இராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை.
அதே போல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்று விடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே, 'உத்தர காண்டம்' என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடிவெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை, சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர்.
காந்தியடிகள் கண்ட சுயராச்சிய, கிராம ராச்சியக் கனவுகள், தனிமனிதத் தூய்மை, ஒழுக்கப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் அந்த வரையறைகள் மெல்ல மெல்ல, தனனலம், பதவி, புகழ் ஆகிய பூச்சிகளால் அழிக்கப் பெற்றன. அதே பூச்சிகள், மனித வாழ்வியலின் அனைத்து நல்லணுக்களையும் விழுங்கி, புற்று வளர்ச்சி போன்றதொரு சமுதாய வளர்ச்சியை, மேன்மையைத் தோற்றுவித்திருக்கிறது. வாழ்க்கை வசதிகள் ஏராளம். ஆனாலும் அடிப்படை வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில், நான் இந்தப் புதினத்தை எழுதுவதற்கான உந்துதல் பெற்றதற்கொரு காரணம் உண்டு.
Be the first to rate this book.