எனது அறையைப் போல
உங்களது அறையிலும்
நான்கு சுவர்கள்தான்.
ஒரு சுவர் முழுவதும் அழுகை
இரண்டாம் சுவர் முழுக்க கோபம்
மூன்றாம் சுவர் முழுக்கச் சிரிப்பு.
வெகுகாலமாக
அத்தனையும் தேக்கியபடி
நிற்கும் சுவர்கள்
ஒருநாள் பாரம் தாங்காது
இடிந்துவிழ வாய்ப்புண்டு.
இப்படியே இதுவும்
கடந்துபோகுமென எப்போதோ எவரோ
சொல்லிச்சென்றதையெண்ணி உங்களை நீங்களே
சமாதானப்படுத்திக்கொள்கிறீர்கள்.
எப்படிக் கடக்குமெனத் தெரியவில்லை
நான்காம் சுவரென
ஒன்றிருப்பது அதில் கதவிருப்பது
அதை உள்தாழிட்டிருப்பது
இவையெல்லாம் மறந்து
உட்புறமாய் அமர்ந்து
வெறித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
மாறி மாறி மூன்று சுவர்களையும்.
ஞாபகம் கொள்க
என் நான்காம் சுவர்
எப்போதும்
திறந்தபடியே இருக்கிறது.
Be the first to rate this book.