பர்வீன் பாட வரும்போது ராத்திரி எட்டே கால் மணி. நாரதகான சபாவே அதிர்கிறபடி கரகோஷம். சட்டென்று நம்ம குடும்பத்தில் ஒருத்தர் மேடையில் வந்து உட்கார்ந்த மாதிரி எல்லோரோடும் சகஜமாகப் பேசிச் சிரித்து ஒரு நிமிஷத்தில் அந்நியோன்னியத்தை ஸ்தாபிக்க அவரால் மட்டும்தான் முடியும்.
‘நீங்க மெட்ராஸ். நல்ல அருமையான ரசனை. ஆனா, ராத்திரி ஒன்பது மணியானா டவுன் பஸ்ஸை ரயிலைப் பிடிக்கக் கிளம்பிடுவீங்க... அதுக்குள்ளே முடிச்சுக்கறேன்... சுருக்கமா ஒரு மாரு பெஹாக் மொதல்லே’. பர்வீன் தொடங்கினார்.
தன்யாசி மாதிரி ‘போர்க்கள’ ராகம் இது. அதனால்தானோ என்னமோ எத்தனையோ போர்க்களம் கண்ட சீக்கிய குருமார்களின் குரு க்ரந்த் சாகிப் – ‘குர்பானி’ பக்தி இசை கானங்கள் பலவற்றையும் மாரு பெஹாக் அலங்கரிக்கும்.
பர்வீன் சுல்தானாவின் மாரு பெஹாக்கை எழுத்தில் வர்ணிக்க நினைப்பது சமுத்திரத்தை உள்ளங்கையில் அள்ளிப் பார்க்கிற முயற்சிதான். அவருடைய இசையோடு கரைந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போயிருந்தால் எனக்கு முக்தி கிட்டியிருக்கும்.
மாரு பெஹாக் முடிந்ததும் கைதட்டோடு முழு அரங்கமே ‘பவானி, பவானி’ என்று குரல் கொடுத்தது. ‘தெரியும், நீங்க என்னை பவானி பாடாம விடமாட்டீங்க. அதுக்கு முந்தி ஒரு மீரா பஜன். அதுக்கும் முந்தி ரெண்டு வார்த்தைகள். நம்ம இசை உயர்ந்தது மட்டுமில்லே. புனிதமானது. இந்த இசையின் மாசற்ற தன்மையை, சுத்தத்தை, இதன் இந்திய குணத்தை தலைமுறை தலைமுறையா நாம பாதுகாத்து முன்னால் எடுத்து வந்திருக்கோம். வரும் தலைமுறையும் இதைத் தொடர்ந்து செய்ய வேணும்’ பர்வீன் உருக்கமாக வேண்டுகோள் விடுக்க அரங்கமே நெகிழ்ந்தது. .
மாளவ்மாண்ட் ராகத்தில் (மாள்வா மற்றும் மாண்ட் கலப்பு) மீரா பஜன். தொடர்ந்து எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ‘மா தீ பவானி’ மிஸ்ர பைரவ் –கிட்டத்தட்ட சிந்துபைரவி ராகத்தில் இசையையும், பக்தியையும் அற்புதமாகக் குழைத்துத் தீட்டிய இசை ஓவியம். பர்வீன் இதைப் பாடும்போது அந்த அற்புத அனுபவத்தில் தோய்ந்து நெக்குருகி எத்தனையோ முறை இருந்திருக்கிறேன். இன்று அப்படிப்பட்ட தேவகணங்களில் இன்னொன்று.
Be the first to rate this book.