தற்போதைய நிலையில் இருப்பதை விட உயர்ந்த நிலைக்குப் போகவே மக்கள் விரும்புகிறார்கள். அந்த உயர்ந்த நிலையை அடைய, கிடைக்கிற வருமானம் போதுமானதாக இல்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, ஒன்று, வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது செலவைக் குறைத்து, பணத்தைச் சேமித்து, முதலீடு செய்து, பெருக்கி, அந்த உயர்ந்த நிலையை அடைய வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கு, தான் மட்டும் முயற்சித்தால் போதாது. சூழ்நிலையும் ஒத்துவரவேண்டும்.
அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள இருக்கும் ஒரே வழி, சேமிப்பு மட்டுமே. சேமிப்பின் அவசியம் தெரியாதது அல்ல. ஆனால், அனைவரும் செய்வதில்லை. காரணம் பலருக்கும் எப்படி எல்லாம் சேமிக்க முடியும் என்கிற வழிகள் தெரியவில்லை. அதை மிக எளிய உதாரணங்களுடன், தேவையான இடங்களில் கதைகள், உண்மை நிகழ்வுகள் மூலம் மிக அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறார், சோம வள்ளியப்பன். அள்ள அள்ள பணம் 1 முதல் 9 வரை மற்றும் பணம் : சில ரகசியங்கள், பணமே ஓடிவா போன்ற வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட புத்தகங்களின் ஆசிரியர் சோம வள்ளியப்பன் எழுதிய சேமிப்பு குறித்த மிக முக்கியமான புத்தகம் ‘சிறுதுளி பெரும் பணம்’.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.