இந்தியக் குடியரசில் மூடி மறைக்கப்பட்ட கொடூரமான ஒரு நிகழ்வின் உண்மையை இந்த நூல் தோலுரித்துக் காட்டுகிறது. பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமைப் போராளிகள் 16 பேர் (பீ.கோ.16) மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டப்பட்டு, எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் கற்றறிந்த பேராசிரியர்களாக, வழக்கறிஞர்களாக, இதழியலாளர்களாக, கவிஞர்களாக பல பொறுப்பான பணிகளில் உள்ளவர்கள்.
இந்நூலின் ஆசிரியர் அல்பா ஷா இவ்வாறு பொய்க்குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2018ஆம் ஆண்டில் பீமா கோரேகானில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் வன்முறையைக் கையில் எடுத்தார்கள் என்று பழிசுமத்தப்பட்டதின் முழு விவரத்தையும் தொகுத்துக் கொடுத்துள்ளார். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் இந்திய தேசத்திற்கு எதிராகப் போர்க்கோலம் எடுத்து, நம் நாட்டின் பிரதம மந்திரியையே கொல்வதற்குத் திட்டமிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த வழக்கையும், அதற்கான சாட்சிகளையும், தடயங்களையும் சீராகத் தொடர்ந்து ஆய்வு செய்து, எந்த அளவு சைபர் ஆய்வுகளைத் தங்களுக்குத் தேவையான அளவு தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைப் படிப்படியாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.
எந்த அளவு குடியாட்சி முறைகள் முழுவதுமாக நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன என்பதை இந்த நூல் மூலம் ஆசிரியர் முழுமையாக நிரூபிக்கிறார். முதல்முறையாக நமது நாட்டின் நீண்ட வரலாற்றில் இத்தகைய பல்முனைத் தாக்குதல்களோடு, குடியாட்சியின் உரிமைகளைக் காக்கப் போராடுபவர்களை அரசு தாக்குவதை இந்த நூல் விளக்குகின்றது. பேச்சு சுதந்திரத்தை மட்டுமல்லாமல், உலகில் நிலவும் சமமின்மையை எதிர்த்தும் எழுப்பும் சமூக நலப் போராட்டங்களையும் காக்க வேண்டிய கடமை நமக்குள்ளது என்பதையும் தெளிவாக இந்நூல் நமக்குக் கற்பிக்கின்றது. அதனாலேயே இந்த நூல் மிக முக்கியமான ஒரு நூலாக உருப்பெறுகிறது.
Be the first to rate this book.