தாழிடப்பட்ட சிறு கூட்டுக்குள் சிறகுகளைச் சுருக்கிக்கொண்டு கம்பிகளின் இடைவெளியின் வழியே ஆகாயத்தைப் பார்த்துக் குரல் எழுப்பிக்கொண்டிருந்த பறவைகள் கதவுகள் திறக்கப்பட்டவுடன் சிறகை விரித்து விண்ணளக்க எழுந்து உயர உயர பறப்பதைப் போல கட்டுகளிலிருந்து விடுபடும் மொழிகள் இவை. ‘உடைபடும் மௌனங்கள்’ எனும் தலைப்பே காலம் காலமாக அமைதியாகப் பேசாமலேயே மௌனமொழியால் மட்டுமே இயங்கி வந்தவர்கள் தங்களின் மௌனத்தை உடைத்துக்கொண்டு பேச வந்திருப்பதைக் கட்டியம் கூறுகிறது.
பிறந்ததிலிருந்து மரணத்தின் கடைசித்துளி வரை தன் சிறு விருப்பத்தைக் கூட நிறைவேற்றிக்கொள்ள நேரமில்லாமல், சுயமாக இயங்க இயலாமல், யாரையேனும் சார்ந்தே இருக்க வேண்டுமெனும் அழுத்தத்தைக் குடும்பமும் சமூகமும் பெண்களின் மேல் சுமையென ஏற்றி வைத்திருப்பதால் எழும் பெண்களின் ஆற்றுப்படுத்தவியலாத் துயரங்களை, வேதனைகளை, ஏக்கங்களை, விடுதலை வேட்கையை எழுத்தாளர்கள் கரிசனத்துடன் அணுகி உணர்ந்து கதைகளாகப் படைத்துள்ளனர். அவற்றைத் தேடி, ஆராய்ந்து, தொகுத்து வாசகர்களின் சிந்தனையை இந்நூலின் வழியாகத் தூண்டியுள்ளார் தொகுப்பாசிரியர் இரா.பிரேமா.
– மதுமிதா கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது பெற்ற தஇரா.பிரேமா. தமிழ்ப் பேராசிரியர்: பெண்ணிய ஆர்வலர்; எழுத்தாளர்: ஆய்வாளர். இவர். 27 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியர் பணியிலும். நான்கு ஆண்டுகள் கல்லூரி முதல்வர் பணியிலும், 30 வருடங்கள் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டவர். இவர் 23 நூல்களையும், 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பதிப்பித்த நூல்கள் 3. இவர் எழுதிய 'பெண்ணியம்' என்ற நூல் 12 பதிப்புகளைக் கண்டுள்ளது. இவரது பெண்ணிய நூல்கள். தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும், பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திலும் பாடநூலாகவும் நோக்கு நூலாகவும் எடுத்தாளப்படுகின்றன. இவரின் இரண்டு நூல்களை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. இவரின் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவர இருக்கின்றன. இலக்கிய வட்டத்தில் 'பெண்ணியம் பிரேமா' என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
Be the first to rate this book.