வானம்
நிலவு
கடல்
என இயற்கையில் காணும் யாவும்
ஒன்றுகொன்று தொடர்புள்ள
காட்சிகளாகத் தோன்றினாலும்
அவ்வாறானதாக மட்டும்
இருப்பதுமில்லை
ஆனாலும்
கலைடாஸ்கோப்பின்
சித்திரமென
ஒவ்வொரு நாள் இரவிலும்
காணுகிற கனவுக்குள்
காரணமற்ற தொடர்பை ஏற்படுத்தி
மனத்தைச் சுழற்றி
எத்தனையோ
நிறங்களைப் பூசிவிடுகிறது
தன்னியல்பாக...
நதியின் தடம்
மீன் அறியும்
வானின் தடம்
பறவை அறியும்
காற்றின் தடம்
பூ அறியும்
நினைவின் தடம்
அறிந்தவர் எவரோ...
ஊர்க்குளத்தில்
மிதந்து கிடக்கும் பாசி
தொட்டால் விலகிப்
பின்
படர்வதுபோல
அண்மையில் பொலிந்து
சேய்மையில் தளரும்
மனத்தின் தவிப்பு
குளங்கள் காணாமல் போய்விட்ட
இக்காலத்திலும்
மாறாதிருப்பதை
எங்ஙனம் எடுத்துரைப்பது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர். தமிழில் முதுகலை படித்துள்ள இவர் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இரண்டு கட்டுரைத்தொகுப்புகளோடு 13 கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சங்கப்பெண்பாற் புலவர்களை சமகாலத்தோடு ஒப்பீடு செய்து இவர் எழுதிய 'சங்கப்பெண் கவிதைகள்' இவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டுக்கு அடையாளம். தமிழக அரசின் நூலக விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது. சிற்பி இலக்கிய விருது, தென்னிந்திய பதிப்பக மற்றும் விற்பனையாளர் சங்கம் (BAPASI) வழங்கும் தமிழகத்தின் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது. தமிழறிகும் மா.ரா.போ.குருசாமி இலக்கிய விருது ஆகியவை இவர் பெற்றிருக்கும் விருதுகள்.
நீர் மேலாண்மை, கல்வி. சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்த கட்டுரைகளும் எழுதி வருகிறார். விவசாயம் மற்றும் பெண் கல்வியை முன்னிலைப்படுத்திச் செயல்படும் தன்னார்வ நிறுவனம் வாயிலாக பல்வேறு ஆக்கப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
'ஆண் நன்று: பெண் இனிது' என்பது உயிரறம். ஓர் ஆணுக்குள்ளிருக்கிற பெண்ணும் பெண்ணுக்குள்ளிருக்கிற ஆணும் சந்தித்துக்கொள்கிற போதுதான் இயற்கையின் இந்த நுட்பமான ஏற்பாட்டை உணர்ந்துகொள்ள முடியும். ஒவ்வொரு விதையும் அழகு: ஒவ்வொரு மழைத் துளியும் அழகு, வாழ்வை அன்பினால் வழிநடத்துகிற ஒவ்வோர் ஆணும் பெண்ணும் அப்படித்தான்.
அன்பையும் காதலையும் பெண்ணின் உளவியலுடன் தொடர்ந்து எழுதுகிற நம் காலத்தின் வெள்ளி வீதியார் சக்திஜோதி. வாழ்வு நெடுக அவர் சந்தித்த எளிய மனிதர்கள். நமக்குள்ளும் அந்த அன்பை விதைக்கிறார்கள்; மழையைப் பொழிகிறார்கள். பச்சையம் உலராத உரையாடல், இந்நூலில் பக்கம் பக்கமாக நம்மையும் இணைக்கிறது.
வாழ்வியல்
Be the first to rate this book.