ஆண்டின் இறுதியில் நான் வங்கத் தலைநகர், கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கே நான் நேரில் கண்ட காட்சிகளையும் அநுபவங்களையுமே கதையில் சித்தரித்திருக்கிறேன். அந்த அமைதி குலைந்த அன்றாட வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்தும் காணும் வண்ணம், பீகார் மாநிலத்திலும் பிரயாணம் செய்தேன்; பாட்னாவில் இரண்டு மாத காலம் தங்கினேன். அரசியல் நிலைக்குக் காரணமான அறியாமையும் வறுமையும் இசைந்துவிட்டால், வன்முறைக் கிளர்ச்சிகள் தோன்றாமலிருக்க முடியாது. அந்நாளில் உயர்மட்டத்தில் விருந்து போன்ற வைபவங்களில் ஒழுக்கச் சிதைவு ஒன்றே குறியாக இருப்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பும் பெற்றேன். தனிமனித ஒழுக்கம் சமுதாயத்துக்கு என்ற அடிப்படையான காந்திய இலட்சியங்கள், நழுவிப் போய்விட்டன. அந்நாள், எனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியும் துயரமும் இந்நவீனத்தைப் புனையத் தூண்டு கோலாயின. இந்நவீனத்தைப் பலதரப்பட்ட மக்கள், ஆய்வாளர், அரசியலார் படித்து, பல வகையில் என்னிடம் கருத்துக்களையும் ஐயங்களையும் கேட்டிருக்கின்றனர். புறவாழ்வில் ஏற்படும் பாதிப்புகளினால் எனது, மன அரங்கில் ஏற்படும் கருத்துக்களும் கிளர்ச்சிகளும் எனது இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதல்களாக இருந்து வருகின்றன. 'நாவல்' என்ற இலக்கிய உருவை நான் எனது கருத்து வெளியீட்டு மொழியாகக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் அந்நாளில் கல்கத்தாவிலும் பீகாரிலும் நான் சந்தித்த மக்களையே கதாபாத்திரங்களாகவும் உலவ விட்டிருக்கிறேன்; அவர்கள் யாவரும் தனிமனிதர்களாகத் தோன்றாமல், சமுதாயத்தின் பிரதிநிதிகளாகவே தோன்றுவார்கள். தனிமனிதப் பிரச்னைகளை வளர்த்துக் கொண்டு செல்கையில் கதையமைப்பு வேறு விதமாக இருக்கக் கூடும். இங்கோ, நிகழ்ச்சிகள், நடப்புகள், கற்பனையல்ல.
-ராஜம் கிருஷ்ணன்
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை 'இந்திய சிவிக் கார்ப்ஸ்' புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம் கிருஷ்ணன் உலகம் போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்!
Be the first to rate this book.