இந்நூலில் உள்ள ஆவணங்களை நான்குவகையாகப் பிரிக்கலாம். முதலாவது இஸ்லாமிய அரசர்களும், ஆட்சியாளர்களும், பிற அலுவலர்களும், வணிகர்களும், பொதுமக்களும் சைவ வைணவக் கோயில்களுக்கும். மடங்களுக்கும் செய்த அறப்பணிகள், கொடுத்த கொடைகள், நிலம், தோப்பு, இறைப்படிமங்கள் அளித்தமை. கோயிலை விட்டுச் சென்ற இறைப்படிமங்களை மீண்டும் கோயிலில் எழுந்தருளச் செய்தமை போன்ற பல அறப்பணிகளைச் செய்து உதவியுள்ளனர். இவையன்றிப் பொதுப்பணிகளாக ஏரி, குளம், வாய்க்கால், மடை, மதகு. கலிங்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள இஸ்லாமியப் பெருமக்கள் பலர். சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே வாழும் அக்கிரகாரத்திற்குக் கிணறு வெட்டிக் குடிநீர் வசதி செய்து கொடுத்தவர் ஷேக் அலாவுதீன் மகன் ஷேக் முசாலியார் என்பவர். தான் கொடையாகக் கிணறு வெட்டிய இடத்தை அதே பார்ப்பனர்களிடம் விலைகொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்க அரிய செயலாகும்.
இரண்டாவதாக இத்தொகுப்பில் இடம் பெறுவது இந்துக்கள் இஸ்லாமியப் பள்ளிவாசல், தர்க்காக்களுக்கும். இஸ்லாம் சமயப் பெரியவர்கட்கும் கொடுத்த பற்பல கொடைகளாகும். பாண்டியர், நாஞ்சில் நாட்டு அரசர், தஞ்சை நாயக்கர், மதுரை நாயக்கர், இராமநாதபுரம் சேதுபதிகள், புதுக்கோட்டை தொண்டை மான்கள், மராட்டியர், சிவகங்கை அரசர்கள், பாளையக்காரர்கள். வணிகர்கள், பொதுமக்கள் ஆகிய பல இந்துப் பெருமக்கள் இவ்வாறான கொடை பல தந்துள்ளனர். சீதக்காதி போன்ற பெருமக்களும், ஜவ்வாதுப் புலவர் போன்ற அறிஞர்களும் சேதுபதி அவையில் சிறப்புப் பெற்றுள்ளனர். பள்ளிவாசல், தர்காக்களில் விளக்கேற்ற, விழா நடத்த, ஏழைகட்கு அன்னமிட, ஆடை வழங்க, பள்ளிவாசல், தர்க்காக்களைப் புதுப்பிக்கக் கொடைகள் இந்துக்களால் வழங்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.