ஹிட்லர்: ஏன் இன்னொரு புத்தகம்?

ஹிட்லர்: ஏன் இன்னொரு புத்தகம்?

தீர்ப்பு எழுதுவது சுலபமானது. புரிந்துகொள்வதுதான் மிகவும் கடினம். எரிக் ஹாப்ஸ்பாம் எழுதிய The Age of Extremes புத்தகத்தின் தொடக்க அத்தியாயத்தில் காணப்படும் வாசகம் இது.

இது ஹிட்லருக்குப் பொருந்துமா? லட்சக்கணக்கான யூதர்களை, இடதுசாரிகளை, ஒரு பால் நாட்டம் கொண்டவர்களை, ஊனமுற்றவர்களை, பிற 'தேவையற்றவர்களை' ஹிட்லரின் நாஜிகள் அழித்தொழித்தனர். எப்படி மக்கள் கொத்துக்கொத்தாகச் சிறை பிடிக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்பதை விவரிக்கும் ஏராளமான பதிவுகள் நம்மிடம் உள்ளன. வதைமுகாம்களில் சிக்கி மீண்டவர்கள், மாண்டவர்களின் சந்ததியினர், அரிதாகத் தப்பிப்பிழைத்தவர்கள் என்று பலரும் தங்கள் நினைவுக்குறிப்புகளை எழுதிவைத்திருக்கிறார்கள். இவற்றை மேலோட்டமாகப் பார்த்தே கண்களில் நீர் தளும்பும். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீயசக்தி என்று அல்லாமல் வேறு எப்படியும் ஹிட்லரை நம்மால் மதிப்பிடவேமுடியாது. ஹாப்ஸ்பாம் சொல்வதைப் போல் இது சுலபமானதுதான்.

ஆனால் ஹிட்லரைப் புரிந்துகொண்டுவிட்டோம் என்று நம்மால் சொல்லமுடியாது. இத்தனை லட்சம் பேரை ஹிட்லர் ஏன் கொல்லவேண்டும்? இதற்கெல்லாம் அவரிடம் வலுவான காரணங்கள் இருந்தனவா? யூதர்கள் அவருடைய எதிரியா? அல்லது ஜெர்மனியின் எதிரியா? என்ன செய்தார்கள் இடதுசாரிகள்? ஜெர்மனியில் புரட்சி அரசாங்கம் அமைப்பதற்காக ஏதேனும் சதித்திட்டங்கள் தீட்டி ஹிட்லரிடம் மாட்டிக்கொண்டார்களா? ஏன் வந்தது இந்தக் கம்யூனிச வெறுப்பு? சரி, யூதர்களும் இடதுசாரிகளும் ஏதோ அரசியல் காரணங்களுக்காக வெறுக்கப்பட்டவர்கள் என்றே வைத்துக்கொள்வோம். வயதானவர்களும் குழந்தைகளும் ஒருபால் நாட்டம் கொண்டவர்களும் உடல் ஊனமுற்றவர்களும் சிறைபிடிக்கப்பட்டது ஏன்? அவர்களுக்கு என்ன உள்நோக்கம் இருந்தது?

ஹிட்லர் மிகவும் அந்தரங்கமான ஒரு மனிதர் என்கிறார் இயான் கெர்ஷா. ஹிட்லர் குறித்தும் நாஜி ஜெர்மனி குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு பல புத்தகங்கள், ஆய்வுரைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார் கெர்ஷா. இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறார். அவராலும்கூட ஹிட்லரைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஹிட்லர் பற்றிய பல கேள்விகளுக்கு இன்னமும் விடை தெரியவில்லை, கண்டுபிடிக்கவும்முடியவில்லை என்கிறார் கெர்ஷா.

எரிக் ஹாப்ஸ்பாம், இயான் கெர்ஷா. ஹிட்லர் புத்தகத்தை நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இந்த இருவரும்தான். அவ்வளவு சுலபத்தில் ஒருவரைப் புரிந்துகொண்டுவிடமுடியாது என்பதை இவர்கள் புரியவைத்தார்கள்.

ஹிட்லர் புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தில் இருந்து சில பகுதிகள் :

யூதர்களை முழுமுற்றாக அழித்தொழிக்கவேண்டும் என்று ஹிட்லர் ஏன் நினைத்தார்? எப்போது இந்தச் சிந்தனை அவரிடம் உதித்தது?

மனித கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமாக இந்தக் கொலைத் திட்டம் ஏன் விரிவடைந்தது? அதன்மூலம் நாஜிகள் சாதித்தது என்ன?

நாஜி வீரர்கள் ஹிட்லரின் உத்தரவுகளை ஒரு கடமையாகக் கருதி நிறைவேற்றினார்களா? அப்பாவி கைதிகளை வகை வகையாகச் சித்திரவதை செய்தபோது அவர்கள் என்ன நினைத்தார்கள்?

ஹிட்லருக்கு எதிர்ப்புகளே எழுவில்லையா?

ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தபோது பொதுமக்கள் அதை எப்படி எடுத்துக்கொண்டனர்? யூதர்கள் தேடித்தேடி வேட்டையாடப்பட்டபோது ஜெர்மனி என்ன செய்துகொண்டிருந்தது? உலகம் என்ன செய்துகொண்டிருந்தது?

ஹிட்லர் அப்படியொன்றும் தீவிரமானவர் அல்லர்; அவர் ஜெர்மனிக்காகவே அனைத்தையும் செய்தார் என்று அப்போது பலர் நம்பினர். இது எப்படி நடந்தது? ஹிட்லரை எப்படி அவர்களால் ஏற்கமுடிந்தது?

ஹிட்லரிடம் மட்டுமே யூத வெறுப்பு இருந்தது? ஹிட்லர் மட்டுமா இடதுசாரிகளை வெறுத்தார்? எனில் ஹிட்லரை மட்டும் எதற்காகத் தனியாகப் பிரித்தெடுத்து வசை பாடவேண்டும்? அவர் வாழ்ந்த காலகட்டத்தின் விளைவு என்று அல்லவா அவரை மதிப்பிடவேண்டும்?

இன்றும்கூட ஹிட்லரைப் பலர் தங்கள் ஆதர்சனமாக வெளிப்படையாகவே ஏற்பது ஏன்?

பல கேள்விகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே விடைகள் உள்ளன. அவற்றில் சில மட்டுமே அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளன. இயான் கெர்ஷா குறிப்பிடுவதைப் போல் இன்னும் பல ஆய்வுகள் தொடங்கப்படவேயில்லை. பல கேள்விகள் கேட்கப்படவேயில்லை.

குறிப்பாக, அன்றைய ஜெர்மனியின் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியினரும், கம்யூனிஸ்டுகளும் (இவர்களைப் பேதம் பிரிக்காமல் இடதுசாரிகள் என்றே மொத்தமாக அடையாளப்படுத்தினார் ஹிட்லர்) ஹிட்லரை எப்படி எதிர்கொண்டனர்? தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்வி எனக்கு முக்கியம் என்று தோன்றியதால் அது குறித்த தேடல்களும் விவாதங்களும் இதில் சற்றே விரிவாக இடம்பெற்றுள்ளன.

இது ஆய்வுப் புத்தகம் அல்ல; ஹிட்லரைப் பற்றியும் நாஜி ஜெர்மனி பற்றியும் இதுவரை யாரும் அறிந்திராத எதையும் இது புதிதாகக் கண்டறிந்துவிடவில்லை. மாறாக, சில முககிய ஆய்வாளர்களின் பார்வையில் பல புதிய கோணங்களில் ஹிட்லரை விரிவாக அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். பிறப்பு, போர், வதைமுகாம்கள், வீழ்ச்சி, மரணம் என்று நேர்க்கோட்டில் எளிதாக சித்திரங்கள் தீட்டிவிட்டு கடந்துவிடாமல் ஒவ்வொரு அம்சத்தையும் நின்று நிதானமாக அலசுகிறது. விரிவாக ஹிட்லரைக் கற்க எந்தெந்த திசையில் ஒருவர் பயணம் செய்யவேண்டும் என்பதையும் அந்தப் பயணத்தின் முடிவில் என்னவெல்லாம் ஒருவர் கற்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஹிட்லர் பற்றி மேற்குலகில் நடைபெறும் விவாதங்கள் எத்திசையில் செல்கின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஏன் இன்னொரு புத்தகம் என்பதற்கான என் பதில் இதுவே. ஒன்றல்ல, இன்னும் நூறு எழுதப்பட்டாலும் தீராத பல விவாதங்கள், விடையறிந்துகொள்ளமுடியாத பல கேள்விகள், புரிந்துகொள்ளமுடியாத பல மர்மங்கள் ஹிட்லரிடம் எஞ்சியுள்ளன.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp