1. திருமுகம்: ஈரானிய நாவல்
எட்டு உலக மொழிகளில் 2,50,000 பிரதிகளைத் தாண்டி...
அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.
இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலையும் தொலைதலையும் பற்றிய கதை. இது மனிதனின் கதை.
2. கிரானடா (நாவல்)
கிரானடா முக்கதைகள் - 1
அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்துவிடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.
3. கசபத் (நாவல்)
ஈர்க்கப்படும் பொருட்களுக்கும் புவியீர்ப்பு விசைக்கும் ஆன முடிவற்ற போராட்டம்தான் வாழ்க்கை. சராசரி பெரு ஓட்டமானது, தான் காணும் எல்லாவற்றின் மீதும் தனது வண்ணத்தைப் பூசிவிட எத்தனிக்கிறது; தன்னில் ஒன்றாகச் செரித்து தனது மாறாத குற்ற உணர்வைச் சமன்படுத்தத் துடிக்கிறது.
எனினும், வட்டங்களுக்குள்ளும் சதுரங்களுக்குள்ளும் அடங்க மறுக்கும் 'அபத்தங்களை' நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் நம்மிடம் இருக்கும் இலக்கணங்களைக் கலைத்துப் போட வேண்டி இருக்கிறது. வாழ்வின் வெற்றி, தோல்வி பற்றிய வரையறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது.
இந்நாவலில் விரியும் வாழ்வு அதைத்தான் செய்கிறது.
4. அத்தர்
& பிற கதைகள்
அத்தர் சிறுகதைத் தொகுப்பை வகைப்படுத்தினால் அது தென்கிழக்காசியப் புனைவுக் களத்தில் மிக முக்கிய இடத்திலிருந்து எழுந்துவந்த படைப்பின் வரிசையில் வைக்க முடியும் .சமகாலப் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களை ஒரு குப்பியில் அடைத்துத் தந்திருக்கிறார் . பெரும்பெரும் பேழைகளில் நிரப்பிட கலைநேர்த்தி கொண்ட புனைவு மொழிக் கச்சாப் பொருள் முகம்மது ரியாஸிடம் இருப்பதை உக்கிரமான மணம் உணர்த்துகிறது.
- ஷாநவாஸ்
Be the first to rate this book.