தில்லிப் பேரரசுக்கு ஓர தேசங்களிலிருந்து ஒரு சவால்

தில்லிப் பேரரசுக்கு ஓர தேசங்களிலிருந்து ஒரு சவால்

[தமிழில் வெளியாகியிருக்கும் தன்னுடைய நூலுக்கு கோர்கோ சாட்டர்ஜி எழுதிய முன்னுரை]

“எங்கள் குழந்தைகளின் சிரிப்பினூடாகவே எங்கள் பழிவாங்கல் இருக்கும்”

- பாபி சாண்ட்ஸ் (பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய புரவிஷனல் ஐரிஷ் ரிபப்ளிகன் ஆர்மியின் உறுப்பினர். பிரிட்டிஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்தவர்)

இது என்னுடைய முதல் புத்தகம். நான் நீண்ட காலமாகவே எழுதிவருகிறேன். ஆனால், இதுவரை எந்த மொழியிலும் என்னுடைய எழுத்துகளை ஒரு நூலாக வெளியிட்டதில்லை. ஆனால், நெருக்கடி சூழ்ந்த இந்தத் தருணத்தில், தில்லியும் ஒன்றிய அரசாங்கமும் இந்தி – இந்து - இந்துஸ்தான் சக்திகளும் தொடுக்கும் தாக்குதல்களை இந்தி பேசாத இனங்களின் மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், என்னுடைய எண்ணங்களை ஒரு புத்தகமாகத் தொகுக்க வேண்டியது அவசியம் என்று நினைத்தேன். அதுவும் இந்த நெருக்கடியின் ஏதேனும் ஓர் அம்சத்தை மட்டுமல்ல; பல்வேறு அம்சங்களை விவாதிக்கும் ஒரு நூலாக அது இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

1965இன் தியாகிகள்

அதிலும், வேறு எந்த ஒரு மொழிக்கும் முன்னதாகத் தமிழில் இந்த நூல் முதன்முதலாக வெளிவருவது மிகவும் பொருத்தமுடையது. ஏனென்றால் 1965ஆம் ஆண்டின் தியாகிகளை நினைவேந்தி நிற்கும் தேசம் தமிழர்களுடைய தேசம். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தியாகிகளுக்கான எனது வீர அஞ்சலியே இந்தப் புத்தகம். ஆயுமேந்தாத அந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழ் மொழியின் உரிமைக்காகப் போராடிய தியாகிகள் மட்டுமல்லர். அவர்கள் இந்தி அல்லாத மற்ற எல்லா தாய்மொழிகளின் உரிமைகளுக்காகவும் போராடியவர்கள். அவர்கள் மொழி உரிமைக்காகப் போராடியவர்கள் மட்டுமல்லர், இந்தப் பேரரசின் ஆதிக்கத்துக்குட்பட்ட நமது மொழிசார் தாயகங்களின் பல்வேறு உரிமைகளுக்காகப் போராடிய தியாகிகள். அந்தத் தியாகிகளை போற்றி வணங்குகிறேன். நான் ஒரு வங்காளி, இந்திய ஒன்றியத்தின் இந்தி பேசாத குடிமகன், இந்த உலகுக்கு உலகத் தாய்மொழி நாள் என்னும் பிப்ரவரி 21-ஐ அளித்த ஒரு மொழியைப் பேசுகிறவன். என்னுடைய மொழிக்கும் அதற்கென சொந்தமாகத் தியாகிகள் உண்டு. ஆனாலும் 1965இன் தியாகிகள் எங்களுடைய தியாகிகளும்கூட.

உண்மையில், இப்படி ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. ஆனால், எழுத வேண்டிவந்தது. கருப்பின தேசியவாதி அஸ்ஸாதா ஷகூர் பின்வரும் சொற்களைச் சொன்னபோது என்ன நினைத்திருப்பாரோ அதையே இப்போது நானும் நினைக்கிறேன்: “நான் போரினை வெறுக்கிறேன். ஆனால், வாழ்க்கை வெறும் போராட்டமாக இருப்பதையும் வெறுக்கிறேன். போர் தேவையே இல்லாத உலகமொன்றில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அப்படி இல்லையே! போரை உண்மையிலேயே வெறுக்கிறேன். இந்தப் போராட்டச் சூழல், ஒரு போர் வீரனாக இருப்பது, போராடிக் கிடப்பது – இதெல்லாம் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என் மீது திணித்த ஒன்றுதான். இல்லையென்றால் நான் ஒரு சிற்பியாகவோ, தோட்டக்காரியாகவோ, தச்சராகவோ இருந்திருப்பேன் – பாருங்களேன், எதை வேண்டுமானாலும் நான் செய்திருக்க முடியும்தானே. நான் முழுமையான போராளி அல்ல, தயக்கமுள்ள போராளி, தயங்கித் தயங்கி போராடுகிறவள், போராட்டமே வாழ்க்கை என்றிருப்பவள் அல்ல... நான் போராடுகிறேன், வேறு வழியில்லை... ஏனென்றால் நான் வாழ்ந்தாக வேண்டும்...”

