"இந்த நூலில் இடம் பெற்றுள்ள 20 கதைகளின் கதை மாந்தர்கள் கற்பனையல்ல உண்மையானவர்கள். அவர்கள் சார்ந்த இயக்கத்தில் ரத்தமும் சதையுமாக இயங்கியவர்கள். இவர்களது இயக்கத்தின் நீண்டகால நடைமுறை அனுபவத்தின் பல்வேறு அம்சங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஒவ்வொரு கதையம்சமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த கதை மாந்தர்களான பெண் புரட்சியாளர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நேர்மையாளர் எவரும் குறைத்து மதிப்பிடவோ, சிறுமைப்படுத்தவோ மாட்டார்கள். அவர்கள் சார்ந்து இயங்கிய இயக்கத்தின் நடைமுறை உத்திகள் மீது விமர்சனங்களைக் கொண்டிருப்பவர்களும் அவற்றை முன் நிறுத்தி இந்த புரட்சியாளர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் சிறுமைப்படுத்துவது நியாயமாகாது.
இராணுவம், சி.ஆர்.பி.எஃப். இன்டஸ்டிரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ், காவல் துறை என கால் கட்டை விரல் முதல் தலைமுடி வரை ஆயுதபாணியாக இருக்கும் அரசு இயந்திரத்தையும், அரசு உதவியுடன் இயங்கும் ரண்பீர் சேனா, சல்வா ஜுடும் இன்னும் பல நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ தனியார் ஆயுத படைகளையும், பஜ்ரங் தள், கோ ரக்ஷன் சமிதி இன்னும் பல சாதி மத ஆதிக்க அடியாள் அமைப்புகளையும் எதிர்த்து போராடிய கால கட்டத்தில் இந்த படைப்புகள் உருவாகியுள்ளன.
இடைவிடாத வர்க்கப் போராட்டம், தலைமறைவு வாழ்க்கை, மக்கள் சங்கங்களில், தளங்களில் செயல்படுதல் காலங்களில் இந்த கதைகள் எழுதப்பட்டன. இந்த இயக்கப் போக்கில் 1970 ஆண்டுகள் முதல் இன்றுவரை பல நூற்றுக்கணக்கான பெண் புரட்சி எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் பிரபலமாகாமல் இருக்கலாம். ஒருவர் ஒரு கதையை மட்டுமே எழுதியவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுடையதான எழுத்து பாணியில் உண்மைகளை முன் நிறுத்திய படைப்புகளாக இவை என்றென்றும் வாழும் என்பதில் சந்தேகமில்லை.
Be the first to rate this book.