சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்

சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்

ந. ஜயபாஸ்கரன் பற்றிய முதற்பக்க குறிப்பு, "ந. ஜயபாஸ்கரன், 1947 மார்ச் 16 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்," என்று ஆச்சரியத்தக்க வகையில் துவங்கி, "மதுரை வெண்கலக் கடைத் தெருவில் வெண்கலப் பாத்திரக் கடை நடத்தி வருகிறார்," என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் முடிகிறது. இடைப்பட்ட வரிகள் அவரது சம்ஸ்கிருத பயிற்சி, எமிலி டிக்கின்சன் கல்வி ("ஒரு நாள் இரவு எமிலி டிக்கின்சன் குறித்து எஸ்.ஆர்.கே. நிகழ்த்திய உரை, ஜயபாஸ்கரனது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது"), மற்றும் பக்தி இலக்கியம் உட்பட மரபுத் தமிழ் பரிச்சயத்தைச் சொல்கின்றன (இவை போக, "நகுலனின் எழுத்துகள் மீதான ஈடுபாடும் அவற்றின் தாக்கமும் இவரிடம் உண்டு").

இப்பேற்பட்ட மேதை (விளையாட்டாய்ச் சொல்லவில்லை) மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்- நூற்றைம்பது ரூபாய்க்கு இவர் எழுதிய கவிதைகள் அத்தனையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். கயல் கவின் பதிப்பித்துள்ள இந்தப் புத்தகம், “சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்”, விலை ஐம்பது ரூபாய். இன்னொன்று, உயிர் எழுத்து பதிப்பித்துள்ள, "அர்த்தநாரி அவன் அவள்". அதன் விலை நூறு ரூபாய். விலைமதிப்பில்லாத சில கவிதைகள் இந்த இரு புத்தகங்களில் உள்ளன. தேர்ந்த விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞரான இவர் இதைவிட பிரபலமாக இல்லாதது புதிர்தான் ("கு.ப. ராஜகோபாலன், மௌனி மற்றும் லா.ச.ராவின் வரிசையில் பிரமீள் வகுப்பது போல் ஜயபாஸ்கரன் பூரண அக உலகக் கலைஞர்" என்று இதன் பின்னுரையில் எழுதுகிறார், கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன். புத்தகத்தின் பின்னட்டையில், "முதன் முதலாகத் தமிழ்க் கவிஞர் தன் மூல ஆதாரத்தைத் தமிழ் இலக்கிய மரபைக் கொண்டு நிர்ணயிக்கும் முயற்சி," என்ற நகுலன் குறிப்பு இருக்கிறது).

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் கடையில் உட்கார்ந்தபடியே தெருவைப் பார்த்து எழுதப்பட்ட கவிதைகளோ என்ற சந்தேகம் வராமலில்லை. அந்த அளவுக்கு வெண்கலக் கடையும் அதற்கு வெளியே இருக்கும் தெருவும் இந்தக் கவிதைகளில் வருகின்றன. இது போல் வேறு எந்த கவிஞராவது தான் இருக்கும் இடத்தை, அல்லது, தன் பணியிடத்தை எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், இவரளவுக்கு உடலும் உயிரும் இருக்கும் இடம் ஒன்று, மனமும் உணர்வும் இருக்கும் இடம் ஒன்று என்று காலவெளிகளைக் கடந்து யாரும் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

இதில் உள்ளவை எல்லாம் தலைப்பு வைக்கப்படாத கவிதைகள். அவற்றில் முதல் கவிதையே இதுதான்: "சீதையின் முலையைக் கொத்தும்/ வனக் காக்கையாய்/ மனம்/ கடை வெளியில்//" (முலையும் கவிதைகளில் வருகிறது- அதிலும் மூன்றாம் முலை-, இது போக மதுரையும் வைகையும் இவை சார்ந்த புராணங்களும் இடம் பெறுகின்றன, எல்லாவற்றுக்கும் மேலாய் எமிலி டிக்கின்சன் அவ்வப்போது தலை காட்டுகிறார் (ஓரிடத்தில் ஜெரார்ட் மான்லி ஹாப்கின்ஸ்கூட!)). மேற்கண்ட கவிதையில் மனம் ஒரு வனக்காக்கையாய் கடைவெளியில் இருக்கிறது என்று சொல்கிறார், ஆனால் அது சீதையின் முலையைக் கொத்த புராண காலம் போய் விடுகிறது (அல்லது, அங்கிருந்து வருகிறது). இது போல், தன் இருப்பு வாய்த்த இடம் ஒன்று, தான் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இடம் வேறொன்று என்பது இவர் கவிதைகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உணர்வாகவே வருகிறது. இந்த இரட்டைமை ஒரு வகையில் விடுதலை என்றால் இன்னொரு வகையில் தளையாகிறது (அவரும் முன்னுரையில் இதனை, “சில சமயம் சிறை ஆகவும், சில சமயம் தாயின் கருப்பை ஆகவும் உருக் காட்சி கொள்கிற கடை," என்று குறிப்பிடுகிறார்).

