வாசகருக்கு ஒரு கடிதம்
என் ப்ரிய வாசகரே, கலை இலக்கிய அனுபவங்களைத் தேடி உலகம் சுற்றும் ஆசை கொண்ட ஒரு எழுத்தாளனின் வணக்கங்கள்.
நான் டப்ளின் நகரத்துச் சுடுகாடு ஒன்றில் என் பிறந்த நாளைக் கொண்டாடினேன்..
சரீபியன் கடலில் மிதக்கும் கொதுலுப் தீவில் தமிழ்நாட்டில் தொலைந்து போன ஒரு வாய்மொழிப் பாடலை அடையாளம் கண்டேன்.
பாரீஸின் பிரபல காலரியில் 20 தமிழ் ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி "தமிழ் அழகியல்" எனும் கண்காட்சி அமைத்தேன்.
யுலிசஸ் நாவல் கதாநாயகனின் பிறந்தநாளில் அவன் சாப்பிட்ட பன்றிக்கறித் துண்டுகள் முட்டைப் பொரியல், வேகவைத்த பீன்ஸ், ரொட்டி டோஸ்ட் எனும் காலை உணவை சாப்பிட்டு மகிழ்ந்தேன்.
பிரிட்டீஷ் அருங்காட்சியகங்களின் இந்தியக் கலைப்பொருட்களின் ஆய்வில் ஆன்மாவைத் தொலைத்தேன்.
அயர்லாண்டின் கால்வே நகரத்தில் இந்திய ஐரிஷ் கவிதை நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தி ஐரிஷ் எழுத்தாளர்களை மகிழ்வித்தேன்.
விக்ளோ மலைத்தொடர் உச்சி வனாந்தரத்தில் பௌத்த, இந்துமத சிற்பங்களைப் பார்த்து ஆராதித்தேன்.
சிங்கப்பூர் சர்வதேச எழுத்தாளர் விழா அழைப்பை ஏற்று மொழிபெயர்ப்பின் அழகு பற்றி உலக எழுத்தாளர்களுடன் உரையாடினேன்.
ஆனால் உலகம் சுற்றுகையில் நான் அடிக்கடி என் திசை காட்டும் கருவிகளைத் தொலைத்து விடுகிறேன். வழிகாட்டும் தேசப்படங்களைத் தவற விடுகிறேன். அடிக்கடி வழிதவறித் தொலைந்து போகிறேன்.
இப்படித் தொலைந்து போய் மீண்டும் வருகிறபோது புதிய புதிய திசைகளைக் கண்டு பிடிக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் நண்பர்களே. திசைகள் நான்கல்ல. நாலாயிரம்.
மிக்க அன்புடன்
இந்திரன்
Be the first to rate this book.