தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் வரலாறு சுவாரஸ்யமான பல உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியது. இலட்சிய நோக்குடைய ஒரு சிலரது விடாப்பிடியான முயற்சிகளையும், மவுனப்போராட்டங்களையும், அவர்கள் ஏற்றுக்கொள்கிற சிரமங்களையும் எடுத்துக்காட்டுவது அது. அதேசமயம் அவர்களது தோல்வியையும் (தோல்வி என்ற சொல் சரியில்லை என்று தோன்றினால், செயல்முடக்கம் மற்றும் செயலற்ற தன்மையையும்) இவ்வரலாறு பளிச்செனப் புலப்படுத்துகிறது.
சிறுபத்திரிகைகளின் வரலாறு முழுவதும் உற்சாகமான பத்திரிகை எழுச்சிகளையும், அவற்றின் 'சென்று தேய்ந்திறுதல் களையும், முடிவில் 'அன்வெப்ட், அன்ஹானர்ட் அன்ட் அன்சங்' என்ற தன்மையில், அவை கவனிப்பற்று -பாராட்டுரைகளின்றி - நினைவு கூர்வாருமின்றி மறைந்து போக நேர்வதையும் கொண்டிருக்கிறது.
ஆனாலும், தெரிந்துகொண்டே கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து, குன்றாத ஊக்கத்தோடும் குறையாத தன்னம்பிக்கையோடும், ஒன்றைச் சாதித்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடனும் செயல்பட்டவர்களின் கதையாகவும் இருக்கிறது இந்த வரலாறு.
Be the first to rate this book.