தமிழர்கள் பழங்காலந்தொட்டே நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர். அதற்கு அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களே சான்றுகளாகும். பிற இனத்தினர் நம்மை ஆண்டபோதும் அவர்களின் நாகரிகத்தைத் திணித்த போதும் தமிழர்தம் பண்பாட்டைக் காப்பாற்றி நின்றவை இலக்கியங்களே ஆகும். இலக்கியங்கள் இன்றுவரை தமிழர் பண்பாட்டின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும் பிற்காலச் சந்ததியினருக்கும் உலக மக்களுக்கும் பறை சாற்றி வருகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால மக்களின் பண்பாட்டின் ஆன்மாவை அறிய சங்க இலக்கியங்கள் உதவுகின்றன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் பழந்தமிழ் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இக்காலத்துத் தொல்லியல் செய்திகள் போன்றவை பண்பாட்டுச் செய்திகளைத் தெளிவாகக் கூறுகின்றன எனினும் அன்றைய மக்களின் திணைப் பண்பாட்டைப் பண்டையப் பாடல்கள் மட்டுமே காட்டுகின்றன.
வரலாறு சமுதாய அமைதிக்கும் சமுதாய உணர்வுக்கும் முதன்மை தந்து மக்களோடு மக்களாய் இணங்கியும் ஒத்தும், இசைவாக வாழும் வாழ்க்கையே பண்பாட்டு வாழ்க்கையாகும். அன்றைய சமுதாயத்தில் மக்கள் நல்லொழுக்கம், எளிமை, தூய்மை, தவம் முதலான நற்பண்புகளைச் செழிப்பாகக் கொண்ட சிந்தனை உடையவர்களாக வாழ்ந்தனர். எனவே மக்கள் ஒழுக்கம், நீதி, நேர்மை, அறம், பக்தி ஆகிய பண்புகளோடு வாழ்ந்த தன்மையினைப் பண்பாடு உணர்த்துகின்றது.
Be the first to rate this book.