ஏழ்மையில் பிறந்து தனது அறிவாற்றல் மூலம் பெருஞ்செல்வம் ஈட்டி, பின் நாட்டின் சுதந்திரத்துக்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்தவர் மோதிலால் நேரு. இவர் மறைவை ஒட்டி, இவரது வரலாற்றையும், இவர் செய்த அரிய தியாகங்களையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விவேக போதினி மூலம் இந்நூல் 1931 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
மோதிலால் நேருவின் பிறப்புத் தொடங்கி அவரது வரலாற்றை மிகவும் சுருக்கமாக எடுத்துரைத்து, அவரது பணிகள் பற்றியும், அவரது இறுதிக்காலம் பற்றியும், தேசத் தலைவர்களும் பெரியவர்களும் இவரது மறைவை ஒட்டிக் கூறியுள்ள செய்திகளையும், உலக நாடுகளில் உள்ளோர் கூறிய இரங்கல் மொழிகளையும், இந்திய நாட்டு மக்களின் மனநிலையினையும், பல்வேறு இதழ்களில் வெளிவந்த இவரது மறைவு குறித்த செய்திகளையும் தொகுத்து இந்நூல் வழங்கியுள்ளது அமைந்துள்ளது. மோதிலால் என்னும் மிகப்பெரிய தியாகச் செம்மல், அவரது குடும்பத்தார், பால கங்காதர திலகர், ரவீந்திரநாத் தாகூர். அன்னிபெசன்ட் அம்மையார், மௌலானா மஹமத் அலி எனப் பலரின் அரிய புகைப்படங்களும் இந்நூலில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய நாடு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவதைக் கண்கூடாகப் பார்க்க விரும்பிய மோதிலால் நேருவின் கனவு கடைசி வரை நனவாகவில்லை. எனினும் அவரது இறுதிச் சடங்கின் போது காந்தியடிகள், மோதிலால் நேருவின் கனவை நிறைவேற்றுவதே நாம் அவருக்குச் செய்யக்கூடிய ஒன்று என்கிறார். இதற்கான உறுதிமொழியை ஒவ்வொருவரும் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கிறார். இவை போன்ற எண்ணற்ற அரிய பல செய்திகள் இந்நூலில் நிறைந்துள்ளன. இவற்றுடன் மோதிலால் நேருவின் பொன்மொழிகள் சிலவற்றை இந் நூலின் இறுதியில் தொகுத்துத் தந்துள்ளார்.
நேருவை பற்றித் தெரிந்த பலருக்கு, அவரது தந்தை மோதிலால் நேருவின் தியாகங்கள் பற்றித் தெரிவதில்லை. இந்நூல் மூலம் மோதிலால் எனும் மாபெரும் ஆளுமையின் தியாகங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும். வாசக அன்பர்கள் இந்நூலை படித்துப் பயன்பெற விழைகிறோம்.
Be the first to rate this book.