜ மனோபாவம் கொண்டவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். இலக்கியம் என்கிற புனைவின் ஊடாக வாழ்க்கையைப் பிரதிபலிக்க முனையும்போது நம்மையறி யாமல் ஒரு இயல்பை மீறிய தன்மையும், தவிர்க்க முடியாத சில திரைகளும் விழுந்துவிடத்தான் செய்கின்றன. ஆனால் தவிர்க்க முடியாத அவற்றோடுதான் இலக்கியத்தை நாம் நேசித்தாக வேண்டியிருக்கிறது. யதார்த்த வாழ்க்கைக்கு இல்லாத ஒரு மேல் பூச்சை இலக்கியத்திற் குத் தந்து அதை நேசிப்பது வாழ்க்கையை நேசிப்பதற்குச் சமமாகிறது. நல்லவைகளும், கெட்டவைகளும் ஏராளமாக விரவிக்கிடக் கின்றன இங்கே. குணங்களும், குறைகளு மாக, உயர்வும் தாழ்வுமாக பிரிக்க முடியாத அங்கங்களாகக் காட்சியளிக்கின்றன. அதனால்தான் வாழ்க்கையை ஆழ அறிந்து அதனோடு நேசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது இன்றியமையாததா கிறது. அம்மாதிரியான நேச பாவங்களை மிகப்பெரிய வீச்சோடு முனைப்பாக முன்வைப்பதே இலக்கியம். அதை இந்த நாவல் மிகச் சரியாகவே செய்திருக்கிறது என்று சொல்லலாம்.

ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பில் எந்தப் பொருளை மையப்படுத்த வேண்டும் என்பது முக்கியமாகிறது. காலங்காலமாக இந்த மண்ணில் வாழ்ந்துவரும் மக்களுடைய மரபு சார்ந்த நடைமுறைகள், அவர்களின் நம்பிக்கைகள், அன்றாட வாழ்க்கையில் அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்கள் இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள், இவற்றை யெல்லாம் தழுவி ஒரு படைப்பு இருக்க வேண்டும் என்பதுதானே உண்மை.

மக்கள் பல்வேறு தளங்களில் ஏழ்மைப்பட்டுக் கிடக்கிறார்கள். பொருள் சார்ந்த ஏழ்மை, கலாச்சாரம் சார்ந்த ஏழ்மை, இப்படிப் பலவும் அவர்களை வாட்டி எடுக்கின்றன. பணத்தை மையப்புள்ளியாகக் கொண்ட வாழ்வின் பொது வெளிகளில் ஒழுக்கம் என்பது தேட வேண்டிய ஒன்றாகிக் கிடக்கிறது. பணம் என்கிற ஒரு காரணி வாழ்க்கையின் சகலவிதமான நன்னிலை களையும் சாகடித்துவிட்டது என்பதுதான் சத்தியம். ஓங்கிக் குரலெடுத்துப் பேசும் பேச்சுக் களிலும், வீரியக் கட்டோடு எழுதும் எழுத்துக்களிலும் தடையின்றி வெளிப்படும் மனிதநேயம் யதார்த்த வாழ்க்கையில் தேடியடையும் ஒன்றாகவும், அபூர்வமானதாக வும்தானே காணக்கிடைக்கிறது.

இவையெல்லாம் நம் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாமா? நம் சிந்தனைகளில் பெருத்த மாற்றங்கள் நிகழாத வரையிலும் சமூக மாற்றத்தை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? சிந்தனைகள் கூர்மைப்பட்ட ஒரு சமூகத்தில்தான் ஒவ்வொருவரின் உணர்வுகளும் கூர்மையடைந்து, பெருத்த விவாதங்களும் அதன் தொடர்ச்சியாக செயல்களும் நல்வடிவம் பெறுகின்றன. அப்படியான கூர்மைப்பட்ட ஒரு எழுத்தைத்தான் நாவலாக வடிவமைத்திருக்கிறார் அர்ஷியா. அது பொய்கைக்கரைப்பட்டி என்கிற கவிநயம் மிக்க பெயரோடு தலைநிமிர்ந்து நிற்கிறது.

நாவல் என்பது ஒரு சமூகச் செயல்பாடாகப் பரிணமிக்க வேண்டும். காலத்தைத் தாண்டி நிற்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருக்கும் அது பயன்படக் கூடியதாக இருக்கும். இந்தச் சமூகத்தின் ஒருகுறிப்பிட்ட தளத்தில் பதுங்கிக் கிடக்கும் பொய்மைகளைக் கட்டவிழ்த்து அம்பலப்படுத்துகிறது இந்த நாவல். மனிதர்களின் பொய்முகங்களைக் கிழித்தெறிவதோடு, ஒவ்வொரு மனிதருக்கு மிடையேயான மாயத்திரைகளையும் அறுத்தெறிகிறது. மிருகங்கள் தாங்கள் வாழ்வதற்காக ஒன்றையொன்று அடித்துத் தின்று ஜீவிக்கின்றன. ஏறக்குறைய மனிதர்களும் அப்படித்தானோ என்று நினைக்க வைக்கிறது. உயர்ந்தவன் இளைத் தவனை வளைத்துப் போட முயல்கிறான். படியவில்லை என்றால் அதற்கான மறைமுக அஸ்திரங்களைப் பிரயோகிக்கிறான். அந்த அஸ்திரங்களும் பலனளிக்கவில்லை யென்றால் மேலே ஒருபடிசென்று மிரட்டி, பயமுறுத்தி அடிபணிய வைக்கத் தேவையான வித்தைகளைக் கையாள் கிறான். அதனிலும் அகப்படாதவர்களை இல்லாமல் செய்துவிடுவது என்கிற அளவுக்கான உச்சநிலை அக்கிரமங்களும் ஒருவனால் கையாளப்படுகின்றன. தனி மனிதச் செயல்பாட்டின் முரணான நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக நின்று காப்பது பணம் என்கிற மோசமான வஸ்து. அந்தக்காரணி அது வந்தவழி சரியில்லையென்றால் அதனுடைய செயல் பாடுகளும் சரியில்லாத வழிமுறைகளுக்குத் தான் ஒருவனை இட்டுச்செல்ல முடியும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இந்தநாவல் அதன் யதார்த்த வழியில் சர்வ சகஜமாகச் சொல்லிச் செல்கிறது.

இன்று வெளிவரக்கூடிய நாவல்கள் தொட்டுப் பேசாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். முன்னைக்கு இப்போது எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது இன்று பேசும் நாவல்கள். யதார்த்த வெளிதனில் தமிழ்ச் சமூகத்தின் முரண்பாடுகளையும், சாதிகள் சார்ந்த முரண்பாடுகளையும், படைப்பாளிகள் நாவலில் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறார் கள். அப்படியான பரந்த வெளியைத் துணிச்சலோடு பேசும் நாவல்தான் பொய்கைக்கரைப்பட்டி.

நாவல் விமர்சனம் என்பது முழுக்க முழுக்க அந்தக் கதையைப் பற்றிப் பேசுவது என்பதாகக் கொள்கிறார்கள் பலர். ஒரு நாவலை அதன் தத்துவார்த்த தளத்திலிருந்து அமைதியாக உள்வாங்கி அது ஏற்படுத்தும் விகசிப்பைப் பூடகமாக வெளிப்படுத்துவதும், அதன் பயன்பாட்டை வெளிச்சமாக்குவதும் தான் ஒருநல்ல நூலுக்கு நாம்தரும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். அந்த நோக்கில்தான் இந்த நாவல் விமர்சனம் இந்த வடிவில் இங்கே முன் வைக்கப்படுகிறது. ஒரு நல்ல நாவலை எழுத ஒரு படைப்பாளிக்கு உரிமை என்றால் அதற்கான ஒரு சிறந்த, கண்ணியமான விமர்சனத்தையும், ஒரு தேர்ந்த வாசகனால் முன் கொணர முடியும்தானே? அப்படியான வெளிப்பாடுதான் பரந்த மனத்தோடு முன்வைக்கப்படு கிறது.

நல்ல எழுத்துக்களைக் கண்டுகொள்ளுங் கள். மனதாரப் பாராட்டுங்கள். எடுத்துக் கொண்ட பொருள், அதில் தென்படும் அனுபவம், அந்தப் படைப்பிற்காக படைப்பாளியின் உண்மையான முயற்சி, அதில் உரத்துப் பேசப்படும் உண்மைகள், அதன் தேவைகள், இவை எல்லாமும் உணரப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். மனம் திறந்து ஒப்புக் கொடுங்கள் உங்களை. நிறைய விவாதங் களை உள்வாங்கிக் கொள்வதாக இருக்கிறது இந்தப் பொய்கைக் கரைப்பட்டி. வெவ்வேறு விதமான பார்வைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. எல்லாவித மான விவாதங்களையும் விமர்சனங்களை யும் உள்வாங்கிக் கொண்டு, அவற்றின் ஜனநாயகப் பண்புகளைத் தன்னகத்தே ஏற்றுக் கொண்டு நிமிர்ந்து நிற்பது ஒருநல்ல நாவலின் லட்சணமாக இருக்க முடியும். அப்படியான ஒரு பரிபூர்ண ஆனந்தத்தை, திருப்தியை இந்த நாவல் நமக்கு அளிக்கிறது.

யதார்த்தம் என்கிற தளத்திலேயே விடாது இயங்கும் இந்த நாவல் முழுக்க முழுக்க நல்உருப்பெற்ற முழுமையான ஒரு கலைவடிவம் என்பது உறுதி. அனைவராலும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒரு முக்கியமான நாவல்.

(நன்றி: உயிரோசை)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...