குலதெய்வ வழிபாடு என்பது, ஒரு குடும்பத்தின் பாரம்பரிய, முன்னோர்களால் வணங்கப்பட்ட காவல் தெய்வத்தை வழிபடுவது; இது குடும்பத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு, மற்றும் ஆன்மிக முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், இது முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத்தருவதோடு, துன்பங்களிலிருந்து காக்கும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது. ஆதி தமிழர்கள் இயற்கையை வழிபட்டது தொடங்கி, முனீஸ்வரன், முனியப்பன், கருப்பண்ணசாமி முதலான பல குல தெய்வங்களைப் பற்றியும், அத் தெய்வங்களுக்காக அமைந்துள்ள கோயில்கள், கோயில் அமைவிடம், அமைப்பு முறை, வழிபாட்டு முறை போன்றவற்றையும் இந்நூல் விரிவாக ஆய்ந்து உரைத்துள்ளது.
மர வழிபாட்டின் தொன்மை, முனீஸ்வரன் தோன்றிய வரலாறு, சென்னையில் புகழ்பெற்ற பாடிகார்ட் முனீஸ்வரன் திருக்கோயில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் முனியப்பசாமிகள், தமிழகத்தில் உள்ள கருப்பண்ண சுவாமிகள், இலங்கையில் கருப்பண்ணசாமி, கூத்தாண்டவர் திருக்கோயில் எனப் பல்வேறு செய்திகள் இந்நூலில் கள ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனீஸ்வரன், முனீஸ்வரன் இருவரும் சிவபக்தர்கள் என்றும், தன்னை வணங்கும் பக்தர்களின் இன்னல்களைப் போக்க எழுந்தருளியவர்கள் என்றும் இந்நூல் உரைக்கிறது. தமிழர்களின் இன்றியமையாத கடவுளான கருப்புசாமியின் பல்வேறு வடிவங்களை இலங்கை மக்கள் வழிபடுகின்றனர். தமிழர் உழவுத் தொழில் சிறக்கவும், இல்லறம் சிறக்கவும் கன்னிமாரை வழிபடுகின்றனர், முத்தரையர் சமுதாயத்தில் பெரும்பாலான மக்களது காவல் தெய்வமாக விளங்குவது சங்கிலி கருப்பன், என்பன போன்று குலதெய்வங்கள் பற்றிய பல சுவையான செய்திகள் இந்நூலில் சுவைபட எடுத்துரைக்கப் பட்டுள்ளன.
Be the first to rate this book.