ஒரு சிலர் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் பிறந்த நாட்டில் அவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாந்தர மூன்றாந்தரக் குடிமக்களாக இல்லை. ஆனால், அவர்களில் ஒருவனாக நான் இல்லை. தில்லியின் இந்திப் பேரரசில் நான் ஒரு இந்தி பேசாத ஒருவன். நான் போராடியாக வேண்டும். என் தமிழ் உடன்பிறப்புகளாகிய நீங்கள் போராடியாக வேண்டும். இந்தி பேசாத குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவருமே போராடியாக வேண்டும். நமக்கு வேறு வழி இல்லை. நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நமது குழந்தைகளின் சிரிப்புக்கு நாம் உத்தரவாதமளிக்கக்கூடியவர்களாக அந்தக் கடமை நமக்கு இருக்கிறது. நமது மறைந்த முன்னோர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே நான் எழுதுகிறேன், பேசுகிறேன், செவிமடுக்கிறேன். எனது எல்லாத் தமிழ் சகோதர சகோதரிகளும் எழுத வேண்டும், செவிமடுக்க வேண்டும், பேச வேண்டும். தங்களுடைய தாயகத்தில் அவர்கள் முதல்தரக் குடிமக்களாக ஆகும்வரை, அவர்களுடைய தலையெழுத்தை அவர்களே கட்டுப்படுத்தும் காலம் வரும்வரை, இந்தி ஏகாதிபத்தியம் நொறுக்கித் தகர்க்கப்படும்வரை அவர்கள் அதை நிறுத்தவே கூடாது. தமிழ் விவசாயிகள் தங்கள் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக இன்னும்கூட தில்லிக்குச் செல்கிறவரை, தங்கள்மீது கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அவமானகரமான முறைகளைப் பின்பற்றுகிற நிலைமை இருக்கிறவரை தமிழ்ச் சகோதரர்களும் சகோதரிகளும் சும்மா இருக்க முடியாது. யாருடைய கவனத்தைத் தமிழ் விவசாயிகள் ஈர்க்க விரும்பினார்கள்? எந்த நாடாளுமன்றத்தின் குழுக்களில் தமிழைப் பயன்படுத்துவது சட்ட விரோதமோ அந்த நாடாளுமன்றத்தின் கவனத்தையா?

தமிழர்கள் சும்மா இருக்க முடியாது

தனது கடல், கடலோர விவகாரங்களில் இலங்கையுடனான தனது உறவைத் தானே தீர்மானிக்கக்கூடிய உரிமை இன்று இல்லாத நிலையில் அவ்வுரிமையைப் பெறும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. தமிழர்களின் சொந்த வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பரிசோதனை செய்வதற்காக சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் பேரரசிய எஜமானர்கள் நுழைவதற்குத் தடைபோடும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. நீட்டைத் தங்கள் நிலத்திலிருந்து தூக்கியெறியும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. அனிதாவுக்கு நீதி கிடைக்கும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடமே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. தங்களின் விதிக்குத் தாங்களே எஜமானர்கள் என்கிற நிலையை எட்டும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. இந்தி என்கிற மொழியின் இந்திப் பேரரசின் கலாசாரத்தின் அடிமைகளாக இருக்கும்வரை தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் ஒரு பைசாகூட தமிழ்நாட்டிலேயே இருத்திவைக்கப்பட வேண்டுமே ஒழிய, இந்தி பேசும் மாநிலங்களுக்காக வாரி வழங்கப்படக் கூடாது என்கிற நிலை வரும்வரை தமிழர்கள் சும்மா இருக்கமுடியாது. தமிழர்கள் சும்மா இருக்க முடியாது. சும்மா இருக்கக் கூடாது. இந்த நூல் தமிழர்களிடமும் வங்காளிடமும் கன்னடர்களிடமும் பேச விரும்புகிறது. மற்றவர்களிடமும்கூட. நாம் சும்மா இருக்க முடியாது, கூடாது என்பதைச் சொல்ல விரும்புகிறது. தங்களைப் பீடித்திருக்கும் சங்கிலிகள் உடைபடும்வரை அடிமைகள் சும்மா இருக்க முடியாது.

என்னுடைய களக் குறிப்புகள் அல்லது பார்வைகளின் தொகுப்பே இந்த நூல். இந்தி – இந்து - இந்துஸ்தான் பேரரசின் பலிகடாவாக உள்ள ஒருவரின் பார்வை இந்த நூல். உடல்பருத்த, குட்டையான, தலைசொட்டை விழுகிற, அரிசிச் சோறு சாப்பிடுகிற வங்காள பலிகடாவின் பார்வை. அந்த வங்காளி உங்கள் சகோதரன். உங்கள் சகோதரனுக்கு உங்களிடம் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் உதவியை, நட்பை அவன் நாடுகிறான். நாம் ஒன்றுபட்டாக வேண்டும் என அவன் கூறுகிறான். அந்த அறைகூவல்தான் இந்தப் புத்தகம்.

கலாசாரத்தையும் அரசியலையும் பற்றி இந்த நூல் பேசுகிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி இந்த நூல் பேசுகிறது. ஒரு வங்காளிக்கு இதில் என்ன அக்கறை என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். ஏன்? ஏனென்றால், நமது போராட்டம், ஒரே போராட்டம்தான். தமிழன் என்கிற எண்ணமே எல்லாவற்றிலும் முதன்மையானது என்று நீங்கள் சொன்னால் இந்தி ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒருபோதும் புரியப்போவதில்லை. ஏனென்றால் இது அவர்களுடைய ஏகாதிபத்தியம். ஆனால், எங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது புரியும். எப்போதும் புரிந்துகொண்டுதான் இருக்கிறோம்.

இந்தியாவுக்கு முன்பே தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தி பேசாத இனங்களைச் சேர்ந்த நாங்களும் இருக்கிறோம். இன்று அவர்கள் ஜல்லிக்கட்டைத் தடை செய்கிறார்கள். நாளை அவர்கள் நாங்கள் எங்களுடைய மா துர்காவுக்கோ மா காளிக்கோ விலங்குகளைப் பலியிடுவதைத் தடுப்பார்கள். இது தமிழர்களுடைய பிரச்னை மட்டுமல்ல. இது ஒரு கலாசார, பொருளாதார, அரசியல் பிரச்னை. இது எங்கள் பிரச்னை, நமது பிரச்னை. இது கூட்டாட்சி தொடர்பான பிரச்னை. தில்லி அதிகாரத்துக்கும் நமது அதிகாரத்துக்கும் இடையிலான பிரச்னை. அயோத்திப் பிரச்னை எப்படி ராமர் கோயிலுக்கான பிரச்னை மட்டுமில்லையோ அதைப் போல ஜல்லிக்கட்டுப் பிரச்னை விலங்குகள் உரிமை தொடர்பான பிரச்னை மட்டுமல்ல. அவர்கள் காட்டுகிறார்கள் – யார் ‘பாஸ்’ என்று காட்டுகிறார்கள்.

