இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி, சிந்து சமவெளி நாகரிகம். சிந்து சமவெளி நம் தொன்மம். நம் அடையாளம். நம் கூட்டுப் பெருமிதம். நன்கு திட்டமிடப்பட்ட சாலைகள், கட்டடங்கள், நீர் மேலாண்மை, தொலைதூர தேசங்களுடனான வணிகத் தொடர்பு, ஆடை அணிகலன்கள், கலை என்று ஒரு பண்பட்ட நாகரிகம் செழித்து வாழ்ந்ததற்கான உயிர்ப்புள்ள சாட்சி.
சிந்து சமவெளி நாகரிகம் எப்படி, எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? அதில் யாரெல்லாம் ஈடுபட்டிருந்தனர்? இந்த மாபெரும் பணியில் இந்தியர்களுக்கு என்ன பங்கு இருந்தது? பிரிட்டிஷாருக்குச் சமமாக அவர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனரா? ஆம் எனில் அவர்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதையை எளிமையாகவும் விறுவிறுப்பான முறையிலும் இதில் பதிவு செய்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். முன்னதாக அவர் எழுதிய ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ மிகுந்த வரவேற்பு பெற்ற நூலாகும்.
நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர், சமூக, பெண்ணிய ஆய்வாளர், வரலாற்றாளர், ஊடகவியலாளர், இணை நிறுவனர் ஹெர் ஸ்டோரிஸ். வரலாறு, தொல்லியல், இனவரைவியல், இனவரைவுத் தொல்லியல் உள்ளிட்ட தளங்களில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கிவருபவர். உள்ளூர், மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை. பண்பாட்டை முனைப்புடன் மக்களிடம் கொண்டு செல்பவர். 2024-ம் ஆண்டு பெண்ணியச் செயல்பாட்டுக்கான தேசிய லாட்லி ஊடக விருதையும், 2021-ம் ஆண்டு லாட்லி பிராந்திய விருதையும் வென்றுள்ளார். இவரின் 'ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை' நூல் சென்னை மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இவரின் 'வடசென்னை வரலாறும் வாழ்வியலும்' 2022-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதையும் தமுஎகசவின் சிறந்த தொன்மைசார் நூலுக்கான கே. முத்தையா விருதையும் பெற்றுள்ளது. முதல் பெண்கள், அறியப்படாத கிறிஸ்தவம், கலகப் புத்தகம், கிறிஸ்தவத்தில் ஜாதி. 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் பாதை அமைத்தவர்கள், பெயரற்றவர்களின் குரல் உள்ளிட்ட 14 நூல்களை எழுதியுள்ளார்.
Be the first to rate this book.