காவியங்கள் சில நேரம் உண்மை வரலாற்றை விளம்புவதாகவும், சில நேரம் நாயகர்களை வலிந்து உருவாக்குவதாகவும், சில நேரம் பிறிதொரு சமூகத்தை தூற்றுவதாகவும் அமைகின்றன. "இந்தியாவில் இஸ்லாம்: படையெடுப்பா? பண்பாட்டுச் சீரழிவா? பயங்கரவாதமா?" இந்த தலைப்பில்தான் இந்துத்துவ முகாம்களில் இந்தியாவிற்குள் இஸ்லாம் வந்த வரலாறு திணிக்கப்படுகிறது. ஆனால் உண்மை வேறு விதமாக இருப்பதை இந்த நாவல் பதிவு செய்கிறது.
முஹம்மது இப்னு காஸிம், இந்தியாவின் மீது படையெடுத்து சிந்து நதிப் பிராந்தியத்தை வெற்றி கொண்ட வரலாறு என்று இந்த நாவலின் கதையை சொல்லலாம். இந்தியாவின் மீது அராபியர் போர் தொடுக்க என்ன காரணம் என்ற ஒரு வரிக் கதையைச் சுற்றித்தான் திரைக்கதை அமைத்துள்ளார் ஹஸன்.
சம்பவம் நடக்கும் இடம், காலம், சூழல் ஆகிய அனைத்தையும், தன்னுடைய சுவாரஸ்யமான எழுத்துக்களால் நம்மையும் அந்தக் காட்சியில் ஒன்ற வைத்துவிடுகிறார். ஏவலாட்களை குறிக்க அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த வார்த்தையை முதன்முதலாக படிக்க நேர்ந்தாலும், காட்சியினூடாகவே எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதுதான் ஹஸனின் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள், தங்களின் அறிவீனத்தால் எப்படி ஆட்சியை இழந்தனர் என்பதை விரிவாகவே காட்சிப்படுத்துகிறது கதை. பிராமணர்களின் கல்வியறிவுக்கு மதிப்பளித்து, உயர்ந்த அந்தஸ்து வழங்கும் போதெல்லாம் அவர்கள் கீழறுப்பு வேளைகளில் ஈடுபட்டார்கள் என்ற வரலாற்றை நாவல் நினைவுபடுத்துகிறது. அத்தகைய வன்மர்களையும், உயிர்த்தியாகிகளாக இஸ்லாம் மாற்றியதையும் அறிய முடிகிறது.
வரலாற்று நாவலுக்குரிய நாடகத்தன்மை நாவலில் வெளிப்படும் அதேவேளை, மஞ்சனீக் எனும் ஆதிகால பீரங்கி, படகுப் பாலம் போன்ற ஃபேண்டஸியான அம்சங்கள் நவீன சினிமாவுக்கான உயிர்த்துடிப்பை நாவலுக்கு வழங்கி விடுகிறது. ஆம், நவீன நாவல்தான் இது...'தன் இறந்த கால வரலாற்றையும், நிகழ் கால வரலாற்றையும் அறியாத சமுதாயத்துக்கு எதிர்காலமே கிடையாது' என மாமேதை இப்னு கல்தூன் கூறுகிறார். இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 'நவீனம்' இது!
5
How do I get this latest novel?
halideen mohamed fawzan 20-08-2019 01:10 pm