தமிழர்களுக்குக் கிடைத்த பரிசு என்ன?

1952இல், மொழிச் சமத்துவ உரிமையைக் கோரிய பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான வங்காளிகளை பாகிஸ்தான் படைகள் சுட்டுக் கொன்றன. 1965இல், மொழிச் சமத்துவ உரிமையைக் கோரிய 400க்கும் அதிகமான தமிழர்களை இந்தியப் படைகள் கொன்றன. வங்காளிகளுக்குக் கிடைத்த பரிசு தனி நாடு. தமிழர்களுக்குக் கிடைத்த பரிசு ஜல்லிக்கட்டுத் தடை. தமிழ் ரத்தம் அவ்வளவு மலிவானது போலும்.

உங்கள் உழைப்பும் வளங்களும்கூட அப்படித்தான் போலிருக்கிறது. அவையும் மலிவானவைதான். அன்புத் தமிழர்களே, ஜல்லிக்கட்டு போன்ற உங்கள் சொந்த வழமைகள் குறித்த விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் மீது திணித்தது 1947தான். அதற்குப் பதிலாக, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தையும் உங்கள் வள ஆதாரங்களையும் உங்கள் உழைப்பையும் கொடுத்து, தில்லியில் மெட்ரோ ரயில் போடுவதற்கும் இந்தி மாநிலங்களை வளர்ப்பதற்குமான வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். பிரமாதமான டீல்தான் இல்லையா?

தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழர்களின் போராட்டம் உற்சாகத்தைத் தொற்றச்செய்யும் ஒன்று. ஆம், அந்தப் போராட்டங்களில் நான் எதிர்காலத்தைப் பார்க்கிறேன். அந்தப் போராட்டங்களில் சங்கிலிகள் உடைபடுவது என் கண்முன் காட்சியளிக்கின்றன. ஜல்லிக்கட்டு சரியா, தவறா என்பது தமிழர்களின் சமாசாரம். அது தில்லியின் சமாசாரம் அல்ல. இந்தப் பாடத்தைத்தான் தில்லிப் பேரரசின் சக பலிகடாக்களான தமிழர் அல்லாத எங்களுக்குத் தமிழர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். என்னுடைய இந்தி பேசாத இனங்களின் நண்பர்களிடமும் வங்காளிகளிடமும் தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி வருகிறேன். அந்தச் சினம் வடியும் பேய் விழியின் வழியாக தில்லியைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் நடந்தபோது, நான் ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்த்தேன். முதல் சில நாள்களுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தில்லி ஊடகங்களுக்குப் புரியவில்லை. என்னவோ பெரியதாக நடக்கிறது கவனியுங்கள் என்று யாரோ பிறகு அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும். பிறகு இந்த ஒட்டுண்ணிகள் தில்லியிருந்து வந்து இறங்கினார்கள். தமிழ்நாட்டிலிருந்து தமிழ் விவகாரத்தை ஒளிபரப்ப வேண்டிய நிர்பந்தத்துக்கு தில்லியின் ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசைகள் நிர்பந்திக்கப்பட்டன. அவ்வளவுதான், தில்லியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஏஜென்ட்களுக்குத் திடீரென்று வேலையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் இப்போது தமிழ்நாடே நேரலையில் இருக்கிறது. நேரடியாக, நேரலையில், மத்தியஸ்தர்கள் இல்லாமல் அது ஒளிபரப்பாகிறது.

தில்லி இல்லையென்றால் ஒரு தேசிய தொலைக்காட்சி சானல் இப்படித்தான் இயங்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்கு அது உண்மையான தேசமாக இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் உலகத்தைத் தங்கள் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும். இந்து - முஸ்லிம், பாகிஸ்தான் - சீனா, பாலிவுட், கிரிக்கெட் ஷிட் என தில்லிக்காரர்கள் ஒவ்வொரு இரவும் நம்மை வதைக்கிறார்களே, அந்தப் பார்வையிலிருந்து பார்க்கக் கூடாது. உலகத்தை நாம் நமது வழியில் பார்க்கலாமே, தில்லி வழியாக எதற்கு? ஒவ்வொரு பகலிலும் ஒவ்வொரு இரவிலும். கற்பனை செய்துபாருங்கள். நாம் எவ்வாறாக இருந்திருப்போம் என்று இந்தி பேசாத மக்கள் கற்பனைசெய்து பார்க்க உதவிசெய்தது ஜல்லிக்கட்டு. நமது இரவுகள் எவ்வாறு இருக்கக்கூடும், நமது பகல் வேளைகள் எவ்வாறு இருக்கக்கூடும், நமது உலகம் எவ்வாறு இருக்கக்கூடும்.

தில்லி ஊடகங்கள் அதைக் கவனம் குவித்துப் பார்த்த அந்த வேளையிலும், என்னதான் அங்கே நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஒரு தில்லி ஆங்கில சானலில் யாரோ மாலேகி அம்மையார், தமிழர்களுடைய கலாசாரம், அடையாளத்தில் சில அம்சங்களில் “நாகரிகமான கலாசார நடைமுறை” இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். மூன்று மாநிலங்களில் சீற்றம் வெடித்துக் காளைகளைக் கட்டிப்பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள் என்பதை அறிந்த அந்த அம்மையார், அவர்கள் “கோஷாலாவுக்குச்” சென்று மாடுகளை கட்டிப்பிடித்துக் கொள்ளலாமே என்றார் (கோஷாலா என்றால் இந்தி வட்டாரத்தில் மாட்டுக் கொட்டகை என்பதற்கான இந்திச் சொல்லாக இருக்கலாம் என்று அறியவருகிறேன்).

மறந்துவிடாதீர்கள் தமிழர்களே, நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தாலும் உங்கள் உழைப்பாலும் மூலதனத்தாலும் கொழிப்பதுதான் இந்தத் தில்லி என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தத் தில்லிக்கார மாலேகி அம்மையார் ஒரு தில்லி சானலில் இப்படிப் பேசலாம், தில்லி கைதட்டி ஆரவாரிக்கலாம். தமிழர்களோ திகைத்து நிற்கலாம். காரணம் – 1947.

தமிழர்கள் பற்றியோ தமிழ்நாடு பற்றியோ தில்லிக்கு எந்த எழவுமே புரியவில்லை என்பதுதான் இந்தக் கோலக்கூத்துகளைப் பார்க்கையில் தெளிவாகப் புரிந்தது. தமிழராக இருக்கிற ஒரு “இந்து” தம்பதியினர் தங்கள் பிள்ளைக்கு சார்லஸ் ஆன்டணி என்று பெயர் வைக்க முடியும் என்பது சர்வ சாதாரணமான ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். இந்து – இந்தி - இந்துஸ்தான் அதை ஒரு “கிறிஸ்தவ” பெயர் என்று பார்க்கலாம். ஆனால், சார்லஸ் ஆன்டணி என்பதைவிட வேறெந்தப் பெயர் அவ்வளவு தமிழ்ப் பெயராக இருந்துவிட முடியும்! எப்படிப்பட்ட மக்களிடம், எப்படிப்பட்ட தாய்நாட்டுப் பற்றுள்ள செம்மாந்த தேசத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்பது தில்லி பேரரசுக்கு – அதன் எல்லா ‘ரா’வான தன்மைகளுடன் - ஓர் இழவும் தெரியாது. நேர்மையான நெஞ்சுரம் கொண்ட புர்கினோ புசோவின் புரட்சிகரத் தலைவன் தாமஸ் சன்காரா எப்படிப்பட்ட மக்களைப் பற்றி நினைத்தால் உச்சி முகர்வாரோ அப்படிப்பட்ட மக்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்று தில்லிக்குத் தெரியாது.

இந்திய ஒன்றியத்துக்கு தேசிய மொழி இல்லை

இந்த நூல் மொழியைப் பற்றி பேசுகிறது. இந்தி நமது தேசிய மொழி என்கிற ஒரு வாசகத்தை அல்லது உரிமைகோருதலை நான் பெரும்பாலும் ஏமாற்றுக்காரர்களிடமிருந்தும் முட்டாள்களிடமிருந்தும் இனவெறியர்கள் / இனவுயர்வுவாதிகளிடமிருந்தும் உண்மையிலேயே விஷயமறியாதவர்களிடமிருந்தும்தான் கேட்கிறேன். இந்தி தேசிய மொழியாக இருக்கக்கூடிய எந்த தேசமும் என்னுடைய தேசமாக இருக்க முடியாது. முன்பு அப்படி இருந்ததும் இல்லை, இனி இருக்கவும் இருக்காது. இந்தி என் தேசிய மொழி அல்ல. இந்திய ஒன்றியத்துக்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லை. இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாகவும் சாதி - வர்க்கப் பிணைப்புள்ள, ரகசியத் திருடர்களின் மொழியாக ஆங்கிலத்தையும் கருதுகிற அந்த தில்லி – நோய்டா – குருகாவ்ன் – பாம்பே - ஒயிட்பீல்டு கும்பல்கள் எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிடலாம். இந்தியை தேசிய மொழியாக ஏற்காத இந்திய ஒன்றியத்தின் பல்வேறு தேசிய இனங்களின் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்வார்கள். நானும் அவர்களில் ஒருவன்.

ஒரு மொழியைத் திணித்தால் அது தவறில்லை, அது வாழ்க்கைக்கு உபயோகப்படும் என்கிற தர்க்கம் சரியென்றால், இந்திய ஒன்றியத்துக்குள் தற்போது நடக்கும் மக்கள் புலப்பெயர்ச்சியின் வடிவங்களையும் இடங்களையும் பார்க்கும்போது, இந்தி வட்டாரத்துக்காரர்கள்தான் இந்துஸ்தானத்திலுள்ள தங்கள் பள்ளிகளில் வங்க மொழியையோ தமிழ், கன்னட, மராத்தி மொழிகளையோ கற்றுக்கொள்ள வேண்டுமே ஒழிய, நாம் அவர்களது மொழியை கற்றுக்கொள்வதில் பயனில்லை. இதை யுப்பி வகை ஆசாமிகளுக்காகச் சொல்கிறேன். பெரும்பாலான சமயங்களில், உழைக்கும் மக்கள் எப்போதுமே தாங்கள் செல்லும் இடங்களின் மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள். அப்படி கற்றுக்கொள்ளாதவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஏகாதிபத்தியத்தின் கருவிகளாக ஆகிவிடுகிறார்கள். இந்தி பேசாத தாயகங்களுக்குச் செல்லும் “கல்வி கற்ற” மனிதர்கள் உள்ளூர் மொழிகளைக் கற்றுக்கொள்வதே இல்லை. ஆனால், போகும் நாடு வெள்ளைக்காரர்களுக்குரிய நாடாக இருந்தால், அது வேறு விஷயம்.

இந்திய ஒன்றியத்துக்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லை. ஏனென்றால் இந்தியா ஒரு தேசம் இல்லை. இது ஒரு நிர்வாகம். வங்க மொழிதான் என் தேசிய மொழி. அதைப் போலவே “இந்தியக் கலாசாரம்” என்றும் எதுவும் கிடையாது. மொழி இல்லாமல் கலாசாரம் இல்லை. இந்தியன் என்று ஒரு மொழி இல்லை. இந்தியை தேசிய மொழி எனச் சொல்லும் தேசிய அடையாளத்தை நாம் நிராகரிக்க வேண்டும். சமத்துவம் அடிப்படையில் இரு தரப்பும் ஒப்புக்கொண்டு இணைந்தால் அதன் பெயர் காதல். சமத்துவம் இல்லாமல் ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது ஒப்புதலின்றி ஆதிக்கம் செலுத்தினால், அதன் பெயர் ரேப்.

இந்துத்துவம் மட்டுமல்ல பிரச்னை

நமது கண் முன்பாகவே, நம்முடைய வருவாயைப் பறித்துப் பயன்படுத்திக்கொண்டே, இந்திய ஒன்றியத்தின் இந்தி வட்டாரம் பாசிசத்துள் வீழ்கிறபோது அது இந்தி பேசாத தாயகங்களையும் சேர்த்தே அச்சுறுத்துகிறது. இந்நிலையில், இந்த அபாயகரமான சித்தாந்தம் ஊற்றெடுப்பது இந்துஸ்தான் பிரதேசத்தின் (அதாவது கெள பெல்ட் என்றழைக்கப்படுகிற பிரதேசத்தின்) இந்துத்துவாவிலிருந்து மட்டுமல்ல, அவர்களுடைய மொழியிலிருந்தும்கூட என்பதை சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. இதை நாம் தெளிவுபட எடுத்துச்சொல்ல வேண்டும். இந்தி பேசாத மக்களே, நீங்கள் இந்துத்துவாவுக்கு எதிராக மட்டும் நின்று, ஆனால் இந்தி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நிற்கவில்லை என்றால், ஒன்று நீங்கள் அப்பாவியாக இருக்க வேண்டும் அல்லது தில்லிப் பேரரசின் பாஜக அல்லாத கும்பலின் ஒரு ஏஜென்ட்டாக இருக்க வேண்டும்.

இந்தி பேசாத உங்கள் தாயகத்தில் இந்தி – இந்து - இந்துஸ்தான் சித்தாந்தத்தை நொறுக்கி உடையுங்கள். இந்த பைசாச சாம்ராஜ்யத்தின் ஒவ்வோர் அங்கத்தையும் தனித்தனியாகப் பெயரிட்டு அழையுங்கள். இந்தி – இந்து - இந்துஸ்தான். பன்முகப் பிசாசின் ஏதேனும் ஒரு முகத்தை மட்டுமே எதிர்ப்போம். தேர்வுசெய்கிற என்று தப்பாட்டத்தை ஆடாதீர்கள். இந்த ஆட்டத்தை நாம் நன்கு அறிவோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் நீண்டகாலமாகவே இருந்துவிட்டோம். அந்த அளவுக்கு அந்த ஆட்டத்தை தில்லி ஆடியிருக்கிறது. இனி உங்கள் ஆட்ட விதிகள் இந்தி பேசாத இனங்களைக் கட்டுப்படுத்தாது. இனி எங்கள் வழிக்கு வாருங்கள், இல்லையென்றால் வழிமறித்து நிற்காதீர்கள். வெளியே போங்கள். இந்த விஷயத்தில் இனி பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் எல்லாம் கிடையாது. குறிப்பாக ஒரு மொழி வெறுப்பின் வாகனமாக, பாசித்தின் வாகனமாக ஆக்கப்படும் என்றால், சும்மா கை கட்டி நிற்க முடியாது.

பேரரசு என்னும் பேராபத்து

பேரரசு என்பதே ஒரு குற்றம்தான். இந்த ஒற்றுமை அமைப்புகள் அந்தப் பேரரசின் மற்றுமொரு முகமாகவே இருந்துவந்திருக்கிறது. பேரரசையும் அதனுடைய அத்தனை மகிமைகளையும் சேர்த்து நாம் மரியாதையோடு கொன்று புதைக்க வேண்டியிருக்கிறது. தில்லியோடு கைகோத்து நிற்பது என்பது காஷ்மீருக்கும் மணிப்பூருக்கும் நாகாலாந்துக்கும் வங்கத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக நிற்பது என்று பொருள். இந்தி பேசாத உங்கள் தாயகத்துக்கு எதிராக நிற்பது என்று பொருள். தில்லியின் தாளத்துக்கு ஆட்டம்போடும் அவாவிலிருந்து முதலில் வெளியேறுங்கள். பேரரசுக்கு நீங்கள் கடன்பட்டவர்கள் அல்ல. தாயகம் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லாதவர்கள்தான் ‘ஐடியா ஆஃப் இந்தியா’ என்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, இந்திய ராணுவம் எங்கே மிகப் பெரிய ஆயுதந்தாங்கிய கும்பலாக இருக்கிறதோ அந்த இடம்தான் அவர்களுடைய கருத்துப்படி இந்தியா. இந்திப் பேரரசிலிருந்து நீங்கள் உங்கள் தேசத்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. தில்லியைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமற்ற நிலையை உருவாக்குங்கள். உங்கள் மூளையையும் மனசாட்சியையும் முதலில் காலனிய நீக்கம் செய்வதிலிருந்து அதைத் தொடங்குங்கள்.

இந்த நூல் பேரரசைப் பற்றியது, அதன் ஏகாதிபத்தியத்தைப் பற்றியது. நமது எதிர்காலத் தலைமுறைகள் நமது சொந்த மக்களாகவே இல்லாமல்போய், சமூக – கலாசார - மொழி அந்நியர்களாக ஆக்கப்படுகிறார்களே, இப்படி நமது சொந்த விவகாரங்களில் தீர்மானிப்பதற்கான நமது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படுவதை கண்முன்னால் பார்த்துக்கொண்டு செயலற்று உட்கார்ந்திருக்கப் போகிறோமா? இந்தக் கேள்வியை இந்தி பேசாத மக்கள் மற்றும் / அல்லது மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகள் தங்களைத் தாங்களே உடனடியாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்திய ஒன்றியம் ஒரு முழு சர்வாதிகார போலீஸ் அரசாக மாறுவதை இப்போதைக்குத் தடுத்து நிறுத்திக்கொண்டிருப்பதே இந்தி பேசாத மாநிலங்கள்தான். இந்திய ஒன்றியத்தின் பெரும்பகுதி இந்தப் பகுதிதான். அதற்குக் காரணம் இந்தி பேசா மாநில அரசாங்கங்கள்தான். இந்திய மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகள் இதற்காக நமக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களால்தான் இன்று அவர்களுக்கான பாதுகாப்பே நீடித்திருக்கிறது.

ஆனால், நமக்கென்று ஒன்றுமே இல்லை. நாடாளுமன்றத்தில் முன் அனுமதியில்லாமல் தங்கள் தாய்மொழியில் பேச முடியாது என்கிற நிலையில் ஒரு பில்லியன் இந்தியக் குடிமக்கள் இருக்கிறார்கள். இவர்களோ கருத்துரிமை, பேச்சுரிமை குறித்து தில்லி தீர்மானிக்கும் விவாதங்களில் ஏதோ பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியம் இப்படித்தான் செய்யும். சர்க்கஸில் நீங்கள்தான் அந்தக் கோமாளி. உங்கள் சொந்தப் பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் ஆதரித்து நில் என்று அது உங்களை நிர்பந்திக்கும். தில்லிப் பேரரசு என்பது கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கிரிமினல்கள், பனியாக்கள், ரேபிஸ்ட்கள், திங்க்-டாங்குகள், “வீர” மரபினங்கள், மாமாக்களின் குற்றக் கூடாரம். மறக்காதீர்கள்.

பேரரசுகளுக்கு மனச்சாட்சி கிடையாது. தேசங்களுக்கு உண்டு. பேரரசுகள் அதிகாரங்களைக் கைமாற்றிக் கொள்கின்றன. தேசங்களோ சுதந்திரத்தைப் போராடிப் பெறுகின்றன. எல்லாப் பேரரசுகளுக்கும் முடிவு உண்டு. பேரரசால் என் கையைக் கட்ட முடியும், வாயைக் கட்ட முடியும், நாவைக் கட்ட முடியும். என் மனத்தை எவ்வாறு கட்ட முடியும்?

என்னுடைய நண்பரும் தோழருமான ஒருவர் நடத்தும் ஒரு தனிப் பதிப்பகத்தின் வழியாக, இந்த நூலைத் தமிழில் கொண்டுவருவது என்பது நன்கு யோசித்து எடுத்த முடிவு. ஏனென்றால் நாம் நமது நட்புகளையும் தொடர்புகளையும் நிறுவனங்களையும் நாமேதான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். தமிழர்களும் வங்காளிகளும் தில்லி மூலமாகப் பேசிக்கொள்ள வேண்டியதில்லை. நாம் நாமாகவே பேசிக்கொள்ள முடியும், பேசுவோம். இடையில் தில்லியைத் தலை நுழைக்கவிட்டோமென்றால், அது தன்னைப் பற்றித்தான் பேசும். தன் கவலைகளையெல்லாம் நமது கவலைகளாகச் சொல்லிப் பேசும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது அல்லது வங்கத்தில் வெள்ளம் என்பதைவிட தில்லியில் குளிர்காலத்தில் காற்றில் மாசுபாடு அதிகமாகிவிட்டது என்பதைத்தான் நமக்கு மிக முக்கியமான செய்தியாக்கிவிடும்.

அந்த நகரம் அவர்களுடையது, அந்தப் புகையும் அவர்களுடையது. அந்த மாசுபாடும் அவர்களுடையது. பேரரசும் அவர்களுடையது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் எல்லாம் அவர்களுடையது. அந்த நெடுஞ்சாலைகள் அவர்களுடையது. அந்த “கலாசாரம்” அவர்களுடைது. ஹோலி அவர்களுடையது. திவாலி அவர்களுடையது. பாலிவுட் அவர்களுடையது. மெட்ரோ அவர்களுடையது. புரட்சி அவர்களுடையது. மீடியா அவர்களுடையது. நிதி மட்டும் நம்முடையது.

தில்லி - குர்காவ்ன் - நோய்டாவின் காஸ்மோபாலிட்டன் யுப்பி - கோஷ்ட்டியின் விளையாட்டு, கலாசாரம், மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் எல்லாவற்றையும் கண்டு நான் அஞ்சுகிறேன். அவற்றுக்கான மீடியா கவரேஜையும் கண்டு அஞ்சுகிறேன். நம்முடைய மாநிலங்களிலிருந்து மேலும் மேலும் பணத்தை உறிஞ்சி உள்கட்டுமான வளர்ச்சி என்கிற பெயரால் தங்களுடைய தலைநகர வட்டாரத்துக்காகச் செலவிடுவார்களே என்று அஞ்சுகிறேன். பாருங்களேன்... ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஏற்படுகிற மாசுபாடுகூட நம்மை பாதிக்கிறது. தில்லி பேரரசுதான் எத்தகையோர் சாபம்!

நாம் தொடர்ந்து பேசுவோம்

இந்த நூலில் நான் ஓர் உரையாடலைத் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள். முகநூலில் என்னைப் பின்தொடருங்கள். நீங்கள் நிச்சயம் என்னை விமர்சிக்க வேண்டும். ஆனால், உங்கள் சகோதரனாக எண்ணி என்னை விமர்சனம் செய்யுங்கள். நான் உங்கள் எதிரி அல்ல. நீங்களும் என் எதிரி அல்ல. எனக்கு எதிரிகள் உண்டு, அவர்கள் உங்கள் எதிரிகளும்கூட. நாம் பேசுவோம். பிறரோடு பேசுங்கள். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்ன செய்ய முடியும்? பேசுவோம்.

இது ஒரு புத்தகத்தின் முன்னுரை போலவே இல்லை அல்லவா? ஆமாம். ஆனால், வழக்கமான அர்த்தத்தில் இது ஒரு புத்தக முன்னுரை அல்ல. இது என்னுடைய இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு நான் எழுதும் ஒரு நீண்ட கடிதம். இந்தக் கடிதத்தோடு சேர்ந்துவரும் பின்னிணைப்பு போன்றதுதான் இந்தப் புத்தகம். இந்த முன்னுரை ஒரு கடிதம் என்பதால் இந்த நூல் ஓர் எழுத்தாளரால் எழுதப்படவில்லை; உங்கள் சகோதரர் ஒருவரால் எழுதப்படுகிறது என்பதாகப் புரிந்துகொள்ளுங்கள். இது புத்தகம் அல்ல; என் கை. இதைப் பற்றிக்கொள்ளுங்கள். நாம் இருவரும் பரஸ்பரம் கைகளைப் பற்றிக்கொள்வோம்.

தேசபக்தராக இருக்க அச்சப்படாதீர்கள். பேரரசுகளுக்குத் துரோகிகள் கிடையாது. ஆனால், தேசங்களுக்குத் துரோகிகள் உண்டு. பேரரசுகளுக்குச் சேவை செய்பவர்கள்தான் தேசங்களின் துரோகிகள். பேரரசுகள் என்பவை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள். அவர்களுடைய பேரரசுதான் என்ன? “பொதுமை” என்கிற மாயை மூலமாகப் பொருளாயத ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் பலனடையும் குழுக்களின் சாம்ராஜ்யக் கூட்டுதான் பேரரசு. 1965இல் தமிழர்கள் பேரரசின் பிருஷ்டத்தைப் பார்த்து ஓங்கி ஓர் உதை உதைத்தார்கள் இல்லையா, இப்போது பல்லை நறநறவென்றுக் கடித்துக்கொண்டு திரும்பிப் பாயக் காத்துக்கொண்டிருக்கிறது அந்தப் பேரரசு. நம்மை ஒழித்துவிடமுடியும் என்று நம்பிக்கையோடு இருக்கிறது அந்தப் பேரரசு. ஒருவேளை நாம் அழிக்கப்படவும் செய்யலாம். ஆனால், சரணடைய மாட்டோம். ஒருவேளை நாம் வெற்றிபெறவும் செய்யலாம். நாம் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் சாத்தியமாகாத ஒன்று ஏதுமில்லை. நாம் ஒன்றிணைந்து முயற்சி செய்தால், அவர்கள் நம்மை சீரழிப்பதற்கும் கொள்ளையடிப்பதற்கும் அஞ்சத் தொடங்குவார்கள்.

அதற்காகத்தான் அவர்கள் பாலிவுட், டீம் இந்தியா, சிபிஎஸ்இ எல்லாம் வைத்திருக்கிறார்கள். உங்களுடைய மனத்தை காலனியமயப்படுத்துவதற்காக அதைச் செய்கிறார்கள். முஸ்லிம்கள் கெட்டவர்கள் என்பதைத் தவிர இதுவரை தில்லியும் இந்தியும் பாலிவுட்டும் உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பது என்ன? உங்களைக் கோமாளிகளாகச் சித்திரித்திருக்கிறார்கள். உங்களைப் பார்த்தால் வேடிக்கையாக விநோதமாக இருக்கிறதாம். உங்கள் உச்சரிப்பு தவறாம். நீங்கள் வித்தியாசமாக உடையணிகிறீர்களாம். உங்கள் சாப்பாடு சகிக்கவில்லையாம். தில்லியின் அடிமையாக உள்ள முஸ்லிம்களைவிட மற்ற எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்களாம். இதைத்தானே அவர்கள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்? உங்கள் ஆண்கள் பெண்மைத்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் உங்கள் பெண்கள் செக்ஸியானவர்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். எனவே, உங்கள் பெண்கள் அவர்களுக்கு வேண்டுமாம். உங்கள் ஆண்களை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமாம். எல்லா ஏகாதிபத்திய இனங்களும் தன் அடிமைக் குழுக்களைப் பற்றி இப்படிப்பட்ட வகைமாதிரிகளைத்தான் உருவாக்குகின்றன.

அவர்களுடைய பேரரசுகளைப் பற்றி நினைத்துப்பாருங்கள். அவர்களால் இதுபோன்ற வகைமாதிரிகளால் சித்திரிக்கப்படாத சமூகங்கள் எவை? அந்த விசேஷமான குழு எந்த மொழியைப் பேசுகிறது? அந்த விசேஷமான குழுவோடு ஒத்துழைப்பது என்பது உங்களை சுயவெறுப்பு மிகுந்த, முதுகெலும்பற்ற அடிமையாக மாற்றுகிறது. தன்மானமுள்ள ஒவ்வொருவரின் புனிதக் கடமையும் அந்த விசேஷக் குழுவின் அதிகாரத்தை முற்றிலும் அழித்தொழிப்பதே.

தில்லிப் பேரரசின் விருப்பங்கள்

முதலில், சட்டரீதியாக ஒத்துழைப்பதை எல்லாவகையிலும் நிறுத்துங்கள். சட்ட ரீதியில் எல்லா சாத்தியங்களையும் கொண்டு அவர்களை எரிச்சலடையச் செய்யுங்கள். தன்மானத்துக்கும் உரிமைக்குமான வழியில் அது சிறிய தொடக்கம். அதனால்தான் அவர்கள் சோ ராமசாமிகளையும் சிதம்பரங்களையும் எச்.ராஜாக்களையும் நேசிக்கிறார்கள். இந்த சமத்தான தில்லி ஏஜென்ட்களும் சாம்ராஜ்ய அரண்மனையில் அறிவுக்கொழுந்துகளாக நடந்துகொள்ள முயல்கிறார்கள். உங்கள் தாயகத்துக்குத் துரோகமிழைக்கும் இந்த ஏமாற்றுக்காரர்களையும் துரோகிகளையும் நிராகரியுங்கள். பேரரசுக்கு வக்காலத்துக்கு வாங்கும் வஞ்சகர்கள் இவர்கள்.

மார்கண்டேய கட்ஜு தமிழர்களுக்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று “வேண்டுகோள்” விடுப்பதில் ஆச்சர்யமே இல்லை. இந்தப் பேரரசின் மதச்சார்பற்ற - லிபரல் அணியின் பிரதிநிதி அவர். தமிழர்கள் குட்டிப் பாப்பாக்கள் போன்றவர்கள் என்றும் அவர்கள் வளர்வதற்கு உதவிசெய்ய வேண்டும் என்றும் கருதி பேரரசு நடந்துகொள்கிறது. உண்மையில் பேரரசுக்கு என்ன வேண்டும் என்றால், இந்தி பேசும் மக்களுக்கும் இந்தி பேசாத இனங்களில் பிறந்த பேரரசின் ஏஜென்ட்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள வேலைகளும் வளங்களும் வேண்டும். ஆனால், அது கடினமாக இருகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் இந்தி புழக்கத்தில் இல்லை. முதுகெலும்பும் தன்மானமும் உள்ளவர்களாகத் தமிழர்கள் இருப்பதால் இங்கே இந்தி ஏகாதிபத்தியம் எடுபடவில்லை. நாம் நமக்காக எழுந்து நிற்கும்போது தில்லிப் பேரரசுக்குப் பிடிப்பதில்லை. தில்லிப் பேரரசு எப்போதுமே வேரற்றுப்போனவர்களை விரும்பும். ஒட்டுண்ணிகளையும் விரும்பும்.

இந்தி - தமிழ் சமத்துவம்

இவை ஒரு புறமிருக்க, நமது தாய்மொழியின் கெளவரத்தின் மீதும் நம் தாய்மாரின் கெளரவத்தின்மீதும் நாம் தாய்மொழி விளங்கும் நிலம் தெய்வாம்சமாகக் கொண்ட உரிமைகளின் மீதும் தாய்மொழியின் தேசத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும், யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்பதை பிரித்தறியக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் நமது மொழிக்குத் தருகிற அதே மரியாதையையும் உரிமையையும் இந்தி மொழிக்கும் இந்தி பேசும் மக்களுக்கும் தர வேண்டும். ஒரு துளி கூடுதலாகவும் அல்ல, குறைவாகவும் அல்ல. எனவே இந்திப் பகுதியில், உத்தரப்பிதேசத்திலும் ராஜஸ்தானிலும் எந்த அளவுக்கு தமிழ்ப் பெயர்ப்பலகைகளும் தமிழைப் பாடமொழியாக கற்றுக்கொடுக்கும் பள்ளிகளும் இருக்கின்றனவோ அதே அளவுக்கு இந்திப் பெயர்ப்பலகைகளுக்கும் இந்தியைப் பாடமொழியாகக் கற்றுத்தரும் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு இடம்தர வேண்டும்.

நம்மைப் பிரித்தாளக்கூடிய பேரரசிய சூழ்ச்சிகள் இனி எடுபடாது. நமது கனவுகளும் அடையாளங்களும் உரையாடல்களும் பேரரசுகளுக்காக இனி சேவை செய்யாது. நாம் நமக்காகவே எதையும் செய்வோம். ஒரு நாள் வரும். அன்று பேரரசு தோற்கடிக்கப்படும். சென்னையிலும் கொல்கத்தாவிலும் அனிதாவின் சிலை நிறுவப்படும். அந்த நாள் என்று வருமோ எனக் காண்போம்.

இந்தப் போரை நாமா தொடங்கினோம்? இல்லை. அவர்கள்தான் தொடங்கினார்கள். அந்தப் போரை நாம் நிறுத்தப்போகிறோம். நமக்குத் தேவை அமைதிதான். நாம் நமது மொழிகளை, அடையாளங்களை, தன்மானங்களைப் பேரரசிய பலிபீடத்தில் வைத்து பலிகொடுக்கத் தயாராக இல்லை. நீங்கள் உங்கள் இந்தியையும் இந்துஸ்தானத்தையும் எங்கள் மீது திணிக்கிறீர்கள். நாம் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம். இந்தி ஏகாதிபத்தியத்தை அழித்தொழியுங்கள். அதன் பேரரசை அழித்தொழியுங்கள். உங்கள் தாயகத்தின் ஒவ்வோர் அங்கத்திலிருந்தும் அதன் இறுதிச் சுவடுகளைத் தேடித் தேடி அழியுங்கள். உங்கள் மூதாதையரின் நினைவுகளுக்காக அதை நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளின் உரிமைகளுக்காக அதை நீங்கள் செய்ய வேண்டும். மனிதனாக உங்கள் சொந்த மானத்துக்காகவும் அதை நீங்கள் செய்ய வேண்டும்.

நாம் இணைவோம். வெல்வோம்.

வெல்க தமிழ்.
ஜோய் பங்ளா.

கோர்கோ சாட்டர்ஜி

கட்டுரையாளர் கோர்கோ சாட்டர்ஜி, கொல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றுபவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மருத்துவப் பட்டதாரி. ஆங்கிலத்திலும் இந்தியிலும் பல இதழ்களுக்கு எழுதிவருகிறார். இவரது படைப்புகள் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்க தேசம். நேபாளம் போன்ற நாடுகளிலும் வெளிவருகின்றன. மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (Campaign for Language Equality and Rights - CLEAR) அமைப்பின் தொடக்க உறுப்பினர்களில் ஒருவரான கோர்கோ, நவீன தமிழக வரலாறு குறித்துக் கூர்மையான பார்வைகள் உள்ளவர். ‘உனது பேரரசும் எனது மக்களும்’ என்கிற இந்த நூல்தான் அவருடைய முதல் நூல். அவரது முதல் நூல் தமிழில்தான் வெளிவருகிறது. இந்த நூலை ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

(நன்றி: மின்னம்பலம்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp