இந்நூலின் புதிய திறப்புகள்:
தமிழ் நாடகம் முதலில் நிகழ்த்துக் கலையாக இருந்து, பின்னர் இலக்கிய வடிவம் பெற்றதை இவ்ஆய்வு உறுதிப்படுத்துகிறது. கூத்துக் கலை ஒரு நுண்கலை மட்டுமல்ல; அது ஒரு மையச் சமூக நிறுவனமும் ஆகும். சங்ககாலச் சமூகத்தில் கூத்தர், பாணர், விறலியர் அரசவைகளிலும், மக்களிடமும் ஒரு சேர இயங்கியுள்ளனர். இது கூத்தை 'மக்கள் கலையாக' மட்டும் கருதிய பழைய பார்வையை மறுக்கிற ஒரு புதிய திறப்பாகும். அது போல் கூத்தும் அரசியலும் அதிகார வெளிப்பாடுகளின் பிரதிபலிப்புகளாகும். அரசர்களின் புகழ், போர் வெற்றி, கொடை மரபுகள் கூத்துகள் வழியாக பொது மக்களிடம் பரவின. கூத்து ஒரு தகவல் பரப்பும் கருவியாகச் சங்க காலத்தில் செயல்பட்டது. விறலி கூத்துக்கலைஞர் மட்டுமல்ல; அவள் ஒரு சமூக அதிகாரம் கொண்ட வலிமையான பெண்ணும் ஆவாள். விறலியை ஓர் ஆட்டக் கலைஞராக மட்டும் பார்த்த பழைய விளக்கங்களுக்கு மாறாக, அவள் ஒரு பண்பாட்டு நடுவர் (Cultural mediator) என்பதையும் இந்நூல் விளக்குகின்றது. சிலப்பதிகாரம் காப்பியம் மட்டுமல்ல; அது நிகழ்த்துக்கலையின் ஆவணமும் ஆகும். மாதவி பாத்திரம் மூலம் இக்காப்பியம் ஒரு Performance text ஆகவும் செயல்படுவதை அவதானிக்க முடிகிறது. நவீன நாடகங்களில் காணப்படும் உடல் மொழி, மேடை இயக்கம், பாடல், இசைப் பயன்பாடு ஆகியன கூத்து மரபின் தொடர்ச்சியே என நிறுவப்படுகிறது. இலக்கியம் + வரலாறு + சமூகவியல் + பண்பாட்டியல் இணைந்தால்தான் நிகழ்த்துக் கலையான கூத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற முறைசார்ந்த கண்டுபிடிப்பை இந்நூல் முன்வைக்கிறது. கூத்தியியல் அணுகுமுறையை Field study, Performance theory, Ritual studies, Gender studies ஆகியவற்றுடன் இணைத்து ஆய்வு செய்வதன் அவசியத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது.
Be the first to rate this book.