தற்காலத்தில் குழந்தைகளுக்குப் பெற்றோரோ உறவினரோ கதை சொல்லும் வழக்கம் இல்லை. தொலைக்காட்சித் தொடர்கள் அப்பழக்கத்தை நிறுத்திவிட்டன. கஜா புயல் வந்தது. விளைவாக எங்களுக்கு இருபத்தைந்து நாட்களாக மின்சாரம் இல்லை. மாலையில் எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு காலம் தள்ளினோம். குழந்தைகள் எல்லாம் சுற்றி உட்கார்ந்து கொண்டு கதை சொல்லும்படி கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
“தாத்தா! இங்கிலீஷ் கதை ஒன்று சொல்லுங்கள்”-இது பெயர்த்தியின் ஆசை.
குழந்தைகள் ஆங்கிலக் கதையைச் சொல்லச் சொல்கின்றனர். ‘சாலமன் அரசரின் வைரச் சுரங்கம்’ கதையினை நினைவுக்குக் கொண்டுவந்து தமிழில் சொல்லி முடித்தேன். ஒரு வாரம் நன்றாகப் பொழுது போனது. குழந்தைகளுக்குக் கதை முடிந்துவிட்டதே என்று வருத்தம் மேலிட்டுவிட்டது.
எதைக் கொடுத்தாலும் அவர்களால் ஏற்கமுடியும். நமக்குத்தான் எதுவும் சரியாகத் தெரியவில்லை! அதனால் நாம்தாம் கொடுக்க மறுக்கிறோம் என்று புரிந்தது. “இந்தக் கதையை எழுதி அச்சிட்டுக் கொடுங்கள்”, என்று ஆணையும் பிறப்பித்தான் பேரன்.
தனித்தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. எதற்காகவும் நான் தமிழை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. நல்ல தமிழில் இதை எழுதி இருக்கிறேன். சில சொற்கள் வடமொழி போல மயக்கும் அவை தமிழ்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே எழுதி இருக்கிறேன். பிற மொழிப் பெயர்களின் ஒலி ஒற்றுமைக்காக கிரந்த எழுத்துகளை விலக்கவில்லை. அதனால் சில இலக்கண மீறல்களும் இருக்கலாம். கதையைச் சுவைபட அமையவே அதைக் கையாண்டேன்.
- அ.த. பன்னீர் செல்வம்
Be the first to rate this book.