செல்வி.அழகுவின் எழுத்துக்களை ஒரு சேரத்தொகுத்துப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அலுப்புத் தட்டாத எழுத்து. இத்தனை இளம் வயதில் - அதுவும் அறிவியல் பயிலும் மாணவி - அலுப்புத் தட்டாமல் எழுதுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். செல்வி, அழகுவின் கட்டுரைகள் மனித உறவுகளைக் கொண்டாடுபவையாக இருக்கின்றன. எனவே வாசகர்களோடு எளிதில் உறவு கொள்ளும் என்பதில் ஐயமில்லை. கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
- தொ.பரமசிவன்
இன்று நாம் எதுவெல்லாம் குறித்து ஆதங்கப்படுகிறோமோ அதுவெல்லாம் குறித்து அப்படியப்படியே எழுத்தாக்கிக் கொடுத்திருக்கிறார் இந்த அழகு. பகுத்தறிவுச் சிந்தனைகளோடு வர்க்க சிந்தனையும் இரண்டறக் கலந்திருப்பது 'ரௌத்திரம் பழகுவேன்' வாசிக்கும்போது அற்புதமாகப் புலப்படுகிறது. பொதுவாக பெண் சிந்திக்கிறாள் என்பதையே சகித்துக் கொள்ள முடியாத இந்த சமூகம்.... அதுவும் பகுத்தறிவுப் பாதையில் பவனி வருகிறாள் ஒரு பெண் என்பதை எப்படிச் சகித்துக் கொள்ளும்? அது குறித்த மற்றவர்களது புலம்பலை... அவற்றை எதிர்கொண்ட விதத்தை அழகாகவே சொல்கிறார் அழகு.
- பாமரன்
உணர்வுகள் மெல்ல மெல்ல மங்க ஆரம்பித்திருக்கும் தற்காலச் சூழல் என்னுள் ஏற்படுத்திய கோபம், வருத்தம். எரிச்சல் ஆகியவற்றின் வெளிப்பாடே இத்தொகுப்பின் பெரும்பாலான கட்டுரைகள். காணும் காட்சிகள் மனதிற்குக் கடத்திய உணர்வுகளின் பதிவே இது. பழமையைப் போற்ற நினைத்தது உண்மைதான். புதுமையைப் புறந்தள்ளவும் நினைக்கவில்லை. பழமையைத் தூக்கிப் பிடிப்பதாய்த் தோன்றினால் அது என் பிழையல்ல. பழமையைத் தூற்றுவோர் பிழை. ஆச்சி தாத்தா பழமையாக்கப்பட்டதைச் சாடுவது எப்படி பழமைவாதமாகும்?
- சோம. அழகு
நெல்லையில் பிறந்து வளர்ந்த சோம, அழகு தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆய்வு மாணவியாக இருக்கிறார். இப்படைப்பே இந்த அறிமுக எழுத்தாளருக்கான அறிமுகம்.
Be the first to rate this book.