தமிழிசைப் பாடல்கள், தமிழிசை விளக்கங்கள், தமிழிசை பற்றிய ஆராய்ச்சிகள் ஆகியவை நூல்கள் வடிவில் குவிய வேண்டுமென்பது என்னுடைய ஆசை. இயற்றமிழ் பெற்றிருக்கும் ஏற்றமும் தோற்றமும் இசைத்தமிழுக்கும் உளவாக வேண்டும். எண்ணற்ற நூல்கள் இசைத்தமிழில் எழவேண்டும். இசைத்தமிழில் வல்லார் இந்துறையிலும் தொண்டு செய்ய முன்வரவேண்டும்.
தமிழிசைக் கட்டுரைகள் என்னும் இந்நூல் தமிழிசைக்கு விளக்கத் தரும் வகையில் அமைந்ததுவே. கட்டுரைகளில் பல வார விதழ்களிலும், மாதவிதழ்களிலும், ஆண்டு மலர்களிலும் வெளிவந்தவை. பல சென்னை வானொலி நிலையத்திற் பேசப்பட்டவை. எனது மாநாட்டுத் தலைமையுரைகளும் சொற்பொழிவுகளும் கட்டுரை வடிவில் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
இவையனைத்தும் தமிழிசைக்கு விளக்கந்தரும் வகையில் அமைந்திருப்பதால் தமிழிசைக் கட்டுரைகள் எனப் பெயர் தந்து முத்தமிழாக மிளிரும் தமிழ்த் தாயின் திருவடியில் முதன் மலராக அணிகின்றேன். இத்துறையில் தமிழ்த்தாயின் தண்ணருள் அடியேற்கு மேலும் பெருகுவதாக வென வேண்டுகின்றேன்.
Be the first to rate this book.