திராவிட இயக்கம் அனைத்து மக்களின் உரிமைக்கான இயக்கம் என்பதற்கிணங்கக் குடிஅரசு பத்திரிகையில் பெரியார் உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத்தவர்களின் பகுத்தறிவுக் கருத்துகள், ஞானியார் அடிகள் போன்ற இறைப் பற்றாளர்களின் மெய்யியல் சிந்தனைகள், தோழர்கள் சிங்காரவேலர் - ஜீவானந்தம் போன்றவர்களின் பொதுவுடைமைச் சிந்தனைகள், கவிஞர் பெருமக்களின் இலக்கியப் படைப்புகள் எனப் பலருடைய கருத்துகளின் தொகுப்பாகவும், சமூகநீதி வழியிலான சமத்துவ சமுதாயத்தை இலட்சியமாகக் கொண்டும் சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் கட்டமைத்ததை இந்நூல் விளக்குகிறது.
இயக்கத்தின் பயணத்தில் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிக முக்கியத் தீர்மானமான, பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சமஉரிமை என்பதை 1989-இல் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு சட்டமாக நிறைவேற்றி, இந்தியாவுக்கே வழிகாட்டியதை இங்கே நினைவுகூர்ந்திடக் கடமைப்பட்டுள்ளேன். காவல்துறை போன்ற பணிகளில் ஆண்களைப் போல பெண்களும் பணியாற்ற வேண்டும் என்ற சுயமரியாதை இயக்கத் தீர்மானத்தை நிறைவேற்றி, காவல்துறையில் பெண்கள் அணியை அமைத்ததும் கலைஞர் தலைமையிலான அரசுதான். 1930-ஆம் ஆண்டு ஈரோட்டிலும், 1931-ஆம் ஆண்டு விருதுநகரிலும் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கழக ஆட்சியில் செயல்வடிவம் பெற்றுள்ளதை இந்த நூல் பதிவு செய்துள்ளது.
- மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
Be the first to rate this book.