நுண்ணுணர்வு மிக்க ஒரு படைப்பாளி, தான் காணும் வாழ்க்கைப் பாடுகளிலிருந்துதான் தனது ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார். அவர் ஆணாக இருந்தால் ஆண் நோக்கிலும், பெண்ணாக இருந்தால் பெண்ணிய நோக்கிலும் அந்தப் படைப்புகள் பேசுகின்றன. இதில் கூட, சமீப காலம் வரை பெண்களுமே ஆண் மைய வாதங்களையே முன் வைத்துத்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். சில விதிவிலக்குகளும் உண்டு. ஆனால், நீண்ட நெடுங்காலத்து ஆளுமை உருவாக்கங்கள் ஆண்களின் நோக்கு நிலையிலிருந்தே நடந்தும், நடத்தப்பட்டும் வந்திருப்பதால், மேற்கண்ட ஆண் நோக்கு எழுத்துகள் பெண்களிடம் இருந்தும் வந்து கொண்டிருந்தன / இருக்கின்றன.
இது ஒருபுறம் இருப்பினும், கூருணர்வு மிக்க ஒரு படைப்பாளிக்குத் தனது கண்களில் பட்டுக் கருத்தைக் கவரும் எந்த ஒரு நிகழ்வும், உணர்ச்சியும், எதிர்வினையும், சலனங்களும், கொந்தளிப்புகளும், அமைதியும், ஆனந்தமும், துக்கமும் – எந்த ஒன்றுமே அவரின் படைப்புகளுக்கான கச்சாப் பொருள்களாக மாறுகின்றன. அவரின் மன ஆழத்தில் உறைந்து போய்க் கிடக்கும் அவை, ஊறி ஊறி நொதித்துப் போய், ஒரு கட்டத்தில் இனித் தாள முடியாது எனும் தருணத்தில் ஏதேனும் ஒரு படைப்பாக வடிவம் கொள்கின்றன. இது பொதுவாக உலகம் பூராவிலும் ஏற்கப்பட்டுள்ள ஒரு கருதுகோள்.
சாலவாடி ஈஸ்வரன் அவர்களைக் கடந்த சில ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன். அவரின் கதைகள் மிகவும் இயல்பான நடை. அலட்டிக் கொள்ளாத சித்தரிப்புகள். ஆசிரியர் எங்கேயும் குறுக்கிடாமல், கதாபாத்திரங்களின் போக்கில் சம்பவங்கள் நடந்து முடிகின்றன. எளிய மனிதர்கள். சில கதைகளில் மட்டுமே மிகத் தீவிரமான மன உளைச்சல்கள் வெளிப்படுகின்றன. சில கதைகள் மிகுந்த மன அதிர்வையும், துக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இன்னும் சில கதைகள் மனதில் ஒரு கனிவையும்,நெகிழ்வையும், கருணையையும் ஏற்படுத்துகின்றன.
-கமலாலயன், ஓசூர்
Be the first to rate this book.