மஹா நதி – 'நீலகண்டப் பறவையைத் தேடி' – வாசிப்பனுபவம்

மஹா நதி – 'நீலகண்டப் பறவையைத் தேடி' – வாசிப்பனுபவம்

The English Patient என்ற ஆஸ்கர் விருதுகள் பெற்ற திரைப்படத்தை வாசகர்கள் பார்த்திருக்கலாம். அல்லது திரைப்படத்தின் மூல புத்தகத்தை வாசித்திருக்கலாம். இந்தத் திரைப்படத்திற்கும் “நீலகண்ட பறவையைத் தேடி” நூலிற்கும் கொஞ்சத்திற்கு கொஞ்சமே சம்பந்தம் உண்டு – கதைக்கள காலம் – இரண்டாம் உலகப்போர் கிட்டதட்ட முடிவுறும் கட்டம் / 1940கள்.

தோற்றுப்போய், ஜெர்மானியர்கள் விட்டுச்சென்ற இத்தாலிதான் கதைக்களம். கடுமையான தீக்காயங்கள் கொண்ட நோயாளியைப் பார்த்துக்கொள்வதற்காக ஹனா என்ற கனடிய நர்ஸ், நோயாளியுடன் ஒரு இடிந்த சர்ச்சில் தங்கிவிடுகிறாள். அவளுக்குத் தரையடிக் குண்டுகளைச் செயலிழக்கவைக்கும் படையில் பணிபுரியும் ஒரு சீக்கியனுடன் மெல்லிய காதல் அறிமுகம்.

ஓர் நாள் அவளை கிப், சீக்கிய காதலன், தனது பைக்கில் கூட்டிக்கொண்டு ஒரு கதீட்ரலுக்குப் போகிறான். இருண்ட, மிக உயரமான சுவர்கள் கொண்ட ஓர் அறையில் அவள் கையில் பந்தம் போன்ற ஒரு எரியும் மெழுகுவர்த்தியைக் (flare) கொடுத்துவிட்டு அவள் இடுப்பைச் சுற்றி கயிறு கட்டி, அதனை விட்டத்தில் தொங்கவிட்டு மறுமுனையை கிப் இழுக்க, அவள் சர்ரென மேலே இருண்ட அறையின் கூரைக்கு உயர்கிறாள். உற்சாகக் கூவலுடன் மெழுகுவர்த்தியை சுவரின் அருகே ஹனா காட்ட, அதுவரை இருளில் இருந்த அறைச் சுவர் ஓவியங்கள் உயிர் பெறுகின்றன. சிரித்த, திகைத்த பார்வையுடன் சுவர் முழுக்கப் பரவியிருக்கும் ஓவியங்கள் ஹனாவின் ஒளிக்காகவே இத்தனை காலம் காத்திருந்தது போல் உயிர் பெறுகின்றன.

“நீலகண்ட பறவையைத் தேடி” நாவலை வாசித்தபோது எனக்கும் இப்படித்தான் இருந்தது. எப்போதோ திரு.அதீன் பந்தோத்பாத்யாயா எழுதிய சித்திரங்கள், சு. கிருஷ்ணமூர்த்தி பற்பல வருடங்களுக்கு முன் தமிழில் மொழிபெயர்த்த, ஆயிரக்கணக்கான எழுத்துக்களால் ஆன (ஆக்கப்பட்ட) சித்திரங்கள், படிக்கப் படிக்க இருளில் இருந்து வாசகனுக்காக உயிர் பெறுகின்றன. அபார அனுபவம் – திரைச்சித்திரங்களும் எழுத்துச் சித்திரங்களும்.

ஏராளமான ஆறுகளும் ஏரிகளும், நீர்நிலைகளும் கொண்ட பிரிவினை இன்னமும் அடையாத கிழக்கு வங்காளம். ஆனால் அதற்கான முஸ்தீபுகள் தெரிய ஆரம்பிக்கும் சமயங்கள். இந் நாவலின் முக்கிய நாயகன் மனநிலை பிறழ்ந்த மணீந்திரநாத், பைத்தியக்கார டாகுர்தான் என்பதை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளலாம்.

டாகுர் வீட்டுக்காரர்கள் அந்தப் பிராந்தியத்திலேயே அதிகம் படித்தவர்கள் என்ற வகையில் செல்வாக்குப் படைத்தவர்கள். பெரிய டாகுர்தான் பைத்தியம். இரண்டாவது மற்றும் மூன்றாவது டாகுரும் அங்கிருந்து பத்து கோச தூரத்தில் உள்ள மூடாபாடா ஜமீன்தாரிடம் காரியஸ்தர்கள். வசதியான குடும்பம். நிலம், மில் வேலை இருக்கின்றன.
கதைக் களமான பரந்து நீண்ட சோனாலிபாலி நதிக்கரையில் கிராமங்கள், ஒரு கிராமம் தாண்டினால் இன்னொரு கிராமம் அல்லது மைதானம்.

பெரும்பாலும் ஏழை முஸ்லீம்கள், எப்போதும் வறுமை. ஒவ்வொரு கிராமத்திலும் ஹாஜி சாயபு போன்ற ஒரு சில முஸ்லீம் பணக்காரர்களும் இருக்கின்றார்கள்.

மணீந்திர நாத், ஓர் அசாதாரண அழகன், கிரேக்க வீரன் போல். ஆனால் யுத்த களத்தில் வழிதவறிவிட்ட வீரன். கிராமத்து பீர், மாணவ மணீந்திர நாத்திடம் உன் கண்களைப் பார்த்தால் உனக்குச் சித்தம் தவறும் என்று சொன்னது போலவே அவருக்குப் பின்னாளில் சித்தம் தவறிவிடுகிறது. அவருக்குத் திருமணம் ஆகி மனைவியுடன் சோனாலி பாலி ஆற்றைப் படகில் கடந்து வரும்போதே தவறித்தான் இருக்கிறது. அவரது புது மனைவிக்கு அப்போது தெரிவதில்லை. அவர், மணீந்திர நாத் அந்த நதியைப் பற்றிச் சொன்ன கதைகளை கேட்டுக்கொண்டு புகுந்த வீடு வருகிறார்.
பின்னர்தான் மணீந்திரநாத்தின் ப்ளாட்டானிக் காதலை, ஆங்கிலப்பெண் பாலினிடம் கொண்ட காதலை அவரது தகப்பனார் ஏற்க மறுத்துவிட்டதனால் மனம் பிறழ்ந்துவிட்டதை அறிகிறார். அதற்குள் திரும்ப முடியாதவாறு மணீந்திர நாத்தை நேசிக்க ஆரம்பித்துவிட்டார்.

மணீந்திர நாத், வாழ்க்கையில் தன் பொன்மானை இழந்துவிட்டாற் போன்ற பாவத்துடன் எப்போதும் வளையவருகிறார். தன்னை விட்டுப் போய்விட்ட நீலகண்ட பறவைகளை கைக் கொட்டி “காத் சோரத்சாலா” என்று நினைத்தபோதெல்லாம் அழைத்துக்கொண்டே இருக்கிறார். அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்.

பின் வீட்டில் உள்ள அனைவரும் , கிராம மனிதர்களும் அவரைத் தேடி அலைந்து இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் பிடித்துவருவது வழக்கமாக இருக்கிறது. மணீந்திரநாத்திற்குத் தூரத்தில் தெரியும் செம்பரத்தை மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவரது ஐரோப்பிய காதலி பாலினின் நினைவு வந்துவிடுகிறது. அந்த மரத்தின் அடியில் அமர்ந்து அவரால் கப்பலின் அதிசய ஒளியைக் கேட்க முடிகிறது. கப்பல் தலைவன் பாய்மரத்தில் கொடியைப் பறக்கவிடுகிறான். கப்பல் பாலினை ஏற்றிக்கொண்டு நீரில் மிதந்துச் செல்கிறது.

எங்கோ வெறிக்கும் அவருக்குத் தோன்றும், இன்னமும் சற்று தூரம் சென்றால் நெல்லி மரம் தெரியும், அதனடியில் பொன் மான் கட்டப்பட்டிருக்கும்…யானை மேல் ஏறி போனாலும் படகின் மீது ஏறிப் போனாலும் மணீந்திரநாத்தால் பாலினை அடைய முடியவில்லை. பொன் மான்கள் வேகமாக ஓடி விடுகின்றன.

“அப்பா (மகேந்திர நாத்) உங்க மத உணர்வினால் என் காதலை நாசம் செய்துவிட்டீர்கள். அந்தப் பெண்ணை, அவள் பெயர் பாலின், உயரமாக நீலக்கண்களை உடையவள், நான் சமுத்திரம் பார்த்த்தில்லை, ஆனால் வசந்த கால ஆகாயத்தைப் பார்த்திருக்கிறேன். அந்த ஆகாயத்தின் கீழ் சோனாலி பாலி ஆத்தோட தண்ணீர். அதில் அவள் முகம் நிழலாடுகிறது, ஆகாசத்திலிருக்கிற பெரிய நட்சத்திரத்தின் பிம்பத்தை தண்ணீரில் பார்த்தால் அவள் என்னை தூர தேசத்திற்கு கூப்பிடுவது போலவே இருக்கு. அப்புறம் குளிர்காலத்தில் புல் மேல் பனித்துளிகளைப் பார்த்திருக்கேன். அது போன்ற பவித்திரமான முகத்தை என்னிடமிருந்து பிடுங்கிண்டு போய்ட்டிங்களே அப்பா!”

பெரிய மாமி, மணீந்திரநாத்தின் மனைவி, இதனை நன்கு உணர்ந்திருந்தாலும் கணவன் மீது அசைக்கமுடியாத பேரன்பு வைத்திருக்கிறார்.

படகுத் துறையில் , இரவில், பெரிய மாமி இரண்டு நாட்களுக்கு முன் போன கணவருக்காக உட்காந்திருக்கிறார், துறையில் பாத்திரங்களைத் தேய்த்து முடித்துவிட்டு. அனைவரும் தூங்கப்போய்விட்டனர். விளக்கின் ஒளியில் இவரது முகம் சோகமாகத் தெரிகிறது. நிலவு காரணமாகத் தூரத்தில் செல்லும் படகுகளும் தெளிவாகத் தெரிகின்றன.
இரவு முன்னேறிக்கொண்டே இருக்கிறது. செடிகளிலும் மரங்களிலும் பரிச்சயமில்லாத பூச்சி, பறவை, நடுநிசிப்பிராணி குரல்கள். அவள் கணவனும் ஒரு நடுநிசிப்பிராணிதான்….

வீட்டிற்குத் திரும்பி சமையலறையில் பாத்திரங்களை வைத்துவிட்டு கிழக்குப் பக்க அறைக்குள் நுழையும்போது துறையில் துடுப்பொலி கேட்பது போல் தோன்றுகிறது. மாமி நெஞ்சம் நடுங்க துறைக்கு ஓடுகிறாள். அங்கே அசாதாரண உயர மனிதர் மணீந்திரநாத், பைத்தியகார டாகுர் படகை கரையில் கட்டிக்கொண்டு நிற்கிறார். அநேகமாக நிர்வாணகோலத்தில்.இரகசியம் ஒளிந்திருக்கும் கண்களுடன். அழகிய நிலவில் ஆகாய தூதன் வந்திறங்கியது போலிருக்கிறது. ஒரு துறவி தீர்த்த யாத்திரை சென்றுவிட்டு திரும்பியதைப் போலவும்.

***

மணீந்திரநாத்தின் தம்பி, தன பாபு என்றழைக்கப்படும் சந்திரநாத்திற்குக் குழந்தை பிறக்கும் சம்பவத்திலிருந்து நாவல் துவங்குகிறது. வாரங்கள், மாதங்கள், வெவ்வேறு பருவநிலைகள் கடந்து சோனாலிபாலி நதிபோலவே நாவலின் போக்கும் வெவ்வேறு மனிதர்களின் பார்வைகளில், எண்ணங்களில், நனவுகளில், கனவுகளில் பயணிக்கிறது.

அதீன் கிட்டதட்ட பத்து வருடங்களாக இந்தப் படைப்பை இயற்றுவதில் ஈடுபட்டு வந்திருக்கிறார். நாவலாக புனையப்படுவதற்கு முன் இதன் பதினெட்டு அத்தியாயங்கள் சிறுகதைகளாக வந்திருக்கின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தையோ, அதனை ஒட்டிய சம்பவங்களையோ மட்டும் தொடருவதில்லை. நாவல், பல கோணங்களில் பலர் பார்வையில் சொல்லப்படுகின்ற அகண்ட ஓவிய வெளி, கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கதீட்ரலின் பிரமாண்ட சுவர்.

குழந்தை சோனா, சிறுவன் சோனா, டாகுர் குடும்பத்தலைவர் கிழவர் மகேந்திரநாத், அவரது மூத்த மைந்தன் மணீந்திரநாத், அவரது மனைவி பெரியமாமி, அதே கிராமத்தில் வாழும் ஏழைக் குடியானவன் பேலு, அவனது குட்டிப் பெண் பாத்திமா, சாம்ஸுதீன், ஆபத் அலி, அவனது அக்கா ஜோட்டன், அவனது பீபி ஜலாலி, அதே கிராமத்தைச் சேர்ந்த தறி வேலை செய்யும் நரேன் தாஸ், அவனது விதவைத் தங்கை மாலதி, பக்கிரி சாயபு என்று பல்வேறு மனிதர்கள் பார்வையில் நாவல் நிதானமாக விரிந்துகொண்டே போகிறது.

கதையின் ஆரம்பத்தில் டாகுர் வீட்டு வேலைக்காரன் ஈசாம் சாப்பிடுவதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும். ஒரு பருக்கைக் கூட விடாமல் தனது முழுக் கவனத்தையும் சோற்றிலும் மீன் துண்டுகளிலும் செலுத்திச் சாப்பிடுவான்.
அது போலவே நாவலின் வரும் சித்திரங்களும் முழுக் கவனத்தைச் செலுத்தி தீட்டப்பட்டிருக்கின்றன.
நாவலில் தட்டுப்படும் எண்ணற்றச் சித்திரங்களுக்கு ஜலாலி வறுமையில் அல்லிக்கிழங்கு தேடி பவுசார் ஏரியில் இறங்கும் காட்சி ஒரு சரியான உதாரணமாகக் கொள்ளலாம்.

ஜலாலி, ஏழை முஸ்லீம் பெண், பசி தாங்க மாட்டாமல், அல்லிக்கிழங்கு தேடி பவுசார் ஏரியில் இறங்குகிறாள்.
அந்த பெரிய கஜார் மீன், அதன் சிவப்புக் கண்கள், தண்ணீருக்கடியில் தலைகீழாக தொங்கி அல்லிக்கொடியை பிடித்துக்கொண்டு இன்னும் ஆழமாகப் போய்க்கொண்டிருக்கும் ஜலாலியை அவள் நெஞ்சில் தாக்குகிறது.
வாடைக்காற்று பலமான, ஒரு குளிர் காலத்தில், அந்த பிரமாண்ட ஏரியில் அல்லிக்கிழங்கு பறிக்கப்போகும் ஏராளமான ஏழைகளின் கூடைகள் ஏரியில் மிதக்கின்றன. ஜலாலியும் அவர்களில் ஒருவள்.

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அல்லிக்கிழங்கு பறிக்கப்போனவர்கள் அனைவரும் கரையேறிவிட்டனர். ஒரே ஒரு கூடை மட்டும் தாமரை இலைகளுக்கு நடுவில் மிதந்து தொலைவில் போய்க்கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் ஒன்று புரிந்துவிட்டது. ஏரி இந்த வருடமும் ஓர் ஆளை பலிவாங்கிவிட்டது.
மீன் அவள் நெஞ்சைத் தாக்கியதில் நிலை குலைந்து சுழலில் செடி கொடிகள் அவளைச் சுற்றிக்கொண்டுவிட, விடுவிக்க முயன்ற போராட்டத்தில் தண்ணீரையும் அதிகமாக அவள் குடித்துவிட…சற்று நேரத்தில் ஜலாலியின் உயிர் குமிழிட்டுக்கொண்டு காற்றாகித் தண்ணீருக்கு மேலே வருகிறது.

ஜலாலி செடி கொடிகள் உடலைச் சுற்றிக்கொண்டிருக்க தண்ணீருக்குள் தலை கீழாகக் கிடக்கும் காட்சி சற்று நேரம் அசையாமல் மனதில் நிற்கிறது.

இந்த இடத்திலிருந்து ஆசிரியர் அந்த காஜர் மீனிலிருந்து மெல்ல மாய உலகிற்கு, கனவுலகத்திற்கு நகர்கிறார்.

“பிரமாண்ட மீன். அதன் உடலில் காலங்காலமாக ஈட்டிகளால் அதை வேட்டையாடிய தடங்கள் தென்பட்டன” என்று ஆரம்பித்து “அந்த மீன் இப்போது மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு மேலே பாய்ந்து வந்தது. கரையிலிருப்பவர்கள், இப்போது ஒரு மீனல்ல, ஆயிரம் மீன்கள் தண்ணீரைக் கிழித்து மேலே வருவதைப் பார்த்தார்கள்”

என்ற ஒரே வாக்கியத்தில் யதார்த்த சித்திரத்தின் மேல் மெல்லிய, குளுமையான, மாய, கனவுலகப் பட்டுத் துணி மூடு பனியாக மூடிவிடுகிறது.

அந்த மனிதர்கள் ஏரிக்கரையில் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்துகொண்டிருக்கும் அந்த மாலை கண் எதிரே தொட்டுவிடும் தூரத்தில் தெரிகிறது. காற்று அடங்கிவிட்டது. ஜலாலியின் தட்டு தாமரை இலைகளால் அசையாமல் நின்றுவிட்டது. அஸ்தமிக்கும் சூரியன் ஒளியால் தண்ணீர் ரத்தம் போல், பிறகு வெளிர் சிவப்பாக, பின் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி நீலமாகி, பசுமையாகி, பின் கருப்பாகிவிட்டது…தண்ணீர் சலனமின்றி…

அந்த மாறா மாலை என்றென்றும் மாறாமல், கடக்காமல் அசையாமல் அப்படியே இருக்கிறது…

பைத்தியக்கார டாகுர் மட்டும் “கேத்சோரத் சாலா!”

சர்க்கார் வீட்டு பூஜைக்கு எருமை பலி. செம்பரத்தைப் பூவை செருகின குடுமி கிழட்டுப் பிராமண புரோகிதர் காலையிலிருந்து எருமையின் கழுத்தில் ஒரு சேர் நெய்யைத் தடவிக்கொண்டே இருக்கிறார் – அரிவாள் சிக்கிக்கொள்ளாதிருக்க. பலி கொடுத்து உடலையும் தலையும் எடுத்துப் போகும் போது தவறவிட்ட எருமைத் தலை மணீந்திர நாத்திடம் பேச ஆரம்பிக்கும் போது மறுபடியும் யதார்த்த உலகின் மேல் மாய உலகின் பட்டுத்துணி.
ஹாரி பாட்டர், நார்ன்யா கதைகள் போல் ரயில் நிலைய சுவரின், வார்ட்ரோப்பின் மறு பக்கத்தில் வேறு உலகம், கனவுலகம் விரிகிறது. மிக இயல்பாக. கவனித்துக்கொண்டிருக்கும் போதே பளீர் மாலை கிறங்கிக்கொண்டே வந்து இரவாவது போல்…பின் மீண்டும் அடுத்த நிலைக்குப் புரண்டு படுத்துக்கொள்கிறது…

அந்த மங்காத மாலை, மங்கி, இரவில் சாமும் பிறரும் ஜலாலி உடலை கண்டுபிடிக்க சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் போது மணீந்திர நாத் பாய்ந்து அவள் உடலை சுற்றிக்கொண்டிருக்கும் செடி கொடிகளை அறுத்து தண்ணீருக்கு மேல் கொண்டு வரும் காட்சி, இன்னொரு மகத்தான அனுபவம்.

சில ஓவியங்கள் ஒரே பத்தியில் வரையப்பட்டிருக்கின்றன…
சிறுபெண் பாத்திமா, இளம் விதவை மாலதியைக் கண்டு சோனா பாபுவிடம் கொடுக்கிறிங்களா என்று இரு கொத்து மஞ்சித்திப் பழங்களை கொடுக்கிறாள்.

அந்தச் சிறுமிக்கு சிறிய கண்கள், மூக்குத்தி, பின்னிய கூந்தல். மாலதிக்கு அவளை அப்படியே தழுவிக்கொள்ளவேண்டும் போல இருக்கிறது, ஆனால் முடியாது, பாத்திமா இஸ்லாமியப் பெண். எனவே கட்டுப்படுத்திக்கொண்டு, சோனா பாபுவிற்காக நீ நிறைய சிரமப்படுகிறாய். வளர்ந்ததும் உன்னை அவனுக்குத் திருமணம் செய்துவைத்து விடுகிறேன் என்று கேலி செய்கிறாள்.

சிறுமி நாணமடைந்து ஆற்றுப்படுகையில் ஓடுகிறாள்.

கிராமத்திலும் வயலிலும் வளர்ந்திருந்த செடிகள், மரங்களின் நிழல்கள் நளின உணர்வை எங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. இந்த நளினம், அன்பின் மென்மையான உணர்வு, அந்தப் பெண்ணின் அங்கங்களைத் தழுவியது. அன்று பின் பனிக்காலத்தின் கடைசி நாள். சிறுமி கொஞ்சம் கொஞ்சமாக அந்த நளினத்திற்குள் ஒன்றி மறைந்துவிட்டாள்.

சில இடங்களில் ஒரே வாக்கியத்திலும்…

முன்னால் பெரிய மியான், பின்னால் சிறிய பீபியும், பெரிய பீபியும். அவர்களுக்குப் பின்னால் அவர்கள் நிழல்

மணீந்திர நாத்திற்கு மட்டுமல்ல, ஒரு சித்தம் பிறழ்ந்தவருக்கு மட்டுமல்ல, கதையில் இருக்கும் மற்ற பாத்திரங்களுக்கும் இந்த “இன்னொரு” உலகம் நாவல் நெடுக வந்துகொண்டே இருக்கிறது. சிறுவன் சோனாவிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு மாற்று உலகம்…ஓடும் ரயிலில் கதவோரம் நின்று கொண்டு நேரே நோக்கினால் யதார்த்த பாதை, இயல்பாகத் தலையைச் சாய்த்து நோக்கினால் கூடவே வந்துகொண்டிருக்கும் பக்கத்து இருப்பு, கனவு பாதை… சிறுவன் சோனாவின் கனவுலகின் ஒரு துளியாக. அவன் வயதை ஒட்டிய ஜமீந்தார் வீட்டுப்பெண்களிடம் தசரா விழா சமயத்தில் பழகும் நாட்களில் வரும் கனவை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

//கனவில் ஒரு குடிசை. எதிரில் விஸ்தாரமான, பயிரில்லா நிலம். கூழாங்கல் நிரப்பிய பாதை. அதனருகில் ஓர் அகழி. தெளிவான ஜலத்தின் அடியில் வெள்ளை, நீல, மஞ்சள் நிற கற்கள் நன்றாகத் தெரிகின்றன
குடிசைக்குப் பின் ஒரு மலை, அதன் நிழலில்தான் குடிசை இருக்கிறது.

சோனாவை இப்போது இழுத்துக்கொண்டு தலையில் சிவப்பு ரிப்பன் கட்டிய, வெள்ளை ப்ராக் அணிந்துகொண்டிருந்த பெண் அகழி ஓரம் ஓடிக்கொண்டு இருக்கிறாள்.

அகழியில் இப்போது அவர்கள் நடக்க ஆரம்பித்ததும் சின்னஞ்சிறு மீன்கள் அவர்கள் காலைச் சுற்றி விளையாடுகின்றன.. குளிர்ந்த நீர். சோனாவிற்கு அந்தத் தண்ணீர் மிகவும் பிடித்துவிடுகிறது. தானும் மீனாகவே மாறினால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது…என்ன ஆச்சரியம், அவனும் மீனாகவே மாறிவிடுகிறான்!

அந்தப் பெண் “என்னடா, மீனாகவே மாறிவிட்டாயா?” என்று சிரித்துக்கொண்டே தண்ணீரில் மூழ்குகிறாள். அவளும் மீனாக மாறிவிடுகிறாள்! அவர்கள் இருவரும் நீலமும் மஞ்சளுமான சாந்தா மீனாக மாறி அகழித் தண்ணீரில் நீந்துகிறார்கள்…

பின் பயங்கர பிராவகத்தில் சிக்கி, அதிலிருந்து தப்பி, நீல நிற மீன் கரைக்கு வந்துவிடுகிறது. அதற்கு இப்போது மூச்சு விட சிரமமாயிருக்கிறது. சோனா மூச்சு திணறுகிறான். திணறலில் விழிப்பு வந்துவிடுகிறது…//

ஒரு கிராமத்துச் சிறுவர்களின் தினம் ஒரு புதிதைக் கண்டு வியக்கும், பயக்கும் நாட்கள்.

//சோனாவும் பாத்திமாவும் மகிழப் பழங்களைத் தேடி காட்டிற்குள் நுழைகிறார்கள். காடு என்றால் உள்ளே இவ்வளவு பெரிதாய் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. காட்டிற்குள் நுழைந்தவுடனே மகிழ மரம் அரண்மனை வாசலில் நின்று கொண்டிருக்கும் சிப்பாயைப் போல் நின்று கொண்டிருக்கும், அதற்கு முன் கைகளை நீட்டினால் கை நிறையப் பழங்களைக் கொடுக்கும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது.//

ஜமீந்தார் தசரா திருவிழா இரவில் பைத்தியக்கார பெரியப்பா, ஜமீந்தார் வீட்டுப்பெண்களுடன் நதிக்கரையில் நடந்துகொண்டிருக்கும் போது

//நதிப் படுகையில் சுழற்காற்று பிறந்தது. எண்ணற்ற நாணற்பூக்கள் பறந்தன. அந்தப் பூக்களின் மகரந்தங்கள் அவர்களின் மேல் பனி போல் படர்ந்தது.

கண்களில் படக்கூடாது என்று அனைவரும் கண்களை மூடிக்கொண்டார்கள்.
சோனா கண்ணைத் திறந்தபோது எல்லாருமே வெள்ளையாகத் தெரிந்தார்கள். அவன் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் பார்த்திருந்தான்.

அதில் ஒரு படம், வரிசை வரிசையாகப் பைன் மரங்கள். அவற்றின் மேல் பனி விழுந்துகொண்டிருக்கிறது. அவற்றிக்கு கீழ் ஒரு சிறுவன் ஒரு கிழவரின் கையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். அவர்கள் தலைகள் மேல், குல்லாய்கள் மேல் பனி விழுந்து குவிந்துவிடுகிறது.

அது போல் இங்கும் எல்லாரும் வெள்ளையாய் தெரிகிறார்கள், நாய், யானை உள்பட.
அப்போது ஒரு அற்புத வெளிச்சம் தோன்றி வானம், ஆறு, ஆற்றுப் படுகை, நாணற்காடுகள், மரங்கள் எல்லாவற்றையும் ஒளிமயமாக்கியது. “ஸ்டீமர்” என்று சோனா உற்சாகமாக கூவுகிறான்.

ஆயிரக்கணக்கான காஸ் லைட் வெளிச்சம் போல் இருந்த அந்த ஸ்டீமரின் வெளிச்சத்தில் காட்டிலிருந்து பறவைகள் பறந்து வருகின்றன. அவைகளும் வெள்ளையாய் தெரிகின்றன.//

தின ஆச்சரியங்கள் போலவே சட்டெனச் சொல்லத் தெரியாத சோகங்களும் நிகழ்கின்றன– அவனது தோழி பாத்திமா ஒரு நாள் குடும்பத்துடன் ஊரை விட்டே போகிறாள்(“நாங்க டாக்கா போறோம்…இன்னிக்கு காலைலதான் எனக்கே தெரியும்….எனக்கு கடிதம் போடுவிங்களா சோனாபாபு”)

***

நாவலில் வங்காள பழக்கவழக்கங்கள் (மீன் சாப்பிடும் பிராமணர்கள், பூண்டு தாளித்த பாசிப் பருப்பு) இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. மதங்கள், வழக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மனிதர்களின் உணர்வு ஒன்றுதான். மூன்று முறை திருமணங்கள் நடந்து தலாக் கொடுக்கப்பட்டு, பதிமூன்று குழந்தைகள் பெற்றிருந்தாலும், கொடிய வறுமையிலும், ஜோட்டானுக்கு உடல் தேவை இருக்கிறது, அவள் அதை மறுப்பதில்லை. இந்துப் பெண்கள் சிறு கேலியாக அதைக் கேட்கும்போதும் இதிலென்ன இருக்கிறது, இது தேகத்தோட சமாச்சாரம். நீங்க வாய்விட்டுச் சொல்வதில்லை, நான் சொல்கிறேன் என்கிறாள்.

நாவலின் இன்னொரு முக்கியக் கதாபாத்திரமான இளம் விதவை மாலதிக்கும் அதே தேவை. உடல் தேவை அதிகமாகும்போதெல்லாம் டாக்கா கலவரத்தில் கொல்லப்பட்ட கணவன் முகத்தை நினைவுபடுத்திக்கொள்ள முயன்று கொண்டு இருக்கிறாள். போகப்போக, அவன் முகம் மறைந்து சிறுவயது தோழன் ரஞ்சித் அந்த இடத்தை பிடித்துக்கொண்டிருப்பதை உணர்கிறாள்.

***

உடல் தேவையைப் போலவே வயிற்றுப் பசியும் உயிர்களின் ஆதாரத்தேவை. நாவலில் வறிய மனிதர்கள் எந்நேரமும் கனன்றுகொண்டிருக்கும் தீயை அணைக்கத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பல நாட்களாகச் சாப்பிடாத ஆபத் அலியின் மனைவி ஜாலாலி, மாலதியின் ஆண் வாத்தை இருட்டிய மாலை மறைந்திருந்து பிடித்து, நெருப்பில் வாட்டி…

//அறை முழுவதும் வாத்துச் சிறகுகள் பறந்துகொண்டிருந்தன. சிம்னி விளக்கு தபதபவென எரிந்துகொண்டிருந்தது.

வீடு திரும்பாத ஆண் வாத்தை மாலதி கூப்பிடுவதைப் பார்த்தால் தட்டிலிருக்கும் அந்த வாத்து அந்தக் கூப்பாட்டிற்கு பதில் ஒலி எழுப்பும் போலிருந்தது.//

மாலதியின் இன்னொரு பால்யத் தோழன் சாம்ஸுதின் அவளுக்காக வாத்தை தேடுகிறான்

//படகில் மாலதியும் அமுல்யனும் ஆண் வாத்தைத் தேட, இன்னொரு படகில் சாமும் தேட…சாம் மாலதியின் அழுகை முகத்தைப் பார்த்து ஏதோ சொல்லவிரும்பினான்…இரு படகுகளும் அருகருகே நின்றிருந்தன.//

சாம்ஸுதினுக்கு அன்று மாலை, ஜலாலி தண்ணீருக்குள் மறைந்திருந்து கொண்டிருந்த காட்சி நினைவிற்கு வருகிறது. சந்தேகமடைந்து உடனே அவள் வீட்டை நோக்கிச் செல்கிறான். ஜலாலி வாத்தை சுட்டுத் தின்று கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கிறான.,

//அன்று மாலையில் அவன் தண்ணீருக்கு மேல் கண்ட முகம் – போக்கிரி ஓநாயைப் போல் அருவெருப்பாக இருந்த ஜலாலியின் முகம் – மாமிசத்தைச் சாப்பிட்ட பிறகு இப்போது இயற்கையாக, அழகாகக்கூட இருப்பதாகச் சாமிற்கு தோன்றியது.

அல்லாவின் கருணைக்காக நன்றியுணர்வு அவள் முகத்தில் தோன்றியது. தண்ணீர் குடித்தபோது அவள் இருமுறை அல்லாவை நினைத்துக்கொண்டாள்.//

வயிறு நிறைந்த முகம் எப்போதும் அழகான முகம்தான் என்று தோன்றுகிறது.

***

நாவலின் ஒவ்வொரு சம்பவத்திலும், கட்டத்திலும் மனிதரிலும் ஒட்டி இயல்பாக, எத்தனை தட்டினாலும் ஒட்டிக்கொண்டிருக்கும் கடற்கரை மணலாக இயற்கை. மகேந்திர நாத், பெரியவர், பார்வையிழந்தவர், சூரிய உதயத்தைக் காண பல வருடங்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேரன்கள் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறார். வழியிலிருக்கும் எல்லா மரங்களின் பெயர்களையும் சொல்கிறார். பூ, மீன் எல்லாவற்றையும் வாசனை உணர்ந்தே சொல்லிவிடுகிறார்.

மிக இயல்பாக, நாளின் என்னேரத்திலும் தலைக்கு மேல் நட்சத்திரங்களாய் இயற்கை வர்ணணைகள், மரங்கள், பழங்கள், காலநிலை, பறவைகள், விவரிப்புகள்…

//ஹாட்கிலாப் பறவை, பிரம்பம்பழம்
மெஜந்தா நிறமுள்ள பலிசப்பழம்
மஞ்சித்திப் பழம்
மகிழம்பழம்
கட்டாரி மரம்
செங்கடம்பு மரம்
நெல், உளுந்து, பட்டாணி வயல்கள்
புகையிலை, வெங்காயத் தோட்டங்கள்
பானசப்பாம்பு
மாச்ரங்கா மீன்
கொய்னாப் படகு
கலதா சிங்டி மீன்
சரத் காலம்
மழைக்காலம்
மேகமூட்டமாக இருக்கிறது, இன்று நிச்சயம் பூச்சிகள் வரும்.
எதிரில் குளம், மா, நாவல் மரங்களின் நிழல். அதற்குப்பின் வயல்வெளி.
மழைக்காலத்தில் பயிர்பச்சைகளின் வாசனை. அப்போது கடவுளின் அருகில் இருப்பது போல் தோன்றுகிறது.
பவழ மல்லிகை மரம்,சகட மரம், அக்ராண் மாதம்.
வசந்த காலம், தர்மூஜ் இலைகள்
மாலினி மீன்கள்
சோள வயல்கள், கோதுமை வயல்கள்
இஷ்டி குடும் பறவை
சைத்ர மாதம்
வறட்சி மாதம்
பாத்ர மாதம்
பாதிமா காலடியில் காந்த ராஜ செடி, வெள்ளைப் பூக்கள் செடி முழுவதும் பூத்திருந்தன.
சக்ரவாகப் பறவை…//

அடேயப்பா, பட்டியல் எடுத்து மாளாது. ஒரு பிரமாண்ட மலை உச்சியிலிருந்து சக்தி வாய்ந்த பைனாக்குலர் வழியாக 360 டிகிரியிலும் ஜூம் செய்து பார்ப்பதைப் போன்ற அனுபவம். உலகில் எந்த மூலையிலிருந்தாலும் இயந்திர வாழ்க்கையைத் தவிர்க்க இயலாத இன்றைய தினங்களில் நாவலின் இயற்கைச் சூழல் வாசகர்களை நிச்சயம் ஏங்க வைக்கும்.
இந்த நாவலுக்கான நிகிலேஷ் குஹாவின் முன்னுரை மிகப்பொருத்தமான, அவசியம் படிக்கவேண்டிய ஒன்று மிக அழகாக இந்திய இலக்கியங்களில் எவ்வாறு இயற்கை பதியப்பட்டிருக்கிறது, இயற்கையுடன் ஆத்மபூர்வமாக ஒன்றுவதின் மூலமாகவே மனிதன் முழுமை பெறுகிறான் என்பதைச் சொல்லி ஆரம்பிக்கிறார்.

***

நாவலின் ஆரம்பத்தில் ஜமீந்தார் ஊரிலிருந்து சொந்த கிராமத்திற்கு வரும் பூபேந்திரநாத் தான் வெளி உலகச் செய்திகளைக்கொண்டு வரும் ஒரே சன்னல். அவர் ஊருக்கு வந்திருக்கும் செய்தி அறிந்தவுடன் கிராமத்து மனிதர்கள் மாலையில் அவரது வீட்டில் இயல்பாகக் கூடுகிறார்கள், நகரசபையின் ரேடியோ கேட்பது போல்.
அவர் சொல்லும் செய்திகளின் வழியாகவே அந்தக் காலகட்டத்தின் வெளி உலக நடுக்கங்கள் மக்களுக்கும் வாசகர்களுக்கும் சொல்லப்படுகின்றன.

காந்திஜி சட்ட மறுப்பு இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறார். இங்கிலிஷ் காரர்கள் தடியடி நடத்துகிறார்கள். டாக்காவில் கலவரம். லீக் வளர்ந்துகொண்டிருக்கிறது. உள்ளூரிலும் இத்தனை நாள் ஒன்றாக இருந்த ஜனங்களுக்குள்ளும் பிரிவினைகள் தெரிய ஆரம்பிக்கின்றன.

காட்டிற்குள் ஆனந்த மாயி காளி கோயிலுக்குப் பக்கத்திலிருக்கும் இவ்வளவு நாட்கள் யாரும் சீந்தாத கட்டிடம், இப்போது மசூதியாம், மௌல்வி சாயபு சொல்கிறார். முஸ்லிம் ஜனங்கள் தொழுகை செய்யப்போகிறார்கள்.
“இஸ்லாமிற்கு ஆபத்து, பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று சாம் பெரிய எழுத்துகளில் தட்டிகள் எழுதி மரங்களில் மாட்டிக்கொண்டிருக்கிறான்.

ஆரவாரமாக அனைவரும் சந்தோஷமாக இருந்துகொண்டிருக்கும் திருவிழாவில் ஓர் இளைஞன் படித்துறையில் ஒரு பெண் ஸ்தனத்தை அமுக்கிவிட அவனை திருவிழா வாலண்டியர்கள் தங்கள் ஆபிஸ் அறைக்குக் கூட்டிச்செல்ல முயற்சிக்க, முஸ்லீம் கூட்டம் மறிக்க…கலவரம். கண நேரத்தில் காட்சிகள் மாறி வெட்டுக்குத்து, கொலைகள் என்று மனிதர்களின் ஆதார வன்முறையும் மத வன்முறையும் சேர்ந்து கொழுந்துவிட்டு எரிகின்றன.

சரத்காலத்தில் பவழ மல்லிகை பூத்துச் சொரியும். செம்பரத்தைச் செடி பனியால் நனையும். வானம் நிர்மலமாக இருக்கும். வெயில் பொன்னிறமாக இருக்கும். இவை எல்லாம் சேர்த்து ஒரு தேசம், பெயர் வங்காளம் என்று பெருமைப்படும் மண்ணின் மைந்தர்கள் இவர்கள்.

தலைமுறை தலைமுறையாக அந்த மண்ணில், சுற்றி உயிரின் உயிராக, இயற்கையுனூடே வாழ்ந்துகொண்டிருக்கும் இந்து குடும்பங்கள் பின்னர்ப் பிரிவினையின் போது என்னவாகியிருப்பார்கள் என்று எண்ணத் தொடங்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது.

நாவலின் இரண்டாவது, மூன்றாவது பாகங்களில் பிரிவினையின் அடுத்தக் காலகட்டங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் நீலகண்ட பறவையைத் தேடி நாவலின் முதல் பாகம் மட்டுமே தமிழில் மொழிபெயர்க்கப்ட்டிருக்கிறது. எனவே, அடுத்தப் பாகங்கள், தமிழ் வாசகர்களுக்கு இன்னொரு நீலகண்ட பறவைதான் , கிடைக்கவே போவதில்லை

***

ஆறுகளும் கால்வாய்களும் நிறைந்த பிரதேசம். அவற்றில் எப்போது தண்ணீர் பொங்கி வரும், வடியும் என்று தெரியாது. அவற்றின் மத்தியில் அந்த சோனாலி பாலி நதி. நதியைக் குறித்த ஏராளமான சித்திரங்களில் ஒன்று:

ஒரு நாள் சோனா தன் பைத்தியக்கார பெரியப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நதிக்கரையில் நிற்கிறான். அவனுக்கு நாற்புறமும் பூக்கள், பழங்கள், மரங்கள், பறவைகள், நதியில் தண்ணீர்ப் பெருக்கு, யானை ஆற்றின் கரையோரத்தில் போய்க்கொண்டிருக்கிறது. நாய் காலை வெயிலில் சுற்றித் திரிகிறது. ஸ்டீமர் துறையில் சில பிரயாணிகள். ஆற்றின் நடுவில் வைக்கோல் ஏற்றிச்செல்லும் படகுகள். அவற்றின் பாய்களின் மேல் சிவப்பு, நீலப் பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன….

சோனாலி பாலி நதி அவர்களின் வாழ்க்கையில், ஆத்மாவில் ஒன்றி விட்ட ஒன்று. ஆற்றங்கரையில் நின்று கொண்டு செய்த பாவத்தை வெளிப்படையாக ஆற்றிடம் ஒப்புக்கொண்டால் செய்த பாவம் போய்விடும் என்று சிறுவன் சோனா நம்புகிறான்.

அம்மா ஏதாவது கெட்ட சொப்னம் கண்டால் விடியற்காலையில் எழுந்து ஸோனாலிபாலி ஆற்றங்கரைக்குப் போய்த் தண்ணீருக்கு முன்னால் தான் கண்ட கனவைச் சொல்லிவிடுவாள். அந்தக் கனவால் ஏற்படும் தோஷம் போய்விடும். நீர் வளம் நிறைந்த இந்தப் பிராந்தியத்து மக்கள் இறக்க விரும்பினால் நீரையே சரணடைகிறார்கள். இப்படி அந்த நதிதான் அவர்களின் வாழ்வின் ஜீவாதாரம்.

வாழ்க்கையில், முக்கியமாகத் தன் இளமைக்காலத்தை நதிக்கரையில் கழிப்பவர் எவருக்கும், காவிரியோ, தேம்ஸோ, கோதாவரியோ, சோனாலிபாலியோ அந்நதி என்றுமே மறக்கமுடியாத, அழியாத, குறியீடு. முக்கியமாக வாழ்க்கையின் பிற்பகுதியில் நதியை விட்டு விலக நேர்ந்தவர்களுக்கு நதி வாழ்நாள் முழுவதும் தொடரும் கள்ளிப்பெட்டி. அதீன் பந்தோத்பாயாவிற்கு சோனாலிபாலி. மற்றவர்களுக்கு காவிரியோ, தேம்ஸோ, கோதாவரியோ இருக்கலாம்… இந்த நாவலை முழுமையாக வாசிக்கும் எவரும் நாவலின் குறியீடாக நீலகண்டபறவையை எளிதில் பொருத்திக்கொள்ள முடியும்.

எனக்கென்னவோ இத்தனை விதவித மனிதர்களை, பறவைகளை, தாவரங்களை, மீன்களைத் தன் கரையோரத்தில் என்றென்றும் கவனித்துக்கொண்டிருக்கும் அந்த மஹா நதியான சோனாலிபாலிதான் என்று தோன்றுகிறது

(நன்றி: சொல்வனம்)

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp