இலக்கிய ஆசிரியர்களிலே தங்கள் வாழ்நாட்களிலேயே ஒரு தனிப்பட்ட பெயரையும் புகழையும் ஈடு இணையற்ற ஸ்தானத்தையும் அடைந்து விடுகிறவர்களை அதிருஷ்டசாலிகள் என்று விசேஷமாகக் கொண்டாட வேண்டும். அந்த விசேஷ மரியாதையையும் அடைந்தவர் ரோஜர் மார்டின் தூ கார்டு. பிரெஞ்சு இலக்கியத்தின் மேதைகள் என்று நோபல் பரிசுகள் பெற்றுக் கௌரவிக்கப்பட்ட நாவலாசிரியர்கள் வரிசையிலே அவரும் இடம்பெற்றார். ரோமேன்ரோலந்து, அனடால் பிரான்சு முதலியவர்களுடன் அவருக்கு இடம் கிடைத்தது எவ்வளவு சரியான விஷயம் என்பதை அவருடைய நாவல்களில் எதையும் படித்தவர்களுக்குச் சுலபமாகவே தெரியும். ழீன்பராய், திபோக்கள், கோடை 1914 முதலிய நாவல்கள் அவர் மேதைக்கு அழியாத சான்றுகள்.
அவருடைய மேதையின் உச்சிக் காலத்திலே அவர் எழுதிய நூல் ‘தபால்காரன்’ என்னும் இந்த நாவல். ஒரு பிரெஞ்சு கிராமத்தின் வாழ்க்கைச் சித்திரம் என்று அவர் குறிப்பிடுகிற இந்த நாவலில் தூ கார்டின் இலக்கிய மேதை பூராவும் காணக்கிடக்கிறது. மிகவும் பல பாத்திரங்களை, லேசாக ஆனால் பூரணமாக உருவாக்கி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தூ கார்டு. கிராமத்து வாழ்க்கை என்னும் சரடும், தபால்காரன் ழாய்னுவும் இந்தக் கிராமத்து மக்களைப் பிணைத்துத் தருகிறார்கள் நமக்கு. கிராமத்து வாழ்க்கையைப் பற்றி ஆஹா ஊஹூ என்று புகழாமல், அந்தோ பரிதாபம் என்று துயரம் உண்டாக்காமல் எழுதப்பட்டிருக்கிற நூல், உலக இலக்கியத்திலேயே இது ஒன்றுதான் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த நாவலில் ஆசிரியர் நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் கிராமத்து மக்களை நாம் வெகு நாளைக்கு மறக்க முடியாது என்பது திண்ணம்.
- க.நா.சுப்ரமண்யம்
Be the first to rate this book.