கவிஞர் கண்ணதாசன் அவருடைய ஒரு கவிதையில் முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான் என்கிறார். இளமைப் பருவம் தீரத் தொடங்கிவிட்டது என்று நம்ப ஆரம்பிக்கும்போது தங்களின் வாழ்க்கையின் நடுக்கத்தைப் பிரதிபலிக்கும் பலரை நாம் பார்த் திருப்போம். ஒரு நரை முடி வந்துவிட்டாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று கவலைப்படும் மனிதர்களையும் பார்த்திருப்போம். இந்த கைவிடப்பட்ட மனநிலை பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கும், அடுத்த வேளை உணவிற்கே கஷ்டப்படுபவர்களுக்கும் இந்த முதுமை குறித்த பயம் மட்டும் பொதுவானதாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் ஒரு மரம் தன் கிளைகளில் தளிர் இருக்கிறதா, பழுத்த இலை இருக்கிறதா என்று கவலைப்படுவதில்லை.
பழுத்த இலைகளும் நாம் உதிரப்போகிறோமே என்று காற்றை மறுப்பதாகத் தெரியவில்லை. அனைத்தும் பூமர் என்றாகிப்போன இந்த சமூகத்தில் மனிதர்கள் இப்போது தனித்து வாழ நினைக்கிறார்கள் முதியவர்களை வீட்டில் வைத்துப் பராமரிப்பதையே நாகரிகம் இல்லை என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு தாயும் தகப்பனும் குழந்தைள் பிறந்தவுடன் தங்கள் எதிர்காலமே அந்தக் குழந்தைகள்தான் என்றும் தங்களைக் கடைசி காலம் வரை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் நம்புகிறார்கள். கல்வி, வேலை, தொழில் என்ற எல்லா இடங்களிலும் தங்கள் கனவுகளை பிள்ளைகளின் மேலேற்றி பந்தயத்தில் ஓட வைக்கிறார்கள் அதற்காகத் தாங்கள் சம்பாதிக்கும் அத்தனையையும், காலத்தையும் செலவழிக்கிறார்கள். பந்தையக் குதிரைகள் இலக்கை எட்டுவதற்கு மட்டுமே பழக்கப்பட்டவை அவற்றிற்கு உறவுகளைப் பற்றி கவலை இருக்குமா என்ன?!
அதனால்தான் இன்று ஆசிரமங்களும் காப்பகங்களும் அதிகரித்துவிட்டன. தோழர் சாமுவேல் அவர்களின் இந்த நாவல் தற்போதைய சூழலுக்கான மிக முக்கியமான கருவை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது. அடுத்தவர்களின் பிரச்சனைகளைக் கேட்பதையேக் கிளிசேவாக நினைக்கும் இக்காலத்தவர்களுக் சருகுகள் உதிர்ந்தாலும் அதற்குக் காற்றில் பறக்கும் ஆற்றல் உள்ளது என்ற உண்மையை உணர்த்தக்கூடிய படைப்பாக சிறகடிக்கும் சருகுகள் இருக்கும். அனைவரும் வாசிக்கலாம். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
- பதிப்பாசிரியர்
Be the first to rate this book.