மூன்றாம் முலை ஜயபாஸ்கரனுக்கு ஒரு தனிப்பட்ட அர்த்தம் தருகிறது (நம்மால் ஊகிக்க மட்டுமே முடிகிறது- "கடைவீதி நெடுக/ கைகொட்டி காசு கேட்டுவரும்/ அவனு/ளுக்குக் கொடுக்க/ மூன்றாம் முலைக் காம்பு/ மட்டும்//" என்று ஒரு கவிதை. இதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லை. கையில் காசில்லை என்ற அவமானத்தை இப்படிச் சொல்கிறாரா என்று சந்தேகிக்கிறேன். பொதுவாக மூன்றாம் முலைக்காம்பு என்பது முன்னம் இருந்து இப்போது இல்லாது போன ஒன்று என்று நினைத்துக் கொள்ளலாம். வேறொரு கவிதையில், "வையை முலையாய்/ வியாபாரம் சுருங்கிய கடையில்/ வேலை செய்ய விதிக்கப்பட்டவர்கள்/" என்று எழுதுகிறார் (வைகை எப்போதும் காய்ந்து கிடக்கிறது என்பதை நினைவுகூரும்போது, "The Mammaries of the Welfare State" என்ற உபமன்யு சாட்டர்ஜி தலைப்பு நினைவுக்கு வருகிறது). இங்கு முலை காமத்துக்கு உரிய பொருளாக இல்லாமல், செழுமையின் சாத்தியமாக, வறட்சியின் நிதர்சனமாக இருக்கிறது- வேறொரு கவிதை, "சிதிலமடைந்த படித்துறைகளில்/ தவழ்ந்து/ மணல் வைகையில்/ மூழ்கிப் போகிறான்//" என்று முடிகிறது.

ஜயபாஸ்கரனின் வெற்றி பெற்ற கவிதைகளில் இது ஒன்று- "கை இருப்பு இல்லாமல்/ கடன் வாங்கிக்/ கேத வீட்டுக்குச் சுமந்து செல்லும்/ பித்தளை அண்டா/ சீதேவி மரக்கால்/ நீர்மாலைச் சொம்பு/ காமாட்சி தீபம்/ எல்லாம் எரிகின்றன/ கடைவெளி வெயிலில்". பிற கவிதைகள் போலவே நிராசை, தோற்றுப் போன உணர்வு, பாத்திரங்கள் குறித்த நுண்தகவல்கள் எல்லாம் இருந்தாலும், "எல்லாம் எரிகின்றன/ கடைவெளி வெயிலில்//" என்பது தனி மனித அனுபவம் மற்றும் உணர்வுகளைக் கடந்து நாமரூபங்கள் மற்றும் காலவெளிகளுக்கு அப்பால் மீபொருண்மை உலகுக்கு நம்மைக் கொண்டு சென்று விடுகிறது. இந்த நெருப்பு எப்போதும் எரிகிறது, எங்கும் எரிகிறது, இதில் எல்லாமும் எரிகின்றன. இதே உணர்வுதான், "அமில ஆவி பறக்கிறது/ கடையைச் சுற்றிலும்// ரசாயனப் பொடியின் வெண்மை நெடி/ கடை முழுவதும்// கறுத்துக் கொண்டிருக்கின்றன/ பித்தளை வெண்கலப்/ பாத்திரங்கள்// அரித்துச் செல்கிறது அனைத்தையும்/ திருகல் காமம்//" என்ற அசாதாரண கவிதையைப் படிக்கும்போதும் எழுகிறது. கவிதைகளுக்குப் பஞ்சமில்லாத தமிழில்கூட இது போன்ற ஒரு கவிதை மிக அபூர்வமாகவே எழுதப்படுகிறது.

ஜயபாஸ்கரன் இன்னும் விரிவாகவே, இன்னும் அதிகமாகவே, குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டிய கவிஞர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தனி மனித உணர்வுகளைப் பதிவு செய்யும் confessional poems சில, அவ்வளவு ரசிக்கும்படியாய் இல்லை- "என்று சொன்னாராம் க நா சு/ கவிதை இருக்கும் இடத்தில்/ வறுமை இல்லை/ இல்லவே இல்லை// 'வாய் செத்த பய'/ கல்லாப் பெட்டியில்/ வெட்டுப்பட்ட நாணயங்களாய்/ எள்ளலில் உறைந்த சொற்கள்//" என்ற கவிதை, "விண்மீன்களின் எண்ணிக்கையைச்/சிறு காகிதத்தில் எழுதிப்/ பெட்டகத்தில் பத்திரமாகப் பூட்டும்/ குட்டி இளவரசனின் பிஸினஸ்மேன்// சொற்ப இருப்புத் தொகையை/ மீண்டும் மீண்டும் சரி பார்த்துக் கட்டிக்/ கல்லாவில் இறக்கி வைக்கும்/ சிறு வெளி வியாபாரி//" என்ற கவிதை, போன்றவை ஜயபாஸ்கரன் அடையும் உயரங்களுக்கு சிறிதும் பொருந்தாதவையாய் இருக்கின்றன. இதே உணர்வில் எழுதப்பட்ட இந்தக் கவிதையைப் பாருங்கள், "அச்சுறுத்தல் பாதுகாப்பு/ அறியாத காலத்தில்/ பார்த்துத் தீராத/ மீனாட்சி கோவில் சிற்ப மோகினி/ ஆரா அமுது பரிமாறிய பின்/ இடை குழைந்து/ நீட்டும் அகப்பையின் வெறுமை/ இவனை நோக்கி//". இதற்கு இணையாய் இன்னொன்று சொல்ல முடியுமா? தன்னைக் குறித்து எழுதும்போது ஜயபாஸ்கரன் வெற்றி பெறுவது மிகக் குறைவாகவே, ஆனால், தான்-ஐக் குறித்து எழுதப்படும் அவரது கவிதைகள் அசாத்திய ஆழங்களைத் தொடுகின்றன.

"புராதனப் பேரேடுகளின் மௌன சாட்சியம். இந்தக் குறுகிய வெளியில் இருந்து புறப்படும் கவிதைகள் இப்படித்தான் இருக்கும்," என்று எழுதும் ஜெயபாஸ்கரன் இன்னும் தன் மதிப்பை அறியவில்லை என்றுதான் தோன்றுகிறது. குறுகிய வெளியில் இருந்து புறப்பட்டாலும் அவரது சொற்கள் புராதனப் பேரேடுகளை உயிர்ப்பித்துப் பேசச் செய்கின்றன: "ஒன்றாம் எண் சந்துக்கும்/ பிட்சாடனர் சந்நிதிக்கும்/ நேர்கோட்டு வழி இருக்கிறது/ சிறு குறி உருவப் பால் கொழுக்கட்டை/ நிவேதன துணையுடன்// ரசம் போய்விட்ட வெண்கல உருளிகளில்/ சுயத்தையே படைக்க வந்து கொண்டிருக்கும்/ திருப்பூவணத்து பொன்னனையாளுக்கும்// ஆலவாய்ச் சித்தருக்கும்// இடையே// கடக்க முடியாத வைகை மணல்//" என்ற கவிதையாகட்டும், "அழகு மீனாளுக்கு ஒரு மழை/ அழகு மலையானுக்கு ஒரு மழை// ஈரம் தாங்காத/ கடைவாசல் அடியை மட்டும்/ கழுவிச் செல்லும் மழை நீர்// வேருக்கு மழை வேண்டித் தவித்த/ ஹாப்கின்ஸின் இருண்ட ஸானட் வரிகள்/ மிதந்து வருகின்றன// கடைவீதியின் பிளாஸ்டிக் கழிவுகளுடன்//" என்ற கவிதையாகட்டும், அவர் நிகழ்த்தும் உருமாற்றத்தை எத்தனை பேரால் நிகழ்த்த இயலும்?

சென்ற நூற்றாண்டின் சிறந்த ஆங்கில கவிஞர்களில் ஒருவராக கொண்டாடப்படும் பிலிப் லார்கின் லண்டனில் வாழவில்லை. அதைவிட்டு வெளியே, இருநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றினார். அது எதுவும் அவருக்கு குறையாய் அமையவில்லை. ஆனால், தமிழ் மொழியின் வரலாற்று மையமான மதுரையில் வாழும் ஜயபாஸ்கரன், "விரைவுத் தொடர்பு நூற்றாண்டில்/ அவனை என்ன தான் செய்ய/ கடைக்குள் பாத்திரங்களுடன்/ பத்திரமாக வைத்துப்/ பூட்டிச் செல்வதைத் தவிர//" என்று எழுதுகிறார். அப்படியெல்லாம் பூட்டிக் கிடக்கும் நிலை அவருக்கு எழாது என்று தோன்றுகிறது. தமிழ்க் கவிதையின் மையவெளியில் அவருக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அது பிரகாசமானது, உயிர்ப்பு கொண்டது- அவரது கவிதைகளில் அதிசயமாய்த் திறந்து கொள்ளும் காலம் போல், மகத்தான நினைவாய் எழுந்து வரும் தொன்மம் போல்.

(நன்றி: ஆம்னி பஸ்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp