அன்றைய படைப்பாளர்களின் கவித்திறன் பல தரப்பட்டது. ஆயினும் தொடர்பு குறைவான அக்காலத்திலும் எல்லாக் கவிஞர்களும் சில விதிமுறைகளில் இயங்கியிருக்கிறார்கள். விழுமியங்கள் பலவற்றை மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள். அன்றைக்கு இலக்கியக் கொள்கைகள் சொன்ன தொல்காப்பியத்தை வழிகாட்டியாக இவர்கள் கொண்டிருந்திருக்கலாம். அல்லது இவர்கள் காலத்திற்கு முன்பு இருந்த இலக்கியங்களை மாதிரிகளாகக் கொண்டிருந்திருக்கலாம். காதல், வீரம் பற்றிய படைப்புகளுடே அவர்கள் பல செய்திகளைச் சமூகத்திற்குச் சொல்லியிருக்கிறார்கள். தீயவற்றைக் கண்டித்திருக்கிறார்கள்; நல்லனவற்றைப் போற்றியிருக்கிறார்கள். சங்க இலக்கியக் கவிதையியல் குறித்த அடிப்படைகளை இந்த நூலில் சுவையாக எளிமையாக விளக்கியுள்ளார். இன்றைய தலைமுறையினரும் தமிழை முதன்மைப் பாடமாகப் படிக்காதோரும் இலக்கிய மாணவர்களும் அணுகிச் சுவைக்க இந்நூல்தூண்டுகோலாக அமையும்.
நூலாசிரியர் முனைவர் மு. சுதந்திரமுத்து அவர்கள், அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னை, மாநிலக் கல்லூரியில் பணி நிறைவு பெற்ற பின் இணையக் கல்விக் கழகத்தில் அறிவுரைஞர், அண்ணா நூற்றாண்டு நூலக ஆலோசகர் எனப் பணிகள் ஆற்றினார்.மொழிபெயர்ப்புப் பணியும் செய்கிறார். மரபு இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டிலும் தோய்ந்தவர். பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வியில் கலைத்திட்ட, பாடத்திட்டப் பணிகளையும் ஆற்றிவருகிறார்.
Be the first to rate this book.