எண்ணும் மனிதன்

எண்ணும் மனிதன்

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் இரண்டாம் நாளில் அகல் பதிப்பகம் வெளியிட்டுள்ள மல்பா தஹான் எழுதிய எண்ணும் மனிதன் என்ற மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வந்தேன். அட்டையை பார்த்தபோது பாரசீகம் அல்லது அரபு மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி. 

மல்பா தஹான் என்பவர் யார். எந்த தேசத்தை சேர்ந்தவர். எந்த ஆண்டு இந்த நூல் வெளியானது என்று எந்த குறிப்பும் புத்தகத்தில் இல்லை. பின் அட்டை குறிப்பும் மிக பொதுவாக எழுதப்பட்டிருந்தது.

இணைய தளம் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்ட இந்த காலத்தில் கூட இப்படி எந்தக் குறிப்பும் இல்லாமல் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளிவருவது தமிழில் மட்டுமே சாத்தியம் போலும். சரி மொழிபெயர்ப்பாளர் யார். அவரைப் பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா என்றால் அதுவுமில்லை. இந்த குளறுபடிகளின் காரணமாகவே அதை படிப்பதை தள்ளி வைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் தற்செயலாக எண்ணும் மனிதனைப் புரட்டி படித்த போது அது ஆயிரத்தோரு அராபிய இரவுக்கதை படிப்பதை போன்ற வசீகரத்துடன் இருந்தது. வாசிப்பின் வேகத்தில் அன்றிரவுக்குள்ளாக அதை முழுவதுமாக படித்து முடித்திருந்தேன்.

பலநூற்றாண்டுகளுக்கு முந்திய பாக்தாத்தின் வீதிகளில் அலைந்து திரும்பியது போன்ற சந்தோஷம் மற்றும் ஒட்டுதல் உருவானது. இரவெல்லாம் மனதில் பெரமீஸ் சமீர் என்ற கதையின் நாயகன் குறித்த எண்ணங்களே நீண்டு கொண்டிருந்தன.

கணிதத்தை இவ்வளவு ருசியான கதையாக மாற்ற முடிவது பெரிய அதிசயம். இந்த நூலைப் படித்து முடித்த ஒவ்வொருவரும் கணிதம் மீது நிச்சயம் ஆர்வம் கொள்வார்கள். கணிதத்தை புரிந்து கொள்வார்கள். கணிதம் என்பது வெறும் எண்கள் மட்டுமில்லை என்பதை ஆழமாக உணர்ந்து கொள்வார்கள்.

சமீப காலங்களில் நான் படித்த மிக சிறந்த புத்தகம் இதுவே என்று உடனே மனதில் பட்டது. அன்றிலிருந்து இப்போது வரையான நான்கு மாத காலத்தில் இந்த புத்தகத்தை பதினைந்து தடவைகள் படித்திருக்கிறேன். எங்கே பயணம் போனாலும் கூடவே எடுத்து கொண்டுப் போகிறேன். சில வேளைகளில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து வாசிக்க ஆரம்பித்து முப்பது நாற்பது பக்கங்கள் படிக்கிறேன். அதன் பிறகு யார் மல்பா தஹான் என்று தேடி அவரது பிறநூல்களை வாசிக்க ஆர்வம் கொண்டேன்.

மூலப்புத்தகத்தின் பெயர் தெரியாத குழப்பத்தால் சற்று சிரமமாக இருந்த போதும் ஒரு சில நாட்களில் மல்பா தஹான் யார் என்று கண்டுபிடித்துவிட்டேன்.

மல்பா தஹான் என்ற புனைபெயரில் எழுதியவர் பிரேசில் நாட்டின் ஜீலியோ சீசர் என்ற எழுத்தாளர். இவரது முழுப்பெயர் ஜீலியோ சீசர் டி மெலோ ஈ சௌசா. (Júlio César de Mello e Souza ) பிரேசிலின் புகழ்பெற்ற கணிதப்பேராசியராக இருந்தவர். கணிதம் குறித்து 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
கதைகளின் வழியே கணிதத்தின் மீதான ஈர்ப்பை உருவாக்குவதில் தனித்திறன் பெற்றவர். இவரது புகழ்பெற்ற நாவலான The Man Who Counted – Malba Tahan. தான் தமிழில் எண்ணும் மனிதனாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நாவல் அராபிய கதைகள் போன்ற வடிவத்திலே எழுதப்பட்டுள்ளது. உலக அளவில் 13 மொழிகளில் வெளியாகி பதினோறு லட்சம் பிரதிகள் விற்றுள்ள இந்நூல் இதுவரை 54 பதிப்புகள் கண்டிருக்கிறது. கணிதத் துறையில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக இவர் பெயரால் மல்பா தஹான் கணித ஆய்வு மையம் ஒன்று பிரேசிலில் செயல்பட்டு வருகிறது.

ஆலீஸின் அற்புத உலகம் எழுதிய லூயி கரோலை கணித மேதை என்பார்கள். அவரது நாவல் குழந்தைகளுக்கானது என்றாலும் அது கணிதத்தின் சூட்சுமங்களும் வியப்பும் நிரம்பியது என்பார்கள். அது போன்றதே எண்ணும் மனிதன் நாவல்.

பிரேசில் மொழியில் 1949ம் ஆண்டு வெளியான இந்த நாவல் அதீத கணித திறன் படைத்த பெரமிஸ் சமீர் என்பவனின் சாதனைகளையும் பயணத்தையும் விவரிக்கிறது. தனது கணித நுட்பத்தால் பெரமிஸ் தீர்த்து வைத்த சிக்கல்கள், அவனது அவதானிப்பின் தனித்துவம். எண்களின் பயன்பாடு மற்றும் சரித்திரம், கணிதம் உண்டான வரலாறு, கணித மேதைகளின் சொந்த வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள், புதிர்கள், அதில் வெளிப்படும் சாதுர்யம் என்று மிக அழகாக விவரிக்கபட்டிருக்கிறது 218 பக்கங்கள் உள்ள இந்த நாவலை கணிதப் புதிர்களின் கதை தொகுதி என்றே சொல்ல வேண்டும்.


இந்த நூலை முதன்முறையாக வாசிக்கும் போது இதாலோ கால்வினோவின் Invisible Cities நினைவிற்கு வந்தது. புனைவின் மீதான புனைவை உருவாக்குவதில் கால்வினோவிற்கு நிகரானவர் மல்பா தஹான். போர்ஹே, கால்வினோவிற்கு நிகரான எழுத்துமானமும் நுட்பமும் கொண்ட ஒரு எழுத்தாளரை வாசித்து கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொரு நாவல் முழுவதும் உணர்ந்தேன்.

ஆயிரத்தோரு அராபிய இரவுகள் எண்ணிக்கையற்ற கதைகளும் கிளைக்கதைகளும் கொண்டது. அது அராபு உலகின் புரதான நினைவு தொகுப்பு என்றே சொல்வேன். பாக்தாத் நகரம் அந்த கதைகளின் வழியே தான் உலக மக்களின் நினைவில் உருக்கொண்டது.

யுத்தம் இன்று அந்த நகரை சிதைவுற செய்த போதும் அதன் பழமையும் பெருமையும் ஆயிரத்தோரு அராபிய இரவுகள் என்ற நூலின் வழியே புத்துரு மங்காமல் அப்படியே வாசிக்க கிடைக்கிறது. ஒரு நகரை அதிகாரயுத்தம் அழித்துவிடக்கூடும். ஆனால் அதன் நினைவுகளை ஒரு போதும் அழிக்க முடியவே முடியாது. அதிலும் அது இலக்கியத்தில் பதிவாகிவிடும் போது அது நித்யத்துவம் அடைந்துவிடுகிறது. அப்படியான நகரமே பாக்தாத்.

மல்பா தஹானின் நாவலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் உள்ள பாக்தாத் நகரை பற்றியும் அதன் கலீபாக்கள் ஆட்சியில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களையும் பின்புலமாக விவரிக்கிறது. நாவலை துவக்கி கதையை சொல்பவர் ஹனாக். அவர் தனது வழிப்பயணத்தில் கண்ட ஒரு விசித்திரமான மனிதனை பற்றி எடுத்து சொல்கிறார்.

அந்த மனிதன் டைகிரிஸ் ஆற்றங்கரையில் ஒய்வு எடுத்தபடியே எதையோ எண்ணிக் கொண்டிருந்தான். இருபத்திமூன்று லட்சத்து இருபத்தோராயிரத்து எண்ணூற்று அறுபத்தாறு என்ற எண்ணிக்கை ஹனாக் காதில் விழுந்தது. எதை இந்த மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று கேட்கிறான். அதற்கு அந்த மனிதன் தன் கதையை சொல்ல துவங்குவதாக நாவல் ஆரம்பமாகிறது.

பாரசீகத்தில் அராரத் மலையின் அருகாமையில் உள்ள கோய் என்று சிறு நகரில் பிறந்தவன் பெரமிஸ் சமீர். காமாட் என்பவரிடம் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி கொண்டு போய் திரும்பி வருகையில் அது தப்பி போய்விடுமோ என்ற பயம் அவனை ஆட்டுவித்தது. அப்படி ஒரு ஆடு குறைந்து போனாலும் அவனது எஜமானர் அவனை கடுமையாக தண்டிப்பார். ஆகவே ஆடுகளை கவனமாக எண்ணுவதற்கு அதிக பயிற்சிகள் எடுத்து கொண்டான்.

இதன் காரணமாக அவன் எண்களின் மீது அதிக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தான். தனது கண்பார்வையில் மொத்த ஆடுகளையும் எண்ணுவதில் அவனுக்கு தனித திறன் உருவானது. அவன் ஆடுகளை தனித்தனியாக எண்ணுவதில்லை. அதன் காதுகளை எண்ணி அதை இரண்டால் வகுத்தால் உடனே விடை வந்துவிடும் என்ற சூட்சுமம் அறிந்திருந்தான். இப்படியாக அவனது கணித திறன் காரணமாக அவன் ஆடு மேய்ப்பதில் இருந்து பதவி உயர்வு பெறுகிறான்.

எண்ணுதல் என்பது வெறும் கணித விளையாட்டு அன்று. அது உலகை அறிந்து கொள்வதற்கான சூட்சுமம். அது ஒரு மெய்யியல் என்று அவன் ஆழமாக அறிந்து கொள்ள துவங்குகிறான்.

ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள், தேனிக்கூட்டில் உள்ள தேனீ. பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சி. வானில் ஒரு நாளில் பறந்து செல்லும் பறவைகள், மரங்களில் உள்ள இலைகளின் எண்ணிக்கை என்று அவனது மனம் தொடர்ந்து உலகை எண்ணியபடியே இருந்தது. அதில் மிகுந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் கொண்டான்.

இதனால் பேரிச்சம்பழம் விற்பனை செய்வதை கணக்கிடும் பொறுப்பு அவனுக்கு வந்தது. அதில் எளிதாக விற்பன்னராக உயர்ந்தான். அவன் ஒரு அவதானியாக தன்னை வளர்த்து கொண்டான். கண் பார்வையில் உலகம் அவனுக்குள் பூரணமாக பதிவு கொண்டது. எதையும் சுலபமாக நினைவு கொள்ளும் திறன் அவனுக்கு இருந்தது.

அவன் கணிதம் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளிலும் இருப்பதை கண்டான். அதை முறையாக அறிந்து கொள்ளவும் வளர்த்து கொள்ளவும் முயன்றான். அதில் வெற்றியும் கண்டான்.அவனால் நிறைய பணம் சம்பாதித்த எஜமானர் அவனை சொந்த ஊருக்கு போய்வரும்படி விடுமுறை தந்து அனுப்பி வைத்தார். அந்த பயணத்தில் தான் அவன் ஹனாக்கை காண்கிறான்.

பெரமிஸின் திறமையை கண்ட ஹனாக் அவனால் மிக பெரிய பதவிகள் பெற முடியும். கணிதத்தை வைத்து நிறைய சம்பாதிக்க முடியும் என்று சொல்கிறான். அதை சமீரால் நம்ப முடியவில்லை. இருவரும் ஒன்றாக பயணம் செய்கிறார்கள். வழியில் பெரமீஸ் ஒட்டங்களை பிரித்து கொள்வதில் ஏற்பட்ட பிணக்கு ஒன்றை தீர்த்து வைக்கிறான். எண்களின் மகத்துவம் பற்றி பேசுகிறான். அவன் சந்திக்கும் நிகழ்வுகளின் வழியே எண்களின் தனித்துவமும் அதன் சூட்சும தளங்களும் விவரிக்கபடுகிறது.

உதாரணத்திற்கு 4 என்ற எண்ணை பற்றி அவனது விளக்கம் அற்புதமானது. அதாவது 4444 என்ற எண்ணை உபயோகித்து நமக்கு என்ன எண் வேண்டுமோ அதை பெறலாம் என்கிறான். எப்படி என்று கேட்டவுடன் 44 ல் 44 ஐ வகுத்தால் விடை ஒன்று வரும் இப்படி 2, 3, 4 முதல் எந்த எண்ணையும் இந்த நான்குகளின் வழியே நாம் பெற முடியும் என்று விளக்குகிறான். இவை வெறும் கணிதமாக விளக்கபடுவதை விட கதையொன்றின் முக்கிய புதிர் போல உருமாறி விளக்கபடுவதே இதன் சிறப்பு.

ஐசிட் என்ற வணிகரின் வீட்டில் விதவிதமான பறவைகள் கூண்டில் வளர்க்கபடுகின்றன. அந்த பறவைகளை எண்ணி சொல்ல வேண்டும் என்று பெரமிஸ் அழைத்து போக படுகிறான். அவன் அந்த கூண்டில் இருந்த பறவைகளில் இருந்து 3 பறவைகளை உடனே வெளியே விடும்படி சொல்கிறான். அதன்படி கூண்டில் இருந்து 3 பறவைகள்விடுவிக்கபடுகின்றன. இப்போது கூண்டில் 496 பறவைகள் இருக்கின்றன என்று விடை சொல்கிறான்.

அது ஏன் 499 பறவைகள் இருக்கிறது என்று முன்பே சொல்லியிருக்கலாமே மூன்றை ஏன் குறைத்தீர்கள் என்று வணிகர் கேட்கிறார். அதற்கு பெரமிஸ் 499 ஐ விட 496 அற்புதமான எண். முழுமைபெற்றது. ஒரு எண் அந்த எண்ணை தவிர மற்ற எண்களால் அதிகமாக வகுக்கபட்டால் அது முழுமை பெற்ற எண் ஆகிறது. அந்த வகையில் 496 ஒரு அற்புதமான எண் என்று விளக்கி சொல்கிறான்.

அதே நேரம் மூன்று பறவைகள் விடுதலை அடைந்த சந்தோஷத்தின் முன்பாக எனது கணித திறமை வெறும் நினைவுஜாலம் மட்டுமே என்று தன்னடக்கமும் கொள்கிறான். அத்துடன் இங்கிருக்கும் எல்லா பறவைகளும் நீங்கள் கூண்டிலிருந்து திறந்துவிட்டால் அது 1488 நற்செயல்கள் செய்ததற்கு சமம் என்கிறான். உடனே கூண்டின் கதவு திறக்கபட்டு பறவைகள் சுதந்திரமாக வானில் பறக்கவிடப்படுகின்றன.

அப்போது பெரமீஸ் பறவைகள் பற்றி குறிப்பிடுகிறான். கவித்து உச்சநிலை என்றே இதை சொல்வேன்.

ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம் அதனுடைய பக்கங்கள் திறந்திருக்கும் சொர்க்கம் . கடவுளின் இந்த நூலகத்தை திருடவோ, அல்லது அழிக்கவோ முயற்சிப்பது மிக அசிங்கமான குற்றம் என்கிறான்.

பறவை ஒரு புத்தகம் என்ற அவனது படிமம் மனதில் ரீங்கரித்தபடியே உள்ளது. எவ்வளவு பெரிய உண்மை. எவ்வளவு எளிதாக சொல்லிப்போகிறார் என்று மனது சந்தோஷம் கொள்கிறது. விடுதலையான பறவைகளின் பாடல் ஒலி வானில் கேட்கிறது. அது மகத்தான ஆனந்தம் என்று பெரமீஸ் சொல்லும் போது அவனது கணித அறிவின் உச்சம் சக உயிர்களின் மீதான அன்பு என்று தெளிவாக உணர்த்தப்படுகிறது.

பெரமீஸ தன் மகளுக்கு கணித பாடம் நடத்தும்படியாக ஐசிட் என்ற வணிகம் கேட்டுக் கொள்கிறார். ஒரு மூடுதிரைக்கு அப்பால் இருந்து ஜசிட்டின் மகள் கணிதம் கற்றுக் கொள்கிறாள். அவளுக்கு சொல்லித்தரும் பாடத்தின் வழியே கணிதத்தின் கடந்த கால சரித்திரம் அதன் சாதனையாளர்கள் விவரிக்கபடுகிறார்கள்.

நாவலில் இந்திய கணித மேதைகள் குறித்தும் அவர்களின் பங்களிப்பு பற்றியும் அதிகமாக புகழ்ந்து பாராட்டப்படுகிறது. குறிப்பாக கணிதமேதை பாஸ்கராவின் லீலாவதி என்ற கணித நூலை பற்றி விவரிக்கும் பெரமிஸ் அந்த நூல் பாஸ்கர ஆச்சாரியாவின் மகள் லீலாவதியின் பெயரால் எழுதப்பட்டிருக்கிறது. அது லீலாவதிக்கும் அவரது அப்பா பாஸ்கராவிற்குமான ஆழமான அன்பின் அடையாளம்.

திருமணம் தடைப்பட்டு போய் தனிமையில் வாழ்ந்த தனது மகளை ஆறுதல்படுத்தவே பாஸ்கரா தனது கணித நூலிற்கு அவள் பெயரை சூட்டியதாகவும் அந்த கணித நூலின் வழியே அவள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான அறிவார்ந்த நெருக்கம் இந்த நூலில் காணப்படுகிறது என்று வியந்து சொல்கிறான் பெரமீஸ்.

கணிதம் குறித்த கேள்விகளை லீலாவதி கேட்பது போன்றும் அவருக்கு பதில் சொல்வது போன்று பாஸ்கரா கணிதபுதிர்களை விளக்குவதாகவும் லீலாவதி நூல் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானவியல் புவியியல் என்று கணிதத்தை பயன்படுத்தி இந்தியர்கள் கண்டறிந்த உண்மைகளே இன்று உலகிற்கு வழிகாட்டுகின்றன.

சதுரங்க விளையாட்டு இந்தியாவில் எப்படி உருவானது என்று இந்த நாவலில் விரிவாக விளக்கபடுகிறது. அது போலவே நாவலின் முடிவு பெரமீûஸ ஏழு அறிஞர்கள் சோதனை செய்து பார்ப்பது போல உள்ளது. அந்த ஏழு நபர்களும் ஏழு அறிவுதுறையை சேர்ந்தவர்கள். கணிதம் அத்தனை துறைகளிலும் உயர்வானது என்பதை பெரமீஸ் நிருபணம் செய்கிறான். அதற்கு பரிசாக என்ன வேண்டும் என்று கலீபா கேட்கவே தான் ஐவிட்டின் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறான்.அதற்கும் ஒரு போட்டி வைக்கபடுகிறது. அதிலும் வென்று அவன் மிகப்பெரிய பதவியோடு அறிஞனாக வாழ்கிறான் என்பதோடு நாவல் நிறைவு பெறுகிறது.

கவித்துவமான உருவங்கள், படிமங்கள், சிறு சிறு கதைகள், வியப்பூட்டும் கணிதங்கள், யாவையும் விட பெரமீஸின் அளவிட முடியாத அன்பு அத்தனையும் ஒன்று சேர்ந்து இந்த நாவலை தனிச்சிறப்புடையதாக்குகின்றன.

பிரேசிலில் வசித்த ஜிலியோ சீசர் ஒரு முறை கூட அராபிய நாடுகளில் எதிலும் பயணம் செய்யாதவர். பாலைவனத்தை கண்ணால் கூட கண்டதில்லை என்று கூறும் இவர் ஆயிரத்தோரு அராபிய இரவுகளை முழுமையாக வாசித்து அதன் பாதிப்பிலிருந்தே தனது நாவலை எழுதியதாக சொல்கிறார். புனைவின் சாத்தியம் எவ்வளவு பெரியது என்பதற்கு இதுவே அடையாளம்.

அதுபோல தனது சொந்த பெயரில் எழுதாமல் மல்பா தஹான் என்று பெர்சிய மரபு பெயரில் தான் எழுதியதற்கும் காரணம் கணிதம் என்கிறார். அதாவது இந்தியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தே கணிதம் வளர்ந்து வந்தது அதன் அடையாளமாகவே தனது புனைபெயரை மல்பா தஹான் என மாற்றிக் கொண்டதாக கூறுகிறார்.

ஜீலியோவின் கணித அறிவு அற்புதமானது. அவர் கணித சரித்திரம் தத்துவம் மெய்யியல் கவிதை, கதை சொல்லுதல், புதிர்கள், அவதானம் என்று அறிவின் அத்தனை பிரிவுகளிலும் ஆழ்ந்த புலமையும் வெளிப்படுத்தும் திறனும் கொண்டிருக்கிறார். எங்கோ அராபிய பாலைவனம ஒன்றில் இரவில் தங்கிக் கொண்டு நட்சத்திர ஒளியில் கதை கேட்பது போன்ற சொல்லும் முறையே நாவல் எங்கும் உள்ளது. இந்தியாவை பற்றிய மல்பா தஹானின் பிரமிப்பும் இந்திய கணிதம் குறித்த தகவல்களும் வியப்பூட்டுகின்றன. அதன் காரணமாகவே இந்த நாவல் திரும்ப படிக்க தூண்டுகிறது.

பள்ளிப் பிள்ளைகள் அவசியம் இதை வாசிக்க வேண்டும். பெரியவர்கள் இதை வாசித்தாவது கணிதம் குறித்த பிரக்ஞையை ருசியை அடைய வேண்டும்.

நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெகுசிறப்பாக உள்ளது. இதன் ஆங்கில வடிவத்தை சமீபத்தில் வாங்கி படித்து பார்த்தேன். அதை விட தமிழில் வாசிப்பது அதிக நெருக்கம் தருவதாகவே உள்ளது. குறிப்பாக கணித சொற்றொடர்கள். வாக்கிய அமைப்புகள் யாவும் சிறப்பாக பயன்படுத்தபட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர் கயல்விழி நிறைய பயன்படுத்தாமல் போன நல்ல தமிழ் சொற்களை தனது மொழியாக்கத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கதை சொல்லும் சுவாரஸ்யம் குறைந்துபோகாமல் மொழியாக்கம் செய்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.

ஒரு தேசம் வளரச்சி அடைய வேண்டும் என்றால் மக்கள் உயர்ந்த கணித திறன் பெற்றிருக்க வேண்டும், கணித திறனை வளர்த்து கொள்ளவேண்டும் என்று நாவலில் ஒரு நிகழ்வு விவரிக்கபடுகிறது. நேர்மை என்பதை புரிந்து கொள்ளாதவன் நேர்கோடு என்பதை புரிந்து கொள்ள முடியாது என்றும் ஒரு வரியும் நாவலில் வருகிறது. இப்படியான மனஎழுச்சி தரும் உரைநடைக்காகவே இதை மறுபடி மறுபடி படிக்கலாம்.

(நன்றி: எஸ். ராமகிருஷ்ணன்)

 

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp