இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு இதுவரையில் வரலாற்று ஆய்வாளர்கள் பார்வையிலிருந்து முழுமையாக எழுதப்படவில்லை என்றே சொல்லலாம். விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு கொண்ட பட்டாபி சீதாராமையா இந்திய தேசிய காங்கிரசின் அறுபதாண்டு கால வரலாற்றை எழுதினார். அது அதிகாரபூர்வமான வரலாறு என்று கூறப்பட்டது. அதில் ஒரு பிறவியில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேசபக்தச்செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பற்றி ஒரு வரி கூட இல்லை. விந்தியத்திற்கு வடக்கிலிருந்து விடுதலைப் போரைப் பற்றி எழுதியவர்கள் தெற்கை மறந்தார்கள். விடுதலைப் போர் வரலாறு எந்தக் காலம் முதல் துவங்குகிறது? இந்தக் கேள்விக்கு தெளிவான விடை இன்னும் தரப்படவில்லை.
வள்ளல் சீதக்காதி அறக்கட்டளையார் 1993 ஆம் ஆண்டிற்கான ஷேக்சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசுக்கான போட்டியினை நடத்திய போது, அதில் எளியேன் பங்கேற்று, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்களின் பங்கு (The Part played by the Muslims of Tamilnadu in India's Struggle for freedom') என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றேன். அதனை 1994 ஜனவரியில் 'விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்' எனும் நூலாக, சென்னை மண்ணடியில் வெளியிட்டேன்; தமிழர் தலைவர் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் கண்ணியத்திற்குரிய அண்ணாச்சி திருமிகு, வைகோ அவர்கள் அந்த நூலினை, வெளியிட்டுப் பேசுகையில், "அந்த நூல் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பாடப்புத்தகம் ஆக வேண்டும்; தமிழர் தம் ஒவ்வொருவர் இல்லத்தையும் இந்த நூல் அலங்கரிக்க வேண்டும் என்பதே எனது தணியாத வேட்கையாகும்" என்று முழங்கினார்கள்.
Be the first to rate this book.