இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்

இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்

மனித வாழ்வில் என்றும் மாறாதவொரு விஷயம் இருக்கிறதென்றால், அது மாற்றம் மட்டுமே. இவ்வாறு மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கைச் சூழல்கள் அந்தந்த காலத்திற்குரிய மீளாய்வுகளையும் வழிகாட்டல்களையும் வேண்டிநிற்கின்றன.

இத்தேவை நிவர்த்தி செய்யப்பட வேண்டுமெனில், ஒவ்வொரு காலகட்டத்திலும் தகுதிபடைத்த அறிஞர்கள் மாறிய சூழல்களுக்கான சட்ட வழிகாட்டல்களை இஸ்லாத்தின் மூலாதாரங்களான திருக்குர்ஆனிலிருந்தும் இறைத்தூதரின் நடத்தை முன்மாதிரியிலிருந்தும் உய்த்துப் பெறவேண்டியது அவசியமாகின்றது.

இஸ்லாத்தின் துவக்க காலந்தொட்டே மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகு ஆய்வு முயற்சிகளும் அதன்வழி கண்டடையப்படும் ஆய்வு முடிவுகளும், அவற்றுக்கிடையே காணப்படும் சில ஒத்த தன்மைகளின் அடிப்படையிலும் பயன்படுத்தப்படும் ஒத்த முறைமைகளின் அடிப்படையிலும் குறிப்பிட்ட சில சட்ட சிந்தனா வழிகளுக்கு (மத்ஹப்) உள்ளாக வகைப்படுத்தி நோக்கப்படுகின்றன.

அவற்றுள் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்றுப் பின்பற்றுபவை ஐந்து: ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி மற்றும் ஜாஃபரி.

மத்ஹப் எனும் கருத்தாக்கத்தையே ஒரு நூதனமாகவும் தேவையற்றதாகவும் சிலர் எண்ணத் தலைப்பட்டிருக்கும் ஒரு சூழலில், அது குறித்த முறையானதொரு புரிதலை ஓரளவுக்கேனும் சாத்தியப்படுத்தும் ஒரு நூல் என்றே இதைக் கூற வேண்டும்.

உலக முஸ்லிம்களுள் மிகப் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் ஒரு சட்ட சிந்தனா வழியாக இருப்பது ஹனஃபி மத்ஹபாகும். இதன் மூலகர்த்தா இமாம் அபூ ஹனீஃபா ஆவார். நாம் அறிமுகப்படுத்தப் புகுந்திருக்கும் இந்த நூல் இமாம் அபூ ஹனீஃபாவின் வாழ்வு, காலப் பின்னணி, அறிவு மூலங்கள், அரசியல் நிலைப்பாடு, ஆய்வு முறைமைகள், முன்னணி மாணவர்கள் மற்றும் இன்ன பிற முக்கிய விஷயங்களை போதுமானளவு விரிவாகக் கலந்துரையாடுகிறது.

உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனமான எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் 1960-களில் இஸ்லாமிய சட்டத்துறை (ஃபிக்ஹு) தலைவராகப் பணியாற்றிய முஹம்மது அபூ ஸஹ்ராவின் பேனாவிலிருந்து, இஸ்லாமிய சட்டத்துறையில் பிரம்மாண்டதொரு ஆளுமையாகத் திகழ்ந்த இமாம் அபூ ஹனீஃபா பற்றிய இந்த நூல் வந்திருப்பது எத்துணை பொருத்தமானது! அரபி மூலத்திலிருந்து மூன்றில் ஒரு பகுதியாகச் சுருக்கியாக்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பிலிருந்தே இத்தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.

குறித்ததொரு சட்ட விவகாரம் பற்றிய நேரடி மூலாதாரப் பிரதி இல்லாத ஒரு சூழல் வரும்போது அதை எவ்வாறு கையாளுவது எனும் விஷயத்தில், இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் பின்வரும் இரு பிரிவுகளுள் ஏதேனுமொன்றைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது:

1) ஹதீஸ்களில் மட்டுமே தங்கிநிற்கும் அஹ்லுல் ஹதீஸ் பிரிவு;

2) அறிவைப் பிரயோகித்துப் பெறப்படும் சுயஅபிப்பிராயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அஹ்லுர் ரஃயீ பிரிவு.

இதில் இமாம் அபூ ஹனீஃபா, கூஃபாவில் மேலோங்கியிருந்த அஹ்லுர் ரஃயீ பிரிவைப் பிரதிநிதித்துவம் செய்பவராகவே இருந்தார்.

இமாம் அபூ ஹனீஃபா துவக்கத்தில் கலாம் எனும் சமய விவாதக் கலையில் கவனம்செலுத்தி வந்தார். அல்-குர்ஆனை மனனம் செய்திருந்தார். ஹதீஸ், இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்திருந்தார்.

பிறகு ஃபிக்ஹு எனும் இஸ்லாமிய சட்டக் கலையில் பிரவேசித்து, அதில் கேள்விக்கிடமற்ற இமாமாக உயர்ந்தார். அபூ ஹனீஃபாவின் இந்தப் புலமைத்துவப் பரிணாம வளர்ச்சியை இந்த நூல் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. இமாம் அபூ ஹனீஃபாவின் கல்விப் புலமைத்துவ மூலங்களும் கூட மிகவும் பன்முகப்பட்டவையாக அமைந்திருந்தது தான் அவரின் அறிவை இத்துணை செறிவாக்கியிருக்க வேண்டும்.

அவர் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களிடத்தில் மட்டுமல்லாது, அஹ்லுல் பைத் இமாம்களான ஸைது இப்னு அலீ, முஹம்மது அல்-பாக்கிர், ஜாஃபர் அஸ்-ஸாதிக் ஆகியோரிடத்திலும், முஃதஸிலாக்கள், கைசானியர்கள், இஸ்மாயிகள் எனப் பல்வேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தோரிடத்திலும் கல்வி கற்றிருக்கிறார்; கலந்துரையாடியிருக்கிறார்.

இவ்வாறிருக்க, இன்று சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினரும் ஒருவரையொருவர் வெறுப்புடனும் பகைமையுடனும் நோக்கி உரையாடலின்றித் தம்மைச் சுருக்கிக்கொள்ளும் ஒரு சூழலே மிகைத்திருக்கும் நிலையில், இமாம் அபூ ஹனீஃபா பற்றிய இத்தகவல்கள் சிலருக்கு உச்சபட்ச அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கலாம்; இதனால் புதிய வாதப் பிரதிவாதங்கள் துவங்கவும் வாய்ப்பிருக்கிறது.

தமது வகுப்பறைகள் மற்றும் உரைமேடைகளை (மிம்பர்) தாண்டாது இருப்பதே அறிஞர்க்கு அழகு என்பதான ஒரு மனப்பாங்கு நமது ஆலிம்கள் மத்தியில் நிலவுவதாகத் தோன்றுகிறது. கருத்து சொல்வதற்கும் அறிவுரை பகர்வதற்கும் அப்பால் கடமையேதும் தமக்கில்லை என்பதான மனப்போக்கே அறிஞர்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுகிறது. இமாம் அபூ ஹனீஃபாவின் எடுத்துக்காட்டு இதைக் கேள்விக்குட்படுத்துகிறது.

இறைத்தூதரும் நேர்வழிநின்ற கலீஃபாக்களும் செயற்படுத்திக் காட்டிய உயர் ஆட்சித் தரங்களிலிருந்து உமைய்யா மற்றும் அப்பாஸிய மன்னர்கள் நெறிபிறழ்ந்த போதும், இலட்சிய இஸ்லாமிய சமூகத்தின் திசைநெறி தடம்புரண்ட போதும், இஸ்லாத்தின் ஆன்மாவைக் காப்பாற்ற வேண்டி முஸ்லிம் தலைவர்களும் மக்களும் கிளர்ந்தெழுந்தனர்.

இதில் குறிப்பிடத் தக்கவையாக அமைந்தவை, அஹ்லுல் பைத்களைச் சேர்ந்த இமாம்களின் கிளர்ச்சிகளே. இமாம் ஹசனின் பேரர்களான் நஃப்ஸ் அஸ்-ஸகிய்யா மற்றும் இப்ராஹீம் ஆகியோர் சட்டவிரோத மன்னராட்சிக்கு எதிராகப் போராடி உயிர்த்தியாக மரணங்களை எய்தினர். இமாம் ஹுசைனின் பேரர் ஸைது இப்னு அலீயின் கிளர்ச்சியும் இதே விதமானதொரு முடிவுக்கு வந்தது.

இவ்வனைத்துப் போராட்டங்களையும் இமாம் அபூ ஹனீஃபா ஆதரித்து நின்றார். அது வெறுமனே மானசீக ஆதரவாக மட்டும் மட்டுப்படாது, புலமைத்துவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கூட அவர் இந்தக் கிளர்ச்சிகளுக்கு ஆற்றிய பங்களிப்புகள் பற்றி இந்த நூல் வழங்கும் தகவல்கள் நம்மில் பெரும்பாலானோருக்கு முற்றிலும் புதியவை. அநீதமான ஆட்சியை தூக்கியெறிவதற்கான இந்தப் புரட்சிகரப் போராட்டங்களை இமாம் அபூ ஹனீஃபா முற்றிலும் சட்டப்பூர்வமானவையாகக் கருதியதோடு, அவற்றில் நேரடி இராணுவப் பங்களிப்புச் செய்யவும் நாட்டம் கொண்டிருந்தார் என்றும் இந்நூல் தெரிவிக்கிறது.

நிலவும் ஆதிக்க அமைப்பில் பங்கேற்று பதவிகளுக்கு வருவதன் மூலம் சமூகத்திற்குத் தம்மால் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதான ஒரு கற்பிதம் இன்று கேள்விக்கப்பாற்பட்ட ஒன்றாக மாறிவருகிறது. அமுலில் இருக்கும் சட்டவிரோத ஆட்சிக்கு ஒரு துளியேனும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காதிருப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்பதில் இமாம் அபூ ஹனீஃபா மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தாக இந்நூல் மூலம் அறியவருகிறோம்.

இதனால் அப்பாஸிய மன்னர் அல்-மன்சூர் வழங்க முன்வந்த தலைமை நீதிபதிப் பதவியை ஏற்காது நிராகரித்ததன் மூலம், இமாம் அபூ ஹனீஃபா தன்னை கசையடிகளுக்கும் கடுஞ்சிறைவாசத்திற்கும் ஆளாக்கிக் கொண்டார். மக்களின் பொதுநிதியமான பைத்துல் மாலில் இருந்து வழங்கப்பட்ட அன்பளிப்பானது, தன்னை விலைக்கு வாங்குவதற்காக வழங்கப்படும் லஞ்சமே என்பதை மிகச்சரியாக இனம்காணுவதில் இமாம் அபூ ஹனீஃபாவுக்கு எவ்விதமான மயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை.

இன்றைய அறிஞர்களுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும், அவற்றின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் மேற்கூறிய விஷயங்களில் இமாம் அபூ ஹனீஃபாவிடம் மிகச் சிறந்ததொரு படிப்பினை இருக்கிறது என்பதை நூலை வாசிக்கும் எவரும் மறுக்க முடியாது.

நம்பிக்கை கோட்பாடுகள் (அகீதா) தொடர்பாக இமாம் அபூ ஹனீஃபாவின் காலத்தில் நிலவிய சில சர்ச்சைகளுக்கு உதாரணமாக குர்ஆனின் படைக்கப்பட்ட தன்மை, கழா-கத்ரு, ஈமான் மற்றும் அமலின் யதார்த்தநிலை என்பவற்றைக் குறிப்பிடலாம். அவை தொடர்பாக இமாம் அபூ ஹனீஃபா கொண்டிருந்த தெள்ளத் தெளிவான நிலைப்பாடுகளையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

அகீதா எனும் இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகளின் சுற்றளவை மென்மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்லும் ஒரு போக்கையும்; அதன் தர்க்க விளைவாக, அந்தக் கோட்பாடுகளின் விஷயத்தில் தமது புரிதல்களுடன் உடன்படாத யாவரையும் நெறிபிறழந்தவர்கள் என்று முத்திரைகுத்தும் அபாயகரமானதொரு போக்கையும் இன்று நம்மால் அவதானிக்க முடிகிறது.

இமாம் அபூ ஹனீஃபாவின் தனித்துவமான கற்பித்தல் முறைகள், அக்காலத்தில் நடைமுறையிலிருந்த கற்றல் குழாம்களின் இயல்புகள் ஆகியன பற்றி நூல் தரும் தகவல்கள், இன்று இஸ்லாமியக் கற்கைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான அர்த்தமிகு உள்ளீடுகளைத் தருபவையாக அமைந்திருக்கின்றன.

பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழகம் என்றும், மதிப்பெண்கள்-பட்டயச் சான்றிதழ் என்றும் இன்றைய கல்வியானது ஒரு மேற்கத்திய முறைசார் வடிவத்திற்குள்ளாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சூழலில், மேற்கூறியன பற்றிய தகவல்கள் உண்மையிலேயே பெறுமதி மிக்கவையாகின்றன.

அபூ ஹனீஃபாவால் பயிற்றுவிக்கப்பட் முன்னணி மாணவர்களான முஹம்மது இப்னு ஹசன் அஷ்-ஷைபானி, ஜாஃபர் இப்னு ஹுதைல் ஆகியோர் பற்றி நூல் தரும் அறிமுகமும் பயனுள்ளதாக இருக்கிறது. இமாம் அபூ ஹனீஃபா அசலில் நிகழ்ந்திராத, கற்பனையான சூழ்நிலைகளை ஊகித்து, அவற்றுக்கான சட்ட வழிகாட்டல்களை வழங்க முயன்றார் என்பது பற்றியும் நூலாசிரியர் ஒரு சுருக்கப் பார்வை வழங்குகிறார். ஆர்ப்பரித்து வந்து முகத்திலறையும் பிரச்சினைகளுக்கே கூட இஸ்லாமிய வழிகாட்டுதல்களை ஆராய்ந்து பெறுவதற்கான ஊக்கம் மிகவும் மந்தமாகக் காணப்படும் இன்றைய சூழலில், இவ்வாறான அனுமான ஃபிக்ஹு பற்றி வாசிப்பது சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

ஃபிக்ஹு எனும் இஸ்லாமிய சட்டக்கலை தொடர்பான இஜ்திஹாது, இஜ்மா, கியாஸ், இஸ்திஹ்சான், உர்ஃப் போன்ற செயல்முறைகள் பற்றி வாசகர் குறைந்தபட்ச அறிமுகத்தைப் பெறமுடிவதும் நூலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp