காந்தியும் லோகியாவும்

காந்தியும் லோகியாவும்

லோகியா அவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் படித்தபோது கற்றுக்கொண்டது அது.
காந்தி சொன்னார் ‘நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடவேண்டும்’. லோகியா ‘என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார். ‘எனக்கு அப்படி பேதங்கள் ஏதுமில்லை. நான் கண்டிப்பாகத் தலையிடுவேன்.நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடவேண்டும். அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது’.லோகியா காந்தியுடன் வாதாடவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளவுமில்லை. காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

[லோகியா]
கடைசியாக காந்தி இன்னொரு காரணத்தைச் சொன்னார். ’நீங்கள் சிகரெட் பிடிப்பது எளியமக்களிடமிருந்து உங்களை அன்னியப்படுத்தும். உங்களை அவர்கள் மேட்டிமைவாதியாக நினைக்க வழிவகுக்கும்’ அந்தக் கோணத்தில் லோகியா யோசித்திருக்கவில்லை. அது உண்மை என்று அவர் உணர்ந்தார். சிகரெட் ஒரு குறியீடென்ற நிலையில் அப்படித்தான் பொருள் கொள்ளப்படும். சிகரெட்டை விட்டுவிட்டார்.

காந்தியையும் லோகியாவையும் புரிந்துகொள்வதற்கான அழகிய நிகழ்ச்சி இது. காந்தி அகமும் புறமும் வேறுவேறற்றவர். தான் வேறு சமூகம் வேறு என நினைக்காதவர். தன் உடல்பற்றியும் வெளியுலகம் பற்றியும் அவர் கொண்டிருந்த அக்கறை சமமானது. ஆனால் லோகியா தன் அகத்தைத் தன் சொந்த விஷயமாகக் கண்டவர், அதை ஒரு பொருட்டாக நினைக்காதவர். தன் உடலைப் புறக்கணித்தவர், தான் வாழும் உலகைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டவர். இருவேறு வாழ்க்கை நோக்குகள்.

அதைவிட முக்கியமாக ஒன்றுண்டு. காந்திக்கு மக்களைப்பற்றி, அவர்களின் மனம் செயல்படும் நுண்ணிய வழிகளைப்பற்றித் தெரிந்திருந்தது. லோகியாவுக்குத் தெரியவே இல்லை. அவர் சிந்தனையாளர் மட்டுமே. ஒருபோதும் அவரால் மக்களுடன் உறவாட முடியவில்லை. அந்த எளிய மக்களுக்காகவே அவர் சிந்தித்தார், அவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆனால் அவர்களிடமிருந்து தொலைவில் இருந்தார். அவர்கள் அவரைப் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ இல்லை.

காந்தி இருக்கும்வரை லோகியா காங்கிரஸில் இருந்த சோஷலிஸ்டு குழுவின் மையக்குரலாக இருந்தார். காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு காந்தியுடன் ஓயாது விவாதித்துக்கொண்டு செயல்பட்டார். காந்தியின் மறைவுக்குப்பின் சோஷலிஸ்டுகள் காங்கிரஸில் இருந்து விலகிச்சென்று தனி இயக்கமாக ஆனார்கள். காங்கிரஸின் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டார்கள். அதற்கான சூசகமாகவே காந்தியிடம் லோகியா முரண்படும் இடத்தைப் பார்க்கிறேன்.

ஆனால் இந்தியாவில் சோஷலிச இயக்கம் எங்குமே உண்மையான அரசியல் வலிமையைப் பெறவில்லை. அதன் தலைவர்களை மக்கள் அறியக்கூட இல்லை. பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் அரசியல் விடுத்த சில வெற்றிடங்களை நிரப்புவதாக மட்டுமே அதன் அரசியல் பங்களிப்பு இருந்தது. அதற்கான காரணத்தையும் அந்த நிகழ்ச்சியில் உருவகமாகக் காண்கிறேன்.

ராம் மனோகர் லோகியா இந்திய சோஷலிஸ்டு இயக்கத்தின் முன்னோடி. அதன் முதன்மை முகமும் அவரே. இந்திய சோஷலிச இயக்கத்தை ஐரோப்பியபாணி மார்க்ஸியத்துக்கும் காந்தியத்துக்கும் நடுவே நிகழ்ந்த உரையாடலின் விளைவு என்று சொல்லலாம். வன்முறை இல்லாமல் பாராளுமன்ற ஜனநாயகம் வழியாக சோஷலிச அமைப்பொன்றை நோக்கி நகர்வதற்கான அரசியலை அவர்கள் உருவாக்கினார்கள்.

சுதந்திரம் பெற்ற தொடக்க காலகட்டத்தில் இந்திய அரசியலின் ஆளும்தரப்பும் எதிர்த் தரப்பும் இடதுசாரித்தன்மையைக்கொண்டதாக அமைந்தமைக்கு எதிர்க் கட்சியாகச் செயல்பட்ட சோஷலிஸ்டுகளே பெரும்பாலும் காரணம் என்று சொல்லலாம். வலதுசாரிக் குரல் கிட்டத்தட்ட இல்லாத நிலை இங்கே உருவானதும் அதனால்தான். பின்னர் சோஷலிஸ்டுகளின் இடம் இந்திய அரசியலில் இல்லாமலானபோதுதான் வலதுசாரி அரசியல் மேலெழுந்தது.

இந்தியாவில் ஓங்கியிருந்த இடதுசாரி அணுகுமுறைதான் இந்தியச்சூழலில் ஆரம்பத்திலேயே அடிப்படை மக்கள்நலத்திட்டங்கள் சார்ந்த அணுகுமுறையை உருவாக்கியது. கல்வி, போக்குவரத்து, தொழிலாளர் நலம், சமூகநலம் சார்ந்த அக்கறைகள் கொண்ட அரசுகள் இங்கே உருவாயின. அவற்றின் முக்கியத்துவம் என்ன என்று நம்முடன் சுதந்திரம் பெற்று இடதுசாரி நோக்கு இல்லாத மதவாத, இனவாத வலதுசாரி அரசுகளை உருவாக்கிக்கொண்ட பாகிஸ்தான், பர்மா, மலேசியா,இந்தோனேசியா போன்றநாடுகளின் நிலையைப் பார்க்கையில் உணரலாம்.

இடதுசாரி அரசியலே இங்கே வலுவான தொழிற்சங்கங்களை உருவாக்கியது. இன்றும் இந்தியாவின் முக்கியமான மக்கள்சக்திகளாக அவை நீடிக்கின்றன. இன்றைய வலதுசாரிப் பொருளியல் அலையின் பெரும் ஆபத்துகள் பலவற்றில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது இந்திய அரசியலில் வலுவான எதிர்த்தரப்பாக நீடிக்கும் இடதுசாரிக்குரலே என்பது ஓர் உண்மை. இன்று இந்தியாவின் சுதந்திரப்பொருளியலில் அடித்தள மக்களுக்கான உரிமைக்குரலாக அது நீடிக்கிறது.

நேரு உருவாக்கிய ’அரசாங்க சோஷலிசம்’ அதிகாரிகளிடம் கடிவாளங்களைக் கொடுத்து ’கோட்டா -பர்மிட்- லைசன்ஸ்’ அரசை உருவாக்கி இந்தியத் தொழில்வளர்ச்சியைத் தேங்கவைத்தது என்பது இன்னொரு பக்க உண்மை என்றாலும் இடதுசாரி அரசியலின் பங்களிப்பு இந்தியாவின் முக்கியமான ஆக்கபூர்வ அம்சம் என்றே சொல்லலாம். அதில் சோஷலிஸ்டுகளின் இடம் முக்கியமானது.

ராம் மனோகர் லோகியா பற்றித் தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான நூல்,விடியல் பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘வாழ்வும் போராட்டமும்- ராம் மனோகர் லோகியா’ . இந்நூல் முன்னர் கோவை சமுதாய பதிப்பக வெளியீடாக வந்த மூன்று நூல்களின் தொகுதி. மு. ரங்கநாதன் எழுதிய லோகியாவின் வாழ்க்கை வரலாறு, லோகியாவின் கட்டுரைகளின் தொகுதியாகிய ’சரித்திர சக்கரம்’ . காந்தியையும் மார்க்ஸையும் விரிவாக ஆராயும் ’மார்க்ஸுக்குப்பின் பொருளாதாரம்’.

லோகியா உத்தரப்பிரதேசத்தில் அக்பர்பூரில் ஹீராலால் லோகியாவுக்கு மகனாக 1910 ஆம் வருடம் மார்ச் 23ல் பிறந்தார். லோகியாவின் அப்பா ஹீராலால் லோகியாவைப்போலவே அதிதீவிரமான அரசியல் செயல்பாட்டாளர். காந்தியப் போரில் ஈடுபட்டு அப்போராட்டத்துக்குச் செல்லும் வழியில் மரணமடைந்தவர். அப்போது லோகியா காந்தியப்போரில் சிறையில் இருந்தார்

மும்பையிலும் காசியிலும் கல்விபயின்ற லோகியா எப்போதுமே மிகச்சிறந்த மாணவராக இருந்தார். 1926 ல் தன் பதினாறாம் வயதில் கௌகாத்தி காங்கிரஸ் மாநாட்டைப் பார்க்கச்சென்ற லோகியாவைப் பஞ்சாபிலிருந்து வந்த காங்கிரஸார் தங்கள் குழுவில் சேர்த்துப் பிரதிநிதியாக ஆக்கினார்கள். அவரது அரசியல்வாழ்க்கை அங்கே ஆரம்பித்தது.

1929ல் லோகியா மேல்படிப்புக்காக ஜெர்மனி சென்றார். அந்த வாழ்க்கை அவருக்கு உலக அரசியல் பற்றிய தெளிவை உருவாக்கியது. அவர் அங்கேதான் சோஷலிசத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டார். உலக சோஷலிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். முனைவர் பட்டம் முடித்துத் தன் 23 ஆவது வயதில் இந்தியா திரும்பினார்.

1933 ல் லோகியா காந்தியைச் சந்தித்தார். ஜமுனாலால் பஜாஜ் காந்தியிடம் லோகியாவைக் கூட்டிச்சென்று அறிமுகம் செய்துவைத்தார். அந்த நட்பு காந்தியின் மறைவு வரை நீடித்தது. ஆனால் லோகியா காந்தியை வழிபடவில்லை, பின் தொடரவுமில்லை. அவர் காந்தியிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார், இடைவெளியில்லாமல் காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தார். காந்தியையும் மார்க்ஸையும் சந்திக்கச்செய்ய முயன்றார் லோகியா.

இருபத்துமூன்று வயதான இளைஞராகிய லோகியாவுடன் காந்தி கொண்டிருந்த உறவைப் புரிந்துகொள்வது கடினம். அவர் லோகியாவைத் தன் மகனைப்போல நினைத்தார். மாணவரைப் போல அவருக்குக் கற்பித்தார். அதேசமயம் தோழனைப்போல நடத்தினார். அவரிடமிருந்து ஒரு மாணவராகக் கற்றுக்கொண்டும் இருந்தார்.

காந்தியைச் சந்தித்த அதே வருடம் மே 17 அன்று பாட்னாவில் ஆச்சாரிய நரேந்திரதேவா தலைமையில் அதிகாரபூர்வமாக ஒரு இந்திய சோஷலிச கட்சியை நிறுவ முடிவெடுத்தது. அதேவருடம் அக்டோபரில் மும்பையில் கட்சியின் அமைப்பு மாநாடு கூட்டப்பட்டது. சோஷலிஸ்டுகள் காங்கிரஸுக்குள்ளேயே ஒரு தனி கருத்துக்குழுவாகச் செயல்பட முடிவெடுத்தார்கள். லோகியாவின் வாழ்நாள் பணி அன்று ஆரம்பித்தது எனலாம்.

லோகியாவின் அரசியல் வாழ்க்கையை இந்நூல் விரிவாகவே விவரிக்கிறது. கோவா விடுதலைப்போராட்டம் முதலிய நேரடிப்போராட்டங்கள். அவற்றில் லோகியா காட்டிய அஞ்சாமையும் உறுதியும் அவரை ஒரு பெரும் தலைவராக நமக்குக் காட்டுகின்றன. இன்னொரு முகம் அவர் காங்கிரஸுக்குள் சோஷலிஸ்டுகளின் குரலாக ஒலித்தது. லோகியா சலிக்காமல் ஏதாதிபத்தியத்துக்கும் இந்தியப் பெருமுதலாளித்துவத்துக்கும் எதிராகச் செயல்பட்டார்.

மூன்றாவது சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸின் எதிர்க்கட்சியாக நேருவை எதிர்த்துச் செயல்பட்டமை. லோகியா நேருவின் சோஷலிசம் வெறும் அரசாங்கசீர்திருத்தம் மட்டுமே என நினைத்தார். அது அதிகாரிகளை மட்டுமே வலுப்படுத்துகிறது என்றார். அவர் முன்வைத்த சோஷலிசம் கிராமியப்பொருளியலை முக்கியமாகக் கருத்தில்கொண்டதாக இருந்தது. நேருவின் பொருளியல் தொடர்ந்து விவசாயிகளையும் அடித்தள மக்களையும் சுரண்டி நகரங்களை உருவாக்கக்கூடியதாக இருப்பதைச் சுட்டிக்காட்டியபடியே இருந்தார் லோகியா.

ரங்கநாதன் எழுதிய வரலாற்றில் என்னைக் கவர்ந்த முக்கியமான விஷயம் காந்திமீது லோகியா செலுத்திய செல்வாக்கு. பல முக்கியமான சர்வதேச விஷயங்களில் காந்தியின் கோணத்தைத் தலைகீழாகத் திருப்பியிருக்கிறார் லோகியா. காந்தி அவர் எழுதிய பல அறிக்கைகளை லோகியா முற்றாகக் கிழித்தெறிய அனுமதித்திருக்கிறார். அவரது பல அறிக்கைகளின் முன்வடிவை லோகியாவே எழுதவிட்டிருக்கிறார். காந்தியை லோகியா கிராமிய சோஷலிசம் என்ற கருத்தியலை நோக்கித் தள்ளிக்கொண்டே செல்வதை காண்கிறோம். ஒருவேளை சுதந்திரத்துக்குப்பின் காந்தி பத்தாண்டுக்காலம் வாழ்ந்திருந்தாரென்றால் அவர் லோகியாவின் முகாமின் பெரும் சக்தியாக இருந்திருப்பாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அதைப்போல லோகியா காந்தியால் தீவிரமாக மாற்றமடைந்துகொண்டே இருப்பதை இந்நூல் காட்டுகிறது. ஐரோப்பாவில் வன்முறைசார்ந்த அரசியலைக் கற்றுத்திரும்பிய லோகியா வன்முறை அரசியலை முழுமையாகக் கைவிடுகிறார். நூற்றுக்கணக்கான சமூக ஆற்றல்கள் அதிகாரத்துக்காக மோதிக்கொள்ளும் ஒரு பெருவெளியே அரசியல் என்றும் அங்கே வன்முறையற்ற திறந்த உரையாடலே ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் புரிந்துகொள்கிறார்.

காந்தியின் கடைசிக்காலத்தில் லோகியாதான் அவருடன் இருக்கிறார். வன்முறை கட்டவிழ்ந்த கல்கத்தா தெருக்களில் லோகியா காந்தியுடன் உயிரைத் துச்சமாக நினைத்து இறங்கிச்சென்று அமைதியை உருவாக்க முயல்கிறார். காந்தியின் பணி இரண்டாகப் பிளந்த வானத்தை ஒட்டவைக்க நினைப்பது போல இருந்தது என நினைக்கும் லோகியா மெல்லமெல்ல அந்த மருந்து வேலைசெய்வதைக் காண்கிறார்.

கல்கத்தாவில் வன்முறையாளர்களிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப்பெற காந்தி காட்டிய வழியில் லோகியா செய்யும் துணிச்சலும் தியாகமும் நிறைந்த முயற்சி ஒரு காவியநிகழ்வு போலிருக்கிறது. வன்முறையாளர்கள் நடுவே தன்னந்தனியாகச் செல்கிறார், அவர்களிடம் மனச்சாட்சியின் குரலில் பேசுகிறார். அவர்களை வென்று ஆயுதங்களைப் பெற்று கொண்டுவந்து காந்தி தங்கியிருந்த இடிந்த மாளிகையில் குவித்துவிட்டுத் தூங்கச்செல்லும் அந்த இரவு லோகியாவை இன்னொரு காந்தியாக நமக்குக் காட்டுகிறது.
1948ல் காந்தி லோகியாவைக் கூப்பிட்டனுப்பினார். காங்கிரஸ் காந்தியின் கையில் இருந்து நழுவிக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. ‘நீங்கள் கட்டாயம் வாருங்கள், காங்கிரஸ் பற்றியும் சோஷலிஸ்டுக் கட்சிபற்றியும் நான் பேசவேண்டியிருக்கிறது’ என்று காந்தி சொன்னார். அதற்கு மறுநாள் ஜனவரி 30 அன்று லோகியா காந்தியைச் சந்திக்க மும்பையில் இருந்து கிளம்பினார். செல்லும்போதே காந்தி கொல்லப்பட்ட தகவல் அவருக்குக் கிடைக்கிறது.

1967இல் லோகியா மறைந்தார். நேரு யுகம் என அழைக்கப்பட்ட காலகட்டம் ஒருவகையில் லோகியா யுகமும் கூட என இந்நூல் வாதிடுகிறது. லோகியாவை இந்திய நவீன அரசியல் சிந்தனையின் மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு என சித்தரிக்கிறது.

நூலின் இரண்டாம்பகுதியில் எஸ்.சங்கரன் பி.வி சுப்ரமணியம் இருவரும் மொழியாக்கம் செய்த சரித்திர சக்கரம் என்ற நூல் உள்ளது. இந்நூலில் லோகியா விவாதிப்பவை சோவியத் பாணி மார்க்ஸியம் தோல்வியடைந்து மார்க்ஸியத்துக்கு ஜனநாயக வடிவம் ஒன்று இருக்கமுடியுமா என்ற வினா எழுந்துள்ள இந்தக்காலகட்டத்தில் மிகமிக முக்கியமானவை. இங்கே மார்க்ஸிய செயல்திட்டத்தை நிராகரிக்கும் லோகியா மார்க்ஸிய வரலாற்றுவாதத்தை விரிவாக உலக அரசியலுக்கும் உலகப்பொருளியலுக்கும் பொருத்திப்பார்ப்பதைக் காணலாம்.

மூன்றாவது பகுதி பி.வி.சுப்ரமணியம் மொழியாக்கத்தில் மார்க்ஸுக்குப்பின் பொருளாதாரம் என்ற தலைப்பில் லோகியா எழுதிய கட்டுரைகள். காந்தியப்பொருளியலில் உள்ள பல அம்சங்களை லோகியா ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாகக் காந்தியின் தர்மகர்த்தா கொள்கை, காந்தியின் பாரம்பரியவாதம் போன்றவற்றை. ஆனால் கிராமியப்பொருளியலை மேம்படுத்தும் ஒரு சோஷலிச அரசியலுக்காக அவர் வாதாடுகிறார். ஒருங்கிணைந்த உற்பத்தி பெருந்தொழில் ஆகியவற்றுக்கு மாற்றாக சிறிய அளவில் வட்டார ரீதியாக உருவாகி வரும் கிராமிய உற்பத்திப் பொருளியலை முன்வைக்கிறார்.

லோகியாவையும் அவரது சிந்தனைகளையும் விரிவாக அறிந்துகொள்ள உதவியான அரிய நூல் இது.

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp