அதீன் பந்த்யோபாத்யாயவின் ‘நீலகண்ட பறவையை தேடி’

அதீன் பந்த்யோபாத்யாயவின் ‘நீலகண்ட பறவையை தேடி’

கற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன? அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது.

கற்பனாவாதத்தின் இந்த தாவலுக்கு என்ன அடிப்படை. இப்படிச் சொல்லலாம். அது எதைநோக்கி கைநீட்டுகிறதோ அது ஒருபோதும் சிக்குவதில்லை என்பதுதான். அறத்தில் அமைந்த உலகை கனவுகண்டார் தஸ்தயேவ்ஸ்கி. அழகே உருவான இயற்கையை வேர்ட்ஸ் வர்த். முழுமை சமநிலை கொண்ட வாழ்க்கையை கதே. அவை மானுடனின் கனவுகளே. அக்கனவுகளை நோக்கி ஓடும் பாதையில்தான் அவன் தன் அனைத்துக் கலாச்சார சாதனைகளையும் அடைந்தான். அது எப்போதும் அவனுடைய கண்முன்னால் கைகளுக்கு அப்பால் ஒரு பேரழகுகொண்ட மாயப்பறவையாக பறந்துகொண்டிருக்கிறது.

அப்பறவையின் அழகிய படிமச் சித்திரத்தைக் காட்டும் மகத்தான வங்க நாவல் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ . [வங்க மூலம்; நீல்கண்ட் பகிர் கோஞ்சே] கிரேக்க நீர்த் தெய்வங்களின் பேரழகும் பெருவலிமையும் கொண்டவரான மணீந்திர நாத் தாகூர் தான் இந்நாவலின் மையக்கதாபாத்திரம். ஆஜானுபாகுவான பொன்னிற உடல். ஆண்மை நிறைந்த அழகிய முகம். பெரிய கண்களில் எப்போதும் குழந்தைமைக்குரிய திகைப்பு. சிறுவயதில் மணீந்திர நாத் மிகச்சூட்டிகையான மாணவராக இருந்தார். அவரது கல்வித்திறனை ஊரே பெருமிதத்துடன் எண்ணிக்கொண்டது. தந்தை அவரைப்பற்றிய கர்வத்தில் மிதந்தார். கல்கத்தாவுக்குப்படிக்கச்சென்ற மணீந்ந்திர நாத் அங்கே பாலின் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். ஆத்மாவின் அழியாத்தேடலுக்கு விடையாக அமையும் என்று காவியங்கள் சொல்லும் அந்தக் காதல்.

ஆனால் அவரது தந்தை மகேந்திர நாத் தாகூருக்கு மூத்த மகன் ஒரு மிலேச்சப்பெண்ணை மணம்செய்வது பிடிக்கவில்லை. அவரது கடுமையான எதிர்ப்பை மகனால் மீற முடியவில்லை. அப்படி ஒருவழக்கமே அவர் சமூகத்தில் இல்லை. தந்தைக்கு எதிராக நின்று தன் விருப்பத்தை வலியுறுத்துவதுகூட அவரால் கூடவில்லை. தந்தை மகனுக்கு மணம் செய்துவைக்கிறார். பெரிய அண்ணியை மணம் செய்யும்போதே மணீந்திர நாத் மனம் கலங்கியிருந்தார், அதை தந்தை உட்பட எவருமே உணரவில்லை. அவள் கல்கத்தாவில் வளர்ந்தவள். கிழக்குவங்காளத்தின் அந்தக் குக்கிராமத்தில் வாழ்க்கைப்படுவது அவளுக்கு அச்சமூட்டுகிறது. மணமேடையில் அவளுடன் அமர்ந்த அந்தப் பேரழகன் அவளை உக்கிரமாக உற்று நோக்கினான். அவளுடைய ஆழங்களுக்குள் துளைத்துச்செல்பவன்போல. அவள் வழியாக வேறெங்கோ பார்ப்பவன் போல .’இந்த மனிதருக்கு என்னை ஏன் கட்டிவைத்தீர்கள்?’ என்று அவள் தன் அம்மாவிடம் கேட்டு அழுதாள்.

பெரிய படகில் நீரில் மூழ்கிய சணல் வயல்கள் சூழ்ந்த மாபெரும் ஏரி வழியாக அவள் கிராமத்துக்கு வந்தாள். வெள்ளித்துடுப்பால் உந்தப்பட்ட பொன்னாலான படகில் மணம் முடித்து அங்கே வருகையில் படகு மூழ்கி உயிர்துறந்த ராஜகுமாரியைப்பற்றி அவள் கணவன் அவளுக்குச் சொன்னான். நீருக்குள் வெண்பட்டாடைகள் அலைபாய அவள் அலைந்துகொண்டே இருக்கிறாள். அவளுக்கு அக்கதை வினோதமாகப்பட்டது. அப்போதே அவரது மனம் தடுமாறிவிட்டிருந்தது என பின்பு அக்கதையை நினைத்துக்கொண்டபோது அவள் உணர்ந்தாள். அவள் கணவன் அவளை ஒருபோதும் ஆசையுடன் அணைத்துக் கொண்டதில்லை. அன்புடன் ஒருசொல்லும் சொன்னதில்லை. அவளை எதையோ தேடுபவன் போல விரிந்த அழகிய கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான். சில நாட்களில் அந்த ஆதி உணர்ச்சிக்கு ஆளாகி அவன் அவளை தன்னுடன் இணைத்துக்கொள்வான். அவளை முரட்டுவெறியுடன் பொம்மைபோலக் கையாளுவான். அவள் தன் உடலை அவனுக்கு விட்டுக்கொடுத்து ஆட்படுவாள். ஆனால் அதுகூட அபூர்வமாகத்தான். அந்நாட்கள் ஒவ்வொன்றையும் அவளால் துல்லியமாக நினைவுகூர முடியும்.

மணீந்திர நாத்துக்குள் அந்த ராஜகுமாரியின் கதை முளைத்து கிளைவிட்டுவிட்டது. அவர் காட்டிலும் மேட்டிலும் நீர்வெளியின் ஆழங்களிலும் தன் பாலினை தேடி அலைய ஆரம்பித்தார். இரவென்றும் பகலென்றும் இல்லாமல் அவரை ஒரு வேதனை வாட்டியது. அவரை அது நீரை நோக்கியே இழுத்தது. நீருக்குள் தெரிந்து மறையும் அவள் முகம். பசுமையில் அலைப்புண்டு மறையும் அவள் முகம். அவருக்கு அவ்வேதனையை எப்படி வெல்வதென தெரியவில்லை. அவருடைய சொற்கள் அவருக்குள்ளேயே ஒலித்து அடங்கின. வெளியே கேட்க அவர் சொல்வது ”காத்சோரத் சாலா!” என்ற வசையை மட்டுமே. சில சமயம் ஆங்கிலத்தில் பாலினுடன் உரையாடிக்கொண்டிருப்பார். வேர்ட்ஸ்வெர்த் , கூல்ரிட்ஜ் போன்றோரின் உணர்ச்சிமிக்கக் கவிதைகளை தனக்குள் பாடிக்கொண்டிருப்பார். நீர்வெளி மீது சிவந்து அணையும் அந்தியை நோக்கி அழுவார். பைத்தியக்கார மனிதர் தன் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கி வானத்தை நோக்கித் தட்டுவது வழக்கம். தன்னைவிட்டு பறந்துசென்ற பறவை ஒன்றை திரும்ப அழைப்பவர் போல. நீலக்கழுத்துக்கொண்ட பறவை அது. குன்றா ஒளிகொண்டது. ஒருபோதும் அது அவரை அணுகப்போவதில்லை.

ஏறத்தாழ எண்ணூறு பக்கம் கொண்ட இ¢ந்த நாவல் முழுக்க மணீந்திரநாத் அந்தப் பறவையை தேடிக்கொண்டிருக்கிறார். இனம் புரியாத வேதனைகளால் துரத்தப்பட்டு நீர் நிரம்பிய நிலவெளியில் ஓயாது அலைகிறார். அவரைச்சுற்றி வாழ்க்கை கொந்தளிக்கிறது. ஒவ்வொன்றும் உருமாறிக் கொண்டிருக்கின்றன. பைத்தியக்கார மனிதரின் உலகில் எதுவுமே மாறவில்லை. பாலின் அவருடைய கண்முன் சிரித்துச் சிரித்து மறைகிறாள். அவருடைய வேதனை அழிவேயில்லாமல் நிறைந்து நிரந்தரமாக நிற்கிறது. வேதனை நிரம்பிய சொற்களால் அதீன் அந்த சோகத்தை மீண்டும் மீண்டும் நாவல்முழுக்க சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரே சோகத்தை மீட்டும் இனம்புரியாத பறவை போல நாவலெங்கும் ஆசிரியரின் குரல் ஒலிக்கிறது.

”புயலும் மழையும் அவருடைய உடலில் வெள்ளைக்கறைகளை விட்டுச்சென்றிருந்தன. அவருடைய உடலுக்குள் எங்கோ ஒரு வேதனை. அவருடைய கனவு மாளிகையில் வாழ்ந்துவந்த பறவை அவருடைய பிடியிலிருந்து நழுவிப்பறந்துவிட்டது போலும். இப்போது அவர் அதை தேடிக்கொண்டிருக்கிறார், பறவை பறந்துபோய்விட்டது. தீவுதீவாந்தரங்களைக் கடந்து வியாபாரிகளின் நாடுகளைக் கடந்து ஜலதேவதைகளின் தேசத்துக்குப்போய்ச் சேர்ந்து அங்கே சோகித்திருக்கும் ராஜகுமாரனின் தலைமீது அமர்ந்துகொண்டு கூவி அழுகிரது. அப்போது பெரிய பாபுவின் மனதில் ஏதோ வேதனை ஏற்படுகிறது. அவர் தன் கையை தானே ரத்தம்வரக் கடித்துகொள்கிரார்…”
பெரிய அண்ணி சில நாட்களிலேயே அறிந்துகொண்டாள், அந்த பைத்தியக்கார மனிதர் இல்லாமல் தன்க்கு வாழ்வே இல்லை என. தன் ஆத்மாவின் ஒவ்வொரு துளியும் அவருக்குச் சமர்ப்பணம் என. இரவும் பகலும் அவள் அவருக்காகக் காத்திருந்தாள். அவருடைய காலடியோசைக்காக கூர்ந்த காதுகளும் அவரைப்பற்றிய ஒவ்வொரு பேச்சுக்கும் கலங்கும் கண்களுமாக அவள் இருண்ட வீட்டுக்குள் வாழ்ந்தாள். அந்தக் காத்திருப்பிலேயே அவள் தன் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுகொண்டாள். கணவனின் பேரழகுத் தோற்றம் மீது அவளுக்கு ஆழம் காணமுடியா பெருங்காதல். கடவுளுக்கு சேவை செய்வதுபோல அவரை அவள் கவனித்துக்கொள்கிறாள்
”பைத்தியக்கார மனிதர் இப்போது அனேகமாக நிர்வாணமாக இருந்தார். பெரிய மாமி அவருடைய ஈர உடைகளைக் கழட்டினாள். சலவைக்கல் போல உறுதியான உடல் அவருக்கு. நெஞ்சின்மீது ஒரு யானையை வைத்துக்கொண்டு ஆடவைக்கும் அளவுக்கு வலிமையான தசைநார்கள். வயிற்றில் கொழுப்பே இல்லை. மெல்லிய தசையின்மீது வெண்மையான தோல். ரோமம் அடர்ந்த மார்பிலிருந்து ஆற்றொழுக்கு போல நேராக இறங்கிய நீக்கோடு கீழே அடர்ந்திருந்த ரோமக்காட்டைத் தொட்டது. பெரியமாமி ஒரு வெள்ளைத்துண்டால் அவருடைய தேகத்தில் இருந்த நீர்த்திவலைகளைத் துடைத்து விட்டாள். ஒரு மரப்பொம்மை போல அசையாமலிருந்தார் அவர். அசையாமல் வேறு நினைவின்றி பெரியமாமியின் பெரிய அகன்ற கண்களை, காதலுக்குரிய கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்!”

ஒரு காட்சி விவரணைமூலம் அதீன் இந்த இணையின் சித்திரத்தை ஆழமாக மனதில் பதியச்செய்கிறார். வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. ஜன்னல்வழியாக வந்த காற்றில் உடைகள் அசைய பெரிய அண்ணி மல்லாந்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறாள். கைகளை மார்பின்மீது சேர்த்துவைத்து தூங்குவது அவள் வழக்கம். அவள் தன் கணவனுக்காக தூக்கத்திலும் பிரார்த்தனை புரிவதுபோல் இருக்கும் அது. பைத்தியக்கார மனிதர் எழுகிறார். மழையின் ஒலியில் இரவுக்கு அப்பால் அவரை யாரோ அழைக்கிறார்கள். அவர் போயாக வேண்டும். நதிக்கரையில். நதிக்கு அப்பால். எங்கோ…. பாலின் முகம் அலையும் வெளி. அவர் கிளம்புகிறார். அவர் சென்ற சிலநிமிடங்களிலேயே பெரியஅண்ணிக்குத் தெரிந்துவிடுகிறது . அவள் கண்ணீருடன் அவருக்காக பிரார்த்தனை செய்கிறாள்.

மணீந்திரநாத் தாகூரை அவரது கிராமத்தினர் பீர் என்றும் யோகி என்றும் எண்ணி வணங்குகிறார்கள். அவர் செல்லும் கிராமங்களில் அவருக்கு முதல் விளைச்சல்களைக் காணிக்கையாக்குகிறார்கள். அதற்கேற்ப மணீந்திரநாத் தன் பித்தின் வல்லமையால் மானுட சாத்தியங்களை எளிதில் கடந்துசெல்கிறார். அவர் மனதின் ஆழம் உலவும் வெளி பிறருக்கு தெரிவதேயில்லை. அவர்கள் பார்ப்பது அவருக்கு காலமில்லை, குளிரும் வெயிலும் இல்லை, பசியும் தாகமும் இல்லை, எல்லையற்ற உடல்வலிமை உண்டு என்பதையே.

பல காட்சிகளை பெரும் ஓவியத்திறனுடன் காட்டியுள்ளார் அதீன். யானை மீதேறி கிராமத்தை தாண்டி நதிக்கரைக் கடுகளில் அலைந்து மீளும் பைத்தியக்கார பாபுவின் சித்திரம் முக்கியமானது. கானகதேவன் போல மத்தகம் மீது அமர்ந்திருக்கும் பேரழகனின் பித்தை சட்டென்று அந்த யானையும் வாங்கிக்கொண்டுவிட்டது. அதனுள் வாழும் காடு அவனைப் புரிந்துகொண்டது. யானை அலைந்து திரிந்து மீண்டு வந்து பெரிய பாபுவின் வீட்டுமுன் இனிமேல் என்னால் முடியாது என்று மண்டியிடுகிறது. யார் சொன்னாலும் இறங்காமல் பைத்தியக்கார பாபு அதன் உச்சியில் அமர்ந்திருக்கிறார். பெரிய அண்ணி வந்து முக்காட்டை நீக்கி அவரை நோக்குகிறாள். அந்த நீர் நிறைந்த கண்கள் அவரை எப்போதுமே பணியவைக்கும். குழந்தைபோல இறங்கி அவருடன் செல்கிறார்.

நீரில் மூழ்கி இறந்த ஜாலாலியில் சடலத்தை தோளிலிட்டபடி ஓடும் மணீந்திரநாத்தின் காட்சி பயங்கரமும் அழகும் கோண்டது. நாவலெங்கும் விரியும் வாழ்க்கையில் அர்த்தங்கள் அபத்தங்கள் அனைத்துக்கும் அப்பால் வாழ்கிறார் மணீந்திரநாத். அவரது வாழ்க்கையின் போக்கே வேறு. அவரது வாழ்க்கையின் சாரமின்மையும் சாரமும் வேறு.

இந்த மையச்சரடுக்கு வெளியே நாவலின் களம் என்பது இந்திய சுதந்திரப்போராட்டத்தின் நாட்களில் பிரிவுபடாத இந்தியாவின் பகுதியாக விளங்கிய கிழக்கு வங்காளம். முஸ்லீம்களும் இந்துக்களும் சேர்ந்து வாழும் கிராமம். அப்படி ஒரு பிரிவினையை அவர்கள் உணர்ந்ததேயில்லை. நாவலின் தொடக்கத்துக்கு முன்னரே முஸ்லீம் லீக் தேசப்பிரிவினை பற்றிய கோரிக்கையை எழுப்பிவிட்டது. டாக்காவில் பெரும் மதக்கலவரங்கள் நடந்து அச்செய்திகள் மெல்லமெல்ல கிராமங்களில் பரவ ஆரம்பித்துவிட்டன. கிராமத்தில் மௌல்விகள் மதப்போர் பற்றிய பிரச்சாரத்தை தொடங்கி ரகசியக்கூட்டங்கள் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். திரி பற்ற ஆரம்பித்துவிட்டது.

ஆயினும் கிராமத்துச் சூழலில் அந்தப்பிரிவினைவாதம் எந்த அளவுக்கு அன்னியமாக உள்ளது என்பதைக் காட்டியபடி நகர்கிறது நாவல். பெரிய அண்ணிக்குக் குழந்தை பிறந்த விஷயத்தைச் சொல்ல ஈசம் கிளம்பிச்செல்வதில் நாவல் ஆரம்பிக்கிறது.”அவனைப்பார்த்தாலே தோன்றுகிறது இந்தச்செய்தியை சொல்வதற்கென்றே அவன் தர்மூஜ் வயல்களிலிருந்தோ சோனாலிபாலி ஆற்றின் மணலில் இருந்தோ கிளம்பி வந்திருக்கிரான் என்று!” அவனுடைய மதம் இஸ்லாம். அவனுடைய பணி டாகூர்களின் தர்மூஜ் வயல்களுக்குக் காவல் காப்பதுபோல அதுவும் இயல்பான ஒன்றுதான். அவன் தன்னை ஒருபோதும் டாகூர்களிடமிருந்து வேறுபட்டவனாக எண்ணவில்லை. ஆனால் டாக்கா கலவரங்கள் பற்றி பேசும்போது சின்ன அண்னா அவனை ஓரக்கண்ணால் பார்த்து அவனுக்கு கேட்காமல் குரலைத்தாழ்த்துகிறார்.

கிராமத்தில் லீக் கிளையை தொடங்கி கிளைக்கூட்டத்தை நடத்தும் சாமு மரத்தில் தொங்கவிட்டுச்செல்லும் விளம்பரத்தட்டியை மாலதி விளையாட்டுத்தனமான வீம்புடன் கீழிறக்குகிறாள். அவள் அவனுடைய விளையாட்டுத்தோழி. ஆனால் டாக்கா கலவரத்தில் தன் கணவனை இழந்த இளம் விதவை. அவள் கண்ணில் — தன் கணவனைக் கொன்ற கும்பலைச்சேர்ந்தவனாகப் படவில்லை. — அவளுக்காக அனுதாப்பபடுகிறான். ஆனால் தான் முஸ்லீம் என்ற உணர்வு அவனை வெல்கிறது. இந்த இடத்தில் மெல்லத் தொடங்கும் பிரிவினை உணர்வு ஓங்கி கலவரங்களாக வெடித்து தேசம்பிளவுபடுவதில் முடிகிறது.

ஒரு கிராமத்தின் யதார்த்த வாழ்க்கைதான் இந்தப்பெரிய நாவலின் பேசுபொருள். நீர் சூழ்ந்த கிராமம். ஆனால் கொடிய வறுமை. உணவுக்காக ஒவ்வொரு நாளும் அலைமோதும் எளிய மக்கள். சிறிய நிலப்பிரபுக்கள். சிறிய வணிகர்கள். பலவிதமான கதாபாத்திரங்களை நுட்பமான விவரணைகளுடன் நாவல் முழுக்க நிறைத்திருப்பதிலும் அவர்களின் பரிணாம மாற்றங்களை சிரமில்லாமல் இயல்பாகச் சொல்வதிலும்தான் ஆசிரியரின் கலைத்திறன் வெளிப்பாடு கொள்கிறது. மணீந்திர நாத் வாழும் கவித்துவமான காதலின் உச்சத்துக்கு தொடர்பேயில்லாமல் மண்மீது ஒட்டி காமமும் பசியும் குரோதமுமாக வாழ்ந்து மடிகிறார்கள் மக்கள். எளிய பசியும் காமமும் அன்றி வேறு வாழ்க்கையே அறியாதவள் ஜோட்டன். பெண் என்ற தன் உடல் அல்லாவுக்கு வரி கொடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது என்று நம்புகிறவள். வேறு ஒரு எல்லையில் விதவையான மாலதியும் அதே மனநிலை கொண்டவளே. ஆனால் குலதர்மங்கள், வெட்கம் மானம் போன்ற உணர்வுகள். அவற்றின் விளைவான பாசாங்குகளுக்குள் ஆறா தீயென காமம்.

ஜோட்டன் எளிதில் சொல்லிவிடுகிறாள். ”…இது தேகத்தோட சமாச்சாரம். உங்களுக்கும் இது இருக்கு. எனக்கும் இருக்கு. உங்களுக்கும் சுகம் கிடைக்குது, எஜமான் வந்திட்டு போறார்.நீங்க வாய்விட்டுச்சொல்றதில்லே. எனக்கு புருஷன் இல்ல. அதனால சுகமில்ல. நான் வாயை விட்டு சொல்றேன்” என்கிறாள் அவள் தனமாமியிடம் பேசும்போது . மாலதியைப்பார்க்கையில் எல்லாம் அவளுக்கு பரிதாபம்தான். வாத்துக்கள் வளர்த்து நதிக்கரையில் எப்போதும் உலாவி மீண்டும் மீண்டும் நீராடி மாலதி தன் வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கிறாள்.

கட்டுகடங்காத ஒருவகைச் சித்தரிப்புமுறை கொண்டது இந்நாவல். பொதுவாக அதீன் முழுக்க முழுக்க தற்செயல்களை நம்பி இயங்குபவர் என்ற குற்றச்சாட்டு வங்கத்தில் உண்டு. இந்நாவலிலும் திட்டமிடல் இல்லை. நினைவுகள் கொப்பளிப்பதுபோல வந்து சேர்ந்தபடியே இருக்கும் நிகழ்வுகளினாலானது அவரது கூறுமுறை.அதற்கு எந்தவிதமான ஒழுங்கும் இல்லை. ஆகவே கதை என்ற ஒன்று இருப்பதகாவும் கூறமுடியாது. நிகழ்வுகளின் ஓட்டம் அதன் போக்கில் ஏதேனும் திசையில் சென்றபடியே இருக்கும். நாவலின் தொடக்கத்தில்வரும் தேசப்பிரிவினை தொடர்பான நிகழ்ச்சிகள் அப்படியே கைவிடப்பட்டு பல பக்கங்களுக்கு ஜோட்டன், அவள் தம்பி ஆபேத் அலி, அவன் மனைவி ஜாலாலி ஆகியோரின் கதையாக நாவல் நகர்கிறது. நடுவே மாலதியின் கதையின் துணுக்குகள். இதில் ஏறத்தாழ பதினாறு அத்தியாயங்களை அதீன் தனிச் சிறுகதைகளாக எழுதி பிறகு நாவலில் சேர்த்திருக்கிறார்.

இந்த ஓட்டத்தை நம்மால் ஆர்வமாகப் பின்தொடர முடிவதற்குக் காரணம் சித்தரிப்பில் உள்ள நுட்பமும் வேகமும்தான். இயறகையை மிகுந்த நுட்பத்துடனும் கவித்துவத்துடனும் சொல்கிறார் அதீன். அந்தியில் நாணல்நிழல்களினால் வேலியிடப்பட்ட நீரோட்டம் கொண்ட சோனாலி பாலி ஆறு, மேகங்களின் பாய்மரக்கப்பல்கள் ஓடும் ஏரி , தர்மூஜ் வயல்கள், நீர்த்தாவரங்கள், வாத்துக்கள்…. நீலகண்ட பறவையைத்தேடி அளவுக்கு இயற்கையை தன் மையப்பேசுபொருளாகக் கொண்ட நாவல்கள் மிகச்சிலவே.நாவல் முழுக்க வாழ்க்கையுடன் சேர்ந்து கிடக்கும் நீரின் விதவிதமான தோற்றங்கள் வாசகமனதில் படிமங்களாக விரியும் அனுபவமே இந்நாவலின் சாரமாகும்.

நிகழ்வுகளைச் சொல்லும்போது அசாதாரணமான நுட்பங்களுக்குள் செல்ல அதீன் வல்லமை கொண்டிருக்கிறார். பசிக்கொடுமை தாங்காமல் மாலதியின் வாத்தை பிடித்து நீருக்குள் அமுக்கி கொன்று பிடித்தபடி கழுத்தளவு ஏரியில் நிற்கும் ஜாலாலியைக் காணும் சாமு அவள் முகம் ஓநாயின் முகம் போல இருப்பதாக எண்ணுகிறான். மாலதி வாத்தை தேடும்போது அந்தமுகபாவனையின் நினைவு மூலமே அவனுக்குத் தெரிகிறது என்ன நடந்தது என. அவளை கையும்களவுமாகப் பிடித்து நையப்புடைக்க அவன் அவள் குடிசைக்குச் செல்கிறான். வாத்தை சுட்டு தின்று பசியடங்கி மன அமைதிகொண்டு அல்லாவுக்கு நன்றி சொல்லும் ஜாலாலியைக் காணும்போது அவள் முகம் அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றி கண்களில் நீர் நிறைந்துவிடுகிறது.

பைத்தியக்கார பாபு பீர் சாகிபின் தர்காவுக்குச்செல்லும்போது சட்டென்று நினைத்துக் கொள்கிறார்.திருடனாக இருந்த ஹாசான் பக்கீரியாக ஆகி பீர் நிலையை அடைந்தவர். அவர்தான் ஆரம்பகாலத்தில் மணீந்திரநாதின் கண்களைப் பார்த்துச் சொன்னார் .”உன் கண்ணோட பாபாவைப்பார்த்தா நீ பைத்தியமாயிடுவேன்னு தோணுது!” ”நீங்க என்ன சொல்றீங்க பீர் சாகேப்/”என்றார் மனீந்திரநாத் பீதியுடன். ”நான் சரியாகத்தான் சொல்கிறேன். உன் படிப்பெல்லாம் வீண்.பீர்,சாமியார் ஆகிறதுக்கு உனக்கு இருக்கிற மாதிரி கண் இருக்கணும்.உன்மாதிரி கண் இல்லேன்னா பைத்தியம் ஆக முடியாது. பைத்தியமா ஆக்கவும் முடியாது” பீர் சாகேப் சொல்லும் பைத்தியம் என்ன? மணீ£ந்திரநாத் அடைந்த அந்த மன உச்சமா? ஏன் அப்படிச் சொன்ன பீர் தன் முதிர்ந்த வயதில் தூக்கில் தொங்கினார்?

குழந்தை சோனாவுடன் படகில் ஏரிக்குள் செல்லும் பைத்தியக்கார பாபு வழியிலேயே ஒரு அனாதை நாயையும் ஏற்றிக்கொள்கிறார். பீரின் சமாதியில் குழந்தையை விட்டுவிட்டு அப்படியே நீச்சலடித்து வேறெங்கோ போய் மீண்டு வீட்டுக்குவருகிறார். அங்கே குழந்தையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.அதைக்கானும்போது அவருக்கு நினைவுக்கு வருகிறது. அவர் மீண்டும் தர்காவுக்குச் செல்கிறார். அங்கே குழந்தை அழுகிறது. ஓநாய்கள் சூழ்ந்திருக்கின்றன. உயிரைப்பணயம் வைத்து நாய் குழந்தையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. குழந்தையைத்தூக்கி தோளில் வைத்து கூத்தாடியபடி பைத்தியக்கார பாபு கூவினார் ”பார்த்துக்கொள் இது உன் மண். இது உன் நீர்! இது உன் வானம்!” கற்பனையை சில்லென்று தீண்டி சிறகடித்தெழச் செய்யும் இத்தகைய இடங்களினாலானது இந்நாவல்.

வறுமையில் வாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள். அவர்களுக்குச் சொல்லப்படுகிறது அவ்வறுமைக்குக் காரணம் இந்து நிலக்கிழார்கள் என. ஒரு இஸ்லாமிய தேசம் அமைந்தால் இந்துக்களின் சொத்துக்களெல்லாம் அவர்களுக்கு வரும் என.க ஆனால் இஸ்லாமிய நிலக்கிழார்களினால் லீக் இயக்கப்படுகிறது என்ற எளிய உண்மை அம்மக்களின் நெஞ்சில் ஏறவில்லை. வெறுப்பு சிறு நிகழ்ச்சிகள் மூலம் விரிகிறது. எப்போதும் இதற்கு ஒரே சூத்திரம் தான். திருவிழாவில் ஒரு இந்துப்பெண்ணை இஸ்லாமிய இளைஞன் தீண்டுகிறான். அவனை இளைஞர்கள் தாக்குகிறார்கள். இஸ்லாமிய இளைஞர்கள் திருப்பித்தாக்குகிறார்கள். திருவிழாவில் கலவரம் வெடிக்கிறது.கொலைகள் கொள்ளைகள் என தீ எரியத்தொடங்குகிறது.

சிறுவனாக கண்மலந்து உலகைப்பார்க்கும் சோனாவின் கோணத்தில் இக்கலவரக் காட்சிகள் விரிகின்றன. தர்மூஜ் வயல்களையும் ஆற்றையும் நதியையும் ஈசமின் தோள்களில் அமர்ந்து கண்டுவந்த குழந்தை, இந்து கிறித்தவ வேறுபாட்டை சட்டென்று கண்டடையவேண்டிய அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. அவனுடைய நோக்கில் மெல்லமெல்ல கிழக்குவங்கம் கிழக்கு பாகிஸ்தானாக மாறும் காட்சியும் அவனுடைய குடும்பம் சிதறி அழிவதன் சித்திரமும் நாவலில் விரிகிறது. மாலதிக்கும் சாமுவுக்கும் இருக்கும் அதே பாலியகால நட்பு சோனாவுக்கும் பாதிமாவுக்கும் இடையே உள்ளது. மதத்தால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஓர் உலகம். அந்த நட்பு அவன் மனதில் சோனாலிபாலி ஆற்றைப்போலவும் தர்மூஜ் வயல்களின் பசுமையைப்போலவும் ஒளியுடன் இருக்கும்.

அதேபோன்ற ஓர் உலகமாக இருப்பது பீர்களின் பக்கிரிகளின் சூ·பி உலகம். அது மதக்காழ்ப்பால் தீண்டப்படவேயில்லை. மனிதனை மனிதனாக மட்டுமே அது நோக்குகிறது. ஜோட்டனின் கணவனாக அறிமுகமாகும் பீர் சாகேப் வறுமையின் கீழ் நிலையில் வாழ்பவராக ஒரு பருக்கைகூட சிந்தாது உண்டுவிட்டு அல்லாவுக்கு நன்றி சொல்பவராக தெரிகிறார். பின்னர் மதக்காழ்ப்புகள் கொழுந்துவிடும் நாளில் அவர் மதத்தின் சாரமான ஆன்மீம மூலமே மதத்திவிட்டு மேலெழுந்துவிடுகிறார்.

சோனா இறுதியில் அந்நிலத்தை விட்டு வெளியேறலாம். அது ஓர் அந்நிய தேசமாக மாறி எப்போதுமே அவன் மீண்டுவரமுடியாது போகலாம். ஆனால் அவனில் நீர் நிறைந்த அந்நிலம் எப்போதும் உயிருடனிருக்கும். அந்நிலத்தின் தேவனைப்போல கனவுவெளியில் வாழும் பேரழகன் அவனிடம் ‘இது உன் நிலம். உன் நீர், உன் வானம்!” என்று சொல்லிக்கொண்டேதான் இருப்பான்.
*
ஒரு நுண்ணிய கோணத்தில் நாம் மணீந்திர நாத்தின் சிக்கலை பல மௌனி கதாபாத்திரங்களின் அகச்சிக்கலுடன் ஒப்பிடலாம். [இதைப்பற்றி நான் மௌனி குறித்த என் நூலில் விரிவாகவே பேசியுள்ளேன். பார்க்க ‘நவீனத்துவத்தின் முகங்கள்’. தமிழினி பிரசுரம்] மௌனியின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கிராமத்தைச் சேர்ந்தவை. அவை நகரத்துக்கு படிக்கச்செல்கின்றன. அங்கே அவை பெண்களுடனான உறவின் புதிய முகத்தைக் காண்கின்றன. சுதந்திரமான பெண்களின் இயல்பான காதலை அவை தரிசிக்கின்றன. அவற்றின் அந்தரங்கம் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகிறது. அக்காதல் அவற்றுக்கு முன்னரே அறிமுகமானதல்ல. அவற்றால் அக்காதலை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே நிலை தடுமாற்றம் , மனப்பிரமைகள்.

அதற்கான காரணங்கள் பல. நம் சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக காதல் என்னும் உணர்வே அருகிப்போயிருந்தது. பல நூற்றாண்டுக்காலம் நீண்ண்டிருந்த அரசியல் நிலையின்மையும் விளைவான சமூக வன்முறையும் அதற்குக் காரணம். குழந்தைமணம், கோஷாமுறை போன்ற பல வழக்கங்கள் மூலம் பெண்கள் மிகமிகப் பாதுகாப்பாக பொத்தி வைக்கப்பட்டார்கள். ஒருவனுக்கு தன் துணைவியை தேர்வுசெய்யவோ அவளுடன் விருப்பம்போல சல்லாபம் செய்யவோ முடியாத சூழல். பெண்கள் புறக்கட்டுப்பாடுகளினாலும் அதை விட மோசமான சுயக்கட்டுப்பாடுகளினாலும் காதலில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்கள். வம்ச விருத்திக்காக காமத்தை மேற்கொள்ளவே மண உறவு என்ற நிலை நிலவியது. இதன் மறுபக்கமாக தாசிமுறை பலமடங்கு பெருகியது. ஆனால் தாசிகளும் வேறுவகையில் ஒடுக்கப்பட்டவர்களே. இழிவுசெய்யப்பட்டவர்களும்கூட. தன் இணையை தேர்வுசெய்யும் உரிமை மறுக்கப்பட்டவர்கள். தன் உடலையே உரிமைகொள்ள முடியாதவர்கள். ஆகவே அங்கே காமம் மட்டுமே இருந்தது, காதலுக்கு வாய்ப்பே இல்லை.

சுதந்திரம் காதலை பிறப்பிக்கிறது. காரணம் அது இயல்பானது என்பதே. மேலைநாடுகளிலும் கிறித்தவத்தின் பிடி தளர்ந்த மறுமலர்ச்சிக்காலமே பிளாட்டானிக் காதலின் காலகட்டம். நவீனக்கல்விக்கும் புதிய வாழ்க்கைமுறைகளுக்கும் திறந்துகொள்ளும் கல்லூரிக்காலம் அக்காலகட்டத்தில் காதலுக்குரிய ஒரு வெளியாகவே இருந்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அக்கால இலக்கியங்கள் அதை எழுதிக்காட்டியுள்ளன. அடிமையாகவும் பொம்மையாகவும் அல்லது சாகசக்காரியாகவும் ஏமாற்றுக்காரியாகவும் மட்டுமே பெண்களை கண்டுவந்த சராசரி இந்தியஆண்மனம் சுதந்திரமான பெண்களின் ஆத்மாவில் விரியும் உண்மையான காதலை கண்டு அச்சத்தையே முதலில் அடைந்தது. பிரமிப்பு உள்வாங்க முடியாத தவிப்பு. இருத்தல் சார்ந்தும் உறவுகள் சார்ந்தும் வாழ்க்கையின் சாரம் சார்ந்தும் விடைதெரியா புதிய வினாக்கள் உருவாகி எழுந்தன.

அதற்கு விடைதேடி அது ஆங்கில பிளாட்டானிக் காதல் கவிதைகளை அணுகியது. பிளாட்டானிக் கவிதைகள் காதலை அன்றாட வாழ்க்கையின் தளத்திலிருந்து மேலே கொண்டுசென்று மானுடவாழ்க்கையின் சாரமாக ஆக்கின. எட்டமுடியாத ஒன்றின் அடையாளமாக்கின. அழகு, தியாகம், வீரம், இயற்கையுடன் ஒன்றிணைதல் ஆகிய அனைத்தும் காதலை மையமாகக் கொண்டு உச்சப்படுத்தப்பட்டன.அப்படி உச்சபடுத்தும் பொருட்டு காதலிலுள்ள மர்மங்களையும் ஆழங்களையும் பலமடங்கு பெருக்கிக் கொண்டன. விளைவாகக் காதல் காதல் மட்டுமல்லாமலாயிற்று. வேறு ஏதோ ஒன்றின் குறியீடாக மாறியது. வாழ்க்கையின் எல்லா இடைவெளிகளையும் நிரப்பும் அருவமான ஒன்றாக ஆகியது. அதன் பின் பேசப்பட்டது எதுவுமே காதலைப்பற்றியல்ல , காதலை முன் வைத்து கைக்குச்சிக்காத இலட்சியங்களைப் பேசுவதே காதல்கதைகளாக கவிதைகளாக ஆயிற்று.

இந்தத் தளத்தைச் சேர்ந்தவை மௌனியின் கதைகள். ஆனால் பொங்கிமேலெழும் கற்பனாவாதம் சார்ந்த இந்த உணர்ச்சிகளை சொல்ல முடியாத திறனற்ற அக்ரஹாரநடை மௌனியின் மிகபெரும்பாலான படைப்புகளை சூம்பி வெளிறி நிற்கச் செய்தது. பிளாட்டானிக் காதலுக்கு எப்போதும் படிமப்பின்புலமாக அமையும் நிலக்காட்சி மௌனி கதைகளில் இல்லை. அதை உருவாக்க அவரால் முடிவதில்லை. ஆகவே அழகும் பயங்கரமும் வெளிப்படும் படிமங்கள் அவர் ஆக்கங்களில் இல்லை. அவ்வப்போது தத்துவார்த்தமாக விளக்கப்படும் அந்தரங்கப் படிமங்களும் நினைப்பதைச் சொல்ல முடியாமல் சிதைந்து சிதைந்து அழியும் சொற்றொடர்களும் கலந்து அமைந்த அவரது கதைகள் இந்த தளம் சார்ந்து விரிவான வாசிப்பு இல்லாத தமிழ் வாசகர்களில் ஒருசாராருக்கு ஒருவிதமான மர்மத்தையும் அதன் விளைவான கவற்சியையும் அளித்தன. ஆகவே அவை இன்றும் பேசப்படுகின்றன.

‘நீலகண்டபறவையைத்தேடி’ நாவலின் மணீந்திரநாத் பிளாட்டானிக் காதலை இந்திய மனம் எதிர்கொண்ட அந்த தளத்தைச் சேர்ந்தவர் என்பதை வாசகர் எளிதில் அறியலாம். பாலின் மீதுள்ள அவரது தூயகாதல் வேர்ட்ஸ்வெர்த்தாலோ, பிரவுனிங்காலோ எழுதப்பட்ட ஒரு கவிதையில் சாதாரணமாகச் சென்று அமரத் தக்கதே. அது காதலாகத் தொடங்கி மானுட ஆத்மாவின் அழியாத தாகமாக, முடிவடையாத தேடலாக, நாவலில் விரிவடைகிறது. நீலகண்டப் பறவை ஒரு பிளாட்டானிக் படிமம்.
மொழிபெயர்ப்பின் வழியாக பல தளங்களை அதீன் பந்த்யோபாத்யாயாவின் நடை இழந்திருக்கக் கூடும் என்றபோதிலும்கூட நாவல் முழுக்க மணீந்திரநாத் வரும் இடங்களிலெல்லாம் கற்பனாவாதத்தின் ஒளி தெரிகிறது. மிக நுட்பமான இயற்கைச் சித்தரிப்பின் மூலம் அதை அதீன் சாதிக்கிறார். குழந்தைகளுடன் ஊரைவிட்டுச் செல்லும் மணீந்திர நாத் நதியில் மூழ்கி பொன்னிற உடலெங்கும் பாசிக்கொடிகள் படர்ந்திருக்க மேலெழுந்து வரும் அந்தக் காட்சி ஆங்கில கற்பனாவாதக் கவிதைகளின் உச்சப்படிமங்கள் சிலவற்றுக்கு நிகரானது.

இந்திய மரபுக்கு இந்த பூரண சமர்ப்பணமான காதல் புதிது அல்ல. ஆனால் இங்கு அது பக்தியின் ஒருவடிவமாகவே உள்ளது. ராதாமாதவக் காதலின் உக்கிரம் சைதன்ய மகாப்பிரபு வழியாக வேரூன்றியது வங்க மண். ஆனால் அதீன் தன் நாவலின் இயக்கப்போக்கில் அந்த தளத்தை தீண்டவே இல்லை.நாவலில் மணீந்திர நாத் பிளாட்டானிக் காதலின் நேர்கோட்டை விட்டு நகர்வதேயில்லை. ஆனால் பெரிய அண்ணி பூரண சமர்ப்பணத்தன்மை கொண்ட இந்தியக் காதலின் சின்னம். அவளுடையது மீரா கண்ணன் மீது கொண்ட பக்திக்கு நிகரானதே. என்ன வேறுபாடு? மணீந்திர நாத் கொண்ட காதலில் ‘தான்’ உண்டு. தன் காதல் உண்டு. அப்படிப்பார்த்தால் அது பூரண சமர்ப்பணமல்ல, காதலால் தன் சுயம் நிரப்பப் படும் ஒரு நிலையே. மாறாக பெரிய அண்ணி கொண்ட காதலில் தனக்கென ஏதுமில்லை. கொடுத்தலன்றி எந்தச்செயலும் அதில் நிகழ்வதில்லை. இருவகை காதல்களையும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் நோக்கி நிற்கும் வகையில் காட்டுகிறார் அதீன்.

*

லத்தீன் அமெரிக்காவில் மாய யதார்த்தம் அறிமுகமாவதற்கு கால்நூற்றாண்டுக்கு முன்னரே அதீன் இந்நாவலை எழுதிவிட்டிருக்கிறார். அன்றாட யதார்த்தத்தின் உள்ளே நாட்டுப்புறக் கதைகளில் இருந்து உருவான மாயக்கதைகள் உயிருடன் ஊடாடிக் கிடக்கும் சித்திரத்தையே நாம் இதில் காண்கிறோம். மாயச்சித்திரங்கள் நாவலின் யதார்த்ததுக்கு ஒருவகையான தீவிரத்தை ஊட்டுகின்றன. யதார்த்தம் மாயத்தை நம்பும்படியாக மாற்றுகிறது. மணீந்திரநாத் முற்றிலும் மாய உலகமொன்றில் வாழ்கிறார். கவிதை மட்டுமே மொழியாக உள்ள , காலம் குழம்பிய ஓர் உலகில். சில கதைகள் யதார்த்தமான ஒரு விளக்கம் கொடுக்கப்பட்ட மாயங்களாக உள்ளன. உதாரணம் பக்கிரி சாயபு ஒரு பீர் ஆக மாறும் இடம். சிறு உத்தி ஒன்றின் மூலம் கிராமநம்பிக்கையில் எந்நாளும் அழியாத ஒரு நினைவாக அவர் மாறுகிறார். மதங்களைக் கடந்த மனிதாபிமானம் மூலம் மானுட மனங்களில் ஏற்கனவே அவர் தன்னை நிறுவி விட்டிருந்தமையால்தான் அது சாத்தியமாகிறது.

இந்நாவலில் ஜாலாலியைக் கொல்லும் அந்த பெரிய மீன் மாய யதார்த்த ஆசிரியர்களின் கற்பனைக்கும் மிஞ்சிச்செல்லும் நாட்டாரியல் உருவகம். மரணமேயற்றது அது. அதன் உடலெங்கும் பலநூறுவருடங்களாக மானுடர் அதைத்தாக்கிய வடுக்கள். ஈட்டிமுனைகள், தூண்டில் கொழுக்கள். கனவா யதாத்த்தமா என்று அறிய முடியாத அதி நுட்பமான சித்தரிப்பு மூலம் அதை நாவலில் நிறுவி விடுகிறார் அதீன். காட்சி சார்ந்த நுட்பம் மூலம் மாயத்தை நிஜமாக்குவது மாய யதார்த்த ஆசிரியர்களின் பாணி. அதீன் அதை திறம்படச்செய்கிறார். பைத்தியக்கார பாபு கடைசியில் நாணல்பூக்கள் வெண்பனி போல கொட்டும் நிலப்பரப்பை அடைகிறார். அங்கு வருகிறது மதம் கொண்ட யானை. அதன் மீது நாணல்மலர்கள் கொட்டி அது இந்திரனின் வெண்ணிற யானை போல இருக்கிறது. பைத்தியக்கார பாபு அதன் மீது ஆரோகணித்துக் கொள்கிறார். ” Still still to hear her tender-taken breath and to live ever or else swoon to death ! death ! death !” மரணம் மரணம் என்று சொன்னபடியே வெள்ளையானை மீதேறிய தேவன் காட்டுக்குள் சென்று மறைகிறார். மீண்டுவரவேயில்லை.

மிகப்பிற்காலத்தில் நாவல்கள் உருவாக்கிக் கொண்ட கட்டற்ற பிரவாகம் போன்ற கூறுமுறையையும் இந்நாவலுக்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் அதீன். ஆகவேதான் எத்தனை வாசித்தாலும் கதையாக சீர்படுத்திச் சொல்லிவிடமுடியாத ஒரு கனவனுபவமாகவே நின்றுக்கொண்டிருக்கிறது இந்நாவல். இதன் தீராத ஆழத்துக்குக் காரணம் இந்தக் கனவுத்தன்மையே.

[நீலகண்ட பறவையை தேடி : அதீன் பந்த்யோபாத்யாய . தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு 1972]

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp