இன்று தமிழ்க் கவிதைக் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மிகச் சில கவிஞர்களில் முதன்மையான இடம் பெற்றிருப்பவர் நா.வே.அருள். இலட்சிய நோக்கு இல்லாமல் அவர் ஒரு வரி கூட எழுதுவதில்லை.அதனால்தான்,"கவிதையில் வைத்துவிட்டு வந்த வாள் சும்மா இருப்பதில்லை போருக்குக் கிளம்பிவிடுகிறது என ஆளுமையோடு அவரால் சொல்ல முடிகிறது.
திக்குவாய் பற்றி எழுதிய மலையாளக் கவி சச்சிதானந்தன்,திக்குவாய் ஒரு ஊனமல்ல அது ஒரு பேச்சுமுறை" என்று கூறும் கவிதை வளர்க்கும் பாவனைகளுக்கு நிகராக விளங்குகிறது அருளின் 'கொட்டாவி'.இந்திய விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தைக் குறித்த கவிதைகளைத் திரட்டி வெளியிட்டதன் மூலம் தனது மக்கள் சார்புக் கோட்பாட்டுக்கு எல்லையற்ற வலிமை சேர்த்து மக்கள் கவிதையின் வரலாற்றில் தனக்கெனத் தனியிடம் வகிர்ந்து கொண்டவர் அருள்.
-பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
"நாற்காலிகளின் சர்க்கஸ் கூடாரத்தில் கவிஞன் கோமானியாக்கப்பட்டிருக்கிறான்" என்று நா.வே.அருள் பேசத் தொடங்குகிறபோதே தெரிந்துவிடுகிறது இக்கவிதைகளின் கவித்துவமும் தீவிரமும்.."பொய்யும், பொய்யர்களும் நிறைந்த இந்த உலகில், நேர்மையான ஒரு கலைப் படைப்பு என்பது எப்போதும் ஒரு சமூகச் செயல்பாடுதான்" (Robert McKee,) எனும் நிலைப்பாட்டை நா.வே.அருள்-இன் கவிதைகள் நிரூபிக்கின்றன. "கவிதையின் சமூகச் செயல்பாடு" எனும் தனது கட்டுரையில் டி.எஸ். எலியட் "ஒரு கவிதை சிறந்த கவிதையாக இருப்பது மட்டுமல்லாது அது எழுதப்பட்ட யுகத்தின் குரலாகவும் இருக்க வேண்டும்" என்று சொல்வதை இவரது கவிதைகள் கடைபிடிக்கின்றன.எதிரிகள் நமது கடைசிக் கேவல்களிலிருந்தும் மரண ஓலங்களிலிருந்தும் இசைத்தட்டுகளைத் தயாரிக்கிறார்கள் என்று அவர் ஒரு கவிதையில் பேசிச் செல்கிறபோது ஒரு கைதேர்ந்த கவிஞனின் கைவிரல் ரேகைகளின் தடயங்களைக் காண்கிறோம். இத்தொகுதியில் உள்ள கவிதைகள் அதிநவீன தற்காலக் கவிதையின் உடல்மொழியுடன் நடனமாடுகின்றன.
-கலை விமர்சகர் கவிஞர் இந்திரன்
Be the first to rate this book.