பார்வை தொலைத்தவர்களும் ஒளி மறுக்கப்பட்டவர்களும்

பார்வை தொலைத்தவர்களும் ஒளி மறுக்கப்பட்டவர்களும்

Most of those who died did not die of hunger but of hatred. Feeling hatred diminishes you. It eats at your from within and attacks the immune system. When you have hatred inside you, it always crushes you in the end.
Tahar Ben Jelloun, This Blinding Absence of Light.

நாம் இதுவரை கண்டிராத நிலங்களை, மனிதர்களை அவர்தம் வாழ்வினை திரைவழி காணச் செய்வது ஒரு திரைப்படமெனில் அந்த வாழ்க்கையை நமக்குள் வாழவும் அவர்களின் உணர்வுகளை உணரவும் வழிகோலுவது ஒரு நல்ல புத்தகம். பொழுதுபோக்கு, அறிவார்ந்த தேடல் இவற்றைத் தாண்டி ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது அது நமக்குள் அனுபவங்களை விதைத்துச் செல்கிறது. நல்ல புத்தகங்கள் நம்மை மென்மையானவர்களாக்குகிறது. சமீபத்தில் வாசித்த இரண்டு நாவல்கள் என்னை ஒரு பார்வையற்றவனாக உணரச்செய்தன. கண் பல நேரங்களில் நமக்கு செவியாகவும் வேலை செய்கிறது. பார்வையற்றவர்களுக்கு செவி தான் கண். பிறவியிலேயே பார்வை அற்றவர்களின் தினசரி எப்படி இருக்கும்? வாழ்வில் அவர்களின் நோக்கம் என்னவாக இருக்குமென்பதையெல்லாம் இதுவரையிலும் யோசித்ததேயில்லை. ஆனால் பார்வை என்ற ஒரு புலனைத் தொலைத்தவர்களின் நோக்கம் நிச்சயம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும், அது தொலைத்த பார்வையை திரும்பப் பெறுவதென்பதேயாகும்.

பார்வை தொலைத்தவர்களின் கதை (Blindness – Jose Saramago):

நீங்கள் காரோட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சிக்னலில் சிவப்பு விளக்கெரிய காரை நிறுத்திவிட்டு பச்சை விளக்குக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். கண் மூடித் திறக்கும்போது உங்கள் முன் ஒரு கடல், வெண்கடல். கண்களை இறுக்கமாக மூடினால் தோன்றும் அடர்ந்த இருளுக்கு எதிர்ப்பதமான ஒரு வெண்மை, தூய வெண்மை. உங்களால் சாலையைக் காண முடியவில்லை, முன்னால் நின்று கொண்டிருக்கும் வாகனத்தை, சிவப்பு-பச்சை விளக்கை, எதையும் காண முடியவில்லை. உங்கள் பார்வைத் திறன் இல்லாமலாகிறது. அப்போது எப்படி உணர்வீர்கள்? நீங்கள் குருடாகி விட்டதை உணர்கிறீர்கள். மருத்துவரிடம் செல்கிறீர்கள். அடுத்தடுத்த நாட்களில் அந்த மருத்துவரும், உங்களை சுற்றி இருப்பவர்களும் அனைவருமே பார்வை இழக்கிறார்கள். இந்த ஒரு சூழலில் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? ஒருவேளை உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் பார்வை இழந்து உங்களால் மட்டும் காண முடிந்தால்?

நிச்சயம் இந்த புத்தகம் மெல்லியமனம் கொண்டவர்களுக்கானதல்ல. பார்வையைத் தொலைக்கும் அனைவரும் அரசாங்கத்தால் ஒரு மனநலக் காப்பகத்தினுள் அடைக்கப் படுகிறார்கள். ஒரு புறம் ஏற்கனவே பார்வை இழந்தவர்கள், மறுபுறம் பார்வை இழப்பிற்கான சாத்தியங்கள் கொண்டவர்கள். நாட்கள் செல்லச்செல்ல அனைவருமே பார்வை இழக்கின்றனர். இறுதியாக பார்வையிழந்து அங்கு வந்து சேரும் ஒரு குழு பொறுக்கிகள் மற்றவர்களுக்காக உணவைப் பறித்துக் கொண்டு அதற்கு ஈடாக பணத்தையும் பெண்களையும் கேட்கின்றனர். பார்வை இழந்தபோதும் கூட சிலர் மற்றவர்களை தங்களுக்கு கீழாக வைத்திருக்க நினைத்திருப்பது சமகால மனித இனத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையும் குரூரத்தையும் வெளிச்சப்படுத்துகிறது.

சரமாகோ இந்த நாவலில் யாரைக் குறிப்பிடவும் அவர்களின் பெயர்களை உபயோகிக்கவில்லை. Doctor’s wife, Doctor என்று ஒவ்வொருவரையும் ஒரு குறியீட்டுப் பெயரால் குறிப்பிடுகிறார். பார்வை பறிபோன பின்னரும் ஒரு பெண்ணை Girl with dark glasses என்று குறிப்பிடுவதெல்லாம் அற்புதப்பகடி. இப்படிப் பெயர்களைக் குறிப்பிடாததன் மூலம் கதையில் வரும் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் ஒரு சமூகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதாக உணரலாம். இன்னும் கூர்ந்து நோக்கினால் இந்தக் கதையை அப்படியே ஒரு சிறுபான்மை இனக்கூட்டத்தோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். சிறுபான்மையினராக இருப்பவர்களை அரசு எப்படிப் பார்க்கிறது, அவர்களுக்குள்ளேயே ஏற்படும் பிளவுகள் என இந்தக் கதை அவர்களின் வாழ்வோடு அப்படியே பொருந்திப் போகிறது.

ஒருவழியாக மனநலக் காப்பகத்திற்கு வெளியே பாதுகாப்பிற்கு நிற்கும் படைவீரர்கள் யாரும் இல்லை என்றறிந்த பின் மனநலக் காப்பகத்திலிருந்து அனைவரும் தப்பித்து வெளியேறியதும்தான் அந்த ஊரில் அனைவருமே பார்வை இழந்ததை அறிகிறார்கள். மருத்துவரின் மனைவி அவளுடனிருக்கும் அனைவரையும் ஓரிடத்தில் தங்க வைத்துவிட்டு உணவு தேடச் செல்கிறாள். வழியில் அவள் காணும் மனிதர்களும் காட்சிகளும் நிச்சயம் வாசிப்பவர்களின் மன உறுதியை அசைத்துப் பார்க்க வல்லவை.

இந்த நாவலில் மையம் அல்லது மொத்த சாரமும் குவியும் ஓர் இடம் பார்வை அல்லது பார்வை இழப்பு. இதே புள்ளியில்தான் பின்வரும் நாவலும் எழுதப்பட்டிருக்கிறது.

ஒளி மறுக்கப்பட்டவர்களின் கதை (This Blinding Absence of Light – Tahar Ben Jelloun)

ஒரு அறை, கல்லறை என்று சொல்லத்தக்கதான அறை. பத்தடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட தனியறை. ஒரு கீற்று ஒளி கூட மறுக்கப்படுகிறது. சுற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அடர்ந்த இருள். இருண்ட கல்லறை.

மொரோக்கோவின் அரசருக்கு எதிரான ராணுவப் புரட்சியில் அரசர் இரண்டாம் ஹஸனின் பிறந்தநாளன்று அவரைக் கொல்வதாக முடிவாகிறது. இந்த முயற்சியில் நூற்றுக்கணக்கான படை வீரர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். அதிர்ஷ்டவசமாக அரசர் பிழைத்துக்கொள்ள, அந்த தாக்குதலில் அரசாங்கத்திடம் மாட்டிக் கொண்ட படைவீரர்களுக்கு கடும் சித்திரவதைகள் கொண்ட தண்டனை விதிக்கப்படுகிறது. இரண்டு வருட சித்திரவதைகளுக்குப் பின் அனைவரும் Tazmamart என்ற ஒரு இடத்தில் இருக்கும் ஒரு பாதாளச் சிறைக்கு மாற்றப்படுகின்றனர். இங்குதான் ஒவ்வொரு கைதியும் அந்த இருண்ட கல்லறைக்குள் அடைக்கப் படுகின்றனர், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான ஒளி மறுப்புடன்.

எதிர்காலத்தைக் குறித்து பயந்தும், கடந்த காலத்தை நினைத்தும் பலரும் உடல் நிலை, மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் சடங்கில் மட்டும் சிலருக்கு சிறைக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அடுத்த சாவு வரும் வரையிலும் தேவையான ஒளியினை அருந்திக் கொள்ளலாம். அனைவரிலும் வித்தியாசமானவனாக சலீம் மட்டும் கடந்த காலமென்று ஒன்று இருந்ததை மறந்தும், எதிர்காலத்தை நினையாமலும் இறை நிலையில் தன்னைச் செலுத்தி தன் மனதை புடம்போட்டு தன் மனதையும் உடலையும் ஒரு புள்ளியில் செலுத்தித் தன் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்கிறான். உடனிருப்பவர்களின் மரணம் ஒவ்வொன்றும் அந்த உறுதியை அசைத்துப் பார்க்கிறது.

சில புத்தகங்கள் மட்டுமே முடிவை எதிர்பார்த்து, வேகமாக படித்து விடவேண்டும் என்று பக்கங்களை தள்ள வைக்காமல் ஒவ்வொரு பக்கத்திலும் சில ஆச்சரியங்களையும் வலிகளையும் சில தரிசனங்களையும் தர வல்லவை. அதிலும் சில மட்டுமே நம்மை ஒரு தியான நிலைக்குத் தள்ளி வேறு சில வேலை செய்யும்போது கூட அதே நிலையில் நம்மை நீட்டித்து வைக்கும், நம் வாழ்வின் பக்கங்களை திரும்பிப் பார்க்கச் செய்து நமக்கு அளிக்கப் பட்டிருக்கும் வாழ்வென்பது பெரும் பரிசென உணர்த்தும்.

ஒளியின்மை தரும் நுண் வாதைகளின் பெரும் பாரம் இந்த நாவல். பார்வை ஒருவருக்கு எவ்வளவு முக்கியமான ஒரு புலன் என்றும், பார்வை மறுக்கப்படுதல் ஒருவரின் மனதையும், உடலையும் எங்கனம் உருக்குலைக்கிறதென்றும் வாசிக்கும்போதே மனதில் பெரும் கனம் உண்டாகிறது. இப்போது நாம் துளியளவும் கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கும் குருவிகளின் சத்தம், ஆந்தைகளின் அலறல் என நிமித்தங்களால் மட்டும் வெளியுலகை அறிவதென்பது மரணத்தை விட அதிகம் வலி தரக்கூடியதாக இருக்கும். இதை சிறைதான் தர வேண்டுமென்பதில்லை.

(நன்றி: சாபக்காடு)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp