மனிதன் விட்டுச் சென்ற பொருள் எச்சங்களை, அகழாய்வுகள் மூலம் கண்டறிந்து, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து பண்டைய மனித வாழ்வியல், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளும் ஒரு துறையே தொல்லியல். இதில் மனிதன் பயன்படுத்திய மட்பாண்டங்கள், ஆயுதங்கள். நாணயங்கள், கட்டிடங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் புதிய கற்காலம் பற்றிய தொல்லியல் ஆய்வு நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.
மனிதன் தனது நாடோடி வாழ்வில் இருந்து மாற்றம் பெற்று, புதியதொரு வாழ்வியலைக் கண்டறிந்து வாழத் துவங்கிய காலகட்டமே புதிய கற்காலமாகும். கரடு முரடான கைக்கோடாரிகள் மாற்றமடைந்து, கூர்தீட்டப்பட்ட சிறிய கைக் கோடாரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தத்தியுள்ளனர். இது மட்டும் அன்றி, கல் சுத்தி மற்றும் பல்வேறு விதமான கற்களால் ஆன கருவிகளும் புதிய கற்காலப் பொருள்களாகக் கிடைத்துள்ளன. தமிழகத்தின் நிலவியல் அமைப்பு குறித்தும், புதிய கற்காலம் பற்றிய தொல்லியல் ஆய்வுகள் எங்கெங்கெல்லாம் நிகழ்த்தப்பெற்றுள்ளன? அங்கு என்னென்ன பொருட்கள் கிடைத்தன? என்பது பற்றியுமான அனைத்து செய்திகளும் விரிவாகவும், விளக்கமாகவும், அதே சமயம் தக்க சான்றுகளுடனும் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
அகழாய்வு செய்த போது கிடைத்த பொருட்களுக்கான புகைப்படங்கள், புதிய கற்காலத்தில் கிடைத்த பொருள்களைப் பற்றிய புகைப்படங்கள் என பல புகைப்படங்கள் இந்நூலின் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பவையாக அமைந்துள்ளன. புதிய கற்கால மக்களின்வாழ்வியல் முறையையும், அவர்கள் நாகரீகம் அடைந்துள்ள நிலையையும் காட்டும் பல்வேறு பொருள்கள் தொல்லியல் ஆய்வில் வழி கிடைத்துள்ளதை இந்நூலின் வழி அறிய முடிகிறது.
Be the first to rate this book.