ஸ்டோயிக்குகளைப் பொறுத்தவரை, நியாயம் என்பது ஒரு குருட்டு யோசனை அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறை. பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், சரியான செயல்களில் ஈடுபடுவதற்கான ஒரு தனிப்பட்ட அர்ப்பணிப்பு அது. நம்முடைய விழுமியங்களின்படி வாழ்வதற்கும், நற்செயல்களைப் புரிவதற்குமான திறன் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப் போட வல்லது. நம்முடைய சுயமரியாதை சிதையாமல் நம்முடைய இலட்சியத்தை வெற்றிகரமாக அடைவதற்கான வழி அது. நியாயமின்மை கோலோச்சிக் கொண்டிருக்கின்ற இந்த யுகத்தில், நம்முடைய மனசாட்சிப்படி வாழ்வதை நாம் தேர்ந்தெடுப்பது எவ்வாறு நமக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெருமிதத்தையும் கொண்டுவரும் என்பதை வரலாற்று நாயகர்கள் மற்றும் தற்காலத்திய தலைவர்களின் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு ரயன் ஹாலிடே இந்நூலில் விவரிக்கிறார். உங்கள் விழுமியங்கள், உங்கள் பண்புகள் மற்றும் உங்கள் செயல்கள்தாம் உங்கள் வெற்றியையும், உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் பெயர் சொல்லும்படி நீங்கள் விட்டுச் செல்லக்கூடிய சீதனத்தையும் தீர்மானிக்கின்றன. அதற்கு இந்நூல் உங்களுக்கு வழி காட்டும்.
ரயன் ஹாலிடே ஓர் எழுத்தாளர், ஊடக உத்தியாளர். அவர் தன்னுடைய 19வது வயதில் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, மிகப் பிரபலமான நூலாசிரியரான ராபர்ட் கிரீனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் சில காலம் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிவிட்டு, தன்னுடைய சொந்த மார்க்கெட்டிங் நிறுவனத்தை நிறுவினார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 40 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவர் தன் மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் அமெரிக்காவிலுள்ள ஆஸ்டின் நகருக்கு வெளியே உள்ள ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.