1938ஆம் ஆண்டு தொடங்கி, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டம் நடந்து வருகிறது. 1965ஆம் ஆண்டு மத்திய அரசின் மொழிக் கொள்கைக்கு எதிராக, தமிழகம் மிகப் பெரிய எதிர்ப்பினை வெளிக்காட்டியது. அரசியல் கட்சிகள், கல்லூரி மாணவர்கள், தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்கங்கள் உள்ளிட்டோரின் தீவிரப் போராட்டம் மத்திய அரசினை பின்னடைய வைத்தது. தமிழகம் இந்திய அளவில், இருமொழிக் கொள்கையினைப் பின்பற்றும் மாநிலமாக இன்று வரை தனித்து நிற்கிறது.
மொழிப் போராட்டத்தினை ஒடுக்குவதற்காக மாநில அரசு ஏவிவிட்ட அடக்குமுறைகள், சட்டரீதியான நடவடிக்கைகள், காவல் துறையின் தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்து தப்பித்தவர்கள், மீண்டுவந்தவர்கள், பின் மாநில அரசின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பெற்ற அங்கீகாரங்கள், நன்மைகள், சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பேசுகிறது இந்நாவல்.
கூடலூர் காவல் நிலையத்தை எரித்ததுடன், இரண்டு காவலர்களையும் எரித்த வழக்கில் இருந்து மீண்டு வந்த கதாபாத்திரத்தின் வழியாக, மொழிப் போராட்டம் என்ற உணர்வுமிக்க போராட்டம், எவ்வாறு அரசியல் பகடைக்காயாக மாறிப் போனது என்று, நாணயத்தின் இன்னொரு பக்கத்தையும் பேசுகிறது.
நின்றெரியும் விளக்கொளியின் கீழ் பரவும் அடர்த்தியான இருட்டுப் போல், குன்றென ஒளிரும் உயரிய போராட்டங்களுக்குப் பின்னான இருள் பக்கங்களைப் பேசுகிறது மு.ராஜேந்திரனின் 'தமிழ் எனும் நான்' நாவல்.
Be the first to rate this book.