முழாக்கோல்
மறைத்து வேயப்பட்ட
கூடாரத்தின் உள் சென்று
தாழிட்டுக் கொள்ளும்
கிழத்தச்சன் உருவாகிக்
கொண்டிருக்கிறான் தேர் ஒன்றை
ஊராருக்கெல்லாம் பேராவல்
தேர்வளரும் எழில் காண
தச்சன் கேட்டு வாங்கிய தட்சணைகளில்
முதன்மையானது தனதழைப்பின்றி
எவரும் உள் வரக்கூடாதென்பது
நாளுக்கு நாள் பலபேர் சேர்ந்து
பணிபுரிவதைப் போன்றதொரு
பெருஞ்சத்தம் ஆவலைமேலும்
அதிகரிக்க கீற்றுகளில்
துளையிட்டு நோக்கிய கண்கள்
விரிந்து மருண்டன
வெற்றிலையை மென்றவாறே
கண்ணோட்டம் விட்டபடி
அமர்ந்திருக்கும் தச்சனது
ஏவல்களுக்கேற்ப வினை
புரிந்த பூதம் சத்தியத்தின்
மீறலால் பலிதம் இழந்து தச்சன்
முன் வீழ்ந்தது முழாக்கோலாய்
பாதியில் நிற்குது தேர்
Be the first to rate this book.