சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

பயங்கரவாதம். இந்நூற்றாண்டின் அன்றாடச் செய்திகளில் வழக்கமாகிவிட்ட இச்சொல்லின் விளக்கம்,கடவுள் கற்பு போல காலந்தோறும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. ‘அரசியல் அல்லது மதம் அல்லது சித்தாந்தம் சார்ந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஓர் அரசாங்கத்தையோ அல்லது ஓர் சமூகத்தையோ பயமுண்டாக்கும் அல்லது பணியச் செய்யும் நோக்கத்தில் சூழ்ச்சி செய்து, சட்ட விரோதமான வன்முறையை நிகழ்த்துவது அல்லது சட்ட விரோதமான வன்முறை நிகழ்த்தப் போவதாகப் பயங்காட்டுவது‘ என்று பயங்கரவாதம் என்ற பதத்திற்கு, உலக அகராதி நிர்ணயிக்கும் அமெரிக்கா விளக்கம் தருகிறது. ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தாலும், எதுவெல்லாம் ‘சட்ட விரோதமான’?தூக்குமேடையில் சாகப் போவதற்கு முதல்நாள் இரவு ஏதோ ஒரு புத்தகத்தைப் பாதி படித்துவிட்டு, ஒரு தாளின் நுனியை மடக்கிவிட்டு, ‘நான் விட்ட இடத்தில் இருந்து நாளை இன்னொருவன் தொடருவான்’ என்று சாதாரணமாகத் தூங்கப் போன பகத் சிங், இன்றும் இந்திய இளைஞர்களின் புரட்சிச் சின்னம். ஆங்கிலேயர்களுக்குச் சட்ட விரோதமான பயங்கரவாதி. பயங்கரவாதி, அமைதிக்கான நோபல் பரிசு என்ற இரு முரண்பட்ட பெயர்களையும் வாழ்ந்தபோதே வாங்கிய யாசர் அராபத் இன்னொரு சிறந்த உதாரணம். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, எதிர்த்த முஜாஹிதீன் அமைப்பினரை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களுக்கு இணையாக ஒப்பிட்டது இன்னொரு உதாரணம். சுருக்கமாக, அப்பாவி குடிமக்களைக் கொல்லும் எந்தவொரு வன்முறை செயலையும் பயங்கரவாதம் எனக் கொள்வோம். நமக்கான செய்திகளில் பயங்கரவாதம் என்று சித்தரிக்கப்படும் சித்தாந்தங்களின், ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புத்தகம் இதோ!

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும். 91 வயதைக் கடந்த ஆசிரியர் டி.ஞானையா, அகில இந்திய தொழிற்சங்க தலைவர்; கம்யூனிஸ்ட் பிரமுகர். இன்றைய சிக்கல் நிறைந்த சர்ச்சைக்குரிய பயங்கரவாதம் என்ற பொருள் மீதான ஆசிரியரின் மாறுபட்ட கருத்துகளே இப்புத்தகம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணன் நான்கு பக்கங்களுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். சர்வதேச பயங்கரவாதம் பற்றி 11 கட்டுரைகளும், இந்தியப் பயங்கரவாதம் பற்றி 5 கட்டுரைகளும், கடைசியாக 2 பின்னுரைகளும் என அமைகிறது இப்புத்தகம்.
சர்வதேச பயங்கரவாதம். 2001 செப்டம்பர் 11 அன்று இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் சர்வதேச பய‌ங்கரவாதத்திற்கு எதிராக நிரந்தரப் போர்ப் பிரகடனம் செய்தது அமெரிக்கா. ஆனால் அதன் பிறகு இன்றுவரை அமெரிக்கா செய்து வரும் நடவடிக்கைகள் எல்லாம், ஏற்கனவே செய்து கொண்டிருந்த காரியங்களின் வீரிய வடிவமே என்பது தெளிவாகத் தெரியும். சர்வதேச பயங்கரவாதத்தின் தோற்றுவாய் என்று அது சுட்டிக் காட்டும் இடங்கள் எல்லாம், இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு அரபு நாடுகள். பொது மக்களும் தங்களின் அன்றாட உரையாடல்களில் சர்வதேச பயங்கரவாதம் என்பதை இஸ்லாமிய பயங்கரவாதம் என அடையாளப்படுத்த நிர்பந்திக்கப்பட்டு உள்ளனர். இப்படி ஆயுதம் இருப்பதாகச் சொல்லி ஆயில் எடுக்கும் அமெரிக்க கதைகள்தான் இந்த 11 கட்டுரைகளும்.

சுமார் 2 கோடி பூர்வகுடி செவ்விந்தியர்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் திட்டமிட்டு அழித்து அமெரிக்கா பிறந்த கதை ஒரு கட்டுரை. இந்திய ஆண் 40 பவுண்டு, பெண் 12, சிறுவர் 20 எனக் கொன்று தலை கொண்டுவந்தால் பரிசு. கறுப்பின மக்களின் அடிமை முறையை ஒழித்த‌ ஆபிரகாம் லிங்கன் செவ்விந்தியர்களைக் கொல்லும் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். முதல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், மனைவியை விவாகரத்து செய்த போது 150 அடிமைகளை வாழ்க்கைப்படியாகக் கொடுத்திருக்கிறார். கறுப்பின மக்களின் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய நாட் டர்னர் (Nat Turner), தோலை உரித்து பணப்பை செய்து ஒரு பெருமைமிகு நினைவுப் பரிசாக வைத்திருந்திருக்கிறார் அரசு தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர். மால்கம் எக்ஸ் (Malcolm X), மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King, Jr.) முடிவுகள் உங்களுக்கே தெரியும். இப்படி கொடுஞ்செயல் சித்திரவதை வன்கொடுமை என்ற பாவங்களுடனேயே பிறந்து, போர்வெறி உளவியலுடன் தொடர்ந்து வலம் வருவதை விளக்குகின்றன ஆரம்பக் கட்டுரைகள். எந்தவொரு அமெரிக்க அதிபர் இரண்டாம் முறை தேர்தலில் நிற்கும் போதும், ஒரு முடிக்கப்படாத போர் இருக்கும், அதை முடித்து வைக்க இரண்டாம் முறை அவரே தேர்ந்தெடுக்கப்படுவதைக் கவனித்து இருக்கிறீர்களா?

அர்ஜென்டினா, நிகரகுவா, ஜப்பான், ரியூக்யூ மற்றும் பானின் தீவுகள், உருகுவே, சீனா, அங்கோலா, ஹவாய் என மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்த கதைகளையும், பியூடோ ரிகோ, ஹவாய், வேக் தீவுகள், குவாம் பகுதிகள், பிலிப்பைன்ஸ் என நாடு பிடிக்க போர் தொடுத்த‌ கதைகளையும் பேசுகிறது ஒரு கட்டுரை. Confession of an Economic Hit Man புத்தகத்தில் சொன்னது போல, கியூபா, காங்கோ, சிலி, தெற்கு வியட்நாம், டொமினிக் குடியரசு, பனாமா, நேற்றைய லிபியா என வெளிநாட்டு அரசுகளைக் கவிழ்ப்பது, அரசுக்கு நெருக்கடி கொடுப்பது, பொதுத் தேர்தல்களில் தலையிடுவது என அமெரிக்க உளவு நிறுவனம் CIA செய்து வரும் அடாவடிகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. Plan A, B, C, D, … என்று அமெரிக்க உதவியுடன் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் காட்டும் வன்முறைகள் பற்றி ஒரு கட்டுரை.ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகளில் 152ல் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ளன. அடுத்த 10 நாடுகளின் ஒட்டுமொத்த இராணுவச் செலவை விட அமெரிக்காவினது அதிகம். சதாம் உசேனுக்கு எதிரான போரில் ஈராக்கிய மக்கள் தொகையில் 5% பேர் இழப்பு. ஹிட்லரின் நாசிகளுக்கு இணையாக, வியட்நாம் மீது ஏஜென்ட் ஆரஞ்ச் இரசாயன குண்டுகளை வானில் இருந்து கொட்டிவிட்ட கொடுர இனவழிப்புக் கதைகள்.,,,,,

இந்தியப் பயங்கரவாதம். இந்தியாவிற்கு இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பேசுகின்றன 6 கட்டுரைகளும். விவசாயிகளின் பேரெழுச்சியாக ஆரம்பித்த நக்சல்பாரியின் கதையை, இன்றைய சல்வா ஜுடும் (Salwa Judum) வரை பேசுகிறது ஒரு கட்டுரை. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மற்றும் தேசிய இனப் பிரச்சனைகளைப் பேசுகிறது ஒரு கட்டுரை. இஸ்லாமிய மற்றும் இந்துத்துவ பயங்கரவாதம் பற்றி இரண்டு தனித்தனி கட்டுரைகள். அசோகர் காலம் முதல் 2008 நவம்பர் 26 மும்பை தாக்குதல் வரை பல விசயங்களைப் பேசுகின்றன இவ்விரண்டு கட்டுரைகளும். இப்புத்தகம் சொல்லும் தகவல்களில் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களில் ஒன்றிரண்டாவது உதாரணமாகச் சொல்ல நான் விரும்பவில்லை. வாசிப்பவர்கள் ஒருசமயம் ஒருசார்புடைய கருத்துடையவராக இருப்பின், அத்தகவல்களை எந்தவொரு வரலாற்றுப் பின்னணியும் இல்லாமல் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும் என்பதால், இப்படியே விட்டுவிடுகிறேன். அவை உங்களின் வாசிப்பிற்கும், தேடலுக்கும், சிந்தனைக்கும்.

இப்புத்தகம் படித்து பல நாட்கள் ஆகிவிட்டன. இப்புத்தகம் மேற்கொள் காட்டிய இன்னோர் அற்புதமான புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன். இரண்டு புத்தகங்களும் அடுத்தடுத்து அமைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அந்தப் புத்தகத்தில் இந்தப் புத்தகம் பற்றி நிறைய பேசுவோம். இப்புத்தகம் படியுங்கள். பயங்கரவாதச் செயல்களுக்குப் பின்னுள்ள உளவியல் அறியுங்கள். அவை தோன்றுவதற்கான காரணங்கள் உணருங்கள். பின்னர் நீங்களும் சொல்வீர்கள்; பயங்கரவாதம் மதமற்றது – பயங்கரவாதம் மொழியற்றது. இதுவரை மொழியின் அடிப்படையில் நசுக்கப்பட்ட ஈழத்தில், அங்கு இன்று தமிழர்களிடையே மதம் என்ற பிரிவினையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கு ஒருபடி மேலே போய் சாதிகளால் பிரித்துக் கொ(ல்)ள்கிறோம். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் கையாண்ட அதே பிரித்தாளும் சூழ்ச்சியின் நவீன வடிவங்கள்! அன்றைக்கே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கேட்டார்:

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

அனுபந்தம்:

1. Mausam, Delhi Belly. இந்த இரண்டு படங்களில் எதைப் பார்ப்பது என்று திரையரங்கின் முன் பயங்கர வாக்குவாதம். கடைசியாக ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். காசு சுண்டிவிடவில்லை. விமர்சனங்களை வைத்து முடிவு செய்யவில்லை. சுவரொட்டி பார்த்து ஈர்க்கப்படவில்லை. கதாநாயகனின் மதம்தான் தீர்மானித்தது!2. ஓர் இந்தித் திரைப்படத்தில், அமெரிக்கா முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு இறுதிக் காட்சியில் அமெரிக்க அதிபரைச் சந்தித்து, ‘My name is Khan; but I am not terrorist’ என்பார் ஷாருக் கான். இதே மாதிரி ஓரிஸா அல்லது கர்நாடகா அல்லது குஜராத் என்று ஏதாவது ஒரு மாநிலத்தைச் சுற்றி வந்து, ஓர் உள்ளூர் கவுன்சிலரிடமாவது சொல்ல முடியுமா? என் மதத்தைச் சொல்ல மறுத்ததற்காக பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்ட ஆட்டோக்காரனை நான் இத்தேசத்தில் சந்தித்திருக்கிறேன். இத்தனைக்கும் நான் போய்க் கொண்டிருந்த இடம் DRDO!

ஞானசேகர்

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp