மனித குலத்தைப் பட்டினியில் இருந்து மீட்கும் வழிகாட்டி நூல்

மனித குலத்தைப் பட்டினியில் இருந்து மீட்கும் வழிகாட்டி நூல்

நான் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன், தமிழ் (சிறிதும்) தெரியாத தமிழர் ஒருவர் அவருடைய பணி நிமித்தமாக என்னைச் சந்தித்தார். அவர் மேலை நாட்டில் வசிக்கும் ஒரு பன்னாட்டு முதலாளி. ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோதான் அவருடைய தொழில் நிமித்தமாக இந்தியாவுக்கு வருவார். என்னுடைய அலுவலகச் செயல்பாடு அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்னும் ஓராண்டில் நான் பணி நிறைவு செய்து ஓய்வு பெறப்போகிறேன் என்று தெரிந்து கொண்டவுடன் ஓய்வு பெற்ற பிறகு அவருடைய நிறுவனத்தில் வேலைக்குச் சேருமாறு அழைப்பு விடுத்தார்.

ஓய்வு காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை, செய்யுள், கட்டுரைகளை எழுத வேண்டும் என்பது என்னுடைய எதிர்காலத் திட்டமாக இருந்தது. (இப்பொழுது அப்படியேதான் செய்து வருகிறேன்.) ஓய்வு காலத்தில் வேலை வாய்ப்புக்கான அழைப்பைக் கேட்டவுடன் நான் சிறிது நேரம் அமைதியானேன். நான் அமைதியாக இருப்பதைக் கண்ட அவர் உலகில் நான் விரும்பும் எந்த நாட்டிலும் வேலை போட்டுத் தர ஆயத்தமாக இருப்பதாகக் கூறினார். வெளிநாட்டுக்குப் போக விருப்பம் இல்லை என்றால் சென்னையிலேயே வேலை போட்டுத் தர முடியும் என்றும் கூறினார்.

என் அமைதியை உதறிவிட்டு, நான் ஒரு பெரியாரியவாதி என்றும் ஓய்வு காலத்தில் பெரியாரைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்கும் பணியைச் செய்ய உத்தேசித்து இருப்பதாகவும் கூறினேன். நான் பெரியாரியவாதி என்று தெரிந்ததும் அவருடைய (அவர் பார்ப்பனர் அல்லர்; கிறித்துவர்) முகம் சுருங்கியது. ஆனால் சில நொடிகளுக்குள்ளேயே சுதாரித்துக் கொண்டு, அதனால் பரவாயில்லை என்றும் அவருடைய நிறுவனத்தில் பணி செய்து கொண்டே என்னுடைய சொந்த வேலைகளையும் பார்க்கலாம் என்றும் கூறினார்.

உடனே நான் பெரியாரியவாதி மட்டும் அல்லன் என்றும் பொதுவுடைமைத் தத்துவத்தின்பால் கவரப்பட்டவன் என்றும் கூறினேன். இதைக் கேட்டவுடன் அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். சிறிது நேர அமைதிக்குப் பின் தன்னால் இந்தச் செய்தியைச் செரிக்க முடியவில்லை என்றார். பின் நான் பொதுவுடைமையாளனாக இருப்பதற்கான காரணத்தைக் கேட்டார்.

இதை விளக்கவேண்டும் என்றால் ஒரு பேருரையே தேவைப்படும். அலுவலக நேரத்தில் அதற்கெல்லாம் நேரம் இருக்காது. ஆகவே மிகச் சுருக்கமாக, உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்றும், அதைவிட அதிகமான மக்கள் போதுமான ஊட்டச்சத்து உள்ள உணவைப் பெறுவதில்லை என்றும் கூறினேன். இதைப் போல் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மிகப் பல உள்ளன என்றும் அவற்றுக்கெல்லாம் ஒப்புரவு அமைப்பில்தான் (Sociliat System) தீர்வு காண முடியும் என்றும் கூறினேன்.

உடனே அவர் “உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவைப்படும் உணவை விட அதிக அளவு உற்பத்தி ஆகிறது” என்று கூறினார். அவற்றை முறைப்படி விநியோகித்தால் அனைவருக்கும் உணவு அளிக்க முடியும்” என்றும் “உணவு உற்பத்தியை அதிகரிக்கத் தேவை இல்லை” என்றும் கூறினார்.

"போதுமான அளவுக்கு மேல் உணவு தானியங்கள் உற்பத்தியான போதும் அவை ஏன் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரவில்லை?" என்று கேட்டேன்.

"யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை” என்று அவர் கூறினார்.

"ஏன் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை” என்று கேட்டேன்.

அதற்கு அவர் தனக்குத் தெரியவில்லை என்றும், மற்ற மனிதர்களைப் பற்றி அக்கறை கொள்ளும் பண்பு மனிதர்களிடம் இல்லாமல் இருப்பது காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

உடனே நான் அவர் செய்யும் தொழில்களை எல்லாம் குறிப்பிட்டு, அதன் மூலம் உற்பத்தியாகும் திண் பொருள்களையும் மென் பொருள்களையும் குறிப்பிட்டு, அவற்றை எல்லாம் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் தன்னுடைய ஆர்வம், தன்னுடைய திறமை என்று சுற்றி வளைத்து விடை கூற, நான் அவரை மேலும் மேலும் வினாக்களைத் தொடுத்து, இலாபம் கிடைப்பதால்தான் அத்தொழில்களைச் செய்வதாக அவர் வாயில் இருந்தே வரவழைத்தேன்.

பின், மக்களின் தேவைக்கும் அதிகமாக விளைந்த உணவு தானியங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையில் முதலீடு செய்தால் இலாபம் கிடைக்காததால், அல்லது குறைந்த இலாபமே கிடைப்பதால்தான் அத்தொழிலில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பதை அவராகவே ஒப்புக் கொள்ள நேர்ந்தது. அப்படி என்றால் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்காமல் போவதற்கு மனிதர்களின் அடிப்படைப் பண்பு காரணம் அல்ல என்பதையும் சமூக அமைப்புதான் காரணம் என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர் “உங்கள் கொள்கையை என்னிடம் திணிக்கப் பார்க்க வேண்டாம்” என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு விடைபெற்றுக் கொண்டார்.

அன்று அவரிடம் பேசும்போது உணவுப் பிரச்சினை பற்றிய என் அறிவு உணவு விநியோகத்தில் கோளாறு; அந்தக் கோளாறுக்குக் காரணம் முதலாளித்துவ அமைப்பு என்ற அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் இந்நூலைப் படிக்கும் போது அதன் ஆழமும் விரிவும் புரிந்தது. புரிந்தது என்பதை விடப் புரிந்து கொண்டு இருக்கிறது என்பதே சரியாக இருக்கும். ஏனெனில், இந்நூலில் உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் பற்றிய செய்திகள் அனைத்தும் ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் நேரம் தேவைப்படுகிறது.

பசுமைப் புரட்சியின் உருவாக்கம் பற்றிய செய்தி உண்மையில் திடுக்கிட வைக்கிறது. பசுமைப் புரட்சி என்ற எண்ணம் உருவாகும் முன்னரே உலக மக்கள் அனைவருக்கும் தேவையான அளவைவிட அதிகமான தானியங்கள் விளைந்து கொண்டுதான் இருந்தன. இரண்டாம் உலகப் போருக்காக அமைக்கப்பட்ட வேதிப்பொருள் தொழிற்சாலைகளை, போர் முடிந்த பின் என்ன செய்வது என்று யோசித்த போது, அதில் செய்யப்பட்ட முதலீடு இலாபம் ஈட்டாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக, அதை வேளாண்மையில் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் உதித்திருக்கிறது. அதைப் பசுமைப் புரட்சி என்று அழைத்திருக்கிறார்கள். இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்பதைப் பற்றிய எந்தவிதமான கவலையும்படாமல், பட்டினி கிடக்கும் மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் போல் நடித்து அவர்களைக் காட்டி, தானிய உற்பத்தியை அதிகரித்து அவர்களுடைய பட்டினியைப் போக்குவதற்குத்தான் பசுமைப் புரட்சி என்று கதை சொல்லியிருக்கிறார்கள். இது மனித குலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள், அதைத் தொடர்பவர்கள் பட்டம் பதவிகளைப் பெற்று மிகவும் சொகுசாக வாழ்கிறார்கள்.

பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்திய போது, அது தவறானது என்றும், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் என்றும் கூறியவர்களை (காந்தி மற்றும் பொதுவுடைமையாளர்களை) உதாசீனம் செய்துவிட்டுத் தங்கள் வழியே தொடர்ந்தவர்கள், இன்று நடந்துள்ள கேடான தாக்கங்களைக் கண்ட பிறகும் மனம் வருந்துவது போலத் தெரியவில்லை. இச்செய்திகள் முதலாளித்துவ அறிஞர்கள் அளித்துள்ள புள்ளி விவரங்களைக் கொண்டே இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்காத, ஒவ்வாத ஆற்றலை அளிக்கும் உணவு வகைகள் பெருகி வருவது ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல; வளர்ப்பு மிருகங்களுக்கும் அதே கதிதான். அதன் தொடர் விளைவாக அவற்றின் இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்குக் கூடுதல் கெடுதல்கள் விளைகின்றன. இந்நூலில் கூறப்பட்டுள்ள இச்செய்திகளை இந்நூலாசிரியர் கொடுத்திருக்கும் ஆதாரங்களில் இருந்து மட்டுமல்ல; நம் சொந்த அனுபவத்தில் இருந்தும் தெரிந்துகொள்ள முடியும். இயற்கை உணவுகளை உண்டு கொண்டு இருந்த காலத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு போன்ற நோய்கள் மிகச் சிலருக்கே இருந்தன. செயற்கை உரங்களினால் விளைந்த உணவை உண்டு கொண்டு இருக்கும் இக்காலத்தில் மிகப் பலரை, அதுவும் இளம் வயதிலேயே பாதிக்கின்றன. மேலும், இயற்கை உணவுகள் (இயற்கை உணவுகளை உண்ட மிருகங்களின் இறைச்சி உட்பட) உண்பதற்குச் சுவையாக இருந்தன. இப்பொழுது அவை சுவையாக இல்லை. இளைய தலைமுறையினர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால் முதியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இச்செய்தி இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

இவை மட்டுமா? பசுமைப் புரட்சியினால் வேளாண்மைக்கு நன்மை செய்யும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டு இருப்பதும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இது தடையின்றித் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தானிய உற்பத்தி பாதிக்கப்படும் என்பதை மனித இனம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், இந்தப் பசுமைப் புரட்சி தானியங்களின் / உணவுப் பொருள்களின் தரத்தைக் குறைத்து, மனிதர்களிடையே நோய்களைப் பரப்புவது அல்லாமல், உழவர்களது வாழ்நிலையை மோசமாக்கி மிகப் பலரைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுவதும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வளவு அழிவு வேலைகளையும் செய்து விட்டு, அதைப் பற்றிச் சிறிதும் கவலையோ, வெட்கமோ கொள்ளாமல், இரண்டாம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் மரபு மாற்றப் பயிர் என்ற மலட்டு வேளாண்முறையை முதலாளித்துவ அறிஞர்கள் அறிமுகப்படுத்த முனைந்துள்ளனர். இம்மலட்டு வேளாண்முறையினால் என்னென்ன கேடுகள் விளையும் என்பதைப் பற்றி அரைகுறையாக ஆராய்ச்சி செய்துவிட்டு, இதனால் விளைச்சல் அதிகரிக்கும் என்று மட்டும் கூறி இன்னொரு பேரழிவைச் செயல்படுத்த அவர்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றனர். இவை யாவற்றுக்கும் நம்முடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் கட்சி வேறுபாடு இன்றி, போட்டி போட்டுக்கொண்டு துணைபோகின்றனர். இந்நிலையில் இருந்து மக்களை மீட்டு அனைவரும் நன்றாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? நூலாசிரியர் அருமையாக விடை பகர்கின்றார்.

பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து வேதியுரங்களின் அடிப்படையிலான பசுமைப் புரட்சியையும், மலட்டு வேளாண்மையையும் எதிர்க்க வேண்டும். மேல்தட்டு மக்களில் மாந்த நேயம் உள்ளவர்கள் இப்போராட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இணைய வேண்டும். அவ்வாறு செய்தால் மக்களின் உணவுப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதை இந்நூலாசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

அது மட்டும் அல்ல; இவ்வாறு செய்தால் பசுமைப் புரட்சி ஏற்படுத்தி வைத்திருக்கும் மண் வளச் சீர்கேடுகளையும், பிற சூழ்நிலைக் கேடுகளையும், காலப் போக்கில் குணப்படுத்த முடியும் என்பதையும் விளக்கியிருக்கிறார்.

மேலும், இன்றைய உலகில் உணவுப் பிரச்சினை பற்றிய அனைத்துக் கூறுகளையும் அலசி ஆராய்ந்து, அவை அனைத்துக்கும் பசுமைப் புரட்சியே காரணம் என்பதையும், மரபு மாற்று வேளாண்மை அவற்றை மேலும் மோசமாக்கத் துடித்துக் கொண்டு இருக்கிறது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறார்.

அதுவும் ஆற்றொழுக்கு நடையில் அவர் விளக்கியிருக்கும் விதம், நூலைக் கீழே வைக்கத் தோன்றாமல் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இந்நூலின் முதற் பதிப்பு சூன் 2017இல் வெளிவந்துள்ளது. இதை முற்பேக்கு நூல்களை வெளியிடுவதை நேக்கமாகக் கொண்ட விடியல் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். இந்நூலின் விலை ரூ.450/.ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 556 பக்கங்கள் கொண்ட இந்நூலின் பெருண்மையைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது இப்பதிப்பகத்தார் வணிக உத்தியை மனதில் கொள்ளாமல் மக்களுக்கு நல்ல கருத்துகள் போய்ச் சேர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்நூலைப் படைக்க இதன் ஆசிரியர் பரிதி எடுத்துள்ள சிரமங்களை வேறு இலாபம் தரும் தொழில்களில் எடுத்து இருந்தால் கோடிக் கணக்கில் பணத்தை ஈட்டி இருப்பார். ஆனால் மாந்த இனத்தின் மீதும், இயற்கை வேளாண்மையின் மீதும் உள்ள பற்றினால் மிகப் பெரும் அளவு சிரமத்தை ஏற்றுக் கொண்டு மிகச் சிறந்த முறையில் மட்டும் அல்லாமல், மிக எளிதாகப் புரிந்து கெள்ளும் முறையிலும் இந்நூலைப் படைத்திருக்கிறார்.

இந்நூலில் உள்ள செய்திகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம் தேவைப்படுபவை. ஆகவே இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர் களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரை செய்தால் அவர்கள் மனித குலத்துக்குச் சேவை செய்தவர்கள் ஆவார்கள்.

(நன்றி: கீற்று)

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp