பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியன் அவர்கள், தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற் பட்டவர். தொடர்ந்து காத்திரமான பல ஆய்வுரைகளைப் பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளில் நிகழ்த்தி வருபவர். அவர் சமீபத்தில் சொல்வயல் என்ற இணைய இதழில் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அந்தக் கட்டுரைகள் முதல் பகுதியாக நூல் வடிவில் தேநீர் பதிப்பகம் வாயிலாக வெளியிடப்படுகின்றன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது நம் தொல்காப்பியத்தின் முடிவு. எந்தச் சொல், என்ன பொருளில், எங்கெங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்று ஆராயும் ஒரு முயற்சி இது. அந்த அடிப்படையில் அகவுநர், அசுணம், ஆரியர், கங்கை, பிசிர், யாஅம் ஆகிய ஆறு சொற்களை எடுத்துக்கொண்டு, சொல்லாய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார் பாலசுப்பிரமணியன். சங்க இலக்கியங்களில், எந்தெந்தப் பொருளில், எத்தனை பாடல்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் விவரிக்கிறார். பல உரையாசிரியர்கள், தொ.பரமசிவன், ராஜ் கௌதமன் போன்ற பல ஆய்வாளர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, அவற்றுடன் உடன்பட்டும், வேறுபட்டும் ஆசிரியர் விவரிக்கும் கருத்துகள் மிகவும் ஆழமும், அகலமும் வாய்ந்தவை. சுவையும், பயனும் நிறைந்த இந்தச் சிறிய ஆய்வு நூல், இன்னும் பல ஆய்வுநூல்களுக்கான விதைகளைத் தாங்கியிருக்கும் களஞ்சியம். சொல்வயல் இதழில் விளைந்த சொல்லாய்வுக் கதிர்களை, இளம் ஆய்வாளர் முனைவர் வே.கார்த்திக் அவர்களுக்குச் சமர்ப்பித்திருப்பதில், பாலசுப்பிரமணியத்தின் பரந்த மனம் புலப்படுகிறது. ஆசிரியருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் சொல் வேட்டுவம் தொடரட்டும்! - எழுத்தாளர் கமலாலயன்
Be the first to rate